இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ரிஷி, நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இந்த மோதிரம் ஒரு நட்பின் அடையாளமாக இருக்கட்டும், காதலின் அடையாளம் என்பதெல்லாம் வேண்டாம். காதல் கல்யாணம் எல்லாம் என்னைப் போல் நடிகைகளுக்கு ஒத்து வராது. எங்களாலும் ஒவ்வொரு படத்தின் மூலமும் வரும் லட்சக்கணக்கான பணத்தையும், புகழையும், ஆடம்பரத்தையும் அதனால் ஏற்படும் பழக்க வழக்கங்களையும் இழக்க முடியாது.
அப்படியே நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டு வந்தாலும் உங்கள் சமூகம் எங்களை ஏற்றுக் கொள்ளாது. நாங்கள் அக்கினிப் பிரவேசமே செய்தாலும், அது கூட கிராபிக்ஸ் என்று தான் சொல்வார்கள். நெஞ்சையே பிளந்து காட்டினாலும் எங்கள் காதலை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். எங்களை போகப் பொருளாக, தீண்டத் தகாதவர்களாகத்தான் நினைப்பார்கள்” என்று பெருமூச்சு விட்டாள். அவள் கண்ணின் ஓரத்தில் முத்துக்கள்.
“அதனால்?” என்று ஒரு கேள்விக்குறி போட்டான் ரிஷி.
“அதனால் இந்த காதல் கல்யாணம் எல்லாம் வேண்டாம். உங்கள் பெற்றோர் கூறும் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷமாய் இருங்கள்” என்றவள், சிரித்துக் கொண்டே எழுந்தாள்.
“நீ உன் கருத்தைக் கூறிவிடடாய், என் கருத்து என்ன தெரியுமா?” ரிஷி உறுதியான குரலில்.
‘என்ன?’ என்று ஏறிட்டுப் பார்த்தாள்.
“என் உயிர் உள்ள வரை நீ தான் என் மனைவி. கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது உன்னோடு மட்டும் தான். நீ என்னை ஏற்றுக் கொண்டாலும் வெறுத்தாலும் நீதான் என் காதலி, என் மனைவி எல்லாம். நின்னை மட்டுமே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா” என்றவன், அவளுக்கு கார் கதவைத் திறந்து விட்டு வேகமாக காரில் சென்று அமர்ந்தான்.
அவன் கோபம் ரேஷ்மாவிற்குப் புரிந்தது. ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும், அடி மனதில் ஏனோ சந்தோஷமாகவே இருந்தது.
ரேஷ்மாவின் வீட்டு கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு, கார் கதவைத் திறந்து விட்டான் ரிஷி. காரிலிருந்து அவள் இறங்கியவுடன் ஒன்றும் பேசாமல் வேகமாகக் காரை எடுத்துச் சென்று விட்டான். திக்பிரமை பிடித்தாற் போல் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரேஷ்மா.
தன் அறைக்குள் நுழைந்தவள், ஹேண்ட்-பேகை டேபிள் மேல் எறிந்து விட்டு படுக்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். அன்னம்மா மாமி வந்து லேசாக எட்டிப் பார்த்து விட்டு கதவை மெதுவாக சாத்தி சென்றாள். கண்கள் சிவக்க, கண்ணீர் தலையணையை நனைக்க, அழுதுக் கொண்டு படுத்திருந்தாள்.
அப்போது மெதுவாக ஒரு கை அவள் முதுகில் வருடிக் கொடுத்தது. தலையைத் திருப்பிப் பார்த்தவள் திடுக்கிட்டாள். ரிஷிதான் அருகில் உட்கார்ந்து அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்கள் எப்போது வந்தீர்கள்? ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றீர்களே, இப்போது ஏன் வந்தீர்கள்?” என்றாள் கோபமாகவும், அழுது கொண்டும் கட்டிலிலிருந்து லேசாக எழுந்தபடி. அழுததால் வெண்மையான அவள் முகம் சிவந்து வீங்கியிருந்தது.
“அசடு… எனக்கு உன்னைப் பற்றித் தெரியாதா? உன் அர்த்தமில்லாத பேச்சை நம்பும் அளவிற்கு நான் ஒன்றும் முட்டாளில்லை. என்னாலும் நீ இல்லாமல் வாழ முடியாது, உன்னாலும் நான் இல்லாமல் இருக்க முடியாது. இதற்கு ஏன் இந்த வீண் பேச்சு?” என்றவன், அவளை இழுத்து அணைத்து அவள் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான். அவன் மார்பில் அவள் முகத்தைப் புதைத்து விம்மினாள் ரேஷ்மா.
“நம்மால் இவ்வளவு எதிர்ப்பையும் மீறி ஒன்று சேர முடியுமா?” என்றாள் அவன் சட்டையில் உள்ள பட்டனைத் திருகியபடி.
“நம் காதல் உண்மையானது, உண்மைக் காதல் எப்போதும் தோற்காது கண்ணா” என்றவன், அவளை மேலும் இறுக அணைத்து அவள் கழுத்தில் தன் இதழ்களைப் பதித்தான்.
அவளுடைய தலைமுடியைக் கோதிக் கொடுத்துக் கொண்டே, “கண்ணா, நான் நாளை ஊருக்குப் போக வேண்டும். அதற்கு நீ என்னை தைரியமாக அனுப்ப வேண்டும். யார் என்ன சொல்லி பயமுறுத்தினாலும், நீ என்னை கை விடக்கூடாது. சரியா? நீ எனக்கு முக்கியம், அதேப் போல நான் தான் உனக்கு முக்கியம். புரிந்ததா?”
‘சரி’ யென்று தலையாட்டினாள்.
“இப்போது எல்லாவற்றிற்கும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டி விட்டு மறுபடியும் நாம் ‘நல்ல நண்பர்கள்’ என்று பழைய பல்லவியைப் பாடினால் உன்னை என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது. சரியா?” என்றான்.
‘சரி’ என்று மீண்டும் அவள் தலையை ஆட்டவே, அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
அவள் முகத்தை தன் இரு கரங்களில் தாங்கி, “வரட்டுமா செல்லம்” என்று மீண்டும் அவள் நெற்றியில், கன்னத்தில் தனது இதழ்களை ஆழப் பதித்துப் பிரியா விடை பெற்றான்.
இரண்டு நாள் அமைதியாகப் போயிற்று. சதீஷ் கீழே ஆபீஸிலிருந்து போன் செய்தான். “ரேஷ்மா ஸிஸ்டர், டைரக்டர் ஜீவா அவருடைய புதிய படத்தின் ஒப்பந்தத்திற்காக உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். நீங்கள் வருகிறீர்களா, அல்லது நான் மேலே அழைத்து வரட்டுமா?” எனக் கேட்டான்.
டைரக்டர் ஜீவா மிகப் பெரிய டைரக்டர். அவர் படங்கள் எல்லாம் நூறு நாள் மிகச் சுலபமாக ஓடும். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் படம் எடுப்பவர். அவருடைய தரிசனத்திற்காக புகழ் பெற்ற ஹீரோக்களே காத்திருக்கும் போது, இவர் நம்மைப் பார்க்க வந்திருக்கிறாரே என்று ஒரு மரியாதை கலந்த அச்சத்துடன், தன்னை சரி செய்துக் கொண்டே கீழே ஓடினாள்.
தன்னுடைய வணக்கத்தை அவர் காலில் விழுந்து தெரிவித்தவள், அவருடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டாள். வந்தவர் புதிய இயக்குனரையும், திரைக்கதையையும் விவரித்து அவளுடைய சம்மதத்தையும், தேதிகளையும் பெற்றுக் கொண்டாள்.
நான்கு மொழிகளிலும் இவளால் மட்டுமே நடிக்க முடியும் என்று நம்பிக்கை கொடுத்தார். அவளே எதிர்ப்பார்க்காத ஒரு தொகைக்கு செக் ஒன்றை அட்வான்ஸாகக் கொடுத்தார். இந்தப் படத்தில் நடனத்திற்கு முக்கியமான இடம் கொடுக்கப் பட்டுள்ளதால், புகழ் பெற்ற கோரியாகிராபரிடம் இவள் நடனம் கற்றுக் கொள்ள உடனடியாக ஏற்பாடும் செய்து விட்டார்.
ஷூட்டிங் மொத்தம் கோவா, குலுமணாலி, ஸிம்லா இங்கெல்லாம் தான் நடைபெறும் என்றும், முக்கியமான நபர்களுக்காக ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் போடப்பட்டுள்ளதால், இன்னும் இரண்டே நாளில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்குப் போக வேண்டும் என்றும் அவசரப்படுத்தினார். எல்லா வேலைகளும் வேகமாக செய்து படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றார். இல்லாவிட்டால் பட முதலாளிக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் இவர்களுக்கும் தெரியும்.
அடுத்து வந்த ஒரு வாரத்தில் படக்குழுவினருடன் சதீஷும், ரேஷ்மாவும் கிளம்பி விட்டனர். வீட்டு நிர்வாகம் முழுவதும் சாருலதாவிடமும், அன்னம்மா மாமியிடமும் ஒப்படைக்கப்பட்டது.
முக்கியமான குளிர் கால உடைகள் வாங்கிக் கொண்டார்கள். சினிமா ஷூட்டிங் சம்மந்தமான போன்கள் மட்டும் அட்டெண்ட் செய்தாள், மற்ற போன்களை பேசக் கூட அவளுக்கு நேரமில்லை. அப்படி அட்டெண்ட் பண்ணாத போன்களில் காமாட்சியின் பத்து போன் கால்களும் அடக்கம்.
ஆனால் எந்த வேலை எப்படி இருந்தாலும், ரிஷியுடன் தினமும் இரவுப் பத்து மணிக்குப் போனில் பேசி விடுவாள். அவனும் வீட்டில் சொல்லிவிட்டு வருவானோ, சொல்லாமல் வருவானோ தெரியவில்லை. எப்படியும் பத்து நாட்களுக்கு ஒரு முறை ரேஷ்மாவைப் பார்க்க, அவள் எந்த ஊரில் இருந்தாலும் வந்து விடுவான்.
இவளுக்கும் அவனைப் பார்த்தால் தான் அடுத்தாற் போல் செய்ய வேண்டிய வேலைகள் ஓடும். அவள் கொஞ்சம் மெலிந்தாற் போல் இருந்தாள். நாட்டியம் தான் மிகவும் கஷ்டம் என்பாள். ஒரு மாதம் என்று முடிவு செய்து போனவர்கள் இருபது நாட்களில் எல்லாப் படப்பிடிப்பும் முடிந்து சென்னை திரும்பி விட்டனர்.
தன் பங்களாவில், ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து கடந்த இருபது நாட்களில் நடந்த அந்த படப்பிடிப்பு பற்றி ரேஷ்மாவின் மனம் சந்தோஷத்துடன் அசை போட்டது.
‘அப்பா! என்ன ஒரு கதை!! இவ்வளவு அழகான கதையில், நாட்டிய தாரகையாக ஒரு பெண். நடனத்திற்காக தன் காதலையே, ஏன் தன் வாழ்க்கையையே தியாகம் செய்த ஒரு பெண்ணின் கதை. அக்கதையின் கதாநாயகி தான் ரேஷ்மா. என்ன தைரியத்தில் நடனமே தெரியாத தன்னை, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் அந்த டைரக்டர். அவரை நன்றியோடு நினைத்தாள் ரேஷ்மா.
‘ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா’ என்று நடன இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே உள்வாங்கி நடனமாடி, தன் உணர்ச்சிகளையும் பாவங்களையும் வெளிப்படுத்தினாள் ரேஷ்மா. படம் எப்படி இருக்குமோ என்று பயந்தாள்.
ஆனால் முதல்நாள் பிரிவியூ தியேட்டரில் அந்த படத்தின் ‘ரஷ்’ பார்ப்பதற்கு, படமுதலாளி, டைரக்டர் மற்றும் சில நடிகர்களுடனும் சென்று பார்த்த ரேஷ்மா பிரமித்து விட்டாள். அந்த படத்தில் அழகிய மேக்-அப்புடன் அவள் நடனமாடியதைப் பார்க்கும் போது யாரோ ஒரு தேர்ந்தெடுத்த நாட்டியத்தில் மிகச் சிறந்த நடிகை போலவே மிளிர்ந்தாள்.
‘நானா இவ்வளவு அழகாக ஆடினேன்?’ என்று தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
கதை மற்றும் முக்கியமான எல்லாமே ரகசியமாகவே வைத்துக் கொள்ளப் பட்டாலும், யூடியூப் மூலம் ரேஷ்மாவின் எல்லா நடனங்களும் ஒளிபரப்பப்பட்டன. அதைப் பார்த்தே தெரிந்த நண்பர்களும், ஏன் வேண்டாதவர்களும் பிரமித்து இவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களுள் அஷோக்கும் ஒருவன். இதெல்லாம் கூட பரவாயில்லை. ரிஷியின் மாமா மகள் சுமதி, ரிஷியின் அம்மாவை அழைத்துக் கொண்டு நேரிலேயே வந்து விட்டாள்.
ரேஷ்மாவிற்கு சுமதியைப் பார்க்கும் போது ஏனோ அவள் சண்டை போடும் மனநிலையிலேயே வந்தாற் போல் இருந்தது. இருவரையும் வரவேற்று உபசரித்தாள். அன்னம்மா மாமி காமாட்சியம்மாவிற்கு வணக்கம் சொல்லி விட்டு ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய மாதுளம்பழ ஜூஸ் புதியதாகத் தயார் செய்து எடுத்து வந்தாள். காமாட்சி மட்டும் குடித்தார்.
சுமதியோ, ‘நான் ஒன்றும் உங்கள் வீட்டில் ஜூஸ் குடிக்க இவ்வளவு தூரம் வரவில்லை’ என்றாள் முறைத்துக் கொண்டு.
“ரேஷ்மா… நீ எனக்குத் தந்த வாக்குறுதியை மறந்து விட்டாயா? நீதான் இந்த சினிமாவை விட்டுத் தொலைக்க மாட்டேன் என்கிறாயே. சமீபத்தில் எல்லா யூடியூப் சேனல்களிலும் உன் நடனம்தான் பார்க்கிறோம். அதைப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. கலைக்காகவே பிறந்தவள் என்று எல்லோரும் வர்ணிக்கிறார்கள், எங்களுக்கும் அப்படியே தான் தோன்றுகின்றது. நீ உன் வழியில் போ ரேஷ்மா, ஆனால் என் மகனை விட்டு விடு. அவனுக்கும் சுமதிக்கும் திருமணம் செய்து பேரன் பேத்திகளைப் பார்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்தான் குடும்ப மானத்தைக் காப்பாற்ற முடியும்” என்றாள் காமாட்சி மூச்சு விடாமல்.
‘நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்’ என்று காமாட்சி சொன்னது, ரேஷ்மாவிற்கு உள்ளத்தில் ஊசியால் குத்துவது போல் இருந்தது. அப்போது கூட அவளுக்கு காமாட்சியின் மேல் துளியும் கோபம் வரவில்லை. தன்னை அனாதையாக்கி ஒரு ஆஸ்ரமத்தில் தூக்கிப் போட்ட தாயின் மேல்தான் கோபம்.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings