in , ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“எனக்குப் பாடவேண்டும் போல் இருக்கிறது ரேஷ்மா” என்றான்.

“ஹலோ… ரோடைப் பார்த்து வண்டியை ஓட்டுங்கள், பீச்சில் போய் பாடலாம்” என்றாள் வெட்கத்துடன் லேசாக சிரித்தவாறு. 

“என்னை ஆஃப் பண்ணுவதிலேயே இரு. என்னப் பாட்டு பாடுவீர்கள் என்று கேட்கவில்லையே?” என்றான் ரிஷி.

இதற்குள் பீச் வந்து விடவே காரைப் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு ‘டோக்கன்’ வாங்கிக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். அப்போது கண்ணைக் கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி ஆடும் ஒரு சிறிய பெண்,  வேகமாக ஓடி வந்து ரேஷ்மாவைக் கட்டிக் கொண்டு ‘அவுட்’ என்று கத்திக் கொண்டே கண்ணில் கட்டியிருந்த துணியை எடுத்தாள்.

அப்போது அங்கே கூட்டமாக வந்த சில பெண்கள் ‘கொல்’லென்று சிரித்தனர். ஆனால் ரேஷ்மா, “நானும் இவர்களோடு ஒரு கேம் விளையாட்ட்டுமா?” என்று ரகசியமாய் ரிஷியிடம் அனுமதி கேட்டாள்.

அவள் குழந்தைத்தனத்தை ரசித்த ரிஷி “சரி”என்று சிரித்துக் கொண்டே தலையாட்டினான். கடற்கரையே இவர்கள் சப்தத்தால் இரண்டாகப் பிளந்தது போல் இருந்தது.

அதற்குள் யாரோ சிலர் அவளை நடிகையென்று தெரிந்து ரேஷ்மாவைப் போட்டோ எடுத்து யூடியூபில் போட, விஷயம் வேகமாகப் பரவியது. அதனால் ரிஷி அவசரமாக அவள் கையைப் பிடித்து இழுத்து, காருக்குள் திணித்து வேகமாகக் காரை வீட்டிற்கு ஓட்டினான்.

வீட்டிற்குள் நுழைந்து, பால்கனியில் உள்ள சேரில் அமர்ந்து இருவரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். அப்போது அவுட் ஹௌசிலிருந்து சாருவின் போன்.

“ரேஷ்மா, இப்போது ஃப்ரீயா? நான் வரலாமா?” என்று கேட்டாள்.

“சாரு உடனே வாருங்கள். உங்களைப் பொறுத்தவரை நீங்கள் அனுமதியெல்லாம் கேட்கக் கூடாது, எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என்றாள் ரேஷ்மா.

சூடான இரண்டு மஷ்ரும் சூப்போடு வந்த சாரு, “அண்ணா, நீங்கள் உங்கள் நண்பரைப் பார்க்க வரவில்லையா?” எனக் கேட்டாள்.

“வருகிறேன் சாரு, ரேஷ்மாவோடு முக்கியமான விஷயம் பேசுவதற்காகத்தான் வந்தேன். பேசிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லம்மா” என்றான் ரிஷி.

“சரி அண்ணா, அது ஏன் பீச்சில் போய் கண்ணாமூச்சி விளையாட்டு?” என்று வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

“எல்லா இடத்திலும் ‘கடற்கரையில் பிரபல சினிமா கதாநாயகியின் கண்ணாமூச்சி ஆட்டம்’ என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். பின்னால் நின்று கொண்டு அண்ணா வேறு ஸைட் அடிப்பதை கேமிராவில் என்ன அழகாகப் படம் பிடித்துப் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? யுடியூபில் வேறு ‘உங்கள் காதல்  தெய்வீகக் காதல்’ என்றெல்லாம் போட்டிருக்கிறார்கள் அண்ணா” என்றவள், என்னவோ காணாததைக் கொண்டவள் போல் ‘ஓ’வென்று சிரித்தாள்.

மேலும் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு கீழே இறங்கி அவள் அவுட் ஹௌசிற்கு சென்றாள் சாருலதா. அவள் சொல்வதை நம்ப முடியாமல் உடனே தன் செல்போனில் யுடியூபை ஓப்பன் செய்து பார்த்தான் ரிஷி.

சாரு சொன்னது அவ்வளவும் உண்மை. உண்மையும் பொய்யுமாகக் கலந்து புதிய திரைக்கதையையே படைத்திருந்தார்கள் யுடியூபில். அதைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு தாளவில்லை.

சூப் கப்பை எடுத்துச் செல்ல அன்னம்மா மாமி வந்தாள். அவள் போன பிறகு, “ரிஷி… நான் ஒன்று கேட்க நினைத்தேன்,  அது பேச்சு சுவராஸ்யத்தில் மறந்தே விட்டது” என்றாள் ரேஷ்மா.

“இப்போது கேளு ரேஷ்மா. எதையும் மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது” என்றான் மிக அருகில் வந்து. அவன் மூச்சுக்காற்று அவள் நெற்றியில் பட்டு, அங்கே சுருண்டிருந்த  அவள் முடி படபடத்தது.

“நான் காரில் ஏறும் போது, ‘எனக்குப் பாட்டுப் பாட வேண்டும் போல் இருக்கிறது’ என்று சொன்னீர்களே? அது ஏன்? என்ன பாட்டு பாட வேண்டும் என்று ஆசை?”

“ஆம் அப்போது உன்னைப் பார்த்ததும் ஒரு தேவதைப் போலவே இருந்தது. ஆனால் அப்போது டக்கென்று மனதில் வந்த பாட்டு” என்றவன், “நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா” என்று ராகத்தோடு பாடினான்.

“ரிஷி… நீங்களா இப்படி? நீங்கள் இப்படியெல்லாம் பாடினால் நான் என்ன சொல்ல முடியும்?”

“நீ ஒன்றும் அதிகமாக சொல்ல வேண்டாம், ஐ லவ் யூ என்ற மூன்றே வார்த்தைகள் சொன்னால் போதும்” என்றான்.

“என்ன?” என்றாள் ஆச்சர்யத்துடன்.

“ஆம் ரேஷ்மா, நான் உன்னை என் உயிராக நேசிக்கிறேன்.  எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உன்னோடு மட்டும்தான். மனைவி என்று ஒருத்தி வந்தால் அது என் ரேஷ்மா  மட்டும்தான்” என்றவனுக்கு, உணர்ச்சி மிகுதியில் கண்கள் பனித்தன.

“உளறாதீர்கள் ரிஷி” என்றாள் ரேஷ்மா கலங்கிய குரலில்.

“நான் ஒன்றும் உளறவில்லை. ரேஷ்மா நீயும் என்னை விரும்புகிறாய் என்று தெரியும், ஆனால் அதை உன் வாயால் கேட்க விரும்புகிறேன்”

அதே நேரத்தில் அவன் செல்போன் அழைத்தது, கூப்பிட்டது அவன் அம்மா தான்.

“சொல்லுங்கள் அம்மா” என்றான் ரிஷி.

“ரிஷி, புதியதாக சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. நான் ‘வாட்ஸ்அப்’பில் மூன்று பெண்கள் போட்டோக்கள் அனுப்பியுள்ளேன். அவர்கள் பயோ-டேட்டாவும் உள்ளது. அதில் பிங்க் கலர் சுடிதார் போட்டிருப்பவள் தான் உன் மாமா பெண் சுமதி. அவளும் எம்.பி.ஏ. பட்டதாரி தான். எல்லாம் நல்ல குடும்பத்து படித்த பெண்கள். நீ இப்படிப்பட்ட பெண்களைத்தான் செலக்ட் செய்ய வேண்டும். மேலும் உன் திருமணத்தைத் தள்ளிப் போடுவது நல்லதில்லை. நானும் யுடியூப் பார்த்தேன், அப்படியெல்லாம் விஷயம் பரவுவது நம் குடும்ப கௌரவத்திற்கு நல்லதில்லை. அம்மா மனதிற்கு வேதனைத் தராமல் சீக்கிரம் திருமணம் முடிக்க வேண்டும்” என்றாள்.

“எல்லாம் சரி அம்மா, ஆனால் ஒவ்வொருவரும் ஏன் தாடகை சூர்ப்பனகை மாதிரி கனமாக இருக்கிறார்கள்? எல்லோரும் எனக்கு அம்மா மாதிரி இருக்கிறார்கள். சாப்பிடுவதும் தூங்குவதும் தவிர எந்த வேலையும் செய்ய மாட்டார்களா அம்மா?”

“எல்லாம் கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும்”

“சரியம்மா, நான் நேரில் வந்து பேசுகிறேன்” என்று பேச்சை முடித்தான். ரிஷயின் முகம் பாறை போல் இறுகியிருந்தது.

“அம்மா என்ன சொன்னார்கள் ரிஷி?” என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் அவன் அவளை உறுத்துப் பார்க்க, ரேஷ்மாவே தொடர்ந்தாள். “அம்மா என்ன சொன்னார்கள் என்று நான் சொல்லட்டுமா? நீங்கள் இப்படியெல்லாம் நடப்பது முறையில்லை என்று சொல்லியிருப்பார்கள். அவர்கள் சொல்லும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் கரெக்டாகத்தான் இருக்கிறார்கள்” என்றாள் திடமான குரலில்.

“அம்மா இங்கிருக்கும் போது உன்னிடம் என் திருமணம் பற்றி ஏதும் சொன்னார்களா?”

“அம்மா பொதுவாகத்தான் பேசினார்கள். நிறைய நல்ல வரன்கள் தேடி வருவதாகவும், சீக்கிரம் உங்கள் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். எனக்கும் ஒரு நல்ல கல்யாணச் சாப்பாடு சாப்பிட ஆசையாகத்தான் இருக்கிறது” என்றாள்.

அவளையே உறுத்துப் பார்த்த ரிஷி, உடனே ஏதோ ஒரு எண்ணிற்குப் போன் செய்தான். “கிளம்பு ரேஷ்மா, கொஞ்சம் வெளியே போய் விட்டு வரலாம்” என்றான் அவசரமாக.

“இப்போதே மணி எட்டாகி விட்டது, டின்னர் சாப்பிட்டு விட்டு கிளம்புங்களேன்” என்றாள் ரேஷ்மா.

“கிளம்பு ரேஷ்மா” என்றவன், ஒன்றும் பேசாமல் கார் சாவியை எடுத்துக் கொண்டு அவள் பதில் பேசவே இடம் கொடுக்காமல் வேகமாகக் கிளம்பினான்.

“தம்பி, சாப்பாடு கூட தயாராகி விட்டது” என்று குரல் கொடுத்தாள் அன்னம்மா, ஆனால் அவன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

காரில் ரேஷ்மா உட்கார்ந்து கொள்ள, அவளுக்குப் பக்கத்தில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஸீட் பெல்ட்டைப் போட்டவன், ரேஷ்மாவைத் திரும்பிப் பார்த்தான். அவளும் ஸீட் பெல்ட் போட்டுக் கொண்டு இவன் எங்கே இந்த இரவில் அழைத்துச் செல்கிறான் என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

கார் நேராக ஈ.ஸி.ஆர் ரோட்டில் சென்றது, பின் ஒரு ரிசார்ட்டுக்குள் நுழைந்தது. ஒரு ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றான், அங்கு பரவியிருந்த அரையிருளில் அவனுக்காக ரிசர்வ் செய்திருந்த ஒரு இடத்தைக் காட்டினார் அந்த ரெஸ்டாரன்ட்டின் மேனேஜர்.

“வீட்டில் தான் அன்னம்மா மாமி சமைக்கிறார்களே, ரெஸ்டாரன்ட் வருவதற்கா இவ்வளவு சர்ப்ரைஸ்?” என்றாள் சிரித்தபடி.

“ரெஸ்டாரன்ட் வந்தது சர்ப்ரைஸ் இல்லை, ஆனால் நீ கேட்ட கல்யாணச் சாப்பாடு இப்போது சாப்பிடப் போகிறாய் பார்… அதுதான் சர்ப்ரைஸ்” என்றான் ரிஷி அவள் கைகளை லேசாக அழுத்தியபடி.

“நான் கேட்டது ரெஸ்டாரென்ட் கல்யாணச் சாப்பாடு இல்லை, உங்கள் கல்யாணச் சாப்பாடு” என்றாள் மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்து.

“ஆனால் இது தான் நம் அட்வான்ஸ் கல்யாணச் சாப்பாடு. இன்னும் என்னென்ன ஐட்டம் வேண்டும் என்று சொல். சாப்பாடு எப்படி இருக்கிறது? அதன் குறை நிறையெல்லாம் சொல்” என்றான் ரிஷி.

வாழையிலையில் பரிமாறப்பட்ட உணவுவகைகளைப் பார்த்த ரேஷ்மா பிரமித்துப் போனாள். நடிகையான பிறகு எத்தனையோ பணக்காரத் திருமணங்களைப் பார்த்திருக்கிறாள். ஆனால் எல்லா இடத்திலும் பப்பே ஸிஸ்டம் தான், எங்கும் இது போல் தலைவாழை இலை போட்டு இவ்வளவு அமர்க்களமாக சாப்பிட்டதில்லை.

சாப்பிட்டு முடிந்த பிறகு அவள் கையை நீட்டச் சொல்லி அந்த வெண்ணிற, மெல்லிய நீண்ட விரலில்  ஒரு சிறிய வைர மோதிரம் போட்டான். திடீரென்று ஏன் இந்த மோதிரம் என்று வியந்தாள் ரேஷ்மா.

“இந்த மோதிரம் திடீரென்று எதற்காக என்று ஆச்சர்யப் படுகிறாயா?  ரேஷ்மா, நீ தான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் மனைவி என்று என் உள்ளத்தைத் திறந்து காட்டவே இந்த அடையாளம்” என்றான் காதலுடன்.

“அது என்ன, எல்லா ஹீரோக்களுமே மோதிரத்தையே காதலின் அடையாளச் சின்னமாகக் கூறுகிறீர்கள்? அந்தக் காலத்து துஷ்யந்தன் முதல் இந்த காலத்து ரிஷி வரை. ஏன்? காதலின் சின்னமாக ஒரு பத்து பவுனில் இரட்டை சர ஆரமோ அல்லது ஒரு முப்பது பவுனில் ஒட்டியாணமோ போடக்கூடாது?  அரை பவுன் மோதிரம் காணாமல்  போனால் பரவாயில்லை,  இந்த திடீர் காதலும் காணாமல் போனால் பரவாயில்லை என்பது தான் அதன் பொருளா?” என்றாள் ரேஷ்மா சிரித்துக் கொண்டே.

“அடிப்பாவி… இவ்வளவு குதர்க்கமான எண்ணம்  வேறு யாருக்கும் தோன்றாது. ஆமாம், நீ இப்படி பேசுகிறாய் என்றால் அதன் உள் நோக்கம் என்ன? நீ ஒன்றும் நகைக்கோ பணத்திற்கோ ஆசைபடுபவள் அல்ல. உன்னை எனக்குத் தெரியும், மனம் திறந்து பேசு கண்ணம்மா” என்றான் உருக்கமாக.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காடும் நிலவும் (சிறுகதை) – பிரபாகரன்.M

    காதல் கண் கட்டுதே ❤️ (அத்தியாயம் 2) – நேத்ரா பாலாஜி