எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பக்கத்து வீட்டுப் பெண் லீலாவுடன் அந்த மலையடிவார சாமியாரைச் சந்திக்க வந்திருந்த கலைவாணி அங்கு போலீஸ் வேலை பார்க்கும் தன் பெரியப்பா மகன் தண்டபாணியைப் பார்த்ததும் ஆடிப் போனாள்.
‘அடக் கடவுளே!… தண்டபாணி அண்ணன் வேற இங்க வந்திருக்கே… அய்யய்யோ… அது என்னைப் பார்த்துட்டா பெரிய பிரச்சினை ஆயிடுமே… என்ன பண்றது?” எச்சில் விழுங்கித் தவித்தாள்.
அவன் கண்ணில் படாமல் நழுவி விடலாம் என்கிற எண்ணத்துடன் லீலாவை இழுத்துக் கொண்டு வேக வேகமாக வேறு திசையில் நடந்தாள். ஆனால் விதி விடுமா?. நடந்தவளை தண்டபாணியின் குரல் இழுத்து நிறுத்தியது.
‘கலை… ஏய்… கலை!” தூரத்திலிருந்தே கத்திக் கொண்டு வந்தவன் அவர்களை நெருங்கியதும் ‘என்ன புள்ளே… இங்க வந்திருக்கே… என்ன விஷயம்?… ஆமாம் அவர் வரலையா?” கேட்டவன் முகத்தில் ஏகப்பட்ட சந்தேக கொப்புளங்கள்.
‘அது… வந்து… இவதான்… சாமியாரை….” லீலாவைக் காட்டியபடி அவள் திக்கித் திணற, வாயாடி நெம்பர்-1 என்ற பட்டம் பெற்றிருக்கும் அந்த லீலாவே முன் வந்து விஷயத்தைப் போட்டுடைத்தாள்.
‘அது… வேற ஒண்ணுமில்லை…. இவ புருஷன்காரன் இவகிட்ட அன்பா… அணுசரணையா… இல்லாம எப்பப் பார்த்தாலும் எரிஞ்சு விழுந்திட்டே இருக்கானாம்!… பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவ முடியாம என்கிட்ட வந்து ‘ஓ….‘ன்னு ஓப்பாரி வெச்சா!… நான்தான் “இந்தச் சாமியார் கிட்டச் சொல்லி வசிய மருந்து வாங்கித் தர்றேன்…. அதை உம்புருஷனுக்கு தெனமும் சாப்பாட்டுல கலந்து கொடு… ஆள் வசியமாகி… உன் காலடியே கதின்னு கெடப்பான்”னு சொல்லிக் கூட்டியாந்தேன்!…. அது செரி… போலீஸ்காரருக்கு இங்கென்ன ஜோலி?…. ஏதாச்சும் வசிய மருந்து வாங்கவா?… இல்ல பயந்துக்காம இருக்கறதுக்கு தாயத்து வாங்கவா?”
அந்த வம்புக்காரியின் கிண்டல் பேச்சில் கோபத்தின் உச்சிக்குப் போன தண்டபாணி, ‘தெரியாமத்தான் கேட்கறேன்… உங்களுக்கெல்லாம் மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கா?… இல்ல அந்த எடம் வெற்றிடமாவே இருக்கா?” கத்தலாய்க் கேட்டான்.
‘ஆங்… நீங்கதானே போலீஸ்காரரு?… கண்டுபிடிச்சு சொல்லுங்க…. கேட்டுக்கறோம்!” தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்துக் கொண்டு சொன்னாள் லீலா.
‘ச்சூ…. நீ பேசாதே!….”என்று அந்த லீலாவைக் கையமர்த்தி விட்டு கலைவாணியின் பக்கம் திரும்பிய தண்டபாணி, ‘கலை… நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டியே?” என்றான் கடுமையான முகத்துடன்.
அவள் இட,வலமாய்த் தலையாட்ட, ‘புருஷன் பொண்டாட்டிக்குள்ளார நடக்கற விஷயங்களை இப்படியா அக்கம் பக்கத்துப் பொம்பளைகிட்டே எல்லாம் சொல்லுவாங்க?… ஆயிரம் இருக்கும் புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் நடுவுல…. அடிச்சுக்குவாங்க… புடிச்சுவாங்க… அதையெல்லாம் பெரிசு பண்ணிக்கிட்டு… வசிய மருந்து… அதுஇதுன்னு…ச்சை!…… அப்பப்ப கோவிச்சுக்கறதும்… அப்பப்ப கொஞ்சிக்கறதும்தாம்மா தாம்பத்யம்” குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டு சொன்னான் தண்டபாணி.
அவசரமாய் இடை புகுந்தாள் அந்த லீலா, ‘கோவிச்சுக்கறது மட்டும் தான் இருக்காம்… அவ புருஷன்கிட்டே!”
‘நீங்க…. ரெண்டு பேருமே ஒரு அடிப்படை விஷயத்தை மறந்துட்டுப் பேசறீங்க!.. ஏம்மா கலை… உன் புருஷன் மேகநாதன் என்ன சாதாரண ஆளா?… அவங்கப்பாவுக்குப் பிறகு அந்தப் பண்ணையம் மொத்தத்தையும் அவன்தான் கவனிச்சுட்டிருக்கான்!…. எத்தனை ஆளுங்களைக் கட்டி மேய்க்கறான்… தெனமும் எத்தனை பிரச்சினைகளை… சந்திக்கறான்…!… அங்கெல்லாம் அவன் தன் கோபத்தைக் காட்ட முடியாது… காட்டவும் கூடாது… அப்படிக் காட்டினா பண்ணையம் நடக்காது…. தெனமும் பஞ்சாயத்துதான் நடக்கும்!… பேச வேண்டிய இடங்களிலெல்லாம் சாமார்த்தியமா… நாசூக்கா… யார் மனமும் புண்படாதபடி பேசி எல்லாத்தையும் கட்டிக் காக்கற மனுசன் உன்கிட்ட கொஞ்சம் கோபமாப் பேசறான்னா அதுக்குக் காரணம் உன் மேல் வெறுப்பல்ல… உன் மேல் உள்ள உரிமை… உன்னை ஒரு வடிகாலா நெனச்சு இறக்கறான்!.. அதைப் புரிஞ்சுக்கிட்டு நீ பதிலுக்குக் கோவிச்சுக்காமப் போறதுதாம்மா வாழ்க்கை!” போலீஸ்காரனாயிருந்தாலும் பொறுமையாக அறிவுரை கூறினான் தண்டபாணி.
இரண்டு பெண்களும் பதில் பேச இயலாது, கைகளைப் பிசைந்து கொண்டு, தண்டபாணியையே பார்த்துக் கொண்டு நிற்க, ‘த பாரும்மா… உன்னோட அன்பான பேச்சால… அணுசரனையான நடத்தையால… அரவணைப்பான பணிவிடைகள்னால… சிரிச்ச முகத்தால… புருஷனை வசியம் செய்ய முயற்சி செய்!… அதை விட்டுட்டு இப்படி ஒரு ஏமாற்றுக்கார சாமியார்ப்பயல் குடுக்கற கண்ட மருந்தை வாங்கிக் குடுத்து கட்டின புருஷனோட உசுருக்கு உலை வைக்காதே!” எச்சரிப்பது போல் சொன்னான்.
‘விருட்‘டென நிமிர்ந்தாள் கலைவாணி, ‘தண்டபாணி அண்ணே… என்ன சொல்றீங்க?… உசுருக்கு உலையா?”
‘ஆமாம் கலை…. நாங்க ஒரு போலீஸ் படையே இங்க வந்திருக்கறது எதுக்குத் தெரியுமா?… அந்த போலிச் சாமியாரை அரெஸ்ட் பண்றதுக்குத்தான்!… காரணம் தெரிஞ்சா இன்னும் ஆடிப் போயிடுவே… உன்னைய மாதிரியே இவன் குடுத்த வசிய மருந்தை வாங்கிட்டுப் போயி புருஷனுக்குக் குடுத்த பல பொம்பளைக இப்ப ஸ்டேஷன்ல வந்து குமுறிக்கிட்டிருக்காங்க!”
‘ஏன்?…. எதுக்கு?” கேட்கும் போதே குரல் நடுங்கியது கலைவாணிக்கு.
‘பின்னே?…. வசிய மருந்துங்கற போ;ல இவன் குடுத்த அந்த வஸ்து… பக்க விளைவுகளை ஏற்படுத்தினதுல பல புருஷன்மார்கள் ஆஸ்பத்திரில உசுருக்குப் போராடிட்டுக் கெடக்கறாங்க!…” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு சொன்னான் தண்டபாணி.
‘அய்யோ!” வாயைப் பெரிதாகத் திறந்து உள்ளங்கையால் அதை அடைத்தபடி கூவினாள் கலைவாணி.
‘போங்கம்மா… போங்க!… வசிய மருந்து உங்ககிட்டயே இருக்கு… அதைக் குடுத்து புருஷனை வசியம் பண்ணப் பாருங்க… போங்க… போங்க!” விரட்டினான்.
உடன் வந்த பக்கத்து வீட்டு லீலாவை அப்படியே கழற்றி விட்டு விட்டு புருஷனைக் காண வீடு நோக்கி ஓடினாள் கலைவாணி.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings