in ,

நமக்கு நாமே நெம்புகோல் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 “ஸ்ரீவத்ஸா அப்பார்ட்மெண்ட்” எட்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அன்று களை கட்டியிருந்தது.

கார் பார்க்கிங்கில் இருந்த “ஸ்ரீவத்ஸா மனமகிழ் மன்ற” அரங்கத்தில் கலர் பல்புகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.  பச்சை நிற வெளிச்சத்தில் மிளிர்ந்தன செயற்கை வாழை மரங்கள்.

இந்த ஆண்டு விழா “குழந்தைகளின் தனித் திறமைப் போட்டி” என்கிற  அறிவிப்பால் புத்துணர்வு பெற்றிருந்தது. எல்லோரும் தத்தம் குழந்தைகளை பல்வேறு நிகழ்வுகளுக்கு பயிற்சி கொடுக்கத் துவங்கினர்.

தாய்மார்கள் அப்பயிற்சிக்காக பணத்தை வாரியிறைத்தனர். 

ஆடிட்டர் மகன் அரவிந்திற்கு மாஜிக் பயிற்சி கொடுக்க “தொலைக்காட்சி புகழ்” மாஜிக் நிபுணர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.

டாக்டர் மகள் காயத்ரிக்கு கர்நாடக சங்கீதம் கற்றுத்தர பிரபல கர்நாடக சங்கீத பாடகி வந்திருந்தாள்.

பேங்க் மேனேஜர் மகன் சுதாகருக்கு வெஸ்டர்ன் டான்ஸ் டிரெய்னிங்கிற்கு சினிமாவைச் சார்ந்த ஒரு டான்ஸ் மாஸ்டர் நியமிக்கப்பட்டிருக்க,

பிஸினஸ் மேக்னெட் பிரவீண் குமார் மகள் சௌமியாவிற்கு கதகளி டான்ஸ் சொல்லித் தர கேரளத்திலிருந்து ஒரு மாஸ்டர் வரவழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சியன்று, வி.ஐ.பி.க்கள் அனைவரும் வந்து சேர்ந்த பின், இறுதியாய் வந்திறங்கினார் அன்றைய போட்டிக்கு நடுவராய் இருந்து பரிசுக்குரிய குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கப் போகும் மூத்த வழக்கறிஞர் சிவஞானம்.

போட்டிகள் துவங்கின.   முதலில் பரத நாட்டிய நிகழ்ச்சி. 

ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பொது மேலாளராக இருக்கும் கதிரேசன் மகள் கீர்த்தனா எடுத்த எடுப்பிலேயே, பதினைந்து இருபது நிமிடங்களுக்கும் மேல் தொடர்ந்து ஆடி, அசத்தி விட, கைதட்டல் அரங்கின் மேற் கூரையில் மோதித் திரும்பியது.

அடுத்து வந்து தன் வித்தியாசமான மாஜிக் நிகழ்ச்சியினால் அரங்கிலுள்ளோர் அனைவரையும் மூக்கில் விரலை வைக்கச் செய்து விட்டுச் சென்றான் ஆடிட்டர் மகன் அரவிந்த். 

சிவஞானம் வியப்பில் ஆழ்ந்தார்.  “ஆஹா…வரும் போது இந்த நடுவர் வேலை ரொம்ப ஈஸியான வேலைன்னு நெனச்சேன்…போகிற போக்கைப் பார்க்கும் போது…ரொம்பக் கஷ்டமாயிருக்கும் போலிருக்கே!”

அடுத்து வந்த பேங்க் மேனேஜர் மகன் சுதாகர் வெஸ்டர்ன் டான்ஸில் எல்லோரையும் மலைக்க வைக்க, தொடர்ந்து வந்த சௌமியா கதகளி நடனத்தில் ஆடியன்ஸை அலற வைத்து விட்டுச் சென்றாள்.

அமைதியே உருவாய் வந்து மேடையேறிய ஒரு சிறுவன், மிமிக்ரியில் விளையாடினான்.  பிற மொழி நடிகர்களின் குரலையெல்லாம் அட்சரம் பிசகாமல் பேசிக் காட்டினான்.

அடுத்டுத்து வந்தோர் அனைவருமே தத்தம் பங்குக்கு பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி விட்டுச் செல்ல,

இறுதியாய் வந்தாள் டாக்டர் மகள் காயத்ரி.  அவளது கர்நாடக சங்கீதத்திற்கு ஆடாத தலைகளே இல்லை.

எல்லா நிகழ்வுகளும் முடிந்த பின், சிவஞானத்தின் பணி துவங்கியது. ஒரு வழக்கறிஞராக, சிக்கலான கேஸ்களைக் கூட எளிதாக ஜெயித்துக் காட்டியவர், இந்தச் சிறார் போட்டித் தேர்வில் சிரமப்பட்டார். 

மதிப்பெண்களை மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்தார்.  எல்லாக் குழந்தைகளுமே ஏறக்குறைய ஒரே நிலையில் இருந்தன.

அப்போது, மன்றச் செயலாளர் கோகுலன், சிவஞானத்தின் அருகே வந்தார்.

 “சார்… இப்ப  “ஜோதி”ங்கற ஒரு சிறுமி வந்து ஏதோ பர்ஃபாமென்ஸ் பண்ணும்… அதைப் பரிசீலனைக்கு எடுக்க வேண்டாம்! அது… அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் பொண்ணு!”

 “வொய்?”

 “இல்லை சார்!… அப்பார்ட்மெண்ட்ல குடியிருக்கவங்களோட குழந்தைகள் மட்டுமே போட்டியில் கலந்துக்கணும்!”ன்னு ஒரு ரூல் இங்க இருக்கு!… அந்த வாட்ச்மேன் இங்க வேலை செய்பவர்தானே?.. .குடியிருப்பவர் இல்லையே!… அதனால அவரோட பொண்ணைக் கணக்கில் எடுத்துக்க வேண்டாம்!”

அவரது இக்கட்டைப் புரிந்து கொண்ட சிவஞானம், “ஓ.கே!” என்றார் மனசேயில்லாமல்.

மேடையேறினாள் வாட்ச்மேன் மகள் ஜோதி.

“என்னம்மா? என்ன பர்ஃபாமென்ஸ் பண்ணப் போறே?”

 “சார்…. நான் எந்தவொரு பர்ஃபாமென்ஸுக்கும் என்னைத் தயார் பண்ணிட்டு வரலை!… அதனால இப்ப பதினெட்டு பேர்… பதினெட்டு வித நிகழ்ச்சிகளை பிரமாதமா செஞ்சு காட்டினாங்களே?… அந்தப் பதினெட்டு பேரும் செஞ்சதை… நான் ஒருத்தி செய்யப் போறேன்!… அதாவது ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரு நிகழ்ச்சியாக்கி செய்யப் போறேன்!”

 “ஓ.. கமான் ஸ்டார்ட்!” நடுவர் ஒப்புதல் வழங்க, துவங்கினாள் அந்தச் சிறுமி.

முதலில் கீர்த்தனாவின் பரத நாட்டியத்தை சற்றும் பிசகாமல் மூன்று நிமிடங்கள் ஆடியவள், அப்படியே சுதாகரின் வெஸ்டர்ன் டான்ஸிற்குத் தாவி அவையினரை மெய் மறக்கச் செய்து விட்டு, சௌமியாவின் கதகளிக்குப் போய் அமர்க்களமாய் ஆடி விட்டு, அரவிந்தின் மாஜிக்கை கையிலெடுத்து இரண்டு அற்புத மாஜிக்குகளை  செய்து காட்டி விட்டு,  மிமிக்ரியில் இறங்கி செயலாளர், பொருளாளர்…ஏன்?…நடுவர் சிவஞானத்தைப் போலவும் பேசிக் கலக்கி விட்டு, இறுதியாய் நாட்டுப்புறப் பாடலையும் பாடி முடித்து விட்டு, சபையினரை வணங்கி விட்டு  கீழிறங்கினாள் அந்த ஜோதி.

பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் கைதட்டல் ஓயாமலேயிருந்தது.

வாரக்கணக்கில் நிபுணர்களை வைத்து தொடர் பயிற்சிக்குப் பின், தங்கள் குழந்தைகள் செய்ததை, ஒரே ஒரு முறை… சில நிமிடங்கள் மட்டும் கண்ணால் பார்த்து விட்டு, சிறப்பாக அந்தச் சிறுமி செய்து விட்டதைக் கண்டு, மிரண்டு போயினர் அப்பார்ட்மெண்ட் பெண்மணிகள்.  அரண்டு போயினர் பயிற்சியாளர்கள்.

வழக்கறிஞர் சிவஞானம் மேலும் குழப்பத்திலாழ்ந்தார். பதினெட்டு பேரின் திறமையைத் தன் ஒருத்திக்குள் இருத்தி வைத்திருக்கும் அவளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாதென்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் அப்பார்ட்மெண்ட்வாசிகளில் மூன்று பேரை பரிசுக்குத் தேர்ந்தெடுத்தார்.

 “அடுத்து பரிசுக்குரியவர்களின் பெயர்களை அறிவிக்க வழக்கறிஞர் சிவஞானம் அவர்களை அழைக்கின்றோம்!”  நிகழ்ச்சித் தொகுப்பாளர் அழைக்க,

மேடையேறிய சிவஞானம், மைக்கின் எதிரில் நின்று முதல் மூன்று பரிசுக்குரிய குழந்தைகளின் பெயர்களை சம்பிரதாயத்தனமாய் அறிவித்தார். 

பரிசு பெற்ற குழந்தைகளும், அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

வெற்றி பெற்ற குழந்தைகள் மேடையேறி வந்து சிவஞானத்தின் கையால் கேடயங்களைப் பெற்றுக் கொண்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டு விலகியதும், மறுபடியும் மைக்கின் முன்னால் வந்து நின்றார் சிவஞானம்.   

“அனைவருக்கும் வணக்கம்!…. இங்கே வரும் போது, இந்த வேலை மிகவும் எளிதான வேலை என்று எண்ணித்தான் வந்தேன்!…. போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளின் திறமையைப் பார்த்து அசந்து போனேன்…. ஒருவரையொருவர் மிஞ்சும் விதத்தில் எல்லோருமே தத்தம் திறமையைக் காட்டி என்னை சோதித்து விட்டனர்!… எதை எடுப்பது?.. எதை விடுப்பது?… என்றே புரியாமல் தவித்து விட்டேன்!…. எப்படியோ  சிரமப்பட்டு செய்து முடித்திருக்கிறேன்!”

 “இருந்த போதிலும் என் மனதில் ஒரு நெருடல்… இங்கு ஒரு உண்மையான திறமைசாலி இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்… கடைசியாய் வந்து எல்லோருடைய பர்ஃபாமென்ஸையும் ஒரே ஆளாய் செய்து காட்டினாளே வாட்ச்மேன் மகள் ஜோதி… நியாயமா பார்த்தா முதல் பரிசுக்குத் தகுதியானவள் அவள்தான்!… இந்த மனமகிழ் மன்றத்தின் ரூல்ஸ் படி இங்கு குடியில்லாத ஒருத்தருடைய குழந்தை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவே தகுதியில்லாதவள் ஆகிறாள்!…அந்தக் காரணத்தினாலேயே அச்சிறுமியின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய் விட்டது!…”

அரங்கில் யார் முகத்திலும் ஈயாடவில்லை.

“இவ்வளவு திறமை வாய்ந்த சிறுமியை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அவள் திறமை முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்… அதனால்…. அச்சிறுமிக்கு நான் தனிப்பட்ட முறையில் சிறப்புப் பரிசாக என் கையிலிருந்து ரூபாய் ஐயாயிரத்தைப் பரிசாக வழங்க முடிவெடுத்திருக்கிறேன்!…” சொல்லி விட்டு வழக்கறிஞர் சிவஞானம் செயலாளர் கோகுலனைப் பார்க்க, அவர் சம்மதிப்பது போல் தலையாட்டினார்.

கூட்டத்தினர் எல்லோரும் “போம்மா…போய் வாங்கிக்க!” என்று அவளை அனுப்பி வைக்க, ஓடி வந்தாள் மேடைக்கு.  சிவஞானம் தன் கையிலிருந்த தொகையை அவளிடம் தர, கூட்டத்தின்  கரவொலி அவர்களின் மகிழ்ச்சி அளவுகோலாயிருந்தது.

முத்தாய்ப்பாய், “உண்மையான திறமைசாலி… திறமையிருந்தும்…. பொருளாதார ஏற்ற தாழ்வின் காரணமாக முடக்கி விடப்படும் அவலம் இந்த நாட்டோட சாபம்!… அது இங்கேயும் எதிரொலிக்க கூடாது!… என்பதை உணர்த்தத்தான் இந்த ஊக்கப் பரிசு!… நன்றி!”  பேசி முடித்த வழக்கறிஞர் சிவஞானத்தின் மனம் அப்போதுதான் முழு திருப்தியைத் தொட்டு விட்டிருந்தது.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சுமங்கலி மனசு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    அன்பைத் தேடும் அன்றில்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை