எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தலை முதல் தாடி வரை நரைத்து அறுபதுக்கும் மேல் வயதான தோற்றம். என்னை பார்த்தபடி அப்படியே நின்றிருந்தார்.
பால் வாங்க கடைக்கு போகும்போதுதான் அவரைப் பார்த்தேன். எதிரே வந்து கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் நின்றார். கையில் அரிவாள் வைத்திருந்தார்.
நானோ அந்த ஊருக்கு வந்து இரண்டு நாள்தான் ஆகிறது. அவரை அப்போதுதான் பார்க்கிறேன். ஏதும் பேசாமல் மேலே நடந்தேன். எதற்கும் ஒருதடவை திரும்பி பார்க்கலாமென்று திரும்பினேன். அவர் அங்கேயே என்னைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.
பால் பூத்தில் இருந்து பாலை வாங்கிக் கொண்டு திரும்பினேன். அவர் அப்படியேதான் நின்று கொண்டிருந்தார்.
என்ன வேண்டுமென்று விசாரிப்போமே என்று, ‘பெரியவரே, நீங்க யாரு. நான் போகும் போது என்னை பார்த்துட்டு நின்னீங்க. இப்பவும் அப்படியே நிற்கிறீங்களே… ‘ என்றேன்.
திடீரென்று அவரது கண்கள் குளமாகின. சிலநொடிகளில் மூக்கை உறிஞ்சுக் கொண்டு ‘தப்பா எடுத்துக்காதீங்க தம்பி.. நீங்க யாரோ என்னவோ, உங்களைப் பார்த்தவுடனே என் புள்ளை ஞாபகம் வந்துச்சு. என் புள்ளை அச்சு அசலா உங்கமாதிரியே தான் இருப்பான். நேத்திக்கும் உங்களை இதே இடத்துல பார்த்தேன். ஆனா எப்படி பேசறதுன்னு யோசிச்சு விட்டுட்டேன்… தப்பா எடுத்துக்காதீங்க ’ சொல்லிக் கொண்டே கண்களை துடைத்துக் கொண்டார்.
எனக்கு என்ன சொல்வெதென்று தெரியவில்லை. ஆனாலும் சமாளித்தபடி, ‘ சரி… உங்க பையன் வயசு என்ன இருக்கும், எங்க இருக்கார்… நீங்க எந்த ஊரு…’ என்றேன்.
கொஞ்சம் நிதானித்து பிறகு சொன்னார். ‘ தம்பி நாங்க இதே ஊர்லதான் முப்பது நாப்பது வருஷமா இருக்கோம். இங்கேதான் எம்.ஜி.ஆர்.நகர்ல இருக்கோம். சிலம்பம் வாத்தியார்னா எல்லாத்துக்கும் என்னைத் தெரியும். நான் ஞாயித்துக்கிழமைகள்ல சிலம்பம் கத்துக் குடுப்பேன், காசு வாங்கறதில்லை. மத்த நாள்ல வீடுகள்ல தோட்டம் தொறவு சுத்தம் பண்ணுவேன். என் சம்சாரம் வீடுகள்ல வேலை பண்ணுவா. பணம் கொடுப்பாங்க. என் புள்ளை இங்கேதான் பொறந்தான். படிப்பு ஏறலை. ஆட்டோ ஓட்டினான். ஒரு நாள் லாரில அடிபட்டு அந்த இடத்துலேயே செத்துப் போய்ட்டான்… ’ சட்டென நிறுத்தியவரின் கண்கள் திரும்பவும் குளமாகின.
இப்போதுதான் எனக்குப் புரிந்தது, ஏன் அவர் என்னையே பார்த்தார், கண்ணும் கலங்கினார் என்று.
‘கட்சி ஆளுங்க பஞ்சாயத்து பண்ணி கடைசில பத்தாயிரம் வாங்கிக் குடுத்தாங்க. ஆட்டோ நசுங்கி ஒண்ணுக்கும் உதவாம போச்சு. மன்னிச்சுக்க தம்பி. எங்க சோகக் கதையை சொல்லி உங்க நேரத்த வீணடிச்சிட்டேன். நீங்க கிளம்புங்க தம்பி ‘ என்றவர் தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டு,
‘இன்னும் ரெண்டு மூணு நாள்ல எம் புள்ளையோட திதி வருது.. நீங்களும் அச்சு அசல் எம்புள்ளை மாதிரியே இருக்கவும் மனசுக்குள்ள ஒரு நைப்பாசை, உங்களோட பேசணும்னு…. நான் வர்றேன்..’ என்று சொல்லிக்கொண்டே அவர் நடக்க, நானும் கூடவே நடந்தேன். நடந்து கொண்டிருந்தவர் சட்டென நின்றார். காசு பணம் ஏதும் கேட்பாரோ என்று ஒரு நிமிடம் என் உள்மனம் சொல்லியது.
‘கோவிச்சுக்காம எங்க குடிசை வரைக்கும் வந்து என் சம்சாரத்துக்கிட்ட உங்க முகத்தை ஒருமுறை காட்டுங்க தம்பி. நேத்தே உங்களை பாத்ததை பத்தி அவகிட்ட சொன்னேன். ஏன் ஊட்டுக்கு கூட்டிவரலைன்னு கோவிச்சுக்கிட்டா ‘ என்று சொல்லி நிறுத்தினார்.
பாவம் ஆசைப்படுகிறார். போவோமே என்று எண்ணியபடி. ‘ சரி உங்க வீடு எங்கேனு சரியா சொன்னீங்கனா தேடிபிடிச்சு வந்துடறேன் ‘ என்றேன்.
‘தேடலாம் வேண்டாம் தம்பி.. இப்படியே நேரா போயி வலது எடுத்தா ஒரு அம்மா உணவகம் வரும். அதுகிட்ட இடது திரும்பினா ஒரு காளிக்கோவில் வரும். அதுலேர்ந்து மூணாவது வீடுதான் தம்பி எங்களோடது. குடிசைதான். சிலம்ப வாத்தியார்னு யாரைக் கேட்டாலும் நம்ப குடிசையில கொண்டு வந்து விட்டிடுவாங்க, தம்பி ‘ என்றார்.
சரி எதற்கும் ஆகட்டுமே என்று ‘ உங்க செல்போன் நம்பர் குடுங்க ‘ என்று கேட்டேன். அந்த சோகத்திலும் சிரித்துக் கொண்டே சொன்னார்.
‘அந்த எளவுதான் தம்பி என் புள்ளை உசிரையே குடிச்சுது. செல்லு பேசிக்கிட்டே போயித் தானே லாரில அடிபட்டு நசுங்கி செத்தான். நானும் அந்த எழவை தொடறது கூட கிடையாது தம்பி… நாங்க அன்னாடம் காய்ச்சிங்க. எங்களுக்கு எதுக்கு அது… காளியம்மன் கொவிலாண்ட வந்து கேட்டீங்கனா யாருவேனாலும் சொல்லுவாங்க தம்பி…‘ என்று சொல்லி நிறுத்தியவர் ‘ தம்பி உங்க பேரை நான் கேட்கலையே ‘ என்றார்.
‘ என் பேர் சேகர். ஒரு ட்ரான்ஸ்போர்ட் கம்பெனில வேல பண்றேன். கோயம்பத்தூர்லதான் வேலை பண்ணிக்கிட்டிருந்தேன். இங்கே ஒரு ஆபீஸ் திறந்து என்னை இன்சார்ஜா போட்டுருக்காங்க. நேத்திக்கு முந்தினநாள்தான் இங்கே வந்தோம் ‘ என்றேன்.
‘ தம்பி என் பேரு மாரியப்பன். மாரினு கூப்பிடுவாங்க… சரி வாங்க தம்பி ’ என்று சொல்லி கையெடுத்து கும்பிட்டார்.
‘ ஐயையே, நீங்க வயசுல பெரியவங்க… இப்படி பண்ணாதீங்க ‘ என்றேன்.
கண்கள் கலங்கியபடி போய்விட்டார்.
வீட்டிற்கு போய் என் மனைவியிடம் நடந்ததை அப்படியே சொன்னேன். கேட்டுவிட்டு ஆச்சரியப்பட்டு போனாள் அவள். தானும் வருவதாக சொன்னாள்.
சாயங்காலம் மொபெட்டில் பானுவையும் கூட்டிக் கொண்டு போனேன். காளியம்மன் கோவில் அருகில் போனபிறகு, ஒரு பையனிடம் விசாரிக்க, அவன் பெரியவரின் குடிசையை அடையாளம் காட்டினான். போய் கதவைத் தட்டினேன். பழைய கதவு என்பதால் எப்போது விழுமோ என்பது போல ஆடியது. ஒரு பெரியம்மா கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்துவிட்டு, என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு ‘ஓ’வென அழுதார். நான் செய்வதறியாது நின்றேன். என் மனைவி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எங்கிருந்தோ வந்து சேர்ந்த பெரியவர் ‘அடக்கழுதை… பாவம் அவரை விடு. ஏதோ நம்ம புள்ளை மாதிரி இருக்காரே, நீ பாத்தா சந்தோசப்படுயவியேனு வரச்சொன்னா நீ அவரைக் கட்டிபிடிச்சுக்கிட்டு ஒப்பாரி வைக்கிறியே..‘ என்றவர், ‘எட்டு வருஷம் தவமிருந்து பெத்தபுள்ளையாச்சா. அதான் கண்கலங்கிட்டா…‘ என்றுவிட்டு, ‘பாருங்க உங்ளுக்கு எடுத்து போடக்கூட ஒரு சேர் இல்லை…‘ என்று புலம்பினார். ஆனாலும் அங்கே இருந்த ஒரு பாயைத் தட்டி விரித்தார். உட்கார்ந்தோம்.
அங்கே சுவரில் மாட்டியிருந்த ஃபோட்டோவைப் பார்த்தேன். என்னையே பார்ப்பது போலவே இருந்தது. ஆனால் கொஞ்சம் அதிகமாய் தாடி மீசை, பெரியவரைப் போலவே இருந்தார். இவர்கள் என்னை பார்த்து பிரமித்து போனதில் ஆச்சரியம் இல்லைதான் என்று அப்போதுதான் புரிந்தது. அவசரம் அவசரமாய் டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார் பெரியம்மா. டீ குடித்தபடி பேசிக்கொண்டிருந்துவிட்டு, கொஞ்சநேரத்தில் கிளம்பி விட்டோம்.
‘கோவிச்சுக்காதீங்க பெரியம்மா… நாங்க கிளம்பறோம்… நாங்க இன்னொருதடவை வர்றோம்..’ என்றேன்.
‘தம்பி வர்ற ஞாயித்துக்கிழமை என் புள்ளையோட திதி… முடிஞ்சா காலைல கொஞ்சம் வந்திட்டு போங்க தம்பி… ‘ என்றார் பெரியவர். அந்த அம்மாவும் ஆமாம் என்றார்கள்.
கிளம்பும்போது அவரது சட்டைப் பையில் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களைத் திணித்தேன். அதை கொஞ்சமும் எதிர்பாராதவர் தடுத்து, ‘தம்பி காசு பணமெல்லாம் எதுக்கு தம்பி ‘ என்றார்.
பாட்டி குறுக்கே வந்து ‘தம்பி, என் வூட்டுக்காரர் சொன்னத கேட்டு எங்களையும் மதிச்சு வந்தீங்களே. அதுவே பெரிய உபகாரம் தம்பி. காசு பணம் என்னாத்துக்கு… ஏதோ கடவுள் புண்ணியத்துல நிக்காம எங்க அடுப்பு எரியுது. ‘ என்றார்.
பெரியவர் பணத்தை பிடுங்கி அவரே என் பாக்கெட்டில் திணித்தார். என்ன நினைத்தாரோ பெரியம்மா, திரும்பவும் என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார். சிலகணங்கள் கழித்து தான் விட்டார். எனக்கு இன்னொரு அம்மா போல தெரிந்தார்.
வெளியே வந்தவர்கள் நாங்கள் வளைவில் திரும்பும்வரை நின்றிருந்தனர்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings