2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘ நானே கறிவேப்பிலைக் கொத்தாட்டம் ஒத்தப்பில்லையை பெத்திருக்கேன்… ‘ என்று சொல்லிச் சொல்லியே செல்லப்பனை செல்லமாய் வளர்த்து வந்தாள் மாரியம்மாள். அதன் காரணமாக அவனுக்கு படிப்பும் மண்டைக்குள் ஏறவில்லை. சின்ன வகுப்பில் படிக்கும்போதில்ருந்தே பாதி நாள் பள்ளிக்கூடம் போகாமல் சுற்றித் திரிந்துவிட்டு வீட்டுக்கு வருவான்.
‘ என் கண்ணில்லே… என் செல்லமில்ல… நீ நல்லா படிக்கலைனா நாளைக்கு யார்கிட்டேயாவது ஒருவேளை ஆயிரம் ரூவா கடன்வாங்கினா பத்திரத்துல ஆயிரம் ரூபாய்க்கு பதிலா பத்தாயிரம்னு எழுதி வாங்கிடுவாய்ங்கப்பா… நீ தேமேனு கைநாட்டு வச்சிட்டு வந்துட்டு பின்னால அழுவே… போயி படிச்சுக்கோப்பா… ‘ என்று கெஞ்சுவாள் மாரியம்மாள்.
அவனோ அப்போதைக்கு தலையைத் தலையை ஆட்டுவான். ஆனால் பள்ளிக்கூடத்திற்கு போகாமல் சாயங்காலம் ஒரு கண்ணை இருக்க மூடிக்கொண்டு வந்து நிற்பான். ‘ ஏன்டா வாத்தியார் அடிச்சிட்டாரா… ‘ என்பாள் பரிவுடன்.
‘ இவன் படிக்கப் போனாத்தானே வாத்தியார் அடிப்பார்… இவன்தான் காசு வச்சு கோலிக்குண்டு ஆடி, கூட விளையாண்ட பையனோட மண்டையை உடைச்சிட்டானே…. அந்தப் பயல், அஞ்சு ரூபா கட்டையை நிமிர்த்தி வச்சி இவன் கண்ணுல குத்திட்டான்… எனக்கு கடை வரைக்கும் பிராது வந்திடுச்சு… நாந்தான் அவங்களை எல்லாம் சமாதானப் படுத்தி டாக்டர்கிட்டே போகறதுக்கு ஆயிரம் ரூபா அழுத்துட்டு வர்றேன்… இந்த சனியன்னால எனக்கு ஆயிரம் ரூபா நஷ்டம் இன்னிக்கு… ‘ என்று அவனது அப்பா மாணிக்கம் திட்டுவார்.
‘ புள்ளைய திட்டாதீங்க… அவனுங்க அடிச்சிருப்பானுங்க… இவன் திருப்பி அடிச்சிருப்பான்… ‘ என்று அவனுக்கு சப்போர்ட் செய்வாள் அவள்.
‘ எல்லாம் நீ குடுக்கற செல்லம்தான்… ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு போயிருந்தா சண்டையே வந்திருக்காதில்லையா… இந்தத் தடவை மட்டும் பெயிலாகட்டும்… பத்து பன்னிகளை வாங்கி மேய்க்க விட்டுடறேன்… படவா ராஷ்கல்… ‘ என்று முழிகளை உருட்டுவார். அவனோ கொஞ்சமும் பயப்பாடாமல் உதட்டை சிலுப்பிக்கொண்டு அம்மாவிடம் போய் சோறு போடச் சொல்வான்.
‘ ஆமா சோத்துக்குப் பதிலா சாணத்தைக் கரைச்சு ஊற்று குடிக்கட்டும். சோறு திங்கணும்னா அரிசி வேணும்… உப்பு வேணும்… புளி வேணும்… பருப்பு வேணும்… எண்ணைய் வேணும்… இதெல்லாம் சும்மா வருமா… படிச்சாதானே நாளைக்கு வேலை வெட்டிக்குப் போகலாம்… நாலு காசு சம்பாதிக்கலாம்…. வீட்டுக்கு அரிசி பருப்புன்னு வாங்கலாம், நாக்குக்கு ருசியா திங்கலாம்… ஊருக்குள்ள வெள்ளையும் சொள்ளையுமா அலையலாம்… இவனை இப்படியே செல்லம் கொடுத்து வளர்… ஒரு நாளைக்கு உன்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தப் போறான் பார்…. நடுத்தெருவுல நிக்கும்போதுதான் நான் திட்டறது புரியும்… ‘ என்று அவர் கடைசியில் மனைவிமேல் திருப்புவார் அத்தனை கோபத்தையும்.
அவர் சொல்வதையெல்லாம் மகன்மேல் அவள் வைத்திருக்கும் பாசம் மறைத்துவிடும். பழைய சோற்றைப் போட்டு நார்த்தங்காய் ஊறுகாயை வைப்பாள்…. ‘ நீ தின்னுடா செல்லம்… நாளைக்கு நேரா ஸ்கூலுக்கு போ… விளையாட்டெல்லாம் இப்போ வேணாம்… படிச்சு பெரிய ஆளாகனும் சரியா ‘ என்பாள். அவன் ஊறுகாயை கடித்துக்கொண்டு ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருப்பான். இந்தக் கூத்துதான் அடிக்கடி நடக்கும்.
xxxxxx
சாமான் வாங்க காசு கொடுத்தனுப்பினால் மிச்சம் மீதி என்று எதுவுமே திரும்பி வராது. கேட்டால் ‘ அது சரியாப் போச்சுமா…’ என்பான். ஆனால் பல் கூச கூச புளிப்பு மிட்டாய் வாங்கித் தின்றுவிட்டு ‘ உஷ் உஷ்‘ என்று பற்களைக் காட்டுவான்.
‘ ஆறு வயசுலேயே பல்லெல்லாம் சொத்தை… நல்லா மிட்டாயா வாங்கித் தின்னச் சொல்லு உன் புள்ளையை…. ‘ என்று திட்டுவார் மாணிக்கம். பக்கத்து வீடுகளில் பணம் கொடுத்து சாமான் வாங்கி வரச் சொன்னாலும் அதே கதைதான். ஏன்டா இவனிடம் பணம் கொடுத்து கடைக்கு அனுப்பினோம் என்று தலையில் அடித்துக் கொள்வார்கள் அவர்கள்.
ஒருநாள் பக்கத்து வீட்டுக்காரம்மாள் ஒரு பேப்பரை தூக்கிக்கொண்டு ஓடிவந்தாள். மாரியம்மாளைப் பார்த்து ‘ எங்கே உன் தறுதலைப் புள்ளை… ‘ என்றாள் முழிகளை உருட்டியபடி. பதறிப்போய் விசாரித்தபோதுதான் தெரியவந்தது, அவனுடன் எட்டாவது படிக்கும் அவளது பெண்ணுக்கு இவன் லவ் லெட்டர் குடுத்திருக்கிறான் என்று.
‘ ஏன்டா இப்படி என் மானத்தை வாங்கறே…’ என்று இவள் ஒரு குச்சியை தூக்கிக்கொண்டு அடிப்பது போலவே ஓடினாள். அவனோ பறந்து நெளிந்து நெளிந்து ஓடினான்.
‘ ஆமா… இந்த வயசுல அவன் லவ்லட்டர் கொடுத்தது தப்பில்லை…உன் மானம் போறதுதான் பெரிசு…. ஹூம்… ‘ என்று திட்டினார் மாணிக்கம்.
முழு ஆண்டு பரீட்சை முடிந்து எட்டாவது ரிசல்ட் வந்தது. அவன் எல்லா பாடத்திலும் பெயில். அவனை அடிப்பதற்காகவே மாணிக்கம் ஒரு மூங்கில் குச்சியை வைத்திருப்பார். அதைத் தேடி ஓடினார். கிடைக்கவே இல்லை. அவருக்குத் தெரியாது முன்கூட்டியே அவன் அதை எடுத்து ஒளித்து வைத்துவிட்டான் என்று.
‘ குச்சி இல்லாட்டிமட்டும் விட்டுடுவேனா ‘ என்றபடி ஓட முற்பட்ட அவனை இழுத்துப் பிடித்து முதுகிலேயே குத்து குத்து என்று குத்திவிட்டார்.
‘ நீ எட்டாவது எத்தனை வருஷம் படிக்கறதா உத்தேசித்திருக்கியோ தெரியாது. ஆனா பத்து பன்னிக்குட்டிகளை வாங்கிவந்துடறேன்… ஒழுங்கா மேயி… அது ஊர்லே நாறிக்கிட்டிருக்கறதையெல்லாம் தின்னும்…. நீயும் சேர்ந்து தின்னு… அப்போதான் உனக்கும் புத்தி வரும்… ‘ சொல்லிகொண்டே அவர் அடித்தார். அவனோ அந்த அடியை வாங்கிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல நெளித்துக் கொடுத்தான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings