in , ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஒரு நாள் திடீரென்று போன் செய்து விட்டு அவன் வீட்டிற்குச் சென்றாள் ரேஷ்மா. சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்ட். வாடகையோ பத்தாயிரம் ரூபாய் என்றாள் அவன் மனைவி சாருலதா.

“மூன்றாவது மாடி லிப்ட் இருக்கிறது, ஆனால் பாதி நாட்கள் ரிப்பேர் பாதி நாள் பவர்கட். அதனால் பெரும்பாலும் கீழே இறங்குவதே இல்லை” என்றாள் சாரு.

ரேஷ்மாவிற்கு தான் வாழ்ந்த அந்த ஏழ்மையான நாட்கள் நினைவிற்கு வந்தன.

“சதீஷ் அண்ணா… நீங்கள் ஏன் நம் வீட்டில் உள்ள அவுட்ஹௌஸிற்குக் குடி வரக்கூடாது. சாரு வேறு கர்ப்பமாக இருக்கிறார்கள் போல் இருக்கிறதே. நீங்கள் இருவரும் ஒருமுறை வந்து வீட்டைப் பாருங்கள். நீங்கள் ஒன்றும் வாடகையெல்லாம் தர வேண்டாம். இந்த மாதிரி நேரத்தில் சாரு வாக்கிங் எல்லாம் போனால் தானே உடம்பு நன்றாக இருக்கும், எனக்கும் பேச்சுத் துணையாக இருக்கும்” என்றாள் ரேஷ்மா.

“வாடகை தராமல் ஓசியில் எல்லாம் இருக்க முடியாது. இங்கே தரும் அதே பத்தாயிரம் ரூபாய் உங்களுக்கு வாடகையாகத் தருகிறோம் ரேஷ்மா. நான் சாருவை அழைத்துக் கொண்டு வந்து வீட்டைக் காட்டுகிறேன்” என சதீஷ் கூற

“அதற்கு முன் ஆட்களை விட்டு வீட்டைச் சுத்தம் செய்யச் சொல்கிறேன்” என்றாள் ரேஷ்மா.

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றான் சதீஷ்.

“சும்மா பேசிக் கொண்டிருந்தால் எப்படி? வாருங்கள், டிபன் சாப்பிடலாம்” என்றாள் சாரு. பூரிக்கிழங்கின் கமகம வாசம் அழைத்தது.

“வீட்டில் தனியாகச் சாப்பிடவே பிடிக்கவில்லை. இப்படிப் பேசிக் கொண்டே சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கிறது” என்று ருசித்து சாப்பிட்டாள் ரேஷ்மா.

சதீஷ் அடுத்த நாளே தன் மனைவியை அழைத்து வந்து ரேஷ்மாவின் அவுட்ஹௌசைக் காட்டினான். ரேஷ்மாவும் கூடவே இருந்தாள்.

“வீடு பிடித்திருக்கிறதா சாரு?” என ரேஷ்மா கேட்க

“வீடா இது, எனக்கு இது அரண்மனை மாதிரி ரேஷ்மா. ஒரே ஸிங்கிள் பெட் ரூமில் கீழேயும் இறங்க முடியாமல், அடிக்கடி மேலேயும் ஏறமுடியாமல் கொடுமையடா சாமி. அங்கே தெருக்கதவைத் திறந்து வைக்க பயம், ஆனால் இங்கே உங்கள் பங்களாவின் செக்யூரிட்டி, இந்த அவுட்ஹௌசிற்கும் செக்யூரிட்டி, இல்லையா ரேஷ்மா? அவுட்ஹௌசை விட்டு வெளியே வந்தால் எவ்வளவு பெரிய தோட்டம். பேன் இல்லாமலே ஜில்லென்று காற்று வருகிறதே” என்று சந்தோஷத்துடன் குதூகலமாகச் சொன்னாள் சாரு.

அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சதீஷ். “என்னங்க அப்படிப் பார்க்கிறீங்க?” என்றாள் சாரு.

“ரேஷ்மா மேடம், உங்கள் வீட்டிற்கு குடி வர பயமாக இருக்கிறது மேடம்” என்றான் கேலியாக.

அவன் குரலில் இருந்த கேலியைப் புரிந்து கொண்டரேஷ்மா, “ஏன் சார்?” என்றாள்.

“ஒருவேளை இந்த வீட்டை காலிசெய்து விட்டு வேறு வீட்டிற்குப் போகும்படி நேர்ந்தால் அப்போதும் இதே சௌகரியங்களோடு தான் வேண்டுமென்றால் நான் என்ன செய்வேன்?” என்றான் நமுட்டுச் சிரிப்போடு.

“போதுமே சதீஷ் உங்கள் கலாட்டா. உடனே பெயின்ட் அடிக்க ஏற்பாடு செய்து விட்டு இந்த வாரமே குடி வரப் பாருங்கள்” என்றவள், யாரோ டைரக்டரிடமிருந்து போன் வரவும் உடனே ‘அட்டெண்ட்’ செய்யப் போனாள்.

விடியும் முன்பே தன் படுக்கை அறையில் உள்ள இன்டர்காம் அலற, தூக்கம் கலையாமல் போனை எடுத்தாள் ரேஷ்மா.

“ஹலோ பேபி, நான் தான் ரிஷி. எனக்கு இப்போதே உன்னைப் பார்க்க வேண்டும்” என்றான் ரிஷி.

“இப்போதா?” என்றவள் கழுத்தை வளைத்து சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். காலை மணி ஐந்தில் காட்டியது.

“காலை மணி ஐந்து தான் ஆகிறது. நீங்கள் இப்போது கிளம்பினால் கூட உங்கள் ஊரில் இருந்து இங்கே வர பகல் பத்து மணி ஆகி விடும். அப்படி இருக்க நீங்கள் எப்படி இப்போது பார்க்க முடியும்?”

“நீ இப்போது உன் பெட்ரூம் கதவைத் திற” என்றான் அதிகாரத் தோரணையில்.

படுக்கையில் இருந்து எழுந்து கழுத்தின் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த தங்கச் சங்கிலிகளைச் சரி செய்து கொண்டு வேகமாகப் போய் கதவைத் திறந்தாள்.

அங்கு ரிஷி நிற்க, இவள் அழகான பெரிய கண்கள் ஆச்சரியத்தில் இன்னும் வியந்து அவனை விழுங்கி விடுவது போல் பார்த்தன.

‘பார்த்த விழி பார்த்தபடி’ என்று கமலஹாசன் பாடியபடி ஒரு படத்தில் மெய் மறந்து ரசித்ததுபோல் ரிஷியும் தன்னை மறந்து நின்றான்.

‘சிலர் தூங்கியெழுந்து வரும் போது பார்த்தால் குமட்டும். ஆனால் இவளுக்கு மட்டும் இன்னும் அழகு கூடுவதேன்! சுருண்ட கூந்தல் கட்டுக்கடங்காமல் நெற்றியிலும் கழுத்திலும் அலைவது முழுநிலவைச் சுற்றி லேசான மேகங்கள் காற்றில் அலைவது போலவே இருக்கிறதே’ என்று பலவும் யோசித்து நின்றான்.

“ரிஷி” என்று அவளும் நெருக்கமாக இடிப்பது போல் வந்து நின்று கொண்டு அவன் இரு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

“எப்படி இவ்வளவு அதிகாலையில் வந்தீர்கள்? என்னால் நம்ப முடியவில்லை” என்றவள், லேசாக அவன் வலது கையில் கிள்ளினாள். “எப்போது சென்னை வந்தீர்கள்?” என்று லேசாக சந்தோஷத்தில் துள்ளினாள்.

“ஆ வலிக்கிறது ரேஷ்மா, கிள்ளித்தான் கனவா நினைவா என்று பார்க்க வேண்டுமா? வேறு மாதிரியாகவும் பார்க்கலாம்” என்று குறும்புத்தனமாகச் சிரித்தவன், “நான் நேற்றே வந்து விட்டேன். உள்ளே வரலாமா இல்லை அப்படியே எங்கள் ஊருக்குப் போகட்டுமா?” என்றான் குறும்பாக சிரித்தபடி.

“இங்கே ஒருத்தன் மூன்று நாட்களாகத் தூங்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்க உன்னால் மட்டும் எப்படி கும்பகர்ணியாகத் தூங்க முடிகிறது?” என்று ஆச்சர்யப்பட்டான் ரிஷி.

‘உம்’ என்று அவனை முறைத்தவள், “ஸாரி, வந்தவரை வா என்று கூட சொல்லாமல் நான் இப்படி குதித்துக் கொண்டிருக்கிறேன். வெரி ஸாரி, உட்காருங்கள். நான் போய் பிரஷ் செய்து கொண்டு வருகிறேன்” என்று அவனை படுக்கை அறையிலிருந்த ஸிங்கிள் ஸீட் சோபாவில் உட்கார வைத்து விட்டு ரெஸ்ட் ரூமிற்குப் போனாள்.

முகத்தை நன்றாக அழுத்தத் துடைத்துக் கொண்டு வந்தவள், அன்னம்மா மாமியை இன்டர்காமில் அழைத்து சூடாக ஸ்ட்ராங்காக இரண்டு காபி எடுத்து வரச் சொல்லி உத்தரவிட்டாள்.

“அம்மா அப்பா எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டவளுக்கு, அப்போது தான் காமாட்சியின் வேண்டுகோள் ஞாபகம் வந்தது.

‘அவனை எப்படி தன்னிடமிருந்து விலக்கி வைப்பது? முதலில் அவன் ஒத்துக் கொள்வானா இல்லை இவளால் தான் அவனில்லாமல் வாழ முடியுமா? ஆனால் ரிஷி என்ன நினைப்புடன் தன்னுடன் பழகுகின்றான் என்றே தெரியவில்லை. நான் தான் அவனைக் காதலிக்கிறேனே தவிர, அவன் என் மீது வைத்துள்ள அதீதமான பாசம் காதலென்பதா, நட்பு என்பதா?’ என குழம்பினாள்.

“நான் கிளம்புகிறேன் ரேஷ்மா. எனக்கு பத்துமணிக்கு ஹில்டன் ரெஸ்டாரண்டில் ஒரு பிஸினஸ் மீட்டிங் இருக்கிறது. அதை விட முக்கியமாக ஒரு விஷயம் பேச வேண்டும், அதைச் சொல்லத்தான் அவசரமாக வந்தேன். இன்று மாலை ஐந்து மணிக்கு நான் இங்கு வருவேன், பீச்சிற்குப் போகலாம். அங்கு தான் பேசமுடியும்” என்றான் கிறக்கமான குரலில்.

“ரிஷி, சினிமாப்படம் ஏதாவது எடுக்கிறீர்களா? அதற்கு என்னை புக் செய்யப் போகிறீர்களா?” என்றாள் குறும்பு கூத்தாட.

“இல்லை, உனக்கு புத்தி ஏனோ இப்படிப் போகிறது. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்பார்களே, அதைப் போல. எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை, இன்று சாயந்திரம் தெரிந்து கொள். நான் வரட்டுமா?” என்று அவசரப்படுத்தினான்.

“காலை டிபன் கூட சாப்பிடவில்லையே. பத்து மணிக்குத் தானே மீட்டிங் .இட்லியாவது இரண்டு சாப்பிட்டு விட்டுப் போங்களேன்”

“அது பரவாயில்லை, கரெக்டாக ஐந்து மணிக்கு ரெடியாக இரு. நான் நிறைய பேச வேண்டும்” என்றவன், லேசாக இவள் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி விட்டு திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே காருக்குச் சென்றான்.

சதீஷும் அவனை கார் வரைச் சென்று வழியனுப்பி வைத்தான். ரேஷ்மா சதீஷை அழைத்து தன்னுடைய எல்லா புரோகிராமும் பகல் மூன்று மணியோடு முடியும்படி பார்த்துக் கொள்ளச் சொன்னாள். ரேஷ்மாவும் தன் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டாள். அலாரம் வைத்து ஒரு மணி நேரம் தூங்கியவள், நான்கு மணிக்கு கரெக்டாக எழுந்து குளித்து ரெடியாகி விட்டாள்.

இளரோஜா வண்ணத்தில் உடலோடு ஒட்டிய டிசைனர் சாரி, அதற்குப் பொருத்தமான அதே நிறத்தில் ஜாக்கெட், கழுத்தோடு ஒட்டிய  பவளமும் முத்தும் கலந்த அட்டிகை, காதில் அதற்குப் பொருத்தமான முத்தும் பவளமும் கலந்த சிறிய தோடும் வளையமும், இரண்டு கைகளிலும் அதே போல் முத்தும் பவளமும் கலந்த  வளையல்கள்.

மயில் தோகை போன்ற நீண்டு அடர்ந்த அவள் கூந்தலை ஒற்றைப் பின்னலாகத் தழையத் தழைய பின்னி அதில் மல்லிகைப் பூச்சரத்தை தொங்க விட்டிருந்தாள். வெள்ளை வெளேரென்ற அவள் முகத்தில் லேசாகப் பௌடர் போட்டு ஒரு சிறிய சிகப்பு நிற ஸ்டிக்கர்பொட்டு மட்டும் வைத்து தன் அலங்காரத்தை முடித்துக் கொண்டாள் ரேஷ்மா.

ஆளுயர நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள் திருப்தி அடைந்தாள். ஆனால் மனதின் ஒரு மூலையில், இந்த அலங்காரம் தேவையா என்ற கேள்வி அவள் மனதில் வலியோடு எழுந்தது. அந்தக் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

‘மனிதர்கள் மட்டும் தான் தவறு செய்வார்களா? கடவுளும் கூட நிறைய தவறுகள் செய்வார் போல் இருக்கிறது. அவர் என்னை அநாதையாகப் படைத்தது தவறில்லை, ஆனால் ஒரு பெண்ணாக, இவ்வளவு அழகான அநாதையான பெண்ணாக ஏன் படைத்தார்? இது வரமா சாபமா?’ என்று கண்ணாடி முன்னே நின்று கடவுளைக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது கீழேயிருந்து ரிஷியின் கார் ஹாரனின் சப்தம் இசைத்தது. எல்லாவற்றையும் மறந்து வேகமாக மாடியிலிருந்து  ஓடினாள்.

‘என்ன இந்தப் பெண் தலை தெறிக்க ஓடுகிறதே, எங்காவது விழுந்து வைக்கப்  போகிறது’ என்று அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அன்னம்மா மாமி.

காரிலிருந்து இறங்கிய ரிஷி, இவளைப் பார்த்து பிரமித்தான், பேச்சற்று நின்றான். தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட ரேஷ்மா, “போகலாமா?” என்று கேட்டாள்.

அப்போதும் அவன் அமைதியாக இருக்க, அவன் கண்ணருகில் அவள்  சொடக்கு போடவே, தூக்கத்திலிருந்து எழுந்தவன் போல் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல் கலகலவென்று சிரித்தாள்.

“காபி ஏதாவது குடித்து விட்டுப் போகலாமா?” என்றாள்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், பீச்சில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிடலாம்” என்றான்.

ஐஸ்கிரீம் என்றவுடன் இவனுக்கு முன்பே ரேஷ்மா காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். ரிஷியும் லேசாக சிரித்துக் கொண்டே அவள் பக்கத்தில் உட்கார்ந்து காரை எடுத்தான். அப்போதும் அவன் தன் கண்களை அவளிடமிருந்து அகற்றவில்லை. அவன் பார்வையைக் கண்டு அவள் கன்னங்களில்  ரோஜா பூத்தது.

“என்ன ரிஷி இப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றாள் மெல்லிய குரலில்.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நல்லதோர் வீணை செய்தே!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    வார்த்தை (கவிதை) – மணிராம் கார்த்திக்