in , ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“ஏய் ரேஷ்மா, என்ன ஆயிற்று உனக்கு? இந்த இடி இடித்துக் கொண்டு படுக்கிறாய்?” என்றாள் காமாட்சி சிரித்துக் கொண்டு.

“அம்மா… நான் உங்கள் மேல் கையைப் போட்டுக் கொண்டு தூங்கட்டுமா?” என்றாள் குழந்தையைப் போல் கொஞ்சியபடி.

“தூங்கடி ராசாத்தி” என்று குரல் தழுதழுக்கக் கூறியவர், ஒரு கையால் அவள் முதுகை சின்னக் குழந்தைகளைத் தட்டி தூங்க வைப்பது போல் தூங்கவைக்க முயற்சி செய்தார்.

“அம்மா, நான் ஒன்று கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?” என்ற ரேஷ்மா மெதுவாக கேட்க, காமாட்சி மெதுவாக சிரித்தாள்.

“இது தான் நீ என்னுடன் படுக்க வந்ததன் காரணமா? போக்கிரி” என்று சொல்லிச் சிரித்தாள்.

“அம்மா… பொதுவாக எல்லோருக்கும் இந்த சினிமாத் துறையின் மேல் வெறுப்பு இருக்கும், அது நியாயமான வெறுப்புத்தான். ஆனால் உங்கள் வெறுப்போ, வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதோ ஒரு பேரிழப்பால் ஏற்பட்ட வலி போல் தெரிகிறது. அதை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று ஆவலுடன் கேட்டாள்.

காமாட்சி அமைதியாக இருக்க, “ஸாரிம்மா… நான் உங்களைத் தூங்க விடாமல் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும். அன்று உங்கள் வீட்டு பூஜை அறையில் வீணையுடன் ‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி’ என்று பாரதியாரின் பாடலைப் பாடிய போது, பிரமைப் பிடித்தாற் போல் நின்றிருந்தீர்கள், கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

‘நீ ஏன் இந்தப் பாட்டைப் பாடினாய்?’ என்று ஒரு கோபம் கலந்த வேதனையுடன் கேட்டீர்கள். அப்போது அங்கே வந்த அங்கிளும் ‘காவ்யா ,விரும்பிப் பாடும் அதே பாடல், அவள் கூறும் அதே வார்த்தைகள்’ என்றார். இப்போது சொல்லுங்கள் அம்மா, யார் அந்த காவ்யா? அவர்களால் தான் உங்களுக்கு சினிமாவின் மேல் வெறுப்பு வந்ததா?” என்று கேட்டாள்.

இப்போதும் காமாட்சியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது போலும். அருகில் நெருங்கிப் படுத்துக் கொண்டிருந்த ரேஷ்மாவின் கைகளில் கண்ணீர் துளிகள். ரேஷ்மா மெதுவாக்க் காமாட்சியின் கண்களைத துடைத்தாள்.

“ஸாரி அம்மா, உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் சொல்ல வேண்டாம்” என்றாள்.

“எப்படியும் அவளுடைய நினைவுகளால் தூக்கம் வரப்போவதில்லை. ஊருக்கே தெரிந்த கதை தான் எங்கள் கதை, நீயும் தெரிந்து கொள்.

எங்களுடைய முதல் பெண்தான் காவ்யா. ரிஷியின் அப்பாவிற்கு தமிழ் மொழி மேலும், தமிழ் இலக்கியத்தின் மேலும் தீராத பக்தி. ஏன் பைத்தியமே. அதனால் தான் அவளுக்கு காவ்யா என்று பெயர் சூட்டினார். அவள் பிறந்த பிறகு பதினைந்து ஆண்டுகள் எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. 

அதனால் அவளை ஒரு இளவரசி போல் செல்லம் கொடுத்து, செல்வாக்கோடு வளர்த்தார் அவள் அப்பா. வீணையும், வாய்ப்பாட்டும், பரதமும் அவளுக்கு அத்துப்படி. ஆளும் செதுக்கி வைத்தத் தங்கச்சிலை போல் இருப்பாள்.

நீண்ட அடர்த்தியான ஒற்றைப் பின்னலில் தங்கக் குஞ்சலம் வைத்து நடந்தால் அதுவே ஒரு நாட்டியம் போல் இருக்கும். இப்போது உன்னைப் பார்க்கும் போது எனக்கும் அங்கிளுக்கும் அவள் ஞாபகம் தான் புரட்டி எடுக்கிறது.  அது தான் ஏனென்று தெரியவில்லை.

அதன்பிறகு நீண்ட வருடங்கள் எங்களுக்கு குழந்தைகள் இல்லை. பன்னிரண்டு வருடங்கள் கழிந்த பிறகு தான் வித்யாதர் பிறந்தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு சௌம்யா பிறந்தாள். அவள் பிறந்து இரண்டு வருடங்கள் கழித்துத்தான் ரிஷி பிறந்தான்.

அப்போது தான் ஒரு சினிமா கூட்டம் ஒன்று அந்த ஊருக்குள் நுழைந்தது. அங்கிள் தான் அந்த கிராமத்தில் நல்ல வசதியானவர், அதனால் புதியவர்கள் யாராவது ஊருக்குள் வந்தால் அவர்கள் இவரைத்தான் வந்து முதலில் பார்த்து தங்கள் வணக்கத்தையும், வருகையின் காரணத்தையும் முதலில் தெரிவிப்பார்கள்.

அவர்கள் ஏதோ ஒரு தமிழ் படத்தின் நடனத்தை இந்த ஊரின் இயற்கை அழகுடன் எடுக்க விரும்புவதாகவும், அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கேட்டார்கள்”

இதற்கிடையில் ரேஷ்மா தூங்கிவிட்டாளோ என்று சந்தேகப்பட்டு, “என்ன ரேஷ்மா கேட்டுக் கொண்டிருக்கிறாயா, இல்லைத் தூங்கி விட்டாயா?” என்று லேசாக அவளைத் தட்டி விட்டுக் கேட்டாள் காமாட்சி.

“தூங்கவில்லையம்மா… நான் நன்றாக விழித்துக் கொண்டு தான் இருக்கிறேன், நீங்கள் மேலே சொல்லுங்கள்” என்றாள்.

மேற்கொண்டு தன் கதையைத் தொடர்ந்தாள் காமாட்சி.

“அவர்கள் எல்லோருக்கும் அன்று நம் வீட்டில் பலமான விருந்து. நம் தோட்டத்தில் பனைமரத்தில் இருந்து நுங்கு எடுத்து வந்து அதில் பாயசம். இலையில் வைப்பதற்கு நம் தோப்பில் விளைந்த முக்கனிகள். இவற்றோடு ஓடுவன, நீந்துவன, பறப்பன போன்ற மாமிச வகைகள். எல்லாவற்றையும் பிரமிப்போடும், ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கொண்டு சாப்பிட்டார்கள்.

அப்படத்தில் கதாநாயகனாக ஒரு முஸ்லிம் பையன் நடித்தான். அவனை அப்துல்லா என்று அறிமுகப்படுத்தினார்கள். ஒரு காலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்தவன், ஆனால் இப்போது எல்லோரும் இந்தியாவிலேயே நிரந்தரமாக செட்டில் ஆகி விட்டார்கள் என்றார்கள்.

நாங்கள் அதை ஒன்றும் பெரிதாகக் கருதவில்லை. பையன் அவ்வளவு அழகு, ஆறடிக்கு மேல் உயரம், ஆணுக்கு ஆணே மயங்கும் அழகு.

ஷூட்டிங் நடக்கும் போது பார்ப்பதற்கு எங்களையும் அழைத்தார்கள். அப்போது கதாநாயகனுக்கு கனவு ஸீன். கிருஷ்ணனாக அப்துல்லாவும், ராதையாக கதாநாயகியாக நடிக்கும் பெண்ணும்  நடனமாட வேண்டும்.

‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’ பாடல். அந்தப் பெண்ணிற்கு நடனமே சரியாக வரவில்லை. அவள் ஆடுவதைப் பார்த்த காவ்யா உரக்க சிரித்து விட்டாள். எல்லோரும் காவ்யாவையே உறுத்துப் பார்த்தனர்.

அப்போது அப்படத்தின் டைரக்டர், “மேடம், தயவு செய்து கேலி செய்யாதீர்கள். உங்களால் முடிந்தால் நீங்கள் ஆடிக் காட்டுங்கள்” என்றார்.

கண்களாலேயே தந்தையின் அனுமதி பெற்ற காவ்யா, பரத்த்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்ததால் சுழன்று சுழன்று ஆடி இயக்குனரின் கைத்தட்டலைப் பெற்றாள். அப்போது அப்துல்லா தன் இனிமையான குரலில் – ஆம் இனிமையான குரல் தான். அந்த காலத்து ஏ.எம்.ராஜாவின் குரல் போல் மிகவும் மென்மையான குரல்.

‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா’ என்று பாடினான். ஒரு கணம் எல்லோருமே அவன் குரலில் மயங்கி நின்றனர். மகுடியின் இசைக்கு ஆடும் நாகம் போல் காவ்யாவும் ஆடினாள். அவன் பாட்டில் அவள் மயங்கி ஆட, அவள் ஆட்டத்தில் எல்லோரும் மயங்கினர்.

அவளும் அப்துல்லாவும் சேரந்து ஆடும் போது நிஜமாகவே கண்பட்டு விடுமோ என்று தோன்றியது. அதிலிருந்து எப்படி இருவரும் பேசிக் கொண்டார்கள், எப்படிப் பழகினார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை, சந்தேகமும் வரவில்லை. அவர்கள் படப்பிடிப்பும் முடிந்தது.

அவர்கள் கிளம்பிய ஒரு மாதத்தில் திடீரென்று ஒரு நாள் காவ்யாவைக் காணவில்லை.  ஊருக்கு வெளியே அப்துல்லாவும் காவ்யாவும் அடிக்கடி சந்தர்ப்பார்கள் என்ற விஷயமே நிலத்தில் வேலை செய்யும் ஆட்கள்  மூலம் தான் பின்னர் இவர்களுக்குத் தெரிந்தது. அங்கிள் அதிர்ச்சியில் படுத்து விட்டார். சௌம்யா, ரிஷி இவர்களின் எதிர்காலத்திற்காக எங்களை நாங்களே தேற்றிக் கொண்டோம்” என்று ஒரு நீண்ட பெருமூச்சுடன் முடித்தார் காமாட்சி.

துளியும் அசையாமல் கதையைக் கேட்ட ரேஷ்மா, “நீங்கள் அவர்களைத் தேடினீர்களா?” எனக் கேட்க

“போலீஸ் உதவியுடன் எங்களால் முடிந்த அளவு தேடினோம். அப்போது அந்தப் படக்குழுவைச் சேர்ந்த சிலர் அவர்கள் நேபாளத்திற்கு சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்கே போயிருக்கலாம் என்று  அச்சுறுத்தினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கு மேல் பணத்தையும், நேரத்தையும் தன்மானத்தையும், குடும்ப மானத்தையும் காப்பாற்றாத ஒரு பெண்ணிற்காக வீணாக்க எங்களுக்கு மனம் வரவில்லை. எல்லாவற்றையும் மறந்து விட்டு சௌம்யாவிற்காகவும் ரிஷிக்காகவும் வாழத் தொடங்கினோம்

அவளுடைய ஞாபகங்களே இருக்கக் கூடாதென்று அவளின் நல்ல உடைகளையெல்லாம் ஏழைப் பெண்களுக்கு கொடுத்து விட்டோம். தேவையில்லாதவற்றை எரித்து விட்டோம்.  அப்போது தான், அவன் பாட அவள் கூட சேர்ந்து பாடும் ஒரு சி.டி. கிடைத்தது. அதுவும் அதே பாரதியார் பாட்டுதான்” என்று பெருமூச்சுடன் முடித்தாள் காமாட்சி.

“அதனால் தான் அந்தப் பாட்டை நான் பாட, நீங்களும் அப்பாவும் அதிர்ச்சியடைந்தீர்களா?” என ரேஷ்மா கேட்க

“ஆம், இந்த ஓடுகாலியால் தான் பாரதியாரின் அந்தப் பாட்டும் பிடிக்காமல் போச்சு. சினிமா என்றாலே சுத்தமாக வெறுத்துப் போச்சு” என்றார் காமாட்சி.

“ஓ அதனால் தான் சினிமாவும் வெறுத்துப் போச்சு, அதில் நடிப்பவர்களையும் பிடிக்கவில்லையா?”

“பிடிக்கவில்லை என்றில்லை, வெறுப்புத்தான். நம் மானம், மரியாதையெல்லாம் போயிற்றே என்ற கோபம் தான். ரேஷ்மா, எனக்கு ஒரு வாக்குறுதி கொடுப்பாயா?”

“என்னம்மா, அங்கே இங்கே சுற்றி கடைசியில் என் தலையில் கை வைக்கிறீர்களா?” என்றாள் கேலியாக சிரித்துக் கொண்டு.

“இது கேலியில்லை ரேஷ்மா, ஒரு தாயின் வேண்டுகோள். என் மகன் ரிஷி இப்போது உன் மேல் உயிராக இருக்கிறான், வெளிப்படையாக சொல்லவில்லையே தவிர அவன் உள்ளம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவன் தாயல்லவா? அதே போல் உன் உள்ளத்தையும் நான் அறிவேன். நீயும் அவனை உயிருக்குயிராய் காதலிக்கிறாய் என்று எனக்குத் தெரியும்.

அதனால் தான் நான் அன்று ஒருநாள் உன்னிடம், நல்ல வசதியான பையன் உன்னை விரும்பித் திருமணம் செய்து கொண்டால் சினிமாவில் நடிப்பதை விட்டு விடுவாயா என்று கேட்டேன். ஆனால் நீ இந்தத் தொழிலை விட முடியாது என்று கூறி விட்டாய். என் மகனின் வாழ்க்கையும் சினிமாவால் அழிவதை எங்களால் ஒத்துக் கொள்ள முடியாது.

அதனால் நீ எனக்கு ஒரு வாக்குத் வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் என மகன் ரிஷியின் மணவாழ்க்கையில்  நீ வரக் கூடாது. நீ மட்டுமல்ல, எந்த ஒரு சினிமா நடிகையும் வரக் கூடாது. இது ஒரு தாயின் வேண்டுகோள்” என காமாட்சி வேண்டுகோள் விடுக்க

“உங்கள் மகனின் திருமண வாழ்க்கையில் நான் குறுக்கிட மாட்டேன் அம்மா, என்னை நம்புங்கள்” என்றாள் ரேஷ்மா.

“ஆனால் நாம் இப்போது பேசியது நமக்குள் தான் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் என் மகனுக்குத் தெரியக் கூடாது, சரியா?” என காமாட்சி கேட்க, சரியென்று தலையை மட்டும் ஆட்டினாள் ரேஷ்மா.

இருவரும் அதன் பிறகு ஏதும் பேசவில்லை. எப்போது தூங்கினார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

காமாட்சியும் அவள் கணவரும் ஊருக்குக் கிளம்ப, வீடே வெறிச்சென்று ஆகிவிட்டது. சதீஷ் மட்டும் இல்லாவிட்டால் அவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிருக்கும்.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எங்கிருந்தோ வந்தாள் (சிறுகதை) – பவானி உமாசங்கர்

    ஆறுதலா ஒரு வார்த்தை (சிறுகதை) – மணிராம் கார்த்திக்