எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என்றும் இல்லாத பளபளப்பில் அம்மன் அன்று ஜொலித்ததாகத் தோன்றியது சிவராமய்யருக்கு. என்றைக்கும் போலத்தான் அன்றும் அம்மன் சிலையைக் கழுவி, அபிஷேகம் செய்து அலங்காரம் செய்திருந்தார். ஆனால் இன்று ஏனோ அம்மா கூடுதல் ஜொலிப்புடன் இருப்பதாகப்பட்டது.
வழக்கம்போல அன்று காலை கோவில் நடை சாத்திவிட்டு, சாயங்காலம் அர்ச்சனைக்கான பூக்களைப் பறிக்க தோட்டத்திற்கு சென்றார். தோட்டம் என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை. கோவிலுக்குத் தேவையான பூக்கள் வளரும் இடம். ஒரு அரை செண்ட் பூமி.
கோவிலின் பின்புறம் வசிக்கும் பெரிய வீட்டுக்காரர் நாணுப்பிள்ளை தானமாகக் கோயிலுக்குக் கொடுத்த இடம். பராமரிப்பும் பாதுகாப்பும் எல்லாம் சிவராமய்யரின் பொறுப்பு.
பாரிஜாதம், நந்தியார்வட்டம், சங்குபுஷ்பம், செம்பருத்தி, பல நிறத்தில் அரளிப்பூச்செடிகள், முல்லை, எருக்கு என்று ஒவ்வொரு கால பூஜைக்கும் ஏற்ற மலர்களை வளர்த்து பராமரித்து வருகிறார்.
அவருக்கு அங்கு இருக்கும் குறை ஒன்றுதான். அந்த இடத்தின் ஒரு ஓரத்தில் தானாக உருவான புற்று ஒன்று இருந்தது. அதில் பாம்பு இருந்ததை நாணுப்பிள்ளையைத் தவிர யாரும் பார்த்ததில்லை. ஆனாலும் சற்று பயத்துடன் தான் அய்யர் பூப்பறிப்பார்.
புற்றுக்குப் பக்கத்தில் தான் செம்பருத்திச் செடி இருந்தது. அதனால் செம்பருத்தியைப் பறிக்கப் போகும் போது மட்டும் கால்களை கொஞ்சம் உரக்கத் தட்டி சத்தமிட்டுக் கொண்டு பறிப்பார். அப்படிச் செய்தால் பூமியில் உண்டாகும் அதிர்வு உணர்ந்து பாம்பு பதுங்கிவிடும் என்று கோவிலுக்கு பூமாலை கட்டிக்கொடுக்கும் பார்வதியம்மாள் சொல்லியிருந்தாள்.
இருந்தும் சில நேரங்களில் ஒரு சாகசம் போல புற்றுக்குள் எட்டிப் பார்த்தும், குச்சியால் புற்றில் ஓரம் தட்டிப் பார்த்தும் பாம்பைக்காண முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பார்க்கவே முடிந்ததில்லை.
தினமும் கோவிலுக்குப் பால் கொண்டு வந்து கொடுக்கும் சுப்பிரமணி சொன்னான் என்று, பிடிக்காவிட்டாலும் முட்டை ஒன்றை வாங்கி வைத்து காத்திருந்து பார்த்தார். வரவில்லை. ஆனால் அடுத்தநாள் வந்தபோது முட்டையை காணவில்லை. அப்படியாக அய்யரின் பாம்பு பயமும் வளர்ந்து தினசரி காரியங்களும் நன்றாக நடந்து கொண்டிருந்தது.
அம்மன் அன்று ஜொலிப்பதாகக் தோன்றியதற்கு அய்யரிடம் காரணமிருந்தது. அவரது மகள் விஜயலக்ஷ்மியை பெண்பார்க்க வருகிறார்கள். நிறைய வரன்கள் தட்டிக் கழிக்கப்பட்டு ஒருமனதாக விஜயாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடம்.
பையன் டெக்சாஸில் கார் வடிவமைப்பாளனாக வேலை செய்கிறான். விஜயாவும் கம்பயூட்டர் இன்ஜினியராக ஹைதராபாத்தில் வேலை செய்கிறாள். நல்ல இடம். நல்ல குடும்பம்.
அய்யர் பூக்களை பார்வதியம்மாளிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்ல திரும்புகையில், ‘ஏன் சிவராமா? பையனாத்துலருந்து வரும்போது நீ கோவில்ல இருந்தா நன்னாருக்குமோ? இன்னிக்கு மட்டும் பூஜையை அந்த கோவிந்தராஜுகிட்ட கொடுத்துட்டு வீட்டில் இருக்கப்படாதா?’ என்று கேட்டாள் பார்வதியம்மாள்.
கோவிந்தராஜு பக்கத்திலிருக்கும் விநாயகன் கோவில் அர்ச்சகர். அய்யருக்கு முடியாத தருணங்களில் வந்து பூஜை செய்து கொடுத்துவிட்டுப் போவார்.
‘அதெல்லாம் அவாகிட்ட விவரமா சொல்லிட்டேன். ஆத்துக்குப்போய் விஜயாவை பாத்துட்டு அவாள்லாம் நேரா கோவிலுக்கு வந்து என்னையும் பார்த்துட்டுத்தான் போறா’. வேகமாக நடந்தார்.
‘எப்படியோ எல்லாம் நல்லா நடந்தா சரி’ .
வீட்டிற்குள் நுழைகையில் பதார்த்தமணம் நாசியைப் துளைத்தது.
‘ஏம்மா, இந்நேரத்துக்கே பலகாரம் பண்ண ஆரம்பிச்சுட்டேளா? மணி பத்தரை தான் ஆறது’… கால் கழுவவிட்டு வீட்டிற்குள் நுழைந்தபடி கேட்டார்.
‘அவா வர்ற நேரம்பாத்து பரபரக்க வேணாமேன்னு நான்தான் இப்பவே தொடங்கலாம்னு சொன்னேன்பா’ விஜயா சொன்னாள்.
‘என்ன ஆறது?’
‘மிக்சர் போட்டாச்சு, பக்கோடா தயார், லட்டு பிடிச்சாச்சு, சாயம்பற பஜ்ஜி பண்ணி, கேசரி கிண்டினா ஆச்சு’ அய்யரின் மனைவி கோமதி உள்ளிருந்து சொன்னாள்.
‘இந்தாப்பா மோர்’ விஜயா செம்பை நீட்டினாள். மடக்மடக் என குடித்ததும் ஆசுவாசமாக இருந்தது. விஜயாவின் காதில் புதிய கம்மல் தொங்குவதை பார்த்தார்.
‘புதுசா இருக்கே காதில, இங்க வா பாக்கறேன்’ அவள் காதைக் காட்ட, இதயவடிவில் மெலிதான அந்தக் கம்மல் அவருக்குப்பிடிக்கவில்லை.
‘அந்த சிவப்புக்கல் வச்ச ஜிமுக்கு போடப்படாதோ? இது என்ன ஜீரக சைசில சின்னதா’
‘எனககு இதுதான்பா பிடிச்சிருக்கு, அது நிச்சயித்துக்கு போட்டுக்கலாம்’ இந்த இடம் அமைந்தேவிடும் என்ற அவளின் நம்பிக்கையான பேச்சு அவருக்கு மகிழ்ச்சி தந்தாலும் கூடவே கவலையளித்தது.
காரணம் ஜாதக தோஷம். அவளுக்குத் திருமணம் நடந்தால் அவள் உயிருக்கு ஆபத்து என்று ஜோசியர் ஆருடம் சொல்லியிருந்தார். வந்த வரன்கள் எல்லாம் அதைக் கேட்டு பின்வாங்க, இந்தப் பையன் மட்டும்தான் அதை நம்பாமல் தீர்மானமாக இருந்தான்.
அப்படி ஒரு பயம் இருந்தால் உங்க சமாதானத்துக்கான பரிகாரம் என்னன்னு கேட்டு பண்ணிடலாம் என்றும் சொல்லியிருந்தான். அதுதான் விஜயாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பரிகாரம் கேட்கப் போகவேண்டும்’ நினைத்துக்கொண்டார்.
பெண் பார்க்கும் படலம் இனிதே முடிந்து இருவீட்டாருக்கும் பிடித்துப்போனது. அடுத்த பத்தாம் நாளில் நிச்சயத்தேதி குறிக்க முடிவும் செய்யப்பட்டது. பையன் வீட்டாரும் விஜயாவும் சேர்ந்து கோவிலுக்கு வந்து அய்யரை சந்தித்து விட்டு புறப்பட்டனர்.
நிச்சயநாளும் வந்தது. நிச்சயம் முடிந்து, திருமண தேதி குறிக்கப்பட்டு பெண்ணும் பையனும் கோவிலுக்குப் புறப்பட்டார்கள். அய்யருக்கு இருப்புக்கொள்ளவில்லை.
காரணம் ஜோசியர் சொன்ன விஷயம். ‘பெண்ணுக்கு ஜாதகதோஷம் போக கல்யாணத்துக்கு ஒருவாரம் முன்னாடிலருந்து கல்யாணம் வரைக்கும் ஏழுநாள் அம்மனுக்கு காலைலயும் சாயந்திரமும் விளக்குப்போட்டு பிரார்த்தனை பண்ணினா போதும், ஆனா பையனுக்குத்தான்….’
‘என்ன பையனுக்கு? தெளிவாகச் சொல்லுங்கோ’ பதறியது அய்யருக்கு.
‘பையன் ஜாதகத்தில் சர்ப்பதோஷம் இருக்கு… கல்யாணம் நின்னுபோக வாய்ப்பிருக்கு. பரிகாரமா…. ‘ அய்யருக்கு அவர் சொன்னது எதுவும் காதில் விழவில்லை.
உடனடியாக கோவிலுக்கு ஓடினார். ‘அப்பாடா’ என்றிருந்தது. அவர்கள் பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர். தோட்டத்துக்கதவை மூடி சாவியை ஒளித்து வைத்த பிறகுதான் நிம்மதியானது.
இரண்டுநாள் கழித்து அன்று கோவில் திறக்கப்படவில்லை. முந்தையநாள் பூப்பறிக்கச் சென்ற அய்யர் பாம்பு தீண்டி உயிரிழந்ததாக சுவரொட்டி சொன்னது.
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings