எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சூரியன் வரும் வேளையில் கூவி அழைத்து தனது ஊரார் அனைவரையும் எழுப்புவது குட்டிச்சேவல் பிங்குவின் வழக்கம்; தாத்தாவிடம் இருந்து அந்தப் பொறுப்பை பிங்கு தான் வாங்கியிருந்தது.
ஒருநாள் காலையில் பிங்கு கண் விழித்த போது சூரியன் வந்திருக்கவில்லை; இன்றைக்கு ஏன் சூரியனை இன்னும் வரவில்லை? அதற்கு யோசனை வந்தது. இது நள்ளிரவுப் பொழுதா? இன்னும் விடியவில்லையா? எனக்குத்தான் சீக்கிரம் முழிப்புத் தட்டி விட்டதா?
ஒருவேளை இன்றைக்குச் சூரியன் வராமல் போய்விட்டால் என்ன ஆகும்? என்னால் எப்படிக் கூவமுடியும்? நான் கூவாவிட்டால் என்ன நடக்கும்? பிங்குவின் சிந்தனை இப்படி ஓடியது.
நான் கூவாவிட்டால் மனிதர்கள் எழுந்து வேலைக்குச் செல்லமாட்டார்கள்; பறவைகள் இரைதேடப் போகாது; செடிகளில் பூக்கள் மலராது; அப்புறம் நிறைய குழப்பங்கள் வந்து சேரும்;
இப்படி எதை எதையோ மனத்தில் கற்பனை செய்தபடி கூண்டின் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த தாத்தாசேவலிடம் ஓடியது. “தாத்தா! சூரியனைக்காணும்! நான் எப்படிக் கூவாம இருப்பேன்? எல்லோரும் என்னை நம்பித்தானத் தூங்கப் போறாங்க!”- என்று படபடப்புடன் பேசியது.
அதற்குத் தாத்தா சேவல் “நீ போயி கூவு! சூரியன் வந்துரும்!”- என்றது.
இந்தத் தாத்தா எப்போதும் இப்படித்தான்! எல்லா விஷயத்திலும் ஓர் அசட்டை! – என்று மனத்தில் எண்ணியபடி “அய்யோ தாத்தா! நடுசாமம் மாதிரி ஒரே கும்மிருட்டா இருக்கு! சூரியன் வரல!”- என்றது.
“ஊழி காலத்துலதான் சூரியன் வராமப் போகும்! இப்ப கண்டிப்பா வரும்! கூவ வேண்டியது உன்பொறுப்பு! நீ போயி கூவு! என்னைத் தொந்தரவு பண்ணாத!”- என்றபடி கண்களை மூடிச் சுகமாகச் சுருண்டு கொண்டது தாத்தாசேவல்.
உடனடியாகக் பிங்கு கூண்டின் மறுமூலையில் படுத்துக் கிடந்த அம்மாகோழியிடம் ஓடியது; “அம்மா சூரியனைக் காணும்! நான் எப்படிக் கூவுவேன்? தாத்தாகிட்ட சொன்னா ஊழி அதுஇதுன்னு சொல்லி என்னைக் குழப்புறாரு!”- என்று தாத்தாவை குறை சொல்லும் விதமாய் கொஞ்சம் இட்டுக்கட்டிப் பேசியது.
அதற்கு அம்மாகோழி “தாத்தா சொன்னமாதிரி நீ போயி கூவு! சூரியன் வந்துரும்!”- என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டது.
“இதென்ன அம்மாவும் இதையே சொல்கிறாள்! இங்கே சூரியன் வரும் அறிகுறியையேக் காணோமே?”- என்று மனத்தில் சலித்துக் கொண்டது.
அதற்குப் பல்வேறு யோசனைகள்; கவிந்திருக்கும் இருட்டைப் பார்த்தால் நடுசாமம் மாதிரிதான் இருக்கிறது; வேளைகெட்ட வேளையில் கூவ, அர்த்தசாமத்தில் கூவி எங்களின் தூக்கத்தையா கெடுக்கப் பார்க்கிறாய் என்று ஆளாளுக்கு அடிக்க வந்துவிட்டால் என்ன செய்வது? பிங்கு இப்படி யோசித்தது;
ஒருவேளை காலம் தாழ்ந்து கூவ, கூவவேண்டிய நேரத்தில் கூவாமல் என்ன செய்து கொண்டிருந்தாய்? சோம்பேறித்தனமாகத் தூங்கி வழிந்து கொண்டிருந்தாயா என்று அதற்கும் கோபப்டுவார்களே? அது இப்படியும் யோசித்தது; அதிலும் அவர்களின் எஜமானியம்மாள் இருக்கிறாளே?
அவள் நல்லவள்தான்; கம்பு கேப்பை என்று இதுகளுக்கு ஏதாவது தீனி திங்கப் போடுவாள்; அவள் கையில் எப்போதும் குச்சி ஒன்று வைத்திருப்பாள்; சமயங்களில் கோபம் வந்துவிட்டால் அதைத் தூக்கி மேலே எறிந்து விடுவாள்; பிங்கு மீதும் இரண்டுமூன்று முறை எறிந்திருக்கிறாள்; இது எப்படியோ அடிபடாமல் தப்பிப் பிழைத்துக் கொண்டது.
ஒருவேளை அவள் என்னைப் பிடித்து நாலுசாத்து சாத்திவிட்டால?; என் நிலமை என்ன ஆகும்? சே…வரவேண்டிய நேரத்தில் இந்தச் சூரியன் வராமல் போனதால் எனக்குத்தான் எவ்வளவு பிரச்னைகள்? பிங்கு இப்படி எதைஎதையோ எண்ணி மனத்தில் குழம்பியது.
இருந்தாலும் அதற்கு ஒரு யோசனை; தாத்தாவும் அம்மாவும் சொன்னபிறகு நான் ஏன் தயங்க வேண்டும்? எதற்கும் இருக்கட்டும் என கூண்டிலிருந்தபடியே ‘கொக்கரக்கோ…கோ! கொக்கரக்கோ…கோ!’ – என மூன்றுமுறை கூவி வைத்தது;
பிங்குவுpன் குரலைக் கேட்பவர்கள் யாருக்கும் முதலில் சிரிப்புத்தான் வரும்; அதன் குரல் முழுமையாக வளர்ந்த சேவலின் குரல் போன்று கம்பீரமானதாக இருக்காது; ஏதோ கூவுவதற்குப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் கோழியின் குரல் போன்று அரைகுறைக் கூவலாக இருக்கும்; பிங்கு கூவிவிட்டதே ஒழிய அதற்கு உள்ளுர நடுக்கம்; பதட்டத்துடன் காத்திருந்தது;
அது கூவி ஓரிரு நிமிடங்கள் கழித்து வெளியே மரக்கிளைகளில் பறவைகள் படபடக்கும் ஓசை; மேய்ச்சலுக்குச் செல்;லும் மாடுகளின் குளம்படி சப்தம்; அப்பாடா…! விடிந்து கொண்டுதான் இருக்கிறது; அப்புறம் ஏன் இன்னும் இருள் விலகாமல் இருக்கிறது? கூண்டைவிட்டு வெளியே வந்தால்தான் உண்மை நிலவரம் தெரியும்;
எஜமானியம்மாள் தினமும் காலையில் சரியாக ஆறுமணிக்குத்தான் கூண்டைத் திறந்து விடுவாள். இன்றும் அவ்வாறே செய்தாள் பிங்கு கூண்டை விட்டு வெளியே தாவியது; அதன் முகத்தில் சிலீரென்ற குளிர்ந்த காற்று பட்டது; வெளியே வானில் கருமேகங்கள் திரண்டு கொண்டிருந்தன.
அதனால்தான் சூரியனால் தன்முகத்தைக் காட்ட முடியவில்லை; பிங்குக்கு இப்போது புரிந்து போனது; அதற்கு ஒரு சந்தேகம்; கூண்டினில் ஒரு சிறு வெளுப்பும் வரவில்லை; கூண்டின் கணகணப்பிலும் பெரிய மாற்றமில்லை; பிறகு எப்படி தாத்தாவும் அம்மாவும் மட்டும் இது நடுசாமம் அல்ல, வைகறைப்பொழுது துயில் எழும்நேரம் என்று உறுதியாகத் தீர்மானித்தார்கள்? அதற்கு ஆச்சரியம் உண்டானது;
மேய்வதற்காகக் குப்பைமேட்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்த அம்மா கோழியிடம் போய் கேட்டது; “நடுசாமப்;பொழுது என்றாயே? எதைவைத்து நடுசாமம் என்றாய்? கோட்டான்களின் அலறல்சப்தம் கேட்டதா? சாமக்கோடாங்கி குறிசொல்லிக் கொண்டு போனானா?
அசாதாரணமான நிசப்தம் நிலவியதா? நடுஇரவில் மலரும் மலர்களின் வாசனை வந்ததா? எதைவைத்து நடுசாமம் என்றாய்?”- என்று கேட்டது அம்மாகோழி; ஓ…இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பது போல் பிங்கு அமைதியாக இருந்தது. அதற்குப் பதில் தெரியவில்லை.
அம்மா கோழியே தொடர்ந்து பேசியது; “ஒருநாள் என்பது ஆறு சிறுபொழுதுகளை உள்ளடக்கியது! ஒவ்வொரு சிறுபொழுதுக்கும் என பிரத்யேக குணங்கள் உண்டு! அந்தப் பொழுதில் உண்டாகும் சீதோஷணநிலை மாற்றங்கள் அதற்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்ட உயிரினங்களின் செயல்பாடுகள் என்று ஏராளம் நிகழ்வுகள் உண்டு! இவைகளை உன்னிப்பாகக் கவனித்தும் கேட்டும் மனத்தில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்! இப்படி சேகரிக்கப்படும் தகவல்கள் நாளடைவில் ஒரு உயிர் கடிகாரமாக மூளையில் பதிவாகிவிடும்!
இந்தக் கடிகாரம் மூளையில் பதியப் பெற்றவர்களுக்குக் பொழுதுகளை அனுமானிக்கப் புறத்தூண்டுல்கள் ஏதும் தேவையில்லை! இந்தக் கடிகாரம் மூளையில் பதிவானவர்கள் தங்கள் நித்யகடமைகளையும் சரிவரச் செய்து வருவார்கள்! வழக்கத்திற்கு மாறாக வெளியே மேகங்கள் திரண்டு கொண்டிருந்திருக்கின்றன! இதனால் கிழக்கு வெளுக்கவில்லை!
இது புரியாமல் ஏதேதோ விபரீதமாகக் கற்பனை செய்து நீயும் குழம்பி எங்களையும் குழப்பப் பார்த்தாய்! இதில் தாத்தாமீது கோள் வேறு! நீ இன்னும் வளரனும் பிங்கு!”- என்ற அம்மாகோழி அதன் மண்டையில் செல்லமாக ஒரு கொட்டு கொட்டி விட்டுப் போனது.
அப்போது அங்கு வந்த தாத்தா சேவலும் எகத்தாளமாக பிங்குவின் மண்டையில் கொட்டி விட்டுப் போனது. பிங்கு தலையைத் தடவியபடி ஙே…! என்று விழித்தது.
தாத்தாவிடம் இருந்து சூரியனை வரவேற்கும் பொறுப்பை வாங்கிக் கொண்டு விட்டோம், நம்மை விட்டால் இந்த உலகத்தில் வேறு பெரியஆள் இல்லை என்று இறுமாந்திருந்தேனே?
எனக்குத் தெரியாத விஷயங்கள் இன்னும் ஏராளம் இருக்கும் போலிருக்கிறதே? சே… அவசரப்பட்டு என் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி விட்டேனே? நான் மலையென நினைத்துப் பயந்த ஒரு விஷயத்தை ஒன்றுமில்லை என்பதுபோல் எளிதாக ஊதித்தள்ளி விட்டுப் போய்விட்டார்களே?
அனுபவம் பேசும் என்பார்களே, அது இதுதானோ? இவ்வாறு மனத்தில் எண்ணியது பிங்கு; இனிமேல் பெரியவர்கள் ஏதாவது சொன்னால் அதைத் தட்டாமல் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் மனத்தில் நினைத்துக் கொண்டது அது;
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings