in , ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அவனுடைய மார்பில் முகத்தை அழுந்தப் புதைத்துக் கொண்ட ரேஷ்மா, “ரிஷி… நீங்கள் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது என்பதை இந்தப் பத்து நாட்கள் பிரிவில் நான் நன்கு உணர்ந்து கொண்டேன். நான் சாகும்வரை என்னோடு பிரியாமல் இருப்பீர்களா? உங்கள் அம்மாவும் சுமதியும் பேசிய பேச்சால் நான் மிகவும் நிலைகுலைந்தேன். நீங்கள் எனக்குக் கிடைக்க மாட்டீர்கள் என்று திடமாக நினைத்தேன். உயிரே போனாற் போல் உணர்ந்தேன். ஆனால் என்னைத்தேடி இவ்வளவு தூரம் வந்து என்னுடன் இத்தனை நாள் இருக்கவும், வாழ்க்கையில்  நம்பிக்கைக் கிடைத்தது” என்றாள்.

இறுகிய அவன் பிடியை விடாமல், முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் அழகிய பெரிய கண்கள் அவனை விழுங்கி விடுவதுபோல் இமைக்காமல் பார்த்தன. அவனுக்கு அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்பது புரியாமல், கண்ணீர் குளம் கட்டி நிற்கும் அவள் கண்களை தன் இதழ்களால் மூடினான்.

“சந்தோஷமாக இருக்கும் போது சாவைப் பற்றிப் பேசுகிறாயே, முட்டாளா நீ? என் கண்ணம்மா, நம் இருவருக்கும் வயதாகி, கிழப்பருவம் எய்தி, நரை வந்து நடக்க முடியாமல் வீல் சேரில் வலம் வந்தாலும், கண்இமைகள் எல்லாம் நரைத்தாலும்  கூட நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன். நான்தான் உன் கணவன், நீதான் என் மனைவி” என்றான் உணர்ச்சி மயமாக

“இப்போதே கிளம்பி விட்டீர்களா ரிஷி சார்?” என்றவளை முறைத்தான்.

“இன்னும் எத்தனை நாள் என்னை ‘சார்’ என்ற அடைமொழியுடன் கூப்பிடப் போகிறாய்? நான் உடனே இந்தியா செல்ல வேண்டும், மிகவும் முக்கியமான வேலை இருக்கிறது. நீங்களும் உங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு ஒரு வாரத்தில் வந்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன். நான் வரட்டுமா டார்லிங், ப்ளைட்டிற்கு நேரமாகிறது” என்று விடைபெற்றான்.

சுவாமிமலை வந்தவுடன் தன்னுடைய முக்கியமான வேலைகளையெல்லாம் முடித்தான். பெற்றோரிடம் நலமாகத் திரும்பு வந்ததைத் தெரிவித்தான். ரேஷ்மா, அவள் வரும் தேதி, நேரம் மற்றும் ப்ளைட் டிடெயில்ஸ் எல்லாம் ரிஷிக்கு வாட்ஸ்ஆப் மெஸேஜில் அனுப்பியிருந்தாள். சதீஷும் அப்படியே ரிஷிக்கும், அவன் மனைவி சாருலதாவிற்கும் மெசேஜ் அனுப்பியிருந்தான்.

ரிஷி யாரிடமும் சொல்லாமல், ரேஷ்மாவை வரவேற்க சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டிற்குச் சென்றான். ரேஷ்மாவையும், சதீஷையும் அவர்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டான். அவர்களிடம் கூட ரிஷி சரியாகப் பேசவில்லை.

வீட்டிற்கு வந்த பிறகு இறுகிய முகத்துடன், “அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறைய வேலை இருக்கிறதென்றும், விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் ரேஷ்மாவும் சதீஷும் சாருவையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு வரவேண்டும்” என்று உத்தரவிட்டான். பிறகு, ரேஷ்மாவிடம் ஒரு அட்டைப் பெட்டியும், சதீஷிடம்  இரண்டு அட்டைப் பெட்டிகளும் கொடுத்தான்.

அடுத்த நாள் கோயிலுக்கு சென்ற போதுதான் ஒரே வாரத்தில் அவர்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என்று புரிந்து கொண்டாள் ரேஷ்மா.

சதீஷ்தான் மிகவும் பயந்து நடுங்கினான். ‘என்னை ஏண்டா இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டாய்!’ என்று புலம்பிக் கொண்டே இருந்தான்.

சாருலதாதான் கேலியாகச் சிரித்தாள். ‘நல்லதுதானே செய்தோம். அதற்குப் போய் இப்படிப் பயப்படுகிறீர்களே!’ என்றாள் அலட்சியமாக.

“டேய் சதீஷ், இன்று மாலை நாம் சுவாமிமலை போய், அங்கிருந்து பண்ணை வீட்டிற்குப் போகப் போகிறோம்” என்றான் ரிஷி.

“நீ மட்டும் தானே போகப் போகிறாய்!” என சதீஷ் கேட்க

“நீ இல்லாமலா? நீ தான் டிரைவ் பண்ணப் போகிறாய், நான் பின்னால் உட்காரந்து தூங்கிக் கொண்டு வரப் போகிறேன். சாருவிடம் சொல்லிவிட்டு கிளம்பும் வழியைப் பார்” என்றான் குறும்பாக சிரித்தபடி.

“ரிஷி, நீ என்னவோ ரொம்ப ஜாலியாக சொல்லி விட்டாய். எனக்குத்தான் ரொம்ப பயமாக இருக்கிறது“ என்றான் சதீஷ்.

“யாமிருக்கப் பயமேன்?” என்றான் ரிஷி நக்கலாக. அவனை முறைத்துப் பார்த்தான் சதீஷ்.

“தம்பி என்னை முறைக்காதே, சாருவின் அனுமதியோடு வெற்றித் திலகமிட்டு வா“ என்றான் ரிஷி கலகலவென்று சிரித்தபடி.

அவர்கள் இருவரும் டின்னருக்கு வருவதை முன்னதாகவே தன் தந்தையிடம் தெரிவித்தவன், தன் அம்மாவுடனும் சிறிது நேரம் பேசி விட்டுத் தன் கைபேசியை அணைத்தான். வீட்டிற்கு வந்து சேரும் போதே இரவு எட்டுமணி ஆகிவிட்டது.

“ரிஷி… அம்மா அப்பாவுடன் நீ என்ன விஷயம் பேசப் போகிறாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீ ஏதோ முக்கியமான விஷயம் பேசத்தான் அவசரமாக இங்கே கிளம்பி வந்திருக்கிறாய் என்று தெரியும். எந்த விஷயமாக இருந்தாலும் நாளை காலையில் பேசிக் கொள். நீ ஏதாவது அதிர்ச்சியான விஷயம் சொல்லப் போய் அவர்களுக்கு ஏதாவது ஷாக் ஆனால் என்ன செய்வது? அவர்கள் இருப்பதோ பண்ணை வீட்டில், அங்கிருந்து மெயின் ரோட் போய் பிறகு அங்கிருந்துதான் ஹாஸ்பிடல் போக வேண்டும். என்ன சொல்கிறாய் ?” என்று எச்சரித்தான்  சதீஷ்.

‘ஆம்‘ என்று தலையசைத்த ரிஷி, “நாளைக் காலையில் தான் பொறுமையாகப் பேசவேண்டும்” என்றான்.

அடுத்த நாள் காலை உணவு முடிந்த பிறகு, எல்லோரும் ரிலாக்ஸாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.  அம்மா மட்டும் சரியாக மனம் விட்டுப் பேசவில்லை என்று ரிஷி தெரிந்து கொண்டான்.

அம்மாவிற்கு உடனே ரிஷி சுமதியை திருமணம் செய்ய வேண்டுமென்று ஆசை. அது எப்படி முடியும்? ரிஷி அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படவில்லை. அவன் எடுத்த காரியம் முடிப்பதிலேயே குறியாக இருந்தான்.

“நான் வேண்டுமானால் கொஞ்சம் வாக்கிங் போய் விட்டு வரட்டுமா?” என சதீஷ் கேட்க

“டேய் நீதான் இதில் என்கூட இருந்தவன். நீ போய் விட்டால் எப்படி? போய் அமைதியாக உட்கார்” என்றான் ரிஷி.

“அம்மா அப்பா… உங்களுடன் எனக்குக் கொஞ்சம் பேசணும். உங்களால் இப்போது எனக்காக நேரம் ஒதுக்க முடியுமா?” எனக் கேட்டான்.

“சொல்லு ரிஷி, உன்னுடன் பேசுவதை விட வேறென்ன வேலை?” என்றார் அப்பா.

“அப்பா, சௌம்யா அக்காவிற்கு மூத்தவர் ஒரு அக்கா இருந்தார்கள் என்று சொல்வீர்கள் இல்லையா?” என ரிஷி கேட்க

“ஆமாம், அவள் பெயர் காவ்யா. அவள் நம்மை விட்டுப் போயே சுமார் இருபது வருடம் இருக்கும், அவளுக்கென்ன இப்ப? எங்கிருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ? நம் குடும்ப மானம் மரியாதையெல்லாம் அழித்து விட்டு ஓடிப் போனாள். அவளைப் பற்றி இப்ப என்ன?” எனக் கேட்டாள் அம்மா.

அப்பாதான் மிகவும் ஏக்கமாக வருத்தமாகக் காணப்பட்டார்.

“இப்போது எங்கிருக்கிறாளோ, இல்லை உயிருடன் தான் இருக்கிறாளா என்பதே சந்தேகம். நாங்கள் தனியாகவும், போலீஸ் மூலமாகவும் அவர்களை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேடினோம், எங்கும் கிடைக்கவில்லை. அவளை கடத்திச் சென்ற பையன் ஒரு முஸ்லிம் ஆனதால், பாகிஸ்தான் எங்காவது ஓடிவிட்டிருப்பார்கள் என்றனர் போலீசும், அவனுடன் வந்த படக்குழுவினரும்” என்றார் அப்பா.

அவர் கண்களில் இப்போதும் கண்ணீர் துளிர்த்தது, அப்பாவின் செல்லப் பெண்ணல்லவா.

“எங்கோ போனாள். நம்மையெல்லாம் ஏமாற்றி விட்டுப் போனவளைப் பற்றி இப்போதென்ன பேச்சு?” என்றாள் அம்மா சற்றே கோபமாய்.

ரிஷி தன் ஐ-பேடை அங்கிருக்கும் டி.வி.யோடு சதீஷின் உதவியோடு கனெக்‌ஷன் செய்தான். ‘இப்போது பாருங்கள்’ என்று கண்களால் தன்னைப் பெற்றவர்களுக்கு சமிக்ஞை செய்தான்.

ரிஷி, தன் போனில் ரெகார்ட் செய்து வைத்திருந்த எல்லா நிகழ்ச்சிகளும் முதலிலிருந்து ஓடியது. அதைப் பார்த்த அம்மாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. அப்பாவோ பிரம்மை பிடித்தாற் போல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ரிஷி இவள் எங்கள் மகள் காவ்யாதான்“ அம்மா உணர்ச்சியால் கொந்தளித்தாள். அவள் உடம்பெல்லாம் நடுங்கியது.

மெதுவாக எழுந்து வந்து, “என் மகள் எனக்கு வேண்டும், நான் இப்போது பார்க்க முடியுமா?” என்றவள், அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. திடீரென்று பற்களை நறநறவென்று கடித்தாள். கண்கள் ஒரேநிலையாக நிலைத்து நின்றன. சுயநினைவின்றி மயங்கி விழுந்தாள்.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 12) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    பிடிவாதம் ஒரு சாபம் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்