in ,

நிழல் அல்ல நிஜம் நான் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி.

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

R.V.M.ஸ்டுடியோவின் இரண்டாவது அரங்கம் பரபரப்பை போத்திக் கொண்டிருந்தது. பிரபல  டைரக்டர் ராகவ் மேனன் இயக்கத்தில் முன்னணி வந்தனா தேவி …முக்கியமான காட்சியில் நடித்துக் கொண்டிருந்ததால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப் படவில்லை.

“லைட்ஸ் ஆன்!  ஸ்டார்ட் கேமரா.. ஆக்ஷன்…”

“அஜய் என்னை விட்டுட்டு போயிட்டியேடா! நீ இல்லாம நான் எப்படிடா வாழ்வேன்? எனக்கு நீ வேணும்… எனக்கு நீ வேணும்…” வசனம் முழுவதும் பேசியவாறே கதறி அழுதாள் வந்தனா.

“அருமை வந்தனா! அருமை! முழு சீனையும் ஒரே டேக்கில் அற்புதமா நடிச்சிட்டியே வெல்டன் பேபி!! வெல்டன்!!..”டைரக்டர் ராகவ் மேனன் அவளை முதுகில் தட்டி உற்சாகப்படுத்தினார்.

ஒன்றும் பேசாமல் தனது நாற்காலியில் போய் உட்கார்ந்தாள் வந்தனா. உணர்ச்சிகரமான சீனில் நடிக்கும் போது அதிலிருந்து வெளியே வந்து நார்மலாக அவளுக்கு கொஞ்சம் நேரம் வேண்டும். யூனிட்டுக்கு அது தெரியுமாதலால் அவளை யாரும் தொந்தரவு பண்ணவில்லை.

அவள் திரைத்துறைக்கு வந்து மூன்று வருடங்களுக்குள் 8 படங்கள் நடித்து விட்டாள். அவளிடமிருந்த திறமையும், உண்மையும், நேர்மையும், வேலையிலிருந்த அர்ப்பணிப்பு உணர்வும் அவளை கிடுகிடுவென உயர வைத்தது.

“மேடம்! அடுத்த ஷாட் ரெடியாக இன்னும் அரை மணி நேரமாகும். கேரவனில் ஓய்வெடுக்குறீங்களா?”

“வேணாம் ராகவன்.. ஒன்னும் பிரச்சனை இல்லை.. நான் இங்கேயே இருக்கிறேன். ஷாட் ரெடியானதும் கூப்பிடு!” என்றாள் வந்தனா.ரொம்ப நேரமாக காத்திருந்த பத்திரிக்கை நிருபர் கண்ணில் பட, உதவியாளர் திவாகரை கூப்பிட்டாள்.

“திவா! அந்த நிருபரை வரச் சொல்லுங்க ரொம்ப நேரமா காத்திருக்காரு பேட்டியை முடிச்சிடுறேன்.”

“சரி மேடம்! சீக்கிரம் முடிச்சிட சொல்றேன்.”

“சார்.. மேடம் உங்கள கூப்பிடறாங்க! அவங்க ரொம்ப டயர்டு..  ரொம்ப நேரம் எடுத்துக்காதீங்க… 15 நிமிஷத்துல முடிச்சிடுங்க! படங்கள்  நான் தர்றேன்!”

“நன்றி சார்” என்றவன் வந்தனாவிடம் வந்தான்.

“வணக்கம் மேடம்! நான் ‘சகோதரி’ பத்திரிக்கை நிருபர் அசோக் “

“வணக்கம் மிஸ்டர் அசோக்! உங்கள் பத்திரிக்கையை நான் தவறாமல் படிக்கிறேன்.பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிற மாதிரி நிறைய விஷயங்கள போடுறீங்க அருமை..”

“நன்றி மேடம்! நீங்க பேசுறத  வீடியோவில பதிவு பண்ணிக்கலாமா..”

“ஓகே!  நோ ப்ராப்ளம்…”

“மேடம்! நீங்க அறிமுகமானது, மிகப்பெரிய டைரக்டர் ராகவ் மேனன் சார் படத்தில். அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க…”

“நான் காலேஜ்ல பி.காம் கடைசி வருஷம் படிச்சுகிட்டு இருந்தப்ப, எங்க தமிழ் இலக்கிய மன்ற விழாவிற்கு சார்தான் முக்கிய விருந்தாளி. அதுல ஒரு நாடகத்தில் நான் நடித்ததைப் பாராட்டி மேடையிலேயே பரிசா 500 ரூபாய் கொடுத்தார். அடுத்த இரண்டாவது மாதத்திலேயே அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இந்த திரைத்துறையில அவர் மிகப் பெரிய டைரக்டர். அவர் படத்தில் அறிமுகமானது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இது நான் அவரோடு பண்ற ரெண்டாவது படம்.”

“இந்தக் குறுகிய காலத்துல நீங்க இரண்டாவது இடத்தில இருக்கீங்க… விரைவில் முதலிடத்தை பிடிப்பீர்கள் என்பது ரசிகர்களின் கணிப்பு அதுபற்றி…”

“சார்  ஒன்று,இரண்டு…எல்லாம் வெறும் நம்பர்.  நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு யாரும் போட்டியில்லை. நானும் யாருக்கும் போட்டி யில்லை. என்னை பொறுத்தவரை  மற்ற தொழில்களைப் போல இதுவும் ஒரு தொழில். ரசிகர்களுக்கு என் நடிப்பு பிடிக்கும் வரை நடிப்பேன். பிடிக்காத போது விலகிடுவேன்..”

“மேடம்! இது தான் உங்கள் தனித்தன்மை… மனசுல உள்ளத நேர்மையா சொல்றீங்க… மக்களும் அத ரசிக்கிறாங்க… ஒரு கேள்வி கேட்டா தப்பா நினைச்சுக்காதீங்க. அப்படி பீல்ட விட்டு விலகும்போது ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா? தொழில் எதுவும் தொடங்கப் போகிறீர்களா?”

“தொழில் தொடங்கற ஐடியா எல்லாம் கிடையாது அசோக்!  கிண்டர்கார்டன் டீச்சரா பணிபுரிய ஆசை.”

“மேடம்! விளையாட்டுக்குச் சொல்றீங்கன்னு எடுத்துக்கலாமா?”

“விளையாட்டு இல்லை மிஸ்டர் அசோக்! சீரியஸா சொல்றேன். கடவுள் படைப்பில மிக அற்புதமான படைப்பு குழந்தைங்க. கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளுடன் பழக  கொடுத்து வச்சிருக்கனும்.”

“மேடம்! ஷாட் ரெடி.. “உதவி டைரக்டர் வந்து அழைக்க,

“அவ்வளவுதானே அசோக்! பேட்டிய முடிச்சுக்கலாமா?”

“தேங்க்யூ மேடம்!  கடைசியாக எங்க பத்திரிக்கை வாசகிகளுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?”

“சகோதரிகளே! நீங்கள் எக்காரணம் கொண்டும் உங்கள்  சுயத்தை விட்டுக் கொடுத்துடாதீங்க! மனசுக்கு பிடிச்ச வேலையை முழு ஈடுபாட்டோட நேர்மையாக செய்ங்க! மத்தவங்களுக்காக வாழும் வாழ்க்கையில், உங்களுக்காகவும் வாழ மறக்காதீங்க…தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வாழ்க்கையில் ஜெயிக்க இந்த சகோதரியின் வாழ்த்துக்கள் .”

“தேங்க்ஸ் அசோக் ” எழுந்தாள் வந்தனா.

பிரமித்துப் போனான் அசோக்,’ சின்ன வயதில் எவ்வளவு தெளிவாக பேசுகிறாள். ஒரு படம் நடித்தால் பந்தாவாக நடந்து கொள்ளும் இந்தத் தொழிலில் வேகமாக முன்னேறி வரும் நடிகை இவ்வளவு தன்மையாக பந்தா இல்லாமல் இயல்பாக நடந்து கொள்கிறாள்.  வந்தனா மேல் இருந்த மதிப்பு அவனுக்கு பன்மடங்காக்கியது.

மாலை வரை நீண்ட படப்பிடிப்பு ஆறு மணிவாக்கில் முடிய வீட்டிற்கு கிளம்பினாள் வந்தனா.

“திவா!! ஞாபகம் இருக்குதா? ஏர்போர்ட் போகனும்… காலையில நாலு மணிக்கு வந்துடுங்க! அப்புறம் திவா… அம்மாகிட்ட மூன்று நாள் பெங்களூர் அவுட்டோர் ஷூட்டிங் போறேன்னு சொல்லிட்டேன்.நீங்களும் அதையே சொல்லிடுங்க!”

திவாகர் யோசனையுடன் தலையசைத்தான். அப்படி எங்கே தனியாக போகிறாள்? அதுவும் அம்மாவுக்கு தெரியாமல்… தனக்குத் தெரிந்து எந்த காதலும், ஆண் நண்பர்களும் கிடையாது. அப்புறம் எதற்கு இந்த ரகசிய பயணம்?”

மறுநாள் காலை  ஏர்போர்ட் செல்லும் போது மெதுவாக ஆரம்பித்தான்.

“மேடம்! கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க! நீங்க தனியா போறது எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு.  உங்க தனிப்பட்ட விஷயத்துல  தலையிடுறதுக்கு மன்னிச்சிடுங்க… சுத்தி உள்ளவங்க எல்லாருக்கும் அக்கறையா உதவி செய்றீங்க! உங்களுக்கு ஏதாவது  பிரச்சனையா? அக்கறையில தான் கேட்கிறேன். நான் வேணா துணைக்கு வர வா?” என்றான் வாஞ்சை யோடு.

கலகலவென சிரித்தாள் வந்தனா.

“கவலைப்படாதீங்க திவாகர்! இதுல இரகசியம் ஒன்னும் இல்ல.  என்ன வளர்த்த சித்தியை பார்க்க மும்பைக்குப் போறேன்.

” அம்மா கிட்ட சொல்லியிருக்கலாமே மேடம்!

“எங்க அம்மாவுக்கும், சித்திக்கும்  மனஸ்தாபம்.  சரியா பேசிக்கறதில்லை, நான் மும்பை போறேன்னு சொன்னா அம்மா மனசார சரின்னு சொல்ல மாட்டாங்க. மேலும் எனக்கும்  ஒரு பிரேக் வேணும்,நீங்க கவலைப்படாதீங்க!” என்றதும் திவா  நிம்மதியானான்.

மும்பையில் சித்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.  அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருந்த வேளையில் மனம் பரபரத்தது. ‘மூன்று வருஷத்துக்குப் பிறகு சித்தியைப் பாக்கப் போறேன்.. சித்தி எப்படி நடந்துக்குவா…’

கதவைத் திறந்த அபிராமி  திகைத்து நின்றாள். சுதாகரித்துக் கொண்டு உள்ளே செல்லத் திரும்பினாள்.

” என்னை வான்னு கூப்பிட மாட்டியா சித்தி?

நீ கூப்பிடலைன்னா என்ன? உள்ளே வர எனக்கு உரிமையில்லையா? நான் உன் மஞ்சு சித்தி.”

” யார் சொன்னது இது மஞ்சுன்னு? மஞ்சு என்ன விட்டுட்டு எப்பவோ போயிட்டா! இப்ப வந்திருக்கிறது மிகப்பெரிய திரை நட்சத்திரம்  வந்தனா மேடம்! தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை… ரசிகர்களின் கனவுக்கன்னி… திரையுலக தாரகை…”

“போதும் சித்தி! நிறுத்து! என்னைக் கொல்லாதே!  நீ இவ்வளவு தான் என்னப் புரிஞ்சுகிட்டதா? உன் மஞ்சுவைப் பத்தி உனக்குத் தெரியாதா?சின்ன வயசிலிருந்தே நீதானே என்ன வளர்த்த… எனக்குள்ள நியாயம், நேர்மை, தியாகம் இரக்கம்ன்னு, எல்லா குணத்தையும் ஊட்டி வளர்த்த.. நான் மாட்டேன்னு அழ அழ அம்மா கூட அனுப்பினதும் நீதானே.. “

அபிராமியயின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“விதிடி.. வெளிநாட்ல உங்கப்பா கூட இருந்த உங்கம்மா அவரை விவாகரத்து பண்ணிட்டு நிர்கதியா இந்தியா வந்து நின்னா… உங்கப்பா வெளிநாட்டுக்காரிய கல்யாணம் பண்ணிட்டு, இவள அம்போன்னு விட்டுட்டார். இவ இங்கு வந்து சேர்ந்தா…

“எங்கம்மா சந்தோஷமா நாடு நாடா எங்கப்பா கூட சுத்தினப்ப  என்னை வளர்கிறது ஒரு சுமையா தெரிஞ்சுது .அதான் உன்கிட்ட தள்ளிட்டுப் போனா.. உன் தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காக நீ தியாகம் பண்ணிட்ட… அப்புறம் நிர்கதியா வந்து நின்னப்போ என் நினைப்பு  வந்தது. என்னை அனுப்பச் சொல்லி உன் கிட்ட சண்ட போட்டா.. நீயும் அனுப்பிட்ட.”

“ஆமாம் மஞ்சு…உங்கம்மா சண்ட போட்டாலும் அவ நெலம பரிதாபமா இருந்துச்சு. அவகிட்ட ஒரு பாதுகாப்பின்மை  இருந்துச்சு. அவளுக்கு ஒரு துணை தேவைன்னு  தோணுச்சு. அதனால தான்  உன்ன அவளோட அனுப்பினேன். “

” உன் மனசு எனக்குபப் புரியுது சித்தி. நானும் நல்லபடியா பி.காம். முடிச்சு, சி.ஏ பண்ணி, ஆடிட்டர் ஆகணும்னு, ஆசப் பட்டேன். உன்னுடைய ஆசையும் அதுதான்னு எனக்கு தெரியும் .அத நிறைவேத்த  முடியாத ஏமாற்றத்தில் தான் உன் முகத்தில் எப்படி முழிப்பதுன்னு  மூன்று வருஷமா மனசுக்குள் குமறிக்கிட்டிருந்தேன். நல்லா வேலை பாத்து அம்மாவையும் நல்லபடியாக காப்பாத்தனும்னு நினைச்சேன். விதி என் வாழ்க்கையையே மாத்திட்டது சித்தி.

பெரிய டைரக்டர்.. ஒரே படம் மட்டும் நடி.. பிறகு உன் விருப்பம் போல மேலே படி ‘ன்னு சொன்ன அம்மா பணத்தைப் பாத்ததும் மனசு மாறிட்டா.. இன்னும் ஒரு படம்..இன்னும் ஒரு படம்ன்னு.. இப்போ எட்டாவது படத்தில நடிக்கிறேன்..”

” இப்ப என்ன கெட்டு போச்சு ..அப்படியே இருக்க வேண்டியதுதானே.. எதுக்கு திடீர்னு என் நினைப்பு “

” இல்ல சித்தி நீ என்னப் புரிஞ்சுக்கல.. நான் அம்மாகூட இருந்தாலும், தினமும் உன் நெனப்பு தான் .நீ எனக்குள்ளே வெதச்ச நல்ல பண்புகள் தான் அம்மாவுக்காக நடிகைங்கிற முகமூடியப்  போட வச்சது.. அம்மா ஆசைப்படுற பணக்கார வாழ்க்கைய கொடுக்க வச்சது ..இனியும் அந்த முகமூடிய போட வேணாம்னு தோணுது .

நான்  திரையில மட்டும்  நடிக்கல..  நிஜ வாழ்க்கையிலும் தான் நடிக்கிறேன் .என் உண்மையான முகம் உன் மஞ்சுதான் சித்தி. தினமும் அந்த வாழ்க்கைய வாழ முடியல..நான் இங்க இருக்கப் போகும் மூணு நாளும்,   உன் கூட, உன் மஞ்சுவா, முகமூடி அணியாத சாதாரண பெண்ணாக  வாழ அனுமதி கொடு. உன் கூட நான் வாழ்ந்த அந்த பசுமையான நாட்களின் ஞாபகமாக இந்த மூன்று நாட்கள எனக்கு கொடு சித்தி ” மஞ்சு அழுகையில் வெடித்தாள் .

மஞ்சுவை அணைத்துக்கொண்ட ஆபிராமியின் கண்களும் கண்ணீரைப் பொழிந்தது. “உன்னத் தப்பா நினைச்சிட்டேன்டா  நீ வாழ்ற வாழ்க்கையிலும் ஒரு அர்த்தம் இருக்கு. உன் அம்மாவ வசதியா வாழ வைக்க, நியாயமா ஒரு காரணம் இருக்கு.. உன்ன நெனச்சு எனக்கு பெருமையா இருக்குது”

மஞ்சுவுக்கு நேத்து அவள் கொடுத்த பேட்டியில் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது…” மனசுக்கு பிடிச்ச வேலையை நேர்மையா பாருங்க ..மத்தவங்களுக்காக வாழும் வாழ்க்கையில் உங்களுக்காகவும் வாழ மறக்காதீங்க..”.. இனி எனக்காகவும் வாழ்வேன்.  அம்மாவிடம் ஏன் மறைக்க வேண்டும்.. எனக்காகவும், என்னை நினைத்து ஏங்கும் சித்திக்காகவும் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மும்பை வருவேன் ” என்று நினைத்துக்கொண்டாள்

” சித்தி எல்லாத்தையும் மறந்துடு! இந்த மூணு நாட்கள ஜாலியா கழிப்போம் .இனி நான் அடிக்கடி மும்பை வருவேன். அம்மாவுக்காக வந்தனா..சித்திக்காக மஞ்சு.. அம்மாவிடம் சொல்லி  விட்டே வருவேன். ஓகே”  என்றுஅபிராமியை கட்டிக்கொண்டாள் வந்தனா இல்லை… இல்லை… மஞ்சு.

(முற்றும்)

(படஉதவி – பொதுவெளி)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஐந்தறிவு தந்த பாடம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 5) – ரேவதி பாலாஜி