இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘அப்பாதான் பாசத்திற்கு அடிமையாகி அடிக்கடி உணர்ச்சி வசப்படுவார். அம்மா மனதளவில் மிகவும் தைரியமாக இருப்பவள்’ என்று நினைத்திருந்தான் ரிஷி. ஆனால் அம்மா எல்லா உணர்ச்சிகளையும் மனதில் போட்டு அழுத்தி வைத்து இப்படி திடீரென்று உடைந்து போவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ரிஷி மிகவும் பயந்து விட்டான்.
உடனே தன் குடும்ப டாக்டரை வரவழைத்து, அவர் ஆலோசனையின்படி உடனே மருத்துவமனையில் சேர்த்தான். அப்பா எதுவும் செய்ய இயலாத நிலையில் சிலை போல் உட்கார்ந்திருந்தார்.
அம்மாவை ஐ.சி.யு.வில் சேர்த்திருந்தார்கள். சதீஷ் வீட்டில் இருந்து அப்பாவைப் பார்த்துக் கொண்டான். அக்கா சௌம்யாவிற்கும், மாமாவிற்கும் லண்டன் போய் வந்ததும், அங்கே மும்தாஜ் மற்றும் அப்துல்லா ஆகியோரைச் சந்தித்ததும் பற்றி விளக்கித் தன் கைபேசியில் கூறினான். லண்டனில் அவர்கள் தங்கியிருந்த இடத்தைப் பற்றியும் கூறினான்.
ஆனால் சௌம்யா, மும்தாஜை அவளுடைய அக்கா காவ்யாவாக இருக்க முடியாது என்று திடமாக நம்பினாள். அவள் சாயல் கொண்ட பெண்ணாக இருக்கலாம். முழு விவரமும் தெரிந்து கொள்ளாமல், உருவ ஒற்றுமையை வைத்து அம்மாவையும், அப்பாவையும் குழப்பாதே என்று கடிந்து கொண்டாள். அம்மாவைப் பார்க்க தன் கணவருடன் உடனே கிளம்பி வருவதாகவும் கூறினாள்.
சௌம்யா தன் கணவர் ரகுவிடன் சென்னை வந்து அங்கிருந்து தன் அம்மா காமாட்சியை பார்க்க மருத்துவமனை வந்து விட்டாள்.
ஒரு வாரம் கழித்து காமாட்சியை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். அம்மாவோடு மருத்துவமனையிலிருந்து வந்த சௌம்யா, ஒரு நாள் அம்மா மருந்து மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மாடியில் உள்ள அறையில் ரிஷி தன் செல்போனில் ரெகார்ட் செய்த மும்தாஜ், அப்துல்லா உரையாடலையும், அவள் நடனத்தையும் பார்த்தாள்.
ஆனால் சௌம்யாவிற்கு அவள் அக்காவின் முகம் கொஞ்சம் கூட நினைவிற்கு வரவில்லை. அதனால் அவள், மும்தாஜ் தன் அக்கா என்பதை நம்ப மறுத்தாள். அவ்வளவு ஏன், காவ்யா இத்தனை வருடம் உயிரோடு இருக்கிறாள் என்பதையே அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“ரிஷி, நீ அவர்கள் முகச்சாயலை வைத்துக் கொண்டு உறுதியாக சொல்லாதே. அப்படியிருந்தால் அவள் உன்னிடம் நம் அம்மா அப்பாவைப் பற்றி விசாரித்திருப்பாள். ஏது, கொஞ்சம் விட்டால், அவர்கள் கங்கைக் கரையில் தொலைத்த பெண் ரேஷ்மா என்று சொல்வாய் போலிருக்கிறதே” என்றாள்.
அவளுடைய பேச்சால் அதிர்ச்சியுற்ற ரிஷி, “அக்கா, நீ சொன்ன பிறகுதான் எனக்கே அப்படியும் இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ரேஷ்மா வளர்ந்த ஹோமில் போய் விசாரித்தால், இவள் எங்ஙிருந்து வந்தாள் என்ற விவரமும் தெரியும் என்று நினைக்கிறேன்” என்றவன் அதன் பிறகு யாரிடமும் எதுவும் பேசவில்லை. தீவிர யோசனையில் மூழ்கினான்.
சதீஷை அழைத்து, காமாட்சி, அவள் கணவர் ஆகியோர் காவ்யாவோடு ஒன்றாக இருந்த போட்டோக்களைக் காட்டி மும்தாஜை சென்னைக்கு அழைத்து வரும்படி கூறினான்.
இப்போதும் காவ்யாவையே நினைத்து, உடல் நலம் குன்றி மருத்துவமனையிலிருந்து அவர்கள் அம்மா டிஸ்சார்ஜ் ஆனதையும் கூறி அவர்கள் மும்தாஜையும், அப்துல்லாவையும் அழைத்து வரும்படி சதீஷிற்கு அறிவுறுத்தி, தேவையான பணமும், ஏர்டிக்கட்டும் எடுத்து அனுப்பினான் ரிஷி.
ஒருவாரம் வரை சதீஷிடமிருந்து எந்த பதிலும் இல்லை. பிறகு சதீஷ், போன் செய்து அவனோடு மும்தாஜ், அப்துல்லா வருகிறார்கள் என்று ரிஷிக்குத் தெரிவித்தான்.
ரிஷி சென்னை சென்று ரேஷ்மாவுடன் ஒரு நாள் தங்கினானே தவிர, அவளிடம் மும்தாஜ், அப்துல்லா வருகையைப் பற்றியும் தெரிவிக்கவில்லை. மும்தாஜ்தான் அவனுடைய பெரிய அக்காவாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கவில்லை.
ரிஷி, மும்தாஜையும், அப்துல்லாவையும் அழைத்து வந்து சுவாமிமலையில் ஒரு நல்ல ரெஸ்டாரென்டில் தங்க வைத்தான். அப்போது அப்துல்லா, “ரிஷி சார், நீங்கள் உங்கள் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை, மும்தாஜைப் பார்த்தால் அவர்கள் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்று கூறி எங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு ஒரு சத்தியம் செய்துத் தர வேண்டும். எந்தக் காரணத்தைக் காட்டியும் நீங்கள் எங்கள் இருவரையும் பிரிக்கக் கூடாது. எங்களைப் பிரித்தால் நாங்கள் இருவருமே இருக்க மாட்டோம்” என்றான் கலக்கத்துடன்.
“அப்துல்லா, எனக்கு மனிதர்கள்தான் வேண்டும், மதங்கள் வேண்டாம். நான் என் தாயின் உயிரைக் காப்பாற்றத்தான் உங்களை அழைத்து வந்தேன், மதங்கள் பேரைச் சொல்லி உயிருக்குயிராக காதலிக்கும் உங்களைப் பிரிப்பதற்கில்லை. மேலும் காசியில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு நீங்கள் தவறவிட்ட உங்கள் மகளைப் பற்றியும் கண்டுபிடித்து உங்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதும் என் ஆசை” என்றான் ரிஷி உருக்கமாக.
“என்ன சொன்னீர்கள்? எங்கள் மகளைப் பற்றி விவரங்கள் தெரிந்து அவளைக் கண்டுபிடித்து தரப்போகிறீர்களா? நாங்கள் கல்கத்தா முழுவதும் அலசி விட்டோம். எங்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை! நான் செய்த பாவம் ரிஷி, ஒரு பெண்ணை அவளுடைய பெற்றோர்களுக்குத் தெரியாமல் அழைத்துச் சென்று மதம் மாற்றி இன்று வரை அவர்களைத் தவிக்க விட்டேன். அந்த பாவம்தான் எங்கள் மகளை எங்களிடமிருந்து பிரித்து விட்டது. கடவுள்தான் கண் திறக்க வேண்டும்” என்றான் அப்துல்லா கண்கள் கலங்க.
“கவலைப் படாதீர்கள் அப்துல்லா. இப்போது நான் மும்தாஜ் அக்காவை மட்டும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் போகிறேன். அங்கு எல்லாம் நினைத்தது நினைத்தபடி நடந்தால், வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன். இல்லையென்றால் அக்காவை உங்களிடம் ஒப்படைத்து விட்டு உங்கள் இருவரையும் லண்டனில் உள்ள லிட்டில் வெனிஸிற்கு டிக்கட் எடுத்து அனுப்பி விடுகின்றேன். சரியா?” என்றான்.
ரிஷி வீட்டிற்கு மும்தாஜுடன் வந்து சேர்ந்தான். முதலில் யாருக்கும் அவளை அடையாளம் தெரியவில்லை. தனக்குள் சிரித்துக் கொண்ட அவள், யார் உதவியும் இல்லாமல் அவளுடையதாக இருந்த அந்த அறைக்குள் சென்றாள். அதுவே எல்லோருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அந்த வீடு முழுவதும் அவளாகவே சுதந்திரமாக சுற்றி வந்தாள், ஒவ்வொரு இடமும் அவளுக்கு நன்றாக நினைவிருந்தது.
தன் பர்தாவை எடுத்துவிட்டு, பழையபடி தன் ஹேர் ஸ்டைலை டிரஸ்ஸையும் மாற்றிக் கொண்டு, காவ்யாக தன் அப்பாவின் எதிரில் போய் நின்றாள்.
“காவ்யா” என்று அப்பா உணர்ச்சி மேலிட அடிக்குரலில் கூறினார். தன் மகளைப் புரிந்து கொண்ட ஒரு அதிர்ச்சியும், ஆனந்தமும் இருந்தது. உணர்ச்சி மேலிட எழுந்து நின்றார்.
“அப்பா, அம்மாவைப் போய் பார்க்கலாமா?” என்றாள் காவ்யா ஆவலுடன்.
“போகலாம் அம்மா” என்றவர், தன் நடுங்கும் கரங்களால் காவ்யாவைப் பிடித்துக் கொண்டார். சௌம்யாவும், ரகுவும் ஆச்சர்யமும் சந்தோஷமும் பொங்க அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அக்கா, என்னை ஞாபகம் இருக்கிறதா? நான்தான் உன் தங்கை சௌம்யா. இவர் என் கணவர் டாக்டர் ரகு” என்றாள் ஆவல் மேலிட.
“தெரியும் சௌம்யா, உங்கள் எல்லோரையும் பற்றி எல்லா விஷயங்களும் தெரியும். வித்யாதரைப் பற்றியும் தெரியும். ஆனால் உன் திருமணம் போன்ற மகிழ்ச்சியான விஷயங்களில் தான் என்னால் ஒரு சகோதரியாகக் சந்தோஷமாக்க் கலந்து கொள்ள முடியவில்லை. நான் வாங்கி வந்த வரம் அப்படி. என் தலை விதியை யாரால் மாற்ற முடியும்?” என்றாள் காவ்யா.
உள் அறையில் அம்மாவின் இருமல் சப்தம் கேட்டது.
“அப்பா, நான் இப்போது அம்மாவைப் பார்க்கலாமா? திடீரென்று என்னைப் பார்த்தால் அதிர்ச்சியாக ஆகி விடுமா?” என்று கேட்டாள் காவ்யா.
“கொஞ்சம் இரும்மா, நானும் ரிஷியும் முதலில் போய் அம்மாவுடன் கொஞ்சம் பேசி, அவளுக்கு மும்தாஜ்தான் காவ்யா என்று மெதுவாக பேசி தெளிவுபடுத்தி விடுகிறோம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டுப் பிறகு நீ வந்ததைச் சொல்லலாம். உடனே சொன்னால் ஏதாவது அதிர்ச்சியானால் என்ன செய்வது? வா ரிஷி, நாம் போய் அம்மாவிடம் பேசிவிட்டுப் பிறகு காவ்யாவை அழைத்துச் செல்லலாம்“ என்றார் அப்பா.
இருவரும் உள்ளே சென்று சிறிது நேரம் அம்மாவோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் ரிஷி வெளியே வந்து காவ்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே போனான். கூடவே சௌம்யாவும் அவள் கணவரும் சென்றனர். அம்மா காவ்யாவையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். காவ்யா அம்மாவின் கைகளை மென்மையாகத் தடவிக் கொடுத்தாள். அம்மாவின் கண்களில் கண்ணீர்.
“நீ வழக்கமாக ஒரு பாட்டுப் பாடுவாயே, பாடிக் கொண்டே நடனமும் ஆடுவாயே, அந்தப் பாட்டு இப்போது ஞாபகம் இருக்கிறதா?” என்றாள் அம்மா மெதுவான குரலில்.
“நன்றாக ஞாபகம் இருக்கிறது. பாடவா?” என்றாள் காவ்யா. ‘உம்’ என்று தலையசைத்தாள் அம்மா.
காவ்யா, “நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா” என்று தன் அழகான குரலில் மென்மையாகப் பாடத் தொடங்கினாள்.
எல்லோரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். சௌம்யா உணர்ச்சி வசப்பட்டு “அக்கா” என்று அழைத்து அவளை அணைத்துக் கொண்டாள். அம்மா கண்களில் கண்ணீர் வழிந்தோட அவளை அருகில் அழைத்து, “காவ்யா என் மகளே” என்ற இறுக அணைத்துக் கொண்டாள்.
காவ்யாவும் ஒரே உணர்ச்சிமயமாக நின்றாள். “அம்மா, சந்தேகம் தீர்ந்ததா? நான் காவ்யாதானா?” என்றாள்.
“போடி பைத்தியக்காரி. எனக்கு சந்தேகமிருந்தால் நான் ஏன் மயங்கி விழுந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறேன். இப்போது உன்னைக் காவ்யா என்று கூப்பிடலாமில்லையா?” என்றாள் அம்மா.
“போம்மா நீ வேற, நீ வைத்த பேரில் நீ கூப்பிட்டால் தான் அழகு” என்றாள்.
ரிஷி யாரிடமும் ஏதும் சொல்லாமல் உடனடியாக வெளியே சென்றவன், திரும்ப வரும்போது அப்துல்லாவுடன் வந்தான். அவன் அம்மாவிடம் அழைத்துச் சென்றான்.
“அம்மா, இவர் தான் காவ்யாவின் கணவர் அப்துல்லா. மிகவும் நல்லவர். அம்மா, இனிமேல் மதவேற்றுமை எல்லாம் வேண்டாம். காதலித்த பெண்ணைக் கை விடாமல் அவளை அன்புடன் பாதுகாக்கின்றார். எந்த மத்த்தின் பேராலும் அவரை வேற்றுமைப்படுத்த வேண்டாம். அவர் எங்கள் அக்காவின் கணவர். இந்த வீட்டின் மாப்பிள்ளை” என்றான் உறுதியாக.
“உங்கள் எல்லோருக்கும் எந்த வேறுபாடும் இல்லையென்றால் எனக்கும் எந்த வெறுப்பும் இல்லை. கீழே சமையல்காரம்மாவிடம் சொல்லி மாப்பிள்ளைக்கும், பெண்ணிற்கும் நல்ல விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும். எனக்கு என் பெண்ணைப் பார்த்தவுடன் உடம்பு சரியாகி விட்டது. என்னைக் கீழே அழைத்துச் செல்லுங்கள், நானே சமையலை மேற்பார்வைப் பார்க்க வேண்டும். பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” அம்மா மிக உற்சாகமாக்க் கூறினாள். பல ஆண்டுகள் கழித்து மகளைப் பார்த்த சந்தோஷம் அந்த அம்மாவிற்கு.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings