in ,

mukil-dinakaranmukil-dinakaran mukil-dinakaran-short-storiesmukil-dinakaran-short-stories

நன்மையே தீமையாய் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

நான் ஆசை ஆசையாய் வாங்கி வந்து நீட்டிய அந்தப் புடவைப் பார்சலை முகம் மலர வாங்கி விழிகளில் ஆவலைத் தேக்கி இதழ்களில் புன்முறுவலைக் காட்டி விரல்களில் பரபரப்பைக் கொட்டி வேக வேகமாய்ப் பிரித்த அமுதா, அப்புடவையை வெளியே எடுத்துப் பிரித்துப் பார்த்ததும் முகம் மாறினாள்.

“அடப்பாவமே!… பிடிக்கலை போலிருக்கே!… ம்…ம்…ம்…எப்படி?… இவளுக்குப் பிடித்த ஸ்கை ப்ளு கலரில்தானே எடுத்திருக்கேன்… அப்புறம் ஏன்…?”

சுவாரஸியமேயில்லாமல் அதை மடித்து மீண்டும் அதே அட்டைப் பெட்டிக்குள் திணித்தவாறே கேட்டாள். “என்ன விலை?”

“ம்ம்ம்… ஆயிரத்தி இருநுறு!”

அதிகமென்று திட்டுவாளோ… இல்லை… குறைவு என்று பாராட்டுவாளோ…என்பது புரியாமல் திக்கித் திணறி சொன்னேன்.

“ப்ச்… வேஸ்ட்” என்றாள் ஒற்றை வார்த்தையில்.

“ஏன் அமுதா… ஏன் அப்படிச் சொல்லுறே?… நான் ஆசைப்பட்டு…நானே செலக்ட் பண்ணிட்டு வந்ததை இப்படி “பொசுக்”ன்னு ‘வேஸ்ட்’ ன்னுட்டியே…” பரிதாபமாய்க் கேட்டேன்.

“ஸாரிங்க… நான் அப்படிச் சொன்னதுக்கான காரணத்தை நானா சொல்லுறதை விட நீங்களே உணர்வீங்க!… எப்ப?… நாளைக்கு நான் இதைக் கட்டிட்டு ஆபீஸூக்குக் கிளம்பும் போது!”

நான் குழப்பமாய்ப் பார்த்தேன்.

என் மனஓட்டத்தைப் புரிந்து கொண்டவள் “கோவிச்சுக்காதீங்க டியர்!” எனக் கொஞ்சலாய் என் கன்னத்தைச் செல்லத் தட்டு தட்டி விட்டுச் சென்றாள்.

மறுநாள் காலை. நானும் அமுதாவும் ஆளுக்கொரு பக்கம் பரபரப்பாய் ஆபீஸூக்குக் கிளம்பிக் கொண்டிருந்தோம்.

“ஏங்க… டைனிங் டேபிள்ல டிபனெல்லாம் எடுத்து வெச்சிட்டேன்… நீங்களே எடுத்து சாப்பிட்டுக்கங்க!” என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் புகுந்தாள் அவள்.

அவசர அவசரமாய் டிபனை அள்ளி விழுங்கி விட்டு வாசலருகே இருந்த ஸ்டூலில் அமர்ந்து ஷூ அணிந்து கொண்டே உள்அறையை நோக்கிக் கத்தினேன். “அமுதா… ஆச்சா?… லேட்டாகுதும்மா!”

“இதோ வந்திட்டேன்!” என்றபடி வந்து நின்றவளைப் பார்த்து முகம் சுளித்தேன்.

“இதென்னடி புடவை?… சருகாட்டம் இவ்வளவு லேசாயிருக்கு!… இடுப்புப் பகுதியில் உள் பாவாடை சுருக்கங்கள் எல்லாம் அப்படியே வெளிய தெரியுது!”

“ம்… இதுதான் நீங்க நேத்திக்கு எடுத்திட்டு வந்த சேலையோட லட்சணம்!”

என் தப்பும் நேத்திக்கு அமுதாவின் முகம் மாறியதற்கான காரணமும் எனக்கு இப்போதுதான் புரிந்தது.

“ச்சே!… இதுக்குத்தான் இந்த மாதிரி வேலைகளிலெல்லாம் ஆம்பளைங்க மூக்கை நுழைக்கக் கூடாதுங்கறது!… இதுவே… நீயாயிருந்தா வாங்கும்போதே இதைக் கவனிச்சிருப்பே இல்ல?… ஹூம்… நான் கலரையும்… வெலையையும் மட்டும்தான் கவனிச்சேன்… இந்த மாதிரியெல்லாம் பார்க்கணும்னு தோணக் கூட இல்லை!…” நான் மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னேன்.

“அதனாலென்ன பரவாயில்லை விடுங்க… நீங்க ஆசையா எனக்கு எடுத்திட்டு வந்து குடுத்தீங்க பாரு?…அதுவே சந்தோஷம் எனக்கு!…அதைக் கட்டித்தான் சந்தோஷப்படணுமா என்ன?”

சொல்லியவாறே மீண்டும் உள்ளறைக்குச் சென்று வேறு புடவையை மாற்றிக் கொண்டு வந்தவளை என் பைக்கில் ஏற்றிச் சென்று அவள் அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு என் அலுவலகம் நோக்கிப் பறந்தேன்.

அன்று முழுவதும் என் மனம் மிகவும் சங்கடத்தில் உழன்றது.  “ச்சே!… பாவம் அவளை அநியாயத்திற்கு ஏமாத்திட்டேன்!… ஆனாலும் அந்த ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் என்கிட்ட வெகு சகஜமாப் பேசினாளே… ரியலி கிரேட்!”

அடுத்த மாதத்தில் ஒரு நாள், சோப்புத்தூள் விற்க வந்திருந்த ஒரு இளம் பெண்ணுடன் அமுதா பேசிக் கொண்டிருந்தது உள்அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த என் காதுகளில் விழுந்தது.

“அடப்பாவமே!…காலையிலிருந்து சாயங்காலம் வரை விற்றாலும் ஒரு நாளைக்குக் கமிஷன் நுhறு ரூபாய்தானா?” அமுதா அங்கலாய்க்க

“ப்ச்…என்ன மேடம் பண்றது?… கூலி வேலைக்குப் போனாக்கூட இதை விட அதிகம் கிடைக்கும்… ஆனா… போக முடியாதபடி குடும்ப கௌரவம் இடிக்குதே!”

“அது செரி… கமிஷன் இல்லாம வேற ஏதாவது அலவன்ஸ் மாதிரி குடுக்கறாங்களா?”

“ம்ஹூம்… நாலு தெரு போறதினால நல்லபடியா உடை உடுத்த வேண்டியிருக்கு!… தெனமும் ஒரு புடவை கட்டக்கூட வக்கில்லாம ஒண்ணு ரெண்டு புடவை மட்டுமே வெச்சுக்கிட்டு… அதையே துவைச்சுத் துவைச்சுக் கட்ட வேண்டியிருக்கு!” தன் நிலையை பாpதாபமாகச் சொன்னாள் அந்த இளம்பெண்.

“ம்ம்ம்… ஏம்மா… நான் ஒண்ணு கேட்டா… சங்கடப்பட மாட்டியே?” அமுதா கேட்டாள்.

“என்ன மேடம் சொல்லுங்க!”

“என்கிட்ட ஒரு புதுப்புடவை இருக்கு… ஒரு தடவை கூடக் கட்டலை!… அப்படியே வாங்கிட்டு வந்த அட்டைப் பெட்டியிலேயே இருக்கு…நீ சங்கடப்படலைன்னா… அதை உனக்குத் தர்றேன்… பணமெல்லாம் எதுவும் வேண்டாம்… சும்மாவே வெச்சுக்க!”

“இதுல சங்கடப்படறதுக்கு என்ன மேடம் இருக்கு?…புதுசுங்கறீங்க…ஒரு தடவை கூடக் கட்டலைங்கறீங்க… அப்புறமென்ன?… என் அக்காகிட்ட வாங்கற மாதிரி நெனச்சு வாங்கிக்கறேன்!”

அப்பெண் சம்மதம் சொன்னதும் அமுதா எழுந்து உள்ளறைக்குள் வந்தாள்.

“என்ன அமுதா அந்தப் புடவையை அந்தப் பெண்ணுக்குத் தரப் போறியா?” கேட்டேன்.

“ஆமாம்… அது வேஸ்ட்டாத்தானே கிடக்கு!”

“சும்மா கிடந்தாலும் பரவாயில்லை… அதைத் தர வேண்டாம்!” கண்டிப்பாகச் சொன்னேன்.

“என்னங்க… நான் தர்றதாச் சொல்லிட்டேனே!”

“ம்… என் வீட்டுக்காரர் தர வேண்டாம்னு சொல்லிட்டார்ன்னு என் மேல பழிய போட்டுடு”

“ப்ச்… என்னங்க நீங்க…!” அவள் கையைப் பிசைந்து கொண்டு நிற்க நான் நெருப்பாய் முறைத்தேன்.

என் முறைப்பின் சூடு தாளாமல் உடனே வெளியேறி எதையெதையோ சொல்லிச் சமாளித்து அப்பெண்ணை அனுப்பியே விட்டாள்.

இரவு.

மறுபக்கம் திரும்பிப் படுத்திருந்தவளின் முதுகைத் தொட்டுத் திருப்பினேன். திரும்பியவள் முகத்தில் தார் சாலை இறுக்கம்.

“அமுதா… நீ ஏன் கோபமா இருக்கேன்னு எனக்குத் தெரியும்!…நான் காரணமில்லாமல் அப்படிச் சொல்லலை… காரணத்தோடதான் சொன்னேன்!”

அவள் குழப்பமாய் என்னைப் பார்க்க, “அந்தப் பொண்ணு சின்ன வயசுப் பொண்ணு!… பார்க்க “தள…தள”ன்னு நல்லா வாளிப்பா வேற இருக்கா!… அப்படியிருக்கற பொண்ணுக்கு உள்ளே இருக்கறதெல்லாம் தெளிவா வெளிய தெரியற மாதிரியான ஒரு சேலையைக் கொடுத்து அவ வாழ்க்கை கெட்டுப் போக நாம காரணமாகலாமா?”

“என்ன சொல்றீங்க?… அதெப்படி அவ வாழ்க்கைய நாம கெடுக்குற மாதிரி ஆகும்?”

“பின்னே?… அவ வேலையே தெருத் தெருவா…வீடு வீடாப் போயி விக்கறது!… அப்படிப் போகிற சமயத்துல அவ எத்தனையோ விதமான ஆம்பளைங்களைச் சந்திக்க வேண்டி வரும்!… அவ சந்திக்கற எல்லா ஆம்பளைங்களுமே நல்லவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது!…இப்ப இந்தச் சருகுச் சேலையக் கட்டிட்டு கவர்ச்சியாப் போனா… அந்த மோசமான ஆளுங்களை இவளே துhண்டி விடற மாதிரியும்…அழைப்பு விடற மாதிரியும் இருக்கும்!…”

“அட… ஆமாங்க!”

“அவ்வளவு ஏன்?… நல்ல ஆம்பளைங்களைக் கூட புத்தி தடுமாற வெச்சிடும் அந்தச் சேலையோட லட்சணம்!… கடைசில அது ஏதாவதொரு விபரீதத்துலதான் போய் முடியும்!… தேவையா?… நீயொரு நன்மை செய்யப் போக அதுவே அவளுக்கொரு தீமையா ஆகணுமா?… சொல்லு அமுதா!”

நான் சொல்லச் சொல்ல என்னை….என் எண்ணத்தை முழுவதுமாய்ப் புரிந்து கொண்ட அமுதா “விருட்”டென்று என் முகத்தை தன் நெஞ்சில் பொதித்துக் கொண்டாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவசரப் புத்தி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 15) – தி.வள்ளி, திருநெல்வேலி