in ,

நண்பேண்டா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

         செல்வி நீட்டிய அந்தப் போட்டோவை வாங்கிப் பார்த்த மல்லிகாவின் முகம் சட்டென இருளானது. அதுவரை இருந்த உற்சாகம் காணாமல் போனது.

“இவளுக்கு இவ்வளவு அழகான மாப்பிள்ளையா?… ம்ஹூம் விடக்கூடாது!… எதையாவது சொல்லி இவள் மனசைக் கலைச்சே ஆகணும்!”.

        “இ… இவரா நீ… நீ… கட்டிக்கப் போற மாப்பிள்ளை?” கேட்டவளின் குரலில் அருவருப்பு.
 
        “ஆமாம்!… ஏன் உனக்கு இவரைத் தெரியுமா?”.

        “தெரியும்… தெரியும்… எனக்கு மட்டுமல்ல!… எங்க ஏரியாவில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும்!” வெறுப்பாய்ச் சொன்னாள்.

        “ஏய்… மல்லி!… என்ன ஆச்சு உனக்கு?… ஏன் உன் பேச்சு ஒரு மாதிரியிருக்கு?”.

        “அது… வந்து… அதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியலை செல்வி” போலியாய் நடித்தாள் மல்லிகா.

        “இதப் பாரு மல்லி… நீ சொல்லப் போறியா இல்லையா?” அதட்டினாள் செல்வி.

        “வந்து….நீ கட்டிக்கப் போறவர் அவ்வளவு நல்லவர் இல்லைடி!… எங்க தெருவுல கடைசியா ஒரு வீடு இருக்குது!… அந்த வீட்ல ஒரு இளம் பெண் தனியா இருக்கா!… அவ யாரு… எந்த ஊரு… கல்யாணம் ஆனவளா… இல்லை… ஆகாதவளா? யாருக்கும் எந்த விவரமும் தெரியாது. அவளும் அக்கம்பக்கத்து வீட்டுல யாருகிட்டயும் பேச மாட்டா… பழக மாட்டா!… ஆனால் அவ  “ஒரு மாதிரி”ன்னு மட்டும் எல்லோருக்கும் தெரியும்!… ஏன்னா… அவ வீட்டுக்குத் தினமும் புதுசு புதுசா ஆம்பளைங்க வருவாங்க!… போவாங்க!…”

       “த பாரு… இப்ப எதுக்கு அதைப் பத்தியெல்லாம் இங்க என்கிட்டே சொல்லிட்டிருக்கே?” மல்லிகா கேட்க,

       “அங்க வாடிக்கையா வந்துட்டுப் போற ஆளுங்கல்ல… இவரும் ஒருவர்டி!… நானே என் கண்ணால ரெண்டு மூணு தடவை பார்த்திருக்கிறேன்டி” அநியாயமாய் ஒரு பொய்யை ஆணித்தரமாய்ச் சொன்னாள் மல்லிகா.

       அதிர்ச்சியில் உறைந்து போய், சில நிமிடங்கள் இறுக்கமான முகத்தோடு அமைதியாய் நின்ற செல்வி, அந்தப் போட்டோவை மல்லிகாவிடம் மீண்டும் ஒருமுறை நீட்டி,  “நல்லா… ஒரு தடவைக்கு ரெண்டு தடவை பார்த்துச் சொல்லு இவர்தானா அது?”.

     “நிச்சயமா இவரேதான்!… அதில் துளிக்கூட சந்தேகமில்லை!”.

     “ரொம்ப நன்றி மல்லிகா!…. தோழிக்கு வரப் போற கணவன் ஒரு தவறான ஆளாக இருக்கக் கூடாது… என்கிற உன்னோட நல்ல எண்ணத்தைப் பார்க்கும்போது உண்மையிலேயே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு மல்லி!” தோழியின் கைகளைப் பற்றிக் கொண்டு செல்வி தழுதழுத்தாள்.

     மல்லிகா சென்றதும், இந்த வரனை பிடிக்க அவள் தந்தை அலைந்த அலைச்சல் பிடித்த பின் திருமணச் செலவுக்காக அவர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் அவள் நினைவில் வந்து போக, பெரும் குழப்பத்திலாழ்ந்தாள்.

      “மல்லிகா சொன்ன மாதிரி கல்யாண வேலைகள் ஏறக்குறைய தொன்னூறு முடிஞ்சாச்சு. ஊர், உறவு, நட்பு என எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்தாச்சு… இதுக்கு மேலே இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியுமா?… அப்படி நிறுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?… அவமானம் தாங்காமல் அப்பாவும் அம்மாவும் தற்கொலை செஞ்சுக்குவாங்க!… நான் தனிமரம் ஆயிடுவேன்! பிறகு நானும் தற்கொலை முடிவுக்குப் போவேன்!…கூடாது… என்னால் என்னைப் பெத்தவங்க சாகக் கூடாது!… அவர்களை நான் சாக விடமாட்டேன்”.

      அன்று இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்தால் துடித்தால் தரம் இல்லாத எச்சில் பட்ட ஒரு மனிதன் எனக்கு கணவனாக வருவது இப்படி ஒரு தெருநாய்க்கு பலி கொடுக்கத்தானா நான் என் பெண்மையை இது நாள் வரை பாதுகாத்து வைத்திருந்தேன்”.

     இயலாமை மெல்ல மெல்ல உருமாறி ஆவேசமாக மாறியது. மனத்தினுள் தாறுமாறான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தது செல்விக்கு. “அவன் எப்படி வரப்போற மனைவிக்கு துரோகம் செய்திருக்கிறானோ… அதே மாதிரி நானும் கணவனாக வரப் போகும் அவனுக்கு துரோகம் செய்து விட்டாலென்ன?”.

     அப்போது அவள் நினைவில் வந்து போனவன் திவாகரன். சில மாதங்களுக்கு முன் நூலகத்தில் சந்தித்த அந்த வாலிபன் தன் நாகரீகமான, நளினமான பேச்சாற்றலாலும், பழகும் திறத்தாலும், செல்வியை மிகவும் கவர்ந்தான். எந்தவொரு ஆடவனையும் ஏறெடுத்துக் கூட பார்த்திராத செல்வி வலியச் சென்று அவனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட போதும், துளியும் இடறாத தெளிவான நட்புடன் பழகினான். உயரிய நட்புக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தான்.

     “கரெக்ட்!… என் மனதை கவர்ந்த அவனிடமே என்னை இழக்க போகிறேன்!… இல்லையில்லை… நானாக விரும்பி என்னை அவனுக்குத் தரப் போகிறேன்!…”

     மறுநாள் மாலை, திடீரென தன் அறையில் வந்து நின்ற செல்வியை ஆச்சரியமாகப் பார்த்த திவாகரன்,  “என்ன செல்வி… திடீர் விஜயம்?… ஏதாவது முக்கியமான விஷயமா?” கேட்டான்.

     ஒரு சிறிய யோசனைக்கு பின் தன் மூளைக்குள் புகுந்து கொண்டு இரண்டு தினங்களாய் தன்னை உறுத்திக் கொண்டிருந்த அந்த துரோகம் குறித்து விலாவாரியாய்ச் சொல்லி விட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுதாள் செல்வி.

அவள் அழுது ஓய்ந்த பின், “செல்வி நீ சொன்னதைக் கேட்கவே கஷ்டமாயிருக்குதும்மா!… உன்னோட நிலைமை யாருக்குமே வரக் கூடாது!… பொதுவாகவே, ஒரு பூட்டு தயாரிக்கப்படும் போது அதற்கான சாவியும் தயாரிக்கப்பட்டு விடுவதைப் போல், ஒரு பிரச்சனை உருவாகும் போதே அதற்கான தீர்வும் உருவாகிவிடும்னு ஒரு வெளிநாட்டு தத்துவம் இருக்கு!… அதனால நிச்சயம் உன் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கும் நாமதான் அதை யோசித்துக் கண்டுபிடிக்கணும்!… கண்டுபிடிப்போம்!” வெகு நாகரீகமாகப் பேசிய திவாகரனை வித்தியாசமாய் பார்த்த செல்வி,  “அந்த தீர்வை நான் ஏற்கனவே கண்டுபிடிச்சிட்டேன் திவா” என்றாள்.

     “அப்படியா?… என்ன தீர்வு?… சொல்லு!” ஆர்வமாய் கேட்டான்.

     அவள் சிறிதும் வெட்கமோ, கூச்சமோ, தயக்கமோ இன்றித் தன் எண்ணத்தைச் சொல்லி முடித்தாள்.  “என்ன திவாகர் கரெக்ட் தானே நான் செய்யறது?… முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்!”

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனான் திவாகரன்.

          ஆனாலும் சட்டென சுதாரித்துக் கொண்டான். அவனுக்குத் தெரியும். அவளின் அந்தப் பேச்செல்லாம் அவளது இயலாமையின் வெளிப்பாடு என்று.

        “தப்பு செல்வி!… நீ இப்ப பேசிய பேச்சு… உன் மனசு பேசிய பேச்சல்ல!… உன் கோபம்… உன் ஆத்திரம்… உன் இயலாமை…. எல்லாம் சேர்ந்து உன்னை அப்படிப் பேச வெச்சிருக்கு!… எனக்குத் தெரியும் என் தோழியின் மனசு… அவ சொக்கத்தங்கம்!..” அவன் வார்த்தைகளில் நெகிழ்ந்து போனவள் அடக்க முடியாமல் கேவிக் கேவி அழ ஆரம்பிக்க.

        “செல்வி… நீ நல்லவ… அதனால உனக்கு நல்ல மாப்பிள்ளைதான் அமைவார்!… அவரைப் பற்றி நீ கேள்விப்பட்ட விஷயம் பொய்யாகக் கூட இருக்கலாம்!… எனக்கு நம்பிக்கை இருக்கு… நிச்சயம் அது பொய்தான்!..  ஒருவேளை உண்மையாகவே அவர் ஒரு தப்பான ஆளா இருந்தால் கூட… நிச்சயம் உன்னால் அவரைத் திருத்த முடியும்!… ஏன்னா நீ அரிதினும் அரிதான பெண்!… வாழ்க்கையின் நுணுக்கங்களையும், நுட்பங்களையும் தெளிவாகப் புரிந்தவள்”.

        அவள் அழுகையை நிறுத்தி விட்டுக்  “குறு…குறு”வென்று அவனையே ஊடுருவிப் பார்க்க,

     “செல்வி… ஒரு குடிகாரனைப் புருஷனாய் பெற்றவள் அந்தக் கோபத்துக்காக தானும் குடிக்க ஆரம்பித்தால் இல்லறம் விளங்குமா?… தாறுமாறா யோசிச்சு… தரங்கெட்ட முடிவுக்கு போறதை விட மாற்றி யோசி!… “யோவ் ஆடுய்யா ஆடு!…  எத்தனை நாளைக்கு ஆடுவே கல்யாணம் ஆகிற வரைக்கும்தானே ஆடுவே!… அதுக்கப்புறம் இருக்கு உனக்கு!… உன்னைய என் முந்தானைல முடிச்சு வைக்கிறானா இல்லையா பாரு!… அது நடக்கலைன்னா என் பேரு செல்வி இல்லை”ன்னு ஒரு வைராக்கியத்தை உனக்கு நீயே எடுத்துக்கிட்டு செயல்படுத்திப் பாரு”.

     செல்வியின் முகத்தில் லேசாய் புன்னகை பூக்க ஆரம்பித்தது.

     “என்ன நான் சொல்றது சரிதானே?…” அவன் கேட்க அவள்  “சரி” என்று தலையசைக்க,  “சரி… நேரமாச்சு கிளம்பு… கிளம்பு… கல்யாணப் பொண்ணு இப்படி இருட்டற வரைக்கும் வெளியில இருக்கக் கூடாது”

     அவள் எழுந்து வாசல் வரை சென்று திரும்பி அவனை பார்த்தாள் நன்றியுடன்.

     வானத்தின் பௌர்ணமி நிலா மெல்ல மேலிருந்து பிரகாசிக்க தொடங்கியது.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஜோதி ஏற்றிய ஜோதி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    நீயே ஒரு வசிய மருந்துதான் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை