in , ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 12) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

லண்டன் லிட்டில் வெனிஸின் குடியிருப்புப் பகுதியில் ஒரு சிறிய அபார்ட்மென்டில், ரேஷ்மாவின் நடனத்தை ஆவலுடன் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தான் அப்துல்லா.

மனம் முழுவதும் ஆச்சர்யத்துடன், “மும்தாஜ், இங்க பாரேன். இந்தப் பெண் ஆடும் நடனத்தைப் பார்த்தால், உன்னையே இருபது வருடங்களுக்கு முன்பு பார்ப்பது போல் இருக்கிறது” என்றான்.

இருபது அல்லது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு, முதல் முதலில் சுவாமிமலையில், அவள் வீட்டுப் பண்ணைத் தோட்டத்தில் ஆடியது நினைவிற்கு வந்தது. ரேஷ்மாவின் நடனங்களைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தது அந்த சேனல்.

அதில் அவள் ‘நின்னையே ரதிஎன்று நினைக்கிறேனடி’ என்ற பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். அந்தப் பாடலுக்கு அந்தப் பெண் ஆடியது கண்டு, மும்தாஜின் உடலும் உள்ளமும் துடித்தது. ரேஷ்மாவைப் பார்த்து அப்படியே பிரமித்து நின்றாள் மும்தாஜ். தன்னையே கண்ணாடியில் பார்ப்பது போல் உணர்ந்தாள். அவள் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது.

“எத்தனையோ வழிகளில் கடவுள் நம்மை சோதித்து இருக்கிறார். இதுவும் அவர் நமக்கு வைத்த சோதனையா? நம் குழந்தை இப்போது இருந்தால் இப்படித்தான் அழகாக இருப்பாள் இல்லையா?” என்றாள் மும்தாஜ்.

“எனக்கென்னவோ இவள் நம் குழந்தை கதீஜா தான் என்று மனம் சொல்கிறது. அப்படி மட்டும் இருந்தால் நம்மை விட அதிர்ஷ்டசாலி யார் இருக்க முடியும்?” என்றான் அப்துல்லா.

“ஏங்க, இந்தப் பெண்ணை இப்போது நாம் பார்க்க முடியுமா?” என்றாள் மும்தாஜ் ஏக்கத்துடன்.

“தாராளமாகப் பார்க்கலாம் என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் படக்குழு தற்போது இங்கேதான் இருக்கிறது. நாளை நான் என் வேலைகளை முடித்து விட்டு சீக்கிரம் வீட்டிற்கு வருகிறேன், வந்த பின் போய் பார்க்கலாம்” என்றான் அப்துல்லா உற்சாகத்துடன்.

அடுத்த நாள் மாலை ரேஷ்மா, அந்த இரண்டு கெனால்களின் சங்கமத்தில் ஷூட்டிங்கில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே ஓடினார்கள். அவ்வளவு நேரமாகியும், ஏதோ நடித்துக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் இருந்தாள்.

எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு அவள் தன் இருப்பிடத்திற்குச் சென்றால் கூட, மிகவும் களைத்திருப்பதால் அவளால் தங்களுடன் மனம் விட்டுப் பேச முடியாதென்று நினைத்தார்கள். அதனால் அவள் பி. எ.வான சதீஷிடம் அடுத்த நாள் சந்திப்பதாக அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள்.

வீட்டிற்கு வந்தும் மும்தாஜ் சாப்பிடவில்லை, உறங்கவேயில்லை. எல்லா சாமிகளையும் கும்பிட்டுக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தாள்.

அடுத்த நாள் காலை, சதீஷ் சொன்ன நேரத்தில் ரேஷ்மாவின் அறை வாசலில் நின்றனர். உள்ளே பலத்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. சதீஷ் முகத்தை தொங்க போட்டபடி வெளியே வந்தான். இவர்கள் இருவரையும் பார்த்ததும் தான், அவர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்தது ஞாபகம் வந்தது.

வந்தவர்களிடம் ஒரு ‘சாரி’ சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்று ஹாலில் ஒரு சோபாவில் உட்கார வைத்தான். கொஞ்ச நேரத்தில் ரேஷ்மாவும் அவளுடன் ரிஷியும் வந்தனர்.

ரிஷியைப் பார்த்தவுடன் மும்தாஜ் எழுந்து ‘டக்’கென்று எழுந்து நின்றாள். முகத்தில் ஏதோ இனம் புரியாத உணர்ச்சிகள்.

“தம்பி, நீ யார்? இந்தியாவிலிருந்து வந்திருக்கிறாயா? தமிழ்நாடா?” என்றாள் ஆவலை அடக்கமுடியாமல். அப்துல்லா அவளை அடக்கினான், அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டான்.

ரிஷிக்கும் மும்தாஜைப் பார்த்ததும் ஏதே இனம் புரியாத உணர்ச்சி தோன்றியது. அவனை மேலே சிந்திக்க விடாமல் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் மனைவியை ‘மும்தாஜ்’ என்று அறிமுகப்படுத்தினான் அப்துல்லா.

“உங்கள் இயற்பெயரே மும்தாஜா இல்லை இடையில் சூட்டிக் கொண்ட பெயரா?” என்று ரிஷி தன்னையறியாமலே கேட்டான். அவனைப் பார்த்தால் ஏதோ கனவில் மிதப்பவன் போல் இருந்தான்.

“அவர்கள் தான் ஏதோ ஒன்று பேசினார்கள் என்றால் நீயும் பதிலுக்கு உளறுவாயா?” என ரேஷ்மா அவனை அடக்கினாள். ரிஷி ஒன்றும் பேசவில்லை.

அவர்களுக்கு ரேஷ்மாவின் நடனம் மிகவும் பிடிக்கும் என்றும், மேலும் அவளைப் பார்த்தால் சிறு வயது மும்தாஜைப் பார்ப்து போல் இருப்பதாலும், மும்தாஜிற்கு இவளைப் பார்க்க வேண்டுமென்று அடக்கமுடியாத ஆசை என்றும் அப்துல்லா கூறினான்.

அதுவுமில்லாமல், அவர்களுடைய இரண்டு வயது பெண் குழந்தையை இந்தியாவில் ஒரு திருவிழாவில் தொலைத்து விட்டதாலும், அந்தக் குழந்தை இப்போது அனேகமாக இவள் வயதுதான் இருக்கும் என்றும், அப்துல்லா அடக்க முடியாத சோகத்துடன் கூறினான். மும்தாஜின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

ரிஷி அவர்கள் அறியாமல், தன் செல்போனில் அவர்களை பல்வேறு கோணங்களில் படம் எடுத்துக் கொண்டான்.  அவன் முகம் பாறையாக இறுகிப் போயிருந்தது.

ரேஷ்மாவின் எல்லா விவரங்களும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான் அப்துல்லா. தன் வீட்டிற்கு அவளை விருந்திற்கு அழைத்தால், அவள் பிறப்பு வளர்ப்பு எல்லாம் பேச்சோடு பேச்சாகப் பேசி நைசாகத் தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.

“மேடம், நீங்கள் பெரிய சினிமா ஸ்டார். ஆனால் என் மனைவி உங்களை அவள் குழந்தையாகவே நினைக்கிறாள். அவளிடம் நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக உங்களை விட்டு  வர மறுக்கிறாள்.  நீங்கள் அவளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கூறுங்கள். நாளை ஒருநாள் மட்டும்  எங்கள் வீட்டிற்கு மதியம் சாப்பாட்டிற்கு வந்து எங்களோடு மூன்று அல்லது நான்கு மணி நேரம் செலவு செய்தால் என் பீபி மனம் சமாதானம் ஆகிவிடும். ப்ளீஸ், தயவு செய்து வாருங்கள் மேடம்” என்றான் அப்துல்லா.

“தம்பி… நீங்களும் வாருங்கள், உங்களைப் பார்த்தாலும் என் மனம் என்னென்னவோ நினைக்கிறது” என்றாள் மும்தாஜ் தன்னருகில் நின்ற ரிஷியைப் பார்த்து.

உடனே சதீஷ், “ஏங்க… இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா?  மேடத்தின் ‘பிசி ஷெட்யூலில்’ நான் உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்னை யாரும் கண்டு கொள்ள மாட்டீர்களா? நன்றி கெட்ட உலகமப்பா இது” என்று புலம்பினான்.

“டேய் ரொம்பப் புலம்பாதே, முதலில் நாங்களே போவோமா இல்லையா என்று தெரியவில்லை. நீ வேற ஏண்டா?” என்றான் ரிஷி.

சிறிது நேரம் யோசித்து விட்டு, “நாளை எந்த ஷூட்டிங்கும் இல்லை, மாலைதான் டேன்ஸ் பிராக்டிஸ் இருக்கிறது. சதீஷ்… அவர்கள் வீட்டு முகவரியை வாங்கிக் கொள்ளுங்கள். மும்தாஜ் மேடம் அழுவதைப் பார்த்தால் எனக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. நாம் மூவரும் நாளை அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாம்” என்றாள் ரேஷ்மா முடிவாக. 

“உங்கள் மனஆறுதலுக்காகத் தான் நாளை உங்கள் வீட்டிற்கு வருகிறோம். எங்களுக்காக பலமான விருந்தெல்லாம் தயாரிக்க வேண்டாம். நாங்களும் உடம்பிற்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் ஊர் போய் சேரவேண்டும் இல்லையா?” என்றாள் ரேஷ்மா.

அடுத்த நாள், தன் செல்போனை புல் சார்ஜ் செய்து கொண்டான் ரிஷி. ரேஷ்மாவை விட ரிஷிதான் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தான், ஆனால் தன் ஆர்வத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அவர்களுடையது சிறிய அபார்ட்மென்ட்தான். கீழே கார் பார்க்கிங், முதல் மாடியில் அபார்ட்மென்ட். ஒரு சிறிய லிவிங் ஹால், அதில் ஒரு பால்கனி. அதை ஒட்டினாற் போல் டைனிங் ஹால், அட்டாச்ட் பாத்துடன் கூடிய இரண்டு பெட்ரூம். ஒரு கிச்சன், அதன் அருகில் கொஞ்சம் பெரிய பால்கனி. அதில் தொட்டியில் விதவிதமான ரோஜாச்செடிகள், ஒரு கருவேப்பிலைச் செடி. இன்னும் ஏதேதோ பெயர் தெரியாத பூச்செடிகள். அவர்கள் இருவருக்கும் இதுவே பெரிய இடம்.

அப்துல்லா அவர்களிடம் விசாரித்ததை விட, ரிஷி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதை விட, மும்தாஜ் தான் ரிஷியிடம் நிறைய கேள்விகள் கேட்டாள். அவனுடைய சொந்த ஊர், பெற்றோர் பற்றியெல்லாம் கேட்டாள். ரிஷி தன் செல்போனில் வீடியோ ஆன் செய்து வைத்து விட்டான், பேசியது எல்லாம் ரெகார்ட் ஆகிக் கொண்டிருந்தது.

மும்தாஜ் உணர்ச்சிவசப்பட்டு அவள் சிறுவயதில் ‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி’ என்ற பாட்டுக்கு ஆட நடனம், அதைப் பற்றிய போட்டோக்கள், எல்லாவற்றையும் காட்டினாள். அந்த போட்டோக்களைப் பார்த்த ரிஷியும் மற்றவர்களும் பிரமித்து விட்டனர். ரேஷ்மா மும்தாஜைப் போல் இருந்தாளா, இல்லை மும்தாஜ் ரேஷ்மா போல் இருந்தாளா என்று சொல்ல முடியாத ஒற்றுமை.

அப்போதுதான் மும்தாஜ் தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு, காவிரியாற்றின் அழகையும், தங்கள் வீட்டில் பொங்கல் வைக்கும் பிரம்மாண்டத்தையும் வர்ணிக்கத் தொடங்கினாள். அருகில் இருந்த அப்துல்லா அவள் காலை லேசாக மிதிக்கவும், மும்தாஜ் தன்னை உணர்ந்து கொண்டாள்.

அவள் பேசிய பேச்சிலிருந்து ரிஷி ஏதோ ஒரு முடிவிற்கு வந்தான். ஆனாலும் மும்தாஜ் பற்றி நிறைய கேள்விகள் அவன் மண்டையைக் குடைந்தது. ‘என் நினைப்பு சரிதானா?’ என்ற மாபெரும் கேள்வி அவனை அரித்தெடுத்தது. மேலும் சில கேள்விகள் கேட்டு தன் நிலையை அறிந்து கொள்ள விரும்பினான்.

“மும்தாஜ் அக்கா, நீங்கள் உங்கள் குழந்தையை எங்கே எப்படித் தொலைத்தீர்கள்?” என ரிஷி கேட்க

“மும்தாஜிற்கு காசி மிகவும் பிடிக்கும். எங்கள் இருவருக்குமே கங்கையாறு மிகவும் பிடிக்கும். இருவரும் திருமணம் செய்து கொண்டு எங்கள் குடும்பத்திற்கும் பயந்தோம், எங்கள் மதத்திற்கும் பயந்தோம். இருந்தாலும் காசிக்குப் போகும் போது கங்கையாற்றில் குளிப்பதற்காக படித்துறையில் குழந்தையை உட்கார வைத்து விட்டு கரையோரமாகவே தான் மும்தாஜ் குளித்தாள். அதன் வேகத்திற்குப் பயந்து இவளுடைய பாதுகாப்பிற்காக நான் கரையில் நின்றேன்.

கண்மூடி கண் திறப்பதற்குள் எங்கள் செல்வத்தைக் காணவில்லை. அவளாகவே நடந்து எங்காவது போய் விட்டாளா, இல்லை யாராவது எடுத்துச் சென்று விட்டார்களா என்று புரியவில்லை. அன்று முழுவதும் எங்கள் மகளைத் தேடி அலைந்தோம், போலீசிலும் புகார் கொடுத்தோம். அன்று தொலைந்த எங்கள் சந்தோஷம் இன்னும் திரும்பவில்லை” என்றான் அப்துல்லா நீண்ட பெருமூச்சுடன்.

யாருக்கும் வேறு ஒன்றும் பேசத் தோன்றவில்லை. சில மணி நேரங்கள் அவர்களுடன் கழித்த பிறகு ரேஷ்மாவிற்குக் கொடுக்கப்பட்ட அபார்ட்மென்ட்டிற்குத் திரும்பினார்கள். தினமும் சண்டையும் சமாதானமும் என்றிருந்த ரேஷ்மாவும், அன்றைய தினம் ரிஷி இந்தியா திரும்புகிறான் என்றதும் முகம் வாடி கண்கள் கலங்க நின்றாள்.

“ரேஷ்மா, என்ன இது… ஏன் இந்த கண்ணீர்? தினமும் என்னோடு வாதிட்டு சண்டை போட்ட ரேஷ்மாவா இது?” என்றவன், அவளுக்கு மிக அருகில் நின்று அவள் கண்களைத் துடைத்தான்.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 11) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை