in , ,

நின்னயே ரதியென்று ❤ (இறுதி அத்தியாயம்) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்று முதல் இருவரும் நல்ல தோழிகளானார்கள். ரேஷ்மா மிகவும் களைப்பாக இருந்ததால், நான்ஸி அவள் கூடவே இருந்து சிரிக்க சிரிக்கப் பேசி அவளை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் குழந்தை ஆஷா ‘சித்தி’ என்று ரேஷ்மா உடன் நன்றாக விளையாட ஆரம்பித்தாள்.

இரவு டின்னர் முடிந்தபின் ரிஷி ஹாலில் உட்கார்ந்து அப்பா, அண்ணா, இரண்டு அத்திம்பேர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். ஆஷா ‘பஸுல்ஸ்’ வைத்து அவளாகவே விளையாடிக் கொண்டிருந்தாள். ரேஷ்மா மிகுந்த களைப்பு மேலீட்டினால் வந்து படுத்துக் கொண்டாள். அவள் கூடவே எழுந்து வந்த நான்ஸி, டி.வி.யை ஆன் செய்தாள்.

அதிலும் ரேஷ்மாவிற்கு நடந்த கொலை முயற்சியைப் பற்றியும், அதற்குக் காரணமான சுமதியை மன்னித்து விட்டது பற்றியுமே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் ரேஷ்மாவைப் பற்றி நன்கு தெரிந்த சில நடிகர், டைரக்டர் ஆகியோரின் பேட்டியும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.

டி.வி. சப்தத்தைக்கேட்டு ஹாலில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து ரேஷ்மாவின் அறைக்கு வந்தனர். ரேஷ்மாவின் கால்ஷீட்டிற்காகக் காத்திருந்த அந்த நான்கு பட டைரக்டர்களும், “அந்தப் படத்தில் ரேஷ்மா நடிக்க வேண்டிய குணச்சித்திரக் கதாபாத்திரத்தை வேறு யாராலும் வெற்றிகரமாக நடிக்க முடியாது, ரேஷ்மா ஆடுவது போல் நடனமும் யாராலும் ஆட முடியாது. ஆதலால் அவள் சீக்கிரம் குணமாகி வரும்வரை காத்திருப்பதாக” அறிவித்தார்கள்.

“அது எப்படி முடியும்? ஆபரேஷன் செய்த புண் ஆற வேண்டும். அதிக ரத்தப்போக்கினால் பலஹீனமாக இருக்கிற உடம்பு தேற வேண்டும். நாம் அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடலாமா?” என்றார் அப்துல்லா.

“ஆம், அப்படித்தான் செய்ய வேண்டும். டாக்டரே உடம்பு தேறி நன்கு குணமாக ஆறு மாதங்கள் ஆகும் என்றல்லவா கூறியிருக்கிறார்” என்றான் ரிஷி.

ரேஷ்மா சிரித்தாள். “எதற்கு சிரிக்கிறாய்?” என்றாள் நான்ஸி.

“டாக்டர் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் எப்படி? நீங்கள் என்னைச் சுற்றி எத்தனை பேர் இருக்கிறீர்கள். பாட்டி, தாத்தா, டாக்டர் சித்தி, டாக்டர் சித்தப்பா, இரண்டு மாமாக்கள், நான்ஸி எல்லோரும் எனக்காகத் தானே இங்கே இருக்கிறீர்கள். டாக்டர் உடம்பு நன்கு குணமாக ஆறுமாதம் ஆகும் என்றால், நீங்கள் மூன்று மாதத்திலேயே என்னை தேற்றி விடுங்கள். நானும் உங்களுக்கு என் முழு ஒத்துழைப்பைத் தருகிறேன். அந்த டைரக்டர்கள் அவ்வளவு நம்பிக்கையுடன் இருப்பதை நாம் காப்பாற்ற வேண்டும்” என்றாள் ரேஷ்மா பிடிவாதமாக.

“நம் கையில் என்ன இருக்கிறது? அந்த ஆண்டவன்தான் உன் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதற்கு முதலில் நீ ஒழுங்காக வேளாவேளைக்கு கொடுக்கும் உணவை மறுக்காமல் சாப்பிட வேண்டும்” என்றாள் காமாட்சி.

சுமதியின் மேல் போலீசில் கொடுத்த குற்றச்சாட்டை ரேஷ்மா திரும்பப் பெற்றதில் இருந்து காமாட்சியின் மனதில் அவள் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்திருந்தாள்.

சௌம்யா மிகுந்த சந்தோஷத்துடனும், மனநிறைவுடனும் தன் கணவன் ரகுவுடன் லண்டன் திரும்பினாள். வித்யாதரும், தன்னுடைய ஒரு மாதம் விடுமுறை இன்னும் ஒரு வாரத்தில் முடிவதால், அவனும் அமெரிக்கா செல்ல தயாராகிவிட்டான். நான்ஸிக்கும் ஆஷாவிற்கும், ரேஷ்மாவைப் பிரிந்து செல்வது மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது.

ரிஷிக்கும், ரேஷ்மாவிற்கும் கோயிலில் திருமணம் முடிந்த விஷயமும், ஆனால் அதன் பிறகு நடக்க வேண்டிய எந்த விசேஷமும் நடக்கவில்லை என்பதும் நான்ஸிக்கும் தெரியும். அதனால் உடல்நிலை தேறியதும் ஹனிமூனிற்கு கட்டாயம் அமெரிக்கா வரவேண்டும் என்றும், அவர்களோடு சில மாதங்கள் தங்க இருந்து பிறகு இந்தியா திரும்ப வேண்டும் என்றும் கட்டளையிட்டாள். அதற்கு ரிஷியும் ஒத்துக் கொண்ட பிறகே நான்ஸி அமைதியானாள்.

சதீஷும் மாத்த்திற்கு ஒரு முறை வந்து ரேஷ்மாவையும் ரிஷியையும் பார்த்து விட்டுச் சென்றான். இரண்டு குடும்பமும் சென்ற பிறகு வீடு மிகவும் வெறிச்சென்று இருந்தது. அம்மாவும் பாட்டியும் நன்றாக கவனித்ததில் ரேஷ்மா முன்பைவிட நல்ல ஆரோக்யமானாள்.

நான்ஸியும் ஆஷாவும் அவளுக்கு உற்சாகம் கொடுத்த நல்ல டானிக்’ஆக இருந்தார்கள். ரிஷியும், ‘அகலாது அணுகாது’ என்று சொல்வார்களே, அது போல் கண் விழித்தால் ரிஷியின் எதிரில் தூங்கும் போது ரிஷியின் அணைப்பில் என்று எல்லையில்லா சந்தோஷத்தில் இருந்தாள் ரேஷ்மா.

சர்ஜரி செய்த தையல் எல்லாம் பிரித்தனர். இதற்குள் மூன்ற மாதங்கள் முடிந்து விட்ட நிலையில், டாக்டரின் அனுமதியோடு ரேஷ்மா தன் நடனப்பயிற்சியை வீட்டில் தொடங்கினாள். நான்கு மாதங்கள் கழிந்த பிறகு டாக்டரின் அனுமதியுடன், டைரக்டர்களிடம் அட்வான்ஸ் வாங்கிய படங்களை முடித்துக் கொடுக்க சென்னை வருவதாகவும் அவர்களிடம் அறிவித்தாள்.

ரிஷி முதலில் மறுத்தாலும், பிறகு அரை மனதுடன் அவளுடன் சென்றான். மருந்து, மாத்திரைகள், தேவையான உணவு, ஜூஸ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பேச்சுத் துணைக்கு சதீஷையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

சாருலதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்து நான்கு மாதங்களாகியிருந்தன. அவளுடன் துணையாக சதீஷின் பெற்றோர் இருந்ததால், சதீஷ் தயக்கமில்லாமல் ரிஷியுடன் எல்லா இடங்களுக்கும் சென்றான். அட்வான்ஸ் வாங்கிய படங்களை முடித்துக் கொடுத்து விட்டு ரேஷ்மா சந்தோஷத்துடன் ரிஷியுடன் தங்கள் பண்ணை வீட்டிற்குத் திரும்பினாள்.

ரேஷ்மா தங்கள் பயண விவரங்களை அவ்வப்போது நான்ஸிக்குத் தெரிவித்தாள். ஆஷாவுடனும் வீடியோ மூலம் பேசுவாள். நான்ஸி உடனே அவர்களை அமெரிக்காவிற்கு வரவேண்டும் என்றும்  விமானப்பயணம் முதல், அவர்கள் ஹனிமூனிற்கு ஆகும் எல்லா ஏற்பாடுகளும் அவர்களே செய்து விட்டதாகவும், அதனால் கிளம்பி வருவதற்கான பயண விவரங்களை மட்டும் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தாள்.

ரிஷியும், ஹனிமூன் பற்றிய இன்ப நினைவுகளுடன் ரேஷ்மாவை அழைத்துக் கொண்டு விமானத்தில் பயணம் செய்தான். ஜன்னல் அருகில் ரேஷ்மா அமர்ந்திருக்க, அவளுக்கு அடுத்த இருக்கையில் ரிஷி உட்கார்ந்து கொண்டிருந்தான். ரிஷி அவளையே ஒரு புன்முறுவலோடுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரேஷ்மா அடர்நீல வண்ணத்தில் ஜீன்ஸ் பேண்ட்டும், கருப்பு நிறத்தில் ‘டீ’ஷர்ட்டும் அணிந்து தலைமுடியை சிம்பிளாக ஒரு ரப்பர்பேண்டில் போனி டெய்லாக அடக்கியிருந்தாள். ஆனால் அது அடங்காமல் நெற்றியிலும் காதோரங்களிலும் அலைந்து கொண்டிருந்தது.

அவன் பார்வையில் முகம் சிவந்த ரேஷ்மா, “என்ன மாமா அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றாள் கிசுகிசுத்த குரலில்.

“என் நிலையை எண்ணி நானே பரிதாபப்பட்டுக் கொண்டேன் ரேஷ்மா” என்றான்.

“ஏனோ?”

“அந்தக் காலத்தில் பாட்டிகள் ஒரு கதை சொல்வார்கள் தெரியுமா? ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஒரு ராஜகுமாரியைத் திருமணம் செய்து கொண்டான் என்று…” என்று முடிக்காமல் இராகம் இழுத்தான்.

அவனை முறைத்த ரேஷ்மா, “அது போல?” என்றாள்.

“அது போல் இந்த ராஜகுமாரியை, நான் வங்கக் கடல் தாண்டி, அரபிக் கடல் தாண்டி, பஸிபிக் கடலோரத்தில்தான் தேவியின் கருணையால் உன்னை அடைய முடியும் போல் இருக்கிறது” என்றான் முகத்தில் குறும்பு கூத்தாட. அவன் பேசப் பேச ரேஷ்மாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

அப்போது அங்கு பழரசங்களோடு வந்த ஏர்ஹோஸ்டஸ், “சார், இந்த அழகான லேடி உங்கள் காதலியா மனைவியா ?“ ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

“இந்த அழகான தேவதை, நம் விமானத்தைத் தொட்டுக் கொண்டு போகின்றதே வெண்மேகக் கூட்டம், அதிலிருந்து வந்தாள் மேடம்” என்றான் அவனும் கேலியாக.

“இவ்வளவு அழகான மனைவி அருகில் இருந்தால் யார் வேண்டுமானாலும் கவிஞராகலாம்” என்று ரசனையொடுக் கூறிச் சிறித்தவாறு மற்றவர்களை கவனிக்கச் சென்றாள் ஏர்ஹோஸ்டஸ்.

“நீங்கள் ரொம்ப மோசம், இப்படியா கேலி செய்வீர்கள்?”  என்ற ரேஷ்மா அவனை ஆசையோடு உறுத்துப் பார்த்தாள்.

“நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா” என்று பாடினான் ரிஷி. “கடைசியில் பாரதியார் பாட்டு நம் குடும்பப் பாட்டாகி விட்டது” என்ற ரேஷ்மா கலகலவென்று சிரித்தாள்.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 18) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    திவ்யாவின் சவால் (சிறுகதை) – இரஜகை நிலவன்