in ,

நியூ இயர் நைட் (சிறுகதை) – ஜெயந்தி.M

எழுத்தாளர் ஜெயந்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஹலோ எங்கே இருக்கின்றீர்கள்? பாஸ்போர்ட் ஆபீசுக்கு முன்னால வாங்க, நேரம் ஆகி விட்டது என்று கூறிவிட்டுத் அலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார் பேருந்து ஓட்டுநர்.

நெல்லையில் இருந்து சென்னை செல்லும் பதினோரு மணி நேர நெடும் பயணம். அநேகமாக 2025 ஐப் பேருந்தில் தான் தொடங்குவேனோ என்ற அங்கலாய்ப்பு ஒருபுறம். பேருந்து நிறுத்தத்தை தாண்டி நிற்கின்றீர்களே என்ற ஓட்டுநரின் அலைபேசி செய்தி ஒருபுறம். அடுத்த முறை எப்ப வருவ மே மாசம் வருவேன் அம்மா ஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே இன்னும் நாலு மாசம் கழிச்சு தான் வருவியா அதுக்குள்ள நான் இருப்பேனோ இல்லையோ என்று புத்தாண்டு ஆசீர் வழங்கும் பொழுது மனம் நெகிழ்ந்து பேசிய அம்மாவின் குரலில் தொனித்த ஏக்கம் என்று எல்லாவற்றையும் சுமந்து கொண்டு சுமையோடு செல்லும் பயணம்!

இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து பேருந்து நின்ற இடத்தைக் கண்டுபிடித்தேன். வடகிழக்குப் பருவமழை முடிந்தது என்று தான் நினைத்தோம். ஆனால் என்னவோ நீ வந்ததில் இருந்து இங்கு மழை தான் என்று கேலி செய்த அக்காவின் நினைவு வந்தது.

நான் சென்னை செல்ல வேண்டிய பேருந்தின் இடப்புறம் குளமாகக் கிடந்த தண்ணீரைப் பார்த்த போது தான் அதன் அர்த்தமே புரிந்தது.

தம்பி நான் இதில் எப்படி நடந்து வருவேன்? என்று கேட்டேன்.

கண்டும் காணாதது போல் நின்ற கிளீனர் தம்பி. கொஞ்சம் முன்னே தள்ளி நிறுத்துங்கள் என்று சேற்று நீரைப் பார்த்து ஒதுங்கி நின்றேன் நான்.

ஃபெஞ்சல் புயலுக்கு முன் வந்த தாழ்வழுத்த மண்டலப் பாதிப்பில் சென்னைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. தப்பித்தேன் நான். 

அடுத்தடுத்து வந்த சிறுசிறு மழை எல்லாமே விடுமுறைக்கு விலக்கு அளித்தது. எனவே நான் மாட்டிக் கொண்டேன். கிறிஸ்துமஸ் கீத இரவில் சேறோடும் நீரோடும் கரண்டைக் கால் அளவு தண்ணீரில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் என்று நான்கு மணி நேரம் செலவானது.

அதற்கு மறுநாள் பழுத்த விரல்கள் நேற்று முன்தினம் தினம் வரை என்னை நோயாளியாகவே ஆக்கிக் கொண்டு இருந்தது. மனசு ஒப்பலை… அய்யோ… அதைப் பார்த்தாலே அலர்ஜி… எனக்கு இதெல்லாம் சாப்பிட்டால் அலர்ஜி ஆகும் என்றெல்லாம் நான் ஒரு போதும் சொன்னது இல்லை தான்… ஆனால் இந்த சேறு அலர்ஜி இவ்வளவு தூரம் என்னைப் பாதிக்கும் என்று நினைத்ததில்லை தான். 

நினைத்துக் கொண்டு இருக்கும் போதே என் அருகில் வந்து நின்றது பேருந்து. உடன் பிறப்புகள் மூவரின் வழியனுப்புதலில் மெல்ல ஏறினேன் பேருந்தில்.

சிஸ்டர் கோபிச்சுக்காதீங்க ஹேப்பி நியூ இயர் என்ற குரல் ஓட்டுநரின் இருக்கையில் இருந்து… நான் காலை சற்று தாங்கியபடியே பேருந்தில் ஏறினேன்…

கோபம் இல்லை.. காலில் அலர்ஜி.. மழை நீரில் கால் படக்கூடாது.. நேற்று தான் காலில் கட்டைப் பிரித்தேன் என்று சொல்லிக்கொண்டே ஏறி அமர்ந்தேன் என்று சொல்லிய பிறகு பதிலுக்கு ஹேப்பி நியூ இயர் என்றபடியே ஒரு புன்னகையை உதிர்த்தேன்..

சார் அக்கா எங்கேயும் எதுவும் சாப்பிட இறங்க மாட்டாங்க… பஸ் நிக்கும் போது அவளுக்கு ஒரு டீ மட்டும் வாங்கிக் கொடுத்துருங்க என்று என் மேல் உள்ள பாசத்தில் கிளீனர் தம்பியிடம் சிபாரிசு செய்தாள் தங்கை.

ஓகே என்றான்.

கையசைத்து விடைபெற்றேன். பேருந்து நகர்ந்தது. மூன்று தங்கையரின் கையசைப்பில் ஏற்பட்டப் பாசப் பிணைப்போடு நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

கிறிஸ்துமஸ் பண்டிகையும் புத்தாண்டும் வந்தாலே கொண்டாட்டம் தான் .. கிறிஸ்துமஸ் நள்ளிரவுத் திருப்பலி முடிந்து வீட்டுக்கு வந்து மறுபடியும் தூங்குவது என்பதெல்லாம் கிடையாது. அன்று ஆரம்பிக்கும் கொண்டாட்டம் ஏறக்குறைய புத்தாண்டு முடியும் வரை தொடரும்.

நியூ இயர் என்றாலே இரவு திருப்பலிக்கு பிறகு தொடர்ந்து கண்விழித்து அடுத்த நாள் காலை புத்தாண்டு காலையில் காலை உணவு மதிய உணவுக்கு பிறகு எல்லாம் பெரியவர்களின் உறவுகளின் சொந்த பந்தங்களில் வீடு வீடாக சென்று சிலுவை வாங்குதல் அதாவது ஆசி பெறுதல் ஆசி பெற்றுவிட்டு அவர்களும் சிலுவை போட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை புத்தாண்டு பரிசாக அளிப்பார்கள் அதைப் பெற்றுக் கொண்டு அதை பள்ளியில் சிறு சேமிப்பாக சேமிப்பது உண்டு.

மற்ற நேரங்களில் பொழுதுபோக்குக்கு மற்ற நிகழ்வுகளுக்கு அதை பயன்படுத்துவதும் உண்டு இவ்வாறான நிகழ்வுகள் எல்லாம் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக வாழ்க்கையில் இருந்து வெளியேறியதாக இருந்தது.

இது இரண்டாவது. இந்த முறையாவது எப்படியாவது அம்மாவை சந்திக்க வேண்டும் அவர்களோடு புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று ஒரு ஆசைதான் எப்பொழுது வருவாய் அடுத்தமுறை வரும்போது இருப்பேனா இருக்க மாட்டேன் என்று இப்போதெல்லாம் அம்மா அடிக்கடி புலம்புவது வாடிக்கையாகி விட்டது.

எனவே தான் இந்த முறை இப்படி ஒரு தீர்மானத்தை எடுத்து சொந்த ஊருக்கு வந்து இருந்தேன். ஆனால் காலையில் ஏற்பட்ட வேலை நிமித்தமாக உடனடியாக 31 இரவே பயணிக்க வேண்டிய ஒரு சூழல் நெருக்கடி.

என்ன சிஸ்டர் கோவிலுக்கெல்லாம் பூசைக்கு எல்லாம் போகலையா? பூசைக்கு போகாமல் பஸ்ல டிராவல் பண்றீங்க!

கண்டிப்பாக என்னிடம்  வினா எழுப்பிய அந்த ஓட்டுநர் கிறிஸ்தவராகத் தான் இருக்க வேண்டும். அதன் பிறகு பேச்சைத் தொடர்ந்தார்.

நானும் கிறிஸ்தவன் தான். நானும் இன்று இரவு திருப்பலிக்குப் போக முடியவில்லை . எனக்கு இன்றைக்கு டூட்டி. ஆனால் நீங்கள் சிஸ்டர் அல்லவா? கண்டிப்பாக நீங்க போக வேண்டும் தானே என்று கேட்டார்.

நான் பதில் ஏதும் சொல்லவில்லை. எனக்கும் அந்த  வருத்தம் தான். ஏனெனில் புத்தாண்டு இரவில் ஆலயத்தில் தான் இருக்க வேண்டும் என்று நானும் ஒரு நம்பிக்கையை எப்போதும் கொண்டிருப்பேன்.  எனவே தான் இந்த ஆண்டு அது இயலாமல் போனது சற்று வருத்தம் அளித்தாலும் தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஆயினும் அதுவும் இயலாமல் என்னுடைய புத்தாண்டு இரவு பேருந்தில் கழிய இருப்பதை எண்ணி மனம் நொந்தபடியே அலைபேசி செய்திகள் குறுஞ்செய்திகள் சிறு வீடியோக்கள் என்று ஒவ்வொன்றிலும் எனது பார்வையை அலைய விட்டேன். AI தொழில்நுட்ப வாழ்த்துச் செய்திகள் புத்தாண்டின் மடியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.

பேருந்து கங்கைகொண்டான் தாண்டி பாலாஜி பவன் அருகே நின்றது. அது உணவுக்கான நேரமா? ஓய்வறை செல்வதற்கான நேரமா என்ற விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்படவில்லை.

நான் அமர்ந்தபடியே என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய 20 நிமிடங்கள் கழித்துப் பேருந்து மீண்டும் நகர ஆரம்பித்தது. அப்பொழுது ஓட்டுநரிடம் கேட்டேன் .இது உணவு இடைவேளையா? என்று.

ஆமா சிஸ்டர் 20 நிமிடங்கள் ஆகிவிட்டதே உணவு இடைவேளை தான் என்றனர் அவர்கள்.

எனக்கு பகீர் என்றானது .எனது கையில் வாட்டர் பாட்டில் தவிர வேறு எதுவும் இல்லை.சிற்றுண்டி எதுவும் கொண்டு வரவுமில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். தொலைவில் அந்தக் கிளீனர் தம்பி  டீ குடித்தபடியே நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

எனக்கு மனதிற்குள் ஒரு சிறு எண்ணம், சிறு நப்பாசை என்று கூட வைத்துக் கொள்வோம். கண்டிப்பாக அவன் எனக்குத் தான் டீ வாங்கிக் கொண்டு வருகிறான் . அவனிடம் தான் தங்கை  சொல்லி இருந்தாளே என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அவன் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை.

நானும் முகத்தை முகத்தைப் பார்க்கிறேன். திரும்புகிறேன் ஆனால் என்னைக் கண்டுகொள்ளாத ஒரு புறக்கணிப்பு. எனக்கு ஏன் என்று தான் புரியவில்லை நானும் அமைதியாக இருந்து கொண்டேன். எதுவும் தெரியாது போல படுத்துக் கொண்டேன்.

இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க கரிசனையோடு கேட்ட ஓட்டுநரிடம் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தேன்.

அப்போ இன்னைக்கு இரவு உங்களுக்கு பட்டினி தான். ‌ ஏன் சிஸ்டர் நீங்க சாப்பாட்டையும் விட்டுட்டீங்க பூசையும் விட்டுட்டீங்க என்ற பொழுது சற்று மனது வலித்தது. கண் மூடியபடி மீண்டும் எனது பயணத்தைத் தொடர்ந்தேன்.

மீண்டுமாய் அலைபேசி…

சிஸ்டர்  நாளை காலை எப்படியாவது நமக்கு வேலை செய்வதற்கும் பள்ளியின் மேற்தளத்தில் டைல்ஸ் ஓட்டுவதற்கும் ஆட்கள் வந்து விடுவார்கள், ஆனால் குடிநீர் இணைப்புதான் இதுவரை சரி செய்யப்படவில்லை.

என்ன செய்யலாம்? பள்ளியில் இருந்து வந்தது தொலைபேசி அழைப்பு .என்ன செய்யலாம் என்று தெரியவில்லையே

இல்ல சிஸ்டர் நீங்க இருந்தா தான் எப்படினாலும் வேலை நடக்கும். அதனால உடனடியா நீங்க கிளம்பி வந்தீங்கன்னா தான் நாளைக்கு எல்லாமே சரியாக நடக்கும். நீங்கள் வந்து சரி செய்தால் தான் இரண்டாம் தேதி நாம் மாணவர்களுக்கான பள்ளியை வகுப்பறைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க முடியும் என்ற சக ஆசிரியரின் அலைபேசி அழைப்பு தான் இந்தப் புத்தாண்டு இரவுப் பயணத்தின் காரணமாக அமைந்தது.

பள்ளியில் வேலை நடந்து கொண்டிருந்தது தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. அவ்வப்போது பயம் காட்டும் அம்மாவின் உடல்நிலை. இந்த ஆண்டு எப்படியாவது புத்தாண்டு இரவு அம்மாவிடம் தான் முதல் ஆசீ வாங்க வேண்டும் என்ற எனது துறவைத் தாண்டிய மனித மனநிலை.

ஆயினும் மனதைக் கல்லாக்கி விட்டுக் காலைத் திருப்பலியைப் பணித் தளத்திலும் தொடரும் பணிகளைப் பள்ளியிலும் செய்ய வேண்டும் என்று என்னையே தேற்றிக் கொண்டு அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு தொடங்கிய பயணம் தான் இந்தப் பயணம்.

சரி அப்பொழுது இரண்டாம் தேதி விடுமுறை விட்டு விடலாமா என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது எனக்குத் தெரிந்த அலுவலரிடம் தொடர்பு கொண்ட பொழுது இல்லை என்று ஆணித்தரமாகப் பதில் வந்தது. அலைபேசி இணைப்பைத் துண்டித்தேன்.

கண்களை மூடியபடியே இருக்கையில் சாய்ந்தேன். இரவுத் திருப்பலியும்  மிஸ் ஆகுது அம்மாவோட ஆசியும் மிஸ் ஆகுதே என்னடா 2025 என்று அங்கலாய்த்தது மனது.

பேருந்து விருதுநகரைத் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. தனக்குக் குறிப்பிட்டிருந்த இசையை இசைத்து அழைத்தது அலைபேசி. யாரென்று எடுத்துப் பார்த்தேன்

காலையில் நான் தொடர்பு கொண்ட அலுவலக நண்பரின் உயர் அதிகாரியின் அழைப்பு.. குழம்பிய நிலையில் அலைபேசியை ஆன் செய்தேன். என்னம்மா உங்களுக்கு வருத்தம்!

அம்மாவின் ஆசீரும் கர்த்தரின் கையில் இருந்து தான் வருகிறது. புது வருஷமும் அவரோட கையில் இருந்து தானே வருகிறது. உங்களோட பள்ளி வேலையும் கர்த்தரின் கரத்தில் இருந்து தானே வருகிறது. இதில் நீங்கள் எதில் விடுபட்டிருந்தாலும் கர்த்தர் அதைப் பொருட்படுத்துவதில்லை. அனைத்திலும் முக்கியமானதை செய்யச் சொல்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

தயவு கூர்ந்து நீ ஸ்கூலுக்கு வந்துருமா  நீ வந்து வேலை செய்றது உன்னுடைய எல்லா வேலைகளையும் விட மிக மிகப் பெரிய புண்ணியமாக அமையும். சர்ச்சுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை நீங்க வந்து பிள்ளைகளுக்காக செய்யும் பொழுது உங்களால் பிள்ளைகள் எல்லாம் பயன்படுவாங்கம்மா! இதுவும் ஒரு விதத்துல சர்வீஸ் தானே மா ! நீ கிளம்பி வாம்மா என்று அலைபேசியைத் துண்டித்தார். 

சர்வீஸ் பெருசா? அம்மாவின் ஆசி பெருசா? நியூ இயர் நைட் சர்ச் போக வேண்டும் என்ற மனநிலை பெருசா என்ற எனது குழம்பிய மனநிலைக்குத் தெளிவு கிடைத்தது.

மணி ஒன்று ஆகி விட்டது… பேருந்து உளுந்தூர்பேட்டையில் நின்றிருந்தது. மேடம் டீ வாங்கித் தரவா என்று கேட்டபடியே அருகில் வந்தான் கிளீனர் தம்பி.

இல்லை வேண்டாம்பா, நன்றி, ஹேப்பி நியூ இயர் என்ற வாழ்த்துச் சொல்லியபடியே அன்றைய இரவின் முதல் வாழ்த்தை  அலுவலக நண்பருக்கு அனுப்பி வைத்தேன். பேருந்து நகர்ந்தது. கிளீனர் தம்பி ஒருவிதக் குற்ற உணர்வோடே தூரத்தில் நின்று கொண்டிருந்தான் தேநீரை சுவைத்தபடியே!

எழுத்தாளர் ஜெயந்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. New year night மிகவும் அருமையான சிறுகதை. மென்மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்

நாட்காட்டியின் நினைவலைகள் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

விளையாட்டாய் ஒரு திருட்டு (சிறுகதை) – அர்ஜுனன்.S