in ,

யார் கூப்பிட்டது…? (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காலையில் பக்கத்து ஊர் காளி கோவிலில், தூரத்து சொந்தக்காரர் ஒருத்தரின் வீட்டு மொட்டை போட்டு காது குத்தி, கிடா வெட்டும் விழா ஒன்று நடக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பே அழைப்பும் வந்துவிட்டது. கமலம் அங்கே போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். மருமகள் மல்லிகாவும் கூட விழாவுக்கு வரத் தயாராக இருந்தாள். ஆனால் குமார்தான் முதலில் இருந்தே தன்னால் வரமுடியாது என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அவனுக்கு இந்த கோவில் குலங்களுக்குப் போவதெல்லாம் பிடிப்பதேயில்லை.

கமலம் சொன்னாள், ‘ தம்பி… அவங்க நமக்கு மொய் எல்லாம் வச்சிருக்காங்கடா… நம்ம வீட்டுல பால் காய்ச்சினப்போ ஆயிரம் ரூபா மொய் வச்சாங்க… உன் கல்யாணத்துலயும் ரெண்டாயிரம் ரூபா மொய் வச்சிருக்காங்க… இத்தனை வருஷம் கழிச்சு இப்போதான் அவங்க வீட்டுலயும் ஒரு விசேஷம் நடக்குது. நாம போயி தலையைக் காட்டறதில்லையா… மொய்யை திருப்பிச் செய்யறதில்லையா… போகாம இருந்தா நல்லாவா இருக்கும்… ‘

‘ அம்மா… நான் என்ன உங்களைப் போகவேண்டாம்னா சொன்னேன்… தாராளமா போங்க. மொய் வையுங்க.  ஆனா, நான் வரலை… அவ்ளோதான்… ‘  என்றான் சற்றே எரிச்சலுடன்.

கமலம் குறுக்கிட்டாள்.  ‘ தம்பி, நாம வீட்டுல மூணு பேரு இருக்கோம். நாங்க ரெண்டு பேர் மட்டும் போனா எப்படிடா… நீயும் வந்தாதானே நல்லாயிருக்கும்… அதோட வீட்டுல கார் இருக்கு. எனக்கு ஓட்டத் தெரியுமா… இல்ல உன் பொண்டாட்டிக்குத்தான் நீ கார் ஓட்டக் கத்துக் குடுத்திருக்கியா… எங்களை மட்டும் போங்கன்றே… கேட்கறவங்களுக்கு நான் என்னத்தைச் சொல்ல. ‘

‘ கார் இல்லேனா என்ன… அவங்கதான் வண்டி வச்சிருக்காங்கலாமே… அதுல போயிட்டு வாங்க… திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டிருக்காதீங்க… ‘

எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டாள் கமலம். அவன் மசிந்து கொடுக்கவேயில்லை.

ராத்திரி தூங்கப் போனபொது கூட, மல்லிகா செல்லமாய் கடிந்துகொண்டாள், ‘ ஏங்க… நம்மக்கிட்ட கார் இருக்கும்போது நாம அதுல போறது எப்படி இருக்கும்… அதை விட்டுட்டு அவங்க வைச்சிருக்கற வண்டில போனா நல்லாவா இருக்கும். அதோட இப்படி கிடாவெட்டுக்கெல்லாம் லோடுவண்டிலதான் கூட்டமா போவாங்க. நாங்க அதுல போனா நல்லாவாயிருக்கும்…  நான் மாட்டேன்… ‘

‘ நீ போகலேனா விடு… அம்மா போகட்டும்… ‘ என்றான் சற்றே சலிப்புடன்.

‘ அவங்க மட்டுமா… ஆட்டு மந்தை மாதிரி கூட்டத்தோட கூட்டமா அவங்களை போகச் சொல்றீங்களா… உங்களுக்கு மனசாட்சி இருக்கா… ‘

‘ இந்தா… அம்மா மாதிரியே நீயும் தொனத்தொனன்னு பேசிட்டிருக்காதே… போங்க… போகாம இருங்க.. நான் வரலை… எனக்கு இஷ்டமில்லைனா விட்டுடனும்… ‘ என்றுவிட்டு திருப்பி படுத்துக்கொண்டான்.

இனி அவனை மசியவைக்க முடியாது என்று புரிந்துகொண்டு அத்துடன் அதை விட்டுவிட்டாள் அவள்.

ட்டென முழிப்புத் தட்டியது குமாருக்கு.  எழுந்து உட்கார்ந்தான். வெளியே ‘ சோ ’ வென சத்தம்.  மழை கொட்டுவது தெரிந்தது. மணியைப் பார்த்தான்.  மணி மூன்று.

சிறுநீர் கழித்துவிட்டு வரலாம் என்று எழுந்தான்.  வீட்டுக்குள் ஒரு கழிவறை உள்ளது. ஆனாலும் அவனுக்கு வெளியே கட்டியிருக்கும் புது கழிவறைக்குப் போவதுதான் ரொம்பவும் பிடிக்கும். இரண்டு மாதங்களுக்கு முன்னால்தான் அதைக் கட்டி முடித்திருந்தார்கள். குளியலறை ஒன்றும் கழிவறை ஒன்றுமாக காம்பவுண்டுக்குள்ளேயே ஒரு மூலையில் கட்டியிருந்தார்கள். சுற்றிலும் டைல்ஸ் பதித்து இந்தியன் மாடல் டாய்லட் வைத்து தரையிலும் டைல்ஸ் பதித்துக் கட்டியிருந்தார்கள்.

கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். மழையில் நனைந்துவிடுவோமோ என்று நினைத்துக்கொண்டு திரும்பிப் போய் நாற்காலியின் மேல் தொங்கிக்கொண்டிருந்த துண்டை எடுத்து தலையில் போட்டுக்கொண்டு மறுபடியும் வெளியே வந்தான்.

அப்போதுதான் நினைவு வந்தது, கழிவறைக்குண்டான ஸ்விட்ச்சை இங்கிருந்தே போட்டுவிட்டுத்தானே போகவேண்டும் என்று. இருளில் அங்கே போய் ஸ்விட்ச் எங்கே இருக்கிறது என்று தேடித் தடுமாறக் கூடாது என்பதற்காக வீட்டின் வெளிப்புற சுவரில் மெயின் கதவை ஒட்டி கைக்கெட்டும் உயரத்தில் ஸ்விட்சை வைத்திருந்தார்கள். அந்த ஸ்விட்சைப் போட்டுவிட்டு மறுபடியம் நடந்தான்.

மழை அதிகமாய் வருவது போல இருந்தது.  வாசலில் பாதிதூரம் நடந்ததும், ‘ தம்பீ… ‘ என்ற குரல் கேட்டது. எங்கிருந்து அந்த சத்தம் வந்தது என்று யோசித்தான். பிறகு வேறெங்கோ என்று நினைத்துக்கொண்டு மேலும் இரண்டு எட்டு எடுத்துவைத்தான். மறுபடியும் அதே சத்தம், ‘ தம்பீ இங்கே வா… ’ என்று சத்தம்.

இப்போதுதான் புரிந்தது வீட்டுக்குள்ளிருந்துதான் அந்த சத்தம் வந்தது என்று. அதுவும் அம்மாவின் குரல்தான் என்று புரிந்துகொண்டு, உடனே பதிலுக்கு ,  ‘ என்னம்மா… ‘ என்று குரல் கொடுத்துவிட்டு திரும்பி நடந்தான்.

கதவைப் பாதிமட்டும் திறந்துவைத்துவிட்டுப் போயிருந்ததால் இப்போது அதை முழுதாகத் திறந்தான். அப்போது பார்த்து திடீரென்று வெளியே பெருஞ்சத்தம்.

திடுக்கிட்டுத் திரும்பினான்.  ஏழெட்டு தேங்காய்கள் கீழே விழுந்து சிதறின. மழையின் காரணமாக விழுகின்றனவோ என்று நினைத்தபடி அண்ணார்ந்து பார்த்தான். இருட்டில்  சரியாகத் தெரியவில்லை.  கீழே மறுபடியும் பார்த்தான், மூன்று தென்னங்காய்களுடன் ஒரு அறுந்த குழை கீழே கிடக்க, பத்துப் பதினைந்து தேங்காய்கள் சுற்றிலும் சிதறிக் கிடந்தன.

அவைகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றும் முதலில் அம்மாவைப் பார்க்கலாம் என்றும் யோசித்துக்கொண்டே உள்ளே வந்தான்.

அம்மா கட்டிலில் படுத்திருந்தார்கள். மூஸ் மூஸ் என்று சத்தம் வேறு. நம்மைக் கூப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்குகிறார்களா என்று யோசித்தபடி அம்மாவை எழுப்பினான்.

திடுக்கிட்டு விழித்த கமலம், ‘ என்னடா தம்பி… ‘ என்றார்கள்.

விவரம் சொல்லிவிட்டு,  ‘ ரெண்டு தடவை கூப்பிட்டேம்மா நீ… வந்து பார்த்தா, தூங்கிட்டிருக்கே… ‘ என்றான்.

‘ நான் எங்கேடா கூப்பிட்டேன்… நல்லா அசந்து தூங்கிட்டிருக்கவளை எழுப்பி கூப்பிட்டியானு கேட்கறேயே… நான் என்னத்தைச் சொல்ல… ‘ என்றவள் திரும்பிப் படுத்துக்கொண்டு, ‘ கனவு கினவு கண்டு  உளர்றானோ… ‘ என்று முனுமுனுத்துக்கொண்டாள்.

இவன் திகைப்புடன் யோசித்துக்கொண்டே திரும்பினான்.

அம்மா கூப்பிடா விட்டால் வேறு யார் கூப்பிட்திருப்பார்கள். அம்மாவின் குரல் போலத்தானே இருந்தது. அவர்கள்தானே ‘தம்பி’ என்று கூப்பிடுவார்கள் என்று குழம்பியபடியே வெளியே வந்தான்.

மழை பெய்துகொண்டே இருந்தது. டாய்லெட்டில் லைட் எரிந்துகொண்டிருந்தது.  தெறித்து விழுந்து கிடந்த தேங்காய்களைப் பார்த்துக்கொண்டே அன்னார்ந்து மரங்களையும்  பார்த்துக்கொண்டான். 

அப்போதுதான் திகீர் என்றது.  

ஒருவேளை அம்மாவின் குரல் கேட்டு வீட்டுக்குள் திரும்பாமல் போயிருந்தால் அந்தத் தென்னங்குழை நம் தலையில் அல்லவா விழுந்திருக்கும்.

‘ ஐயோ… ‘ என்று கத்தியபடி சட்டென்று தலையில் கைவைத்துப் பார்த்துக்கொண்டான். நெஞ்சும் அடித்துக்கொண்டது. யோசித்துக்கொண்டே வேலை முடிந்து கதவைத் தாழிட்டுவிட்டு வெளியே வந்தவன், தேங்காய்களை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். ஸ்விட்சை ஆப் செய்துவிட்டு கதவைச் சாத்தி தாழிட்டுவிட்டு உள்ளே போய் படுத்தான்.

தூக்கம் வரவே இல்லை. மாறாக யோசனைத்தான் பலவாறாக ஓடிக்கொண்டே இருந்தது. ‘ அந்த குரல் மட்டும் வராவிட்டால், இந்நேரம் நமது கதி… கடவுளே… ‘ நெஞ்சு வேகமாய் அடித்துக்கொண்டது. யோசித்தான்… அம்மா கூப்பிடவில்லை என்றால் பிறகு யார் கூப்பிட்டது…? யோசித்தான்…யோசித்துக்கொண்டே இருந்தான்…!

தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தான். ஜன்னல் வழியே வந்த வெளிச்சம் விடிய ஆரம்பித்துவிட்டது என்று கட்டியம் கூறியது. மல்லிகாவைக் காணவில்லை. வெளியே போயிருப்பாள் என்று நினைத்துக் கொண்டான்.

அதே நேரம் உள்ளே வந்த அவள், ‘ என்னங்க… வெளியில பார்த்தீங்களா… ஒரு தென்னங்குழையே அறுந்து விழுந்து கிடக்கு… ராத்திரி செம மழை போல… ‘ என்றாள், வியப்புடன்.  

‘ ஆமா… ‘ என்றவன், தனக்கு நேர இருந்த கொடுமையை அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தபடியே அவளைப் பார்த்தான்.

‘ என்னங்க யோசனை… ‘ என்றாள் அவள்.

‘ ரெடியாகுங்க… காது குத்துக்கு நானும் வர்றேன்… கார்லேயே போகலாம்  ‘ என்றான் அவன்.

அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.

 அவனது மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்பது அவனுக்கு மட்டும்தானே தெரியும்… !!!

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாடகைப் பணம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    பளார்… (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு