2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இரவு ஒரு ஆழ்ந்த அமைதியை தருகிறது. அந்த அமைதி நிம்மதியும் தருகிறது. சில நேரங்களில் அதற்குப் பதிலாக பயத்தையும் விதைக்கிறது. தேவையற்ற எண்ணங்களை உண்டாக்குகிறது. அந்த எண்ணங்கள் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது.
அப்படி தேவையற்ற எண்ணங்கள் சூழப் படுக்கையில் படுத்திருந்தாள் கயல்.
வேலைகளை முடித்துவிட்டு அருண் அவள் அருகில் வந்து படுத்தான். கணவனை கண்டதும் அவளுக்கு ஒரு கதகதப்பு தன் மனபாரத்தை கணவனிடம் பகிர ஆரம்பித்தாள்.
“நமக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது”
“எனக்கும் அதான்டி புரியல… நம்ம என்ன பாவம் பண்ணோம்மோ தெரில”
“போன வாரம் தான் உங்கம்மாக்கு உடம்பு சரி இல்லைன்னு ஹாஸ்பிடல் போனோம்.. இந்த வாரம் எங்கம்மாக்கு.. அதும் சும்மா இல்லைங்க.. பெருசா பெருசா சொல்றாங்க.. எல்லாமே அட்மிட் பண்ணி பாத்துட்டு வரோம்”
“ஆமா கயல்.. நம்ம பொண்ணுக்கு வேற உடம்பு கெட்டுட்டே இருக்கு”
“ஒரு வயசுக்குள்ள அவ எவ்ளோ கஷ்டப்பட்டுட்டா.. இப்படி ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல்லா போய்ட்டு இருந்தா எங்கங்க நிம்மதி இருக்கும்”
“அதுக்குதான் நம்மலும் எவ்ளோ சாமி கும்பட்றோம் கயல். எவ்ளோ நல்லது பன்றோம். ஏன் நமக்குன்னு வந்து சேருதோ”
“பாப்பா விஷயத்துல ஒரு டைம் பிளட் டெஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டோம். உடனே போன் பண்ணி அந்த ரத்தம் கட்டி ஆயிடுச்சி பாப்பா ரொம்ப ஆட்டிட்டா இன்னொரு டைம் எடுக்கணும் சொல்றாங்க.. ஒரு டைம் குத்தும் போதே பெத்த வயிறு தாங்க முடியாம அலர்னேன்.. எப்படிங்க இன்னொரு தடவை எடுக்கிறது”
“அதுல கூட நமக்கு ராசி இல்லை.. எடுத்த ரத்தம் கூட நம்ல பழி வாங்குது. மறுபடியும் என் பொண்ணு கைல ரத்தம் பாக்க வெக்குது”
கயல் கண்கலங்கினாள். அருண் அவள் கண்களை துடைத்து விட்டான்.
“நம்ம பாப்பாக்கு மொட்டை அடிச்சி காது குத்துனமே எல்லாரையும் கூப்பிட்டு பெருசா பண்ணது தப்போ.. கண்ணு பட்ருக்குமோங்க” கண்ணீர் நின்றதும் மீண்டும் புலம்ப தொடங்கினாள் கயல்
“யாரை கூப்பிட்டு யாரை விட்றதுன்னு தான எல்லாரையும் கூப்பிட்டோம். இனிமே எதுக்குமே யாரையும் கூப்பிடக் கூடாது”
“நிறைய பேர் பெரிய விஷேசம்லாம் கூட யார்க்கும் தெரியாம பண்றாணுங்க.. நம்ம சொந்தக்காரங்க வேணும்ன்னு எல்லாரையும் கூப்பிட்டு சாப்பாடு போட்டது தப்பா”
“தெரில கயல்.. நம்ம கடன் வாங்கி முன்ன பின்ன அட்ஜஸ்ட் பண்ணி கூட சிறப்பா பண்ணுவோம். அதுல எதாவது பொறாமை பட்றாங்களா”
“இருக்குங்க.. இனிமே நம்ம எதும் வெளிய காட்டிக்கவே கூடாது. ஸ்டேட்டஸ் போட்டோஸ் கூட போடக் கூடாது”
“அவன் அவன் நிக்கிறது நடக்கிறது போறது வர்றது சாப்பட்றது தூங்குறது எல்லாம் போட்றான்.. நான் என்ன கயல் போட்றேன். எங்கயாவது வெளிய போனா சுத்தி இருக்க இடம் நல்லா இருந்தா ஒரு போட்டோ போடுவேன். அது கூட தப்பா”
“தெரிலைங்க.. அது கூட நமக்கு குடுத்து வெக்கலையோ என்னவோ”
இருவரும் இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்தன. அறையில் மின்விசிறி சத்தம் மட்டும் இப்போது கேட்டுக்கொண்டிருந்தது.
“என்னங்க.. இந்த வீட்டுக்கு குடி வந்தது எதாவது சரியில்லையா.. இடம் மாத்தி பாக்கலாமா”
“இந்த வீட்டுக்கு வந்த ஒரே வாரத்துல அம்மா வழுக்கி விழுந்தாங்கல்ல..”
“அப்போ அவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க”
“ஆனா அப்படியும் முழுசா சொல்ல முடியாது. அதுக்கு முன்னாடி இருந்தே அவங்களுக்கு உடம்பு கெட்டுட்டே இருக்கும். கண் ஆபரேஷன் ஆச்சு.. அப்போவும் ரொம்ப சிரமம் தான்”
“இந்த வீட்டுக்கு வந்து நல்லதும் நடந்துருக்கு அதும் யோசிக்க தான் வெக்குதுங்க.. ஒருவேளை பொருள் வாங்கின நேரம் சரியில்லையோ.. தங்கம் வாங்கினமே அது எதாவது செட் ஆவலையா”
“ஏண்டி நான் எவ்ளோ கஷ்டப்பட்டு மாசம் மாசம் ஐயாயிரம் சீட்டுல போட்டு பொண்ணுக்குன்னு சேர்த்து வெச்சு ஒரு செயின் எடுத்தா அதுல என்ன நேரம் சரியில்லை. திருடுறவன் பணத்தை ஏமாத்துறவன்லாம் நல்லாருக்கான். சொந்த காசுல வாங்குன்னா என்ன தப்பு”
அருண் கொஞ்சம் சத்தமாகவும் கோவமாகவும் பேச அவர்களின் ஒரு வயது மகள் தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டாள்.
கயல் பிள்ளையை அள்ளித் தூக்கி தாலாட்டு பாடி மீண்டும் உறங்க வைத்தாள்.
அருண் எழுந்து சென்று சன்னல் அருகே நின்றான். தானும் அவன் அருகில் சென்று நின்றாள் கயல். காற்றின் குளுமை மனதையும் லேசாக்கியது.
“நாளைக்கு என்ன சமைக்கிறது.. ஆபீசுக்கு நேரமா போனும்னு சொன்னிங்க”
“சிம்பிள்லா கூட பண்ணு ஆறு மணிக்கே கிளம்பனும்”
“ஒன்னும் பிரச்சனை இல்லை. செஞ்சி குடுத்தரேன்ங்க”
சில நிமிடங்கள் அங்கேயே இருவரும் நின்றனர்.
“சரி வா தூங்கலாம். கொசு உள்ள வரும் ஜன்னல் சாத்திடலாம்”
இருவரும் உறங்கச் சென்றனர்.
“பாப்பா அழும்போது அம்மா அப்பாலாம் சொல்றாங்க.. ஒவ்வொரு வார்த்தையா பேச வருது.. கேக்கவே ஆசையா இருக்கு”
“நானும் கேட்டேன்.. அம்.. அம்ன்னு நல்லா அழுத்தமா சொல்றா”
“கடவுள் உனக்கு என்னையும் எனக்கு உன்னையும் கொடுத்துருக்காரு.. எல்லாரும் ஆசைப்பட்ற குழந்தை பாக்கியம் கொடுத்துருக்காரு.. வேறென்னங்க வேணும்.. விடுங்க பாத்துக்கலாம்”
“என்னடி… முன்னதான் அது இதுன்னு பொலம்புன்ன.. இப்போ இப்படி பேசுற”
“அப்போ ஏதோ மனசு சரியில்லை சொன்னேன். இப்போ இருக்கிறது நினைச்சி சந்தோசப் படணும்னு தோணிச்சி அதையும் சொல்றேன்”
“ஓ.. இப்போ நீ அப்படி வர”
“கிண்டல் பண்ணாதீங்க.. நிஜமா தான் சொல்றேன்.. அப்படியும் நம்ம யோசிக்கணும்ல”
“நீ எங்கடி இவ்ளோ நேரம் என்ன யோசிக்க விட்ட”
“அதான் சொல்றேன்ல.. அப்போ ஏதோ மாதிரி இருந்தது சொன்னேன்.. நீங்க ஒன்னு சொன்னிங்கள்ல திருடன் ஏமாத்தறவன்லாம் நல்லா இருக்கான்னு. இப்போ இல்லனாலும் எப்போவது அதுக்கான தண்டனைய அனுபவிச்சு தான் ஆகணும்.. நம்ல மீறி கண்டிப்பா ஒரு சக்தி இருக்கு”
“கோவத்துல வந்துடுச்சு.. நீ சொல்றதும் கரெக்ட் தான்.. காலத்துக்குன்னு ஒரு சக்தி இருக்குல்ல அது பாத்துக்கும்.. நமக்கு கஷ்டம் தான் இருந்தாலும் அதே கடவுள் தான் நல்ல வேலைய குடுத்துருக்காரு”
“ஆமாங்க.. அதே மாதிரி அம்மா அப்பாக்கு உடம்பு கெடுதேன்னு ஒரு புறம் யோசிச்சா அம்மா அப்பா இல்லாம இருக்காங்களே.. நம்ம அதுக்கு எவ்வளவோ பரவால்லன்னு தோணுது..”
“சரி தான் கயல்.. இப்போல்லாம் இப்படி குடும்பமா வாழ்றதே வரம் தான். அதே நேரத்துல கண் திருஷ்டியும் இருக்கு”
“அதுக்கும் நம்ம என்னங்க பண்றது.. இப்போ இருக்க இணைய உலகத்துல நம்ம என்ன பன்றோம் எப்படி இருக்கோம்னு நம்ல மீறி எல்லாருக்கும் தெரிவிக்கிறோமே”
“அப்படித்தான் இருக்கோம்.. அதுல அளவா இருக்கணும். பகிராமையும் இருக்க முடியாது. ஊரோடு ஒத்துப்போனும். சவால்கள் நிறைய இருக்கு எல்லாத்தையும் சமாளிச்சு வர்றது தான வாழ்க்கை”
“சமாளிப்போம்.. இல்லன்னா வாழ்க்கையும் போரடிச்சிடும்.. எதப் பத்தி பேசுவோம். பிரச்சனைகள் இருக்குணும். பாத்துக்கலாம்ங்க”
“போராடுவோம் எல்லா பிரச்சனையும் எதிர்த்து. எல்லாத்துக்கும் காரணம் தேடக்கூடாது. ஆனாலும் காரணம் இருக்கும்ன்னு நம்பனும்”
தன் கணவன் பேசுவதை கண் அயராமல் கேட்டுக்கொண்டிருந்தாள் கயல். அவள் கண்களில் சற்று நம்பிக்கை அதிகரித்திருந்தது.
“நாளைக்கி ஆபீஸ் சீக்கிரம் போனும்னு சொன்னேன்ல.. தூங்கலாமா”
கணவனின் கேள்விக்கு தலை அசைப்பில் பதில் கூறிவிட்டு அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு நிம்மதியாக உறங்கினாள் கயல். இப்பொழுது இரவு ரம்மியாக இருந்தது இருவருக்கும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings