எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முன்கதை:
கனகா வேலைக்குப் போய்விட்டு திரும்பும் வழியில் தன் மகள் செல்விக்காக நான்கு வடைகள் வாங்கிக்கொண்டாள். வழியில் மகள் படிக்கும் பள்ளிக்கூடம் வந்தது. காம்பவுண்டு ஓரம் நின்றபடி மகள் ஏதும் கண்ணில் படுகிறாளா என்று கண்களால் தேடினாள். அப்போது பார்த்து ஒரு சிறு பெண் ஓடிவந்து தானும் காம்பவுண்டைத் தாண்டி பள்ளிக்கூடத்தை பார்த்தாள். கனகா அவளை உற்று நோக்கினாள்.
இனி:
களைந்த கேசம்., அழுக்குப் படிந்த முகம். கிழிந்த சட்டை. அதையும் திருப்பிப் போட்டிருந்தாள். ஒருமுறை நிமிர்ந்து கனகாவைப் பார்த்தாள். சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆனது போல குழி விழுந்த கண்கள். ஆனால் வெண்விழித்திரையில் கருவிழிகள் பளிச்சென தெரிந்தன.
அவளைப் பார்க்க பாவமாகவும் பரிதாபமாகவும் இருந்தது. வயிறு பசி எடுத்திருக்க வேண்டும். அதனால்தான் குழந்தைகள் சத்துணவு வாங்குவதை அப்படி பரவசத்துடன் பார்த்திருக்கிறாள் என்று இப்போது புரிந்தது கனகாவுக்கு.
சட்டென ஒரு யோசனை. மடியைத் தொட்டுப் பார்த்தாள். ‘ இவளிடம் ஒரு வடையை கொடுத்து சாப்பிடச் சொல்லலாமே… ‘ என்றெண்ணி மடியை விரித்து பொட்டலத்தை எடுத்தாள். கவரைப் பிரித்தாள். வடை வசானை குபீரென்று என்று கிளம்பியது. அந்த வாசனை அந்த சிறுமிக்கும் பரவியிருக்கவேண்டும். கண்கள் விரிய நிமிர்ந்து கனகாவையும் அவளது மடியையும் கையையும் கூட பார்த்தாள்.
‘ வடை சாப்பிடறீயா… ‘ என்றாள் கனகா. சட்டென கல்லை விட்டு கீழே இறங்கியவள் பரவசத்துடன் இடது கையை நீட்டினாள்.
‘ அய்யே… இதென்ன கெட்டப் பழக்கம். வலது கையை நீட்டு… ‘ என்றாள் கனகா. கொஞ்சம் யோசித்தபடியே இடது கையை கீழே இறக்கிக்கொண்டு அவசரமாய் வலது கையை உயர்த்தினாள்.
சிரித்துக் கொண்டே, ஒரு வடையை எடுத்து அவளது கையில் திணித்தாள். இன்னும் வடையில் சூடு தெரிந்தது. அவளுக்கும் உரைத்திருக்க வேண்டும். ‘ ஊ… ‘ என்று உதடுகளைக் குவித்தாள். சட்டென வடையை இடது கைக்கு மாற்றிக்கொண்டு, மறுபடியும் வலது கையை உயர்த்தினாள்.
திகைத்தாள் கனகா. ‘ ஓ… இவ்வளவு விவரமா நீ… ‘ என்று சொல்லி சிரித்துக்கொண்டே இன்னொரு வடையையும் எடுத்து அவளது கையில் திணித்தாள். இப்போது அவளது இரண்டு கைகளிலும் வடைகள். ஆனாலும் அவளது பார்வை கனகாவின் மடியை விட்டு அகலவில்லை. சிரித்துக் கொண்டாள் கனகா.
‘ அதான் ரெண்டு வடை கொடுத்தாச்சில்ல… போதும் போ…. ‘ என்றாள் கொஞ்சம் கண்டிப்புடன். வடைகளை இறுகப் பற்றியபடி மறுபடியும் எக்கி எக்கி காம்பவுண்டிற்கு உள்ளே பார்த்தாள். முடியவில்லை. என்ன நினைத்தாளோ, மடமடவென ஓட்டம் எடுத்தாள் அவள்.
சிரித்துக்கொண்டே திரும்பி நடந்தாள் கனகா. வீடு வந்தது. ‘ ச்சே… நாலு வடை வாங்கினோம்… இரண்டுதான் மிச்சம்… சரி… செல்விக்கு இது போதும்… ‘ என்று நினைத்துக்கொண்டே உள்ளே போனவளுக்கு, சட்டென, வேலைக்கு போகும்போது, பின்பக்கம் துணிகளைக் காயப் போட்டுவிட்டுப் போயிருந்தது நினைவுக்கு வந்தது. அடிக்கும் வெயிலில் அவைகள் அப்பளமாய் போயிருக்குமே என்று நினைத்தபடி ஓடிப்போய் அவைகளை கொடியில் இருந்து எடுத்து மடித்து துணி துவைக்கும் கல்லில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று, ‘ இங்கே என்ன பண்றே… ‘ என்று சத்தம். திடுக்கிட்டுத் திரும்பினாள். சங்கிலி நின்றுகொண்டிருந்தான். இவள், ‘ நீ எப்போ வந்தே… ‘ என்றாள். ‘ நீ வீட்டுக்குள்ளே நுழையும்போதே நானும் ஆட்டோவை நிறுத்திட்டு பின்னாலேயே வந்துட்டேனே. நீ கவனிக்கலையா… ‘ என்றான் சிரித்தபடி.
அவன் எதையோ தின்றுகொண்டிருந்தான். வடை வாசனையும் வந்தது. அவனது கையில் ஒரு வடைத் துண்டு இருந்ததையும் பார்த்துவிட்டாள். திடுக்கிட்டாள்.
‘ இந்தாயா… உன்னை யாருயா வடைய சாப்பிடச் சொன்னது… ‘ என்று சத்தம் போட்டாள்.
‘ ஏன்… மேஜை மேல இருந்துச்சு… பார்த்ததும் எடுத்து சாப்பிடத் தோணிச்சு… ஒன்னு எடுத்து பிய்ச்சு வாயிலப் போட்டுக்கிட்டேன்… ‘ சிரித்துக்கொண்டே கையிலிருந்த மீத வடையை, ‘ இந்தா… நீயும் ஒரு வாய் போட்டுக்கோ… ’ என்றபடி அவளிடம் சிறு துண்டை நீட்டினான்.
‘ செல்வி சாப்பிடுவாளேன்னு வாங்கிட்டு வந்தேன்… நீ எடுத்து தின்னுக்கிட்டிருக்கே… எருமை… எருமை… ‘ என்று சிணுங்கினாள். பிறகு, ‘ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருந்தாளேன்னுட்டு கடையிலேர்ந்து நாலு வடை வாங்கிட்டு வந்தேன்… வழீல ஒரு சின்னப் பொண்ணு நின்னிட்டிருந்தது. கண்ணெல்லாம் உள்ளுக்குள்ளே விழுந்து பார்க்கவே பாவமா இருந்திச்சு. சாப்பிட்டு போகட்டுமேன்னுட்டு அதுக்கிட்டே ரெண்டு கொடுத்துட்டேன்… ரெண்டை மட்டும் கொண்டுவந்து வச்சேன்… அதுல நீ கைவச்சிட்டே… ‘ என்றாள்.
‘ அதுக்கென்னா.. அதான் இன்னொன்னு மிச்சம் இருக்கே… ‘ என்றான்.
‘ நீ வந்ததும் சோத்தைத் திங்கவேண்டியதுதானே… வடை வேணுமோ அய்யாவுக்கு…. ‘ என்றாள்.
‘ சாப்பிட்டாச்சு… ‘ என்றான். அவன் வடையை சாப்பிட்டாச்சு என்றானா அல்லது சோத்தை வெளியில் சாப்பிட்டாச்சு என்றானா என்று புரியாமல் முழித்தாள்.
‘ ஒத்தை வடையை பார்த்து ஏங்கிப் போய்விடமாட்டாளா செல்வி… ‘ என்று யோசித்தவள், ‘ இந்தா… கையில எவ்வளவு காசு வச்சிருக்கே… ‘ என்றாள்.
‘ முன்னூறு ரூபா இருக்கு… ஏன்… ‘ என்றான்.
‘ போயி… அரை லிட்டர் கடலை எண்ணையும் கால்கிலோ கடலைப் பருப்பும் வாங்கிட்டு வா… ‘ என்றாள்.
‘ அடியேய்… சீட்டு கட்டற காசுடி இது… ‘ என்றான்.
‘ சீட்டு கட்டலைன்னா குடியா முழுகிடும்… மெல்ல கட்டிக்கலாம். பாவம், செல்வி வடை கேட்டு கேட்டு ஏங்கியே போய்ட்டா…. நீ வேற ஒரு வடைய எடுத்துத் தின்னுட்டே. இப்போ ஒத்த வடைய வச்சிக்கிட்டு என்னத்த பண்ணச் சொல்றே…. போய் சொன்னதை வாங்கிட்டு வா… ‘ என்றாள்.
உடனே கிளம்பிப் போய் அவள் அவள் கேட்டதை வாங்கிக்கொண்டு வேகமாய் திரும்பி வந்தான். உடனே அவள் வடைக்கு ஊறப் போட்டாள். சங்கிலி கிளம்பிவிட்டான்.
சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்த செல்வி, ‘ அம்மா… ‘ என்றபடி புயலாய் நுழைந்தாள். கண்களை அகல விரித்துக்கொண்டு, ’அம்மா வடைதானே சுடுறே… ‘ என்றாள்.
‘ அடியேய்… உள்ளே நுழையும்போதே உனக்கு மூக்கிலே வியர்த்து விட்டதோ… ‘ என்று சிரித்தாள் கனகா.
‘ வடை வாசனை ரோடு வரைக்கும் வருதேம்மா… ‘ என்று முகமலர்ந்தாள் அவள். ‘ சரி… ஒரு பத்து நிமிஷம் ஆகும்… நீ போயி முகம் கை கால் கழுவிட்டு வா… அப்புறமா தாரேன்… ‘ என்றாள் கனகா.
முகம் கைகால் கூட கழுவாமல் வெளியே ஓடிய செல்வி, யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘ எங்கம்மா வடை சுடுறாங்களே… ‘
( வடை முடிந்தது )
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings