எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலையில் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் முருகன். அப்போதுதான் திடீரென்று நினைவுக்கு வந்தவனாய் மனைவியைக் கூப்பிட்டான்.
‘ ஏன்டி… நேத்திக்கு வாடகைப் பணம் கொடுத்தேனே… ஓனர்கிட்ட கொடுத்தாச்சா… ‘
நேற்று அவன் பணத்தை கொடுத்துவிட்டு ஆபீஸ் போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அதை அப்படியே மகனிடம் கொடுத்து, ஓனரிடம் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லியிருந்தாள் வள்ளி. அதற்குப் பிறகு, அதை அப்படியே மறந்து போயிருந்தாள். இப்போது கணவன் திடீரென்று நினைவு படுத்தவும் சட்டென சுதாரித்துக் கொண்டு சொன்னாள்.
‘ நீங்க கொடுத்துட்டுப்போன உடனேயே தம்பிகிட்ட பணத்தைக் கொடுத்து ஓனர்கிட்ட கொடுக்கச்சொல்லி சொன்னேன்ங்க… அவன் கொடுத்திருப்பான்… இப்போ துணி அயன் பண்ண கொண்டு போயிருக்கான்… வந்ததும் கேட்டுட… நீங்க இப்போ ஆபீஸ்க்கு கிளம்புங்க, கவலைப் படாம… ‘
அவன் ஆபீஸ் கிளம்பியதும் மறுபடியும் அதை அப்படியே மறந்தே போனாள்.
துணி கொடுக்கப் போனவன், ஊரையெல்லாம் சுற்றிவிட்டு, சாவகாசமாய் வீட்டுக்குத் திரும்பினான். அவனைப் பார்த்தவுடன் ஞாபகம் வந்தவளாய், ‘ ஏன்டா… வாடகைப் பணம் கொடுத்தேனே… ஓனர்கிட்டே கொடுத்துட்டேதானே… ‘ என்று கேட்டாள்.
திகைத்து நின்றான் அவன். திடீரென்று என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.
நேற்று காலையில் அம்மா கொடுத்த பணத்துடன் ஓனர் வீட்டைத் தேடிப் போனான். அவரது வீடோ பூட்டியிருந்தது. யோசித்தபடியே பணத்தை வெளியே எடுத்தான். ஒரு ஸ்ட்ராங்கான பாலிதீன் கவருக்குள் பணத்தைப் போட்டு ஒரு துண்டுச் சீட்டில் ஓனரின் பெயரும் மொபைல் நம்பரும் எழுதி அக்டோபர் மாத வாடகை என்ற குறிப்பும் எழுதியிருந்தது. அப்பா எப்போதும் அப்படித்தான் கவருக்கும் பணத்தைப் போட்டு எழுதி கொடுப்பார்.
யோசித்தான், ஓனருக்கு போன் போட்டு எங்கே போயிருக்கிறார்கள் என்று கேட்கலாமா, என்று… !
உடனே மறுயோசனை உண்டானது, ‘ அவரென்ன, வெளிதேசமா போயிருக்கப் போகிறார், எங்காவது வெளியே போயிருப்பார், திரும்பி வரத்தான் போகிறார். நாம் பிரெண்ட்ஸ்களை போய் பார்த்துவிட்டு திரும்பி வந்து கொடுத்துவிட்டால் ஆயிற்று… ‘ என்று யோசித்துக்கொண்டு கிளம்பிவிட்டான். ஆனால் அம்மாவிடம் அந்த விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டான்.
இப்போது அம்மா கேட்டதும் முதலில் திகைத்து நின்றாலும் சட்டென சுதாரித்துக்கொண்டு, ‘ கொடுத்தாச்சும்மா… ‘ என்று சட்டென பதில் சொல்லிவிட்டு அவசரமாய் உள்ளே போய் விட்டான். சமாளிப்புத் திலகம் ஆயிற்றே அவன். விட்டுவிடுவானா.
‘அது… இது…‘ என்று இழுத்தால் அம்மா லேசில் விடமாட்டார்கள். ஓனர் இல்லாததால் அப்புறம் வந்து கொடுத்துக் கொள்ளலாம் என்று வந்தாகிவிட்டது. இருபத்து நான்கு மணி நேரம் தாண்டியும் விட்டது. ஒருவேளை ஓனர் ஃபோன் போட்டு இந்த மாத வாடகை இன்னும் வரவில்லையே என்று அப்பாவை கேட்டுவிட்டால் நமது நிலைமை என்னவாகும்… வந்ததும் நொங்கு எடுத்துவிட மாட்டாரா, அப்பா… ! இப்போது கவலை உண்டானது அவனுக்கு.
‘அதை விட அய்யாவுக்கு என்ன பெரிய கழற்ற வேலை…‘ என்பார் அப்பா. அதுதான் அவர் அடிக்கடி சொல்லும் டயலாக்கும் கூட..
உள்ளே ஓடியவன், பறபறவென பணத்தைத் தேட ஆரம்பித்தான். எல்லாம் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். கூடவே ஒரு துண்டுச்சீட்டு. அது மட்டும்தான் நினைவில் நிற்கிறது ஆனால், எங்கே வைத்தோம் என்பது மட்டும் நினைவில் இல்லை.
எப்போதும் வெளியே போய் விட்டு வீட்டுக்கு வந்தால் பர்ஸை எடுத்து புத்தக அலமாரியில் வைத்து விடுவான். இப்போது புத்தக அலமாரியில் தேடினான். பர்ஸ் மட்டுமே இருந்தது. பணத்தைக் காணவில்லை.
அதற்கப்புறம் மேஜை டிராயர், பேனா ஸ்டேண்டு என்று ஒரு இடம் விடாமல் தேடினான். பணம் மட்டும் கிடைக்கவே இல்லை.
மண்டையை சிலுப்பிக் கொண்டான். யோசித்தான். வெறுப்பாய் வந்தது.
பர்ஸை மூன்று முறை அப்படியும் இப்படியும் சாய்த்து நிமிர்த்தி பார்த்தாகிவிட்டது. எல்லா இடங்களிலும் தேடியாகியும்விட்டது.
இதை அம்மாவிடம் சொன்னால் மொத்தாமல் விடமாட்டார்கள். ஏற்கனவே பணத்தை ஓனரிடம் கொடுத்தாகிவிட்டது என்று வேறு சொல்லிவிட்டான். அவளும் நம்பிவிட்டாள்.
‘ அதை அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கொள்ள வேண்டியதுதான் !‘
தேதியோ ஏழு. ஐந்தாம் தேதிக்குள் வாடகை போயாகவேண்டும் ! இரண்டு நாட்கள் கூடப் போய்விட்டது.
ஏன் வாடகை வரவில்லை என்று அவர் அப்பாவுக்கு ஃபோன் போட்டுக் கேட்டு நம்மை சிக்கலில் மாட்டிவிட்டால்… ஐயோ, நம் கதி அதோ கதிதான் !.
‘ ச்சே… எப்படியாவது கிடைச்சுடுச்சுடுச்சுன்னா அம்மாக்கிட்ட சொல்லாம அப்படியே ஓடிப்போய் ஓனர்கிட்ட கொடுத்துட்டு வந்துடலாமே… ‘
இப்படி பலவாராக யோசித்தான்.
மறுபடியும் தேட ஆரம்பித்தான். பணம் மட்டும் கிடைத்தபாடாக இல்லை. உள்ளுக்குள் புழுங்கினான்.
நெஞ்சு அடித்துக் கொண்டது. சுளையாக ஐந்தாயிரம் ஆயிற்றே.
நல்லவேளையாக அம்மா அதைப் பற்றி மறுபடியும் கேட்கவில்லை. மதியம் சாப்பிட்டான். அந்த நேரம் பார்த்து அயன்காரர் ஃபோன் செய்தார்.
‘ தம்பி… மத்தியானத்துக்குள்ளே துணி வேணும்னு கேட்டீங்க இல்லே… எல்லாம் தேய்ச்சு வச்சுட்டேன்… வந்து எடுத்துட்டுப் போறீங்களா… ‘
மதியமே வேண்டும் என்றால் சாயங்காலம்தான் கொடுப்பார். சாயங்காலம் கொடுங்கள் என்றால் மறுநாள்தான் கொடுப்பார். அவரது பழக்கம் அப்படி.
அதனால்தான், ’ வெளியூர் போகிற வேலை இருக்கிறது, மதியத்துக்கு முன்னேயே கொடுத்துவிடுங்கள்… ‘ என்று அழுத்திச் சொல்லிவிட்டு வந்திருந்தான், அவன்.
ஓனர் தனது வீட்டை ஒட்டி நான்கு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அயன்காரரின் கடையும் அதில் ஒன்று.
இப்போது துணி வாங்கப் போய், ஓனரின் கண்ணில் பட்டுவிட்டால், ஒருவேளை அவர், ‘எங்கே தம்பி… உங்கப்பா வாடகை பணம் தரலை… ‘ என்று கேட்டுவிட்டால் நாம் என்ன பதில் சொல்லுவது… குழம்பினான்.
மறுபடியும் பணத்தைத் தேடலாம் என்று தேடினான்.
‘ எத்தனை தடவைதான் தேடுவது… எங்கே வைத்தோமோ அல்லது தொலைத்தோமோ… ‘
‘ நேற்றைக்கே அவர் இல்லை என்றதும் திரும்பி வருகிற வழியில் தவறவிட்டு விட்டோமா…’
‘ பேண்ட்டின் பெல்ட் பாக்கேட்டில்தானே செருகினோம்… ‘
‘ பெல்ட் பாக்கெட்டுக்குள் திணிப்பதாக நினைத்துக்கொண்டு பேண்ட்டுக்கும் இடுப்புக்கும் இடையில் செருகிவிட்டோமா… அப்படியென்றால் அது மெல்ல மெல்ல நழுவி ரோடில் அல்லவா விழுந்திருக்கும்… கடவுளே… எவன் கையில் சிக்கியதோ… ‘
அம்மா குறுக்கிட்டாள்.
‘ யாருடா போன்ல… ‘
‘ இஸ்த்ரி காரர்மா… துணி ரெடியாம்… வந்து வாங்கிக்கச் சொன்னார்… ‘
‘ அப்புறம் என்ன யோசனை அய்யாவுக்கு… போய் வாங்கிட்டு வந்துட வேண்டியதுதானே… ‘
சுலபமாகச் சொல்லிவிட்டாள் அம்மா. நமது கஷ்டம் நமக்குத்த்தானே தெரியும். போகும்போது ஓனர் பார்த்துவிட்டால்…? அது மட்டுமா… சாயங்காலம் அப்பா வந்து மறுபடியும் கேட்டுவிட்டால்.
மறுபடியும் தேடினான். நேரம் ஆக ஆக அம்மா நினைவு படுத்தினாள்.
‘ ஏன்டா, போகலையாடா துணி வாங்க… ‘
‘ தோ போறேம்மா… ‘ என்றபடி மொபெட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
இவன் அந்த காம்ப்ளெக்ஸை நெருங்கும்போது ஓனர் வாசலில் நாற்காலி போட்டு உக்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டான். அவரது கண்ணில் படக்கூடாது என்பதற்காக தூரத்திலேயே மொபெட்டை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றாமல் அயங்கடை நோக்கி நடந்தான்.
அவனது கெட்ட காலம், அவரும் அவனைப் பார்த்துவிட்டு புன்னகைத்தார்.
‘கடவுளே… நம்மை கூப்பிடப் போகிறார்… பணத்தைக் கேட்கப் போகிறார்… என்ன பதில் சொல்லுவது… ‘
நெஞ்சு அடித்துக் கொண்டது, அவனுக்கு… !
அவன் நினைத்தது நடந்தும் விட்டது.
இங்கே வா… என்பது போல சைகை செய்தார். பதட்டமும் தயக்கமுமாய் அவரை நெருங்கினான்.
குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னார், ‘அப்பாக்கிட்டே சொல்லு… இந்தமாதிரி துணி அயன் பண்றவன்கிட்ட எல்லாம் வாடகைப் பணத்தைக் கொடுத்தனுப்ப வேண்டாம்னு… சரியா… ‘ என்றார்.
புரியவில்லை அவனுக்கு. ஆனால் தலையை ஆட்டி வைத்தான்.
அயன்கடைக்குள் வந்ததும் அயன்காரர் சொன்னார், ‘தம்பி அயன் பண்ணும்போது பேண்ட் பக்கெட்டுல முட்டிக்கிட்டு நின்னது. எடுத்து பார்த்தா வாடகைப் பணம். நம்ம அய்யாவுக்கு சேரவேண்டியதல்லவா. அதான், உடனே கொண்டு போய் கொடுத்துட்டேன்… இனிமே பேண்ட்பாக்கெட்டுல பணத்தை வைச்சு துவைக்காதீங்க… நல்லவேளை பணம் நனையலை… ‘ சிரித்தபடி சொன்னார்…
இவன்தான் சிலைபோல அப்படியே நின்றிருந்தான்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings