2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
முன்பகுதிச் சுருக்கம்
செல்லப்பனை ரொம்பவும் செல்லமாய் வளர்த்து வந்தாள் மாரியம்மாள். அவன் ஒழுங்காக படிக்கவில்லை. வீட்டிலும் அடங்கிவில்லை. பக்கத்து வீட்டு பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தான். ரிசல்ட் வந்தபோது எல்லா பாடத்திலும் அவன் பெயில்.
இனி
எல்லா பையன்களும் பக்கத்து ஊருக்கு ஒன்பதாவது படிக்கப் போனார்கள். இவன் மட்டும் போகவில்லை.
‘ நான் பள்ளிக்கூடத்துக்கு போகலை… பொட்டைப் புள்ளைகள் என்னைப் பார்த்தா சிரிக்கும்… ’ என்றான். ‘ ஆமா நீயுந்தான் எத்தனை வருஷத்துக்கு ஒரே வாத்தியார்கிட்டே படிப்பே… ஒழுங்கா கடைக்கு வா… வந்து குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யி… அப்போதான் பணம் சம்பாதிக்கறது எவ்வளவு கஷ்டம்னு புரியும்… ‘ என்றார் மாணிக்கம்.
அவர் ஊருக்குள் சிமென்ட் கடை வைத்திருக்கிறார். மூன்று பேர் வேலை செய்கிறார்கள். ஒரு புல்லட் வைத்திருக்கிறார், ஒரு டெம்போ வைத்திருக்கிறார்… எல்லாம் சொந்த சம்பாத்தியத்தில்.
‘ நான் மெட்ராஸ்க்கு போறேன்…’ என்றான் ஒருநாள்.
‘ ஆமா… இவர் கலக்டருக்கு படிச்சிருக்கார்… போயி நேரா வேலைல சேரப் போறார்… ஒழுங்கா வந்து கடையில வேலை பார்டா உதவாக்கறை… ’ என்று திட்டினார் மாணிக்கம். மறுநாள் அவன் வீட்டிலேயே இல்லை. அங்கே இங்கே தேடினார்கள். அவனது புத்தகப் பைக்குள் இருந்து ஒரு லட்டரை கண்டுபிடித்தார்கள்.
‘ நான் சென்னைக்குப் போறேன்…தேடாதீங்க… ‘
சிலமாதங்கள் கழித்து ஒருநாள் அவரது மொபைலுக்கு கால் வந்தது. ‘ நான் ஒரு பெயின்ட் கடைல வேலை பாக்கறேன்ம்மா… ‘
கூப்பிட்டது அப்பாவின் போனில். பேசியது அம்மாவுக்கு. அவர் உடனே கேட்டார், ‘ எருமை… சொல்லாம கொள்ளாம ஏன்டா ஓடுனே.. சரி சரி… அட்ரஸ் அனுப்பு…’
‘ மெட்ராஸ்ல பல்லாவரம்… மூவாயிரம் சம்பளம்…பத்து பசங்க வேலை பார்க்கறானுங்க…. கடை மாடியில எல்லாரும் தங்கிக்கறோம்… ஓனர் வர்றார்… நான் அப்புறம் பேசறேன்… ’ திடீரென்று போனை கட்டானது. கடைசிவரை அட்ரஸ் அனுப்பவில்லை.
அப்புறம் ரொம்பகாலம் போன் வரவில்லை. ஒருதடவை எப்படியோ ரொம்பவும் அன்பாய் பேசி கடையின் பெயரைத் தெரிந்து கொண்டார் மாணிக்கம்… தனது நண்பர் சென்னைக்குப் போகும்போது சொல்லி அனுப்பினார், பையனைப் பார்த்து வரச் சொல்லி. ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தனுப்பினார்.
சென்னைக்குப் போய் வந்தவர், ‘ பார்த்தேம்பா…பார்த்தேன்…பிச்சைக் காரன் மாதிரி நிக்கறான் உன் புள்ளை… நல்ல சட்டைத் துணி இல்லை… தலைக்கு எண்ணெய் வச்சு மாசக் கணக்குல இருக்கும் போல… பேருக்குதான் மூவாயிரம் சம்பளமாம். ஆனா சாப்பாடு தங்க இடத்துக்கு ரெண்டாயிரம் பிடிச்சுக்கறான்களாம்… ஊருக்கு போகும்போது மட்டும் கொஞ்சம் பணம் கொடுப்பாங்களாம்… ஏதாவது கொண்டுவந்தானா… ‘ என்றார் அவர்.
‘ ஆமாமா… அவன் கொண்டுவந்து கொடுத்துதான் இன்னொரு கடை திறந்திருக்கேன். அட நீ வேற, என் வயித்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு… அவன் ஓடிப்போனதிலேர்ந்து இதுவரை ஊருக்கே வரலை… ‘ என்று புலம்பினார் மாணிக்கம்.
xxxxxx
திடீரென்று மாரடைப்பு வந்து மாணிக்கம் இறந்து போனார். கதறினாள் மாரியம்மாள், ‘ என் புள்ளை வேற ஊர்ல இல்லையே… ‘ என்று. அவளிடம் இருந்த நம்பரை வாங்கி ஒருவர் போன் போட்டார். அந்த நம்பர் வேறு யாருக்கோ போனது.
‘ ஆத்தா… செல்லப்பன் நம்பரை மாத்திட்டான் போலயிருக்குது… திருநெல்வேலிக்கு போன் போகுது. வேற நம்பர் ஏதுமிருந்தா கொடு…’ என்றார் அவர்.
இருந்தால்தானே கொடுப்பாள். என்னென்னவோ செய்து அவன் வேலை செய்யும் கம்பேனின் முகவரியைப் பிடித்து விட்டார்கள்… பஸ் பிடித்து ஒரு ஆள் சென்னைக்கு ஓடிய பிறகுதான் தெரிந்தது, அவன் அந்தக் கம்பெனியை விட்டுபோய் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன என்று. அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்றும் அங்கே யாருக்குமே தெரியவில்லை.
உடலை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்று தூக்கிக் கொண்டுபோய் எரித்து விட்டார்கள். யாரோ ஒரு பங்காளிப் பையன்தான் கொள்ளி போட்டான்.
‘ பெத்த அப்பனுக்கு கொள்ளிபோடக்கூட அவனுக்கு கொடுத்து வைக்கவில்லையே… ‘ என்று அடித்துக்கொண்டாள் மாரியம்மாள்.
எப்படியோ விஷயம் அறிந்து அவன் வந்து சேரும்போது முழுதாக இரண்டு மாதங்கள் ஓடியிருந்தன. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாள் மாரியம்மாள். மறுநாள் மகன் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.
‘ அம்மா நான் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அது பக்கத்து ஜெராக்ஸ் கடைல வேலை பண்ணிக்கிட்டிருந்துச்சு. நான் அவசரமா வரவேண்டியதால அதைக் கூட்டிட்டு வரமுடியலை. அதுமில்லாம அது முழுகாம இருக்கு. நான் சென்னைக்குப் போயி அதைக் கூட்டிட்டு வந்து இனிமே இங்கேயே இருக்கப் போறேன்… ‘
திடுக்கிட்டுப்போனாள் மாரியம்மாள். ஊர் அறிய கல்யாணம் பண்ணாமல் இப்படி பண்ணிவிட்டானே என்று ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், மனது மாறி ஊருக்கேத் திரும்பி வருகிறேன் என்று சொகிறானே என்று கொஞ்சம் சந்தோசமும் வந்தது அவளுக்கு..
சொன்னபடி அடுத்த மாதம் மனைவியுடன் ஊருக்கு வந்தான். ஆனால் மாணிக்கத்தின் சிமென்ட் கடையை நடத்த அவனுக்கு இஷ்டமில்லை. கடையில் இருந்தவைகளை அப்படியே வந்த விலைக்கு விற்றுவிட்டு அவனுக்குத் தெரிந்த பெயின்ட் கடையை ஆரம்பித்தான்.
ஒருநாள் அம்மாவிடம் வந்தான்… ‘ அம்மா… நான் பேங்க்ல லோனு போட்டு கடையை விரிவாக்கம் பண்ணப்போறேன்… நாம ரெண்டு பெரும் வாரிசுங்கறதால நீயும் கையெழுத்து போடணுமாம். பேங்க்குக்கு நீ வரணும்…’ என்றான்.
‘ நான் எங்கேடா கையெழுத்து போடறது… ரேகைதான்… ‘ என்றாள் அவள்.
அடுத்த மாதம் பெரிய கடை ஒன்றைத் திறந்தான். முதலில் ஒழுங்காக தினமும் கடைக்குப் போனவன் பிறகு சரியாய் போகவில்லை. வீட்டுக்கும் இரண்டு நாள் மூன்று நாளுக்கு ஒருமுறைதான் வந்தான். எங்கே போகிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. வரும்போது குடிபோதையில் வருவான். கேட்டபோது, ‘ வியாபாரம் விஷயமா வெளியூர் போயிட்டு வர்றேன்… ‘ என்றான்.
திடீரென்று ஒருநாள் தபால்காரர். ‘ பெரியம்மா… ரெண்டு லெட்டர் வந்திருக்கு… ‘ என்று வந்து நீட்டினார். ‘ ரெண்டா… யார் பேர்ல… ‘ என்றாள் அவள். ‘ மாரியம்மா பேர்ல ஒன்னு, செல்லப்பன் பேர்ல ஒன்னு… ‘ என்றார் அவர்.
‘ என்ன லெட்டர்… ‘ என்றாள். ‘ தெரியலைமா… பேங்க்லர்ந்து வந்திருக்கு. ரெஜிஸ்டர் போஸ்ட்… கையெழுத்து போட்டு வாங்கிக்கங்க… உங்க பையனையும் கூப்பிடுங்க… ‘ என்றார்.
‘ மை டப்பா குடுப்பா. நமக்கு கைநாட்டுதான்… என் புள்ளை வெளியூர் போயிருக்கான்… நானே அதையும் வாங்கிக்கலாமா… ‘ என்றாள்.
‘ உங்க மருமக இருக்குமே… ‘ என்றார்.
‘ அவ பிரசவத்துக்கு அவங்கம்மா வீட்டுக்குப் போய்ட்டா… ‘ என்றாள் இவள்.
வேறு வழியின்றி இரண்டையும் கொடுத்துவிட்டு போய்விட்டார் அவர். பத்து நாள் கழித்துதான் வீட்டுக்கு வந்தான். லட்டர்களைப் பார்த்துவிட்டு ‘ கடையை விரிவாக்கம் பண்ண லோன் எடுத்தோமில்லையா… அது சம்பந்தமா லட்டர் போட்டிருக்காங்க… நான் போயி மேனேஜரைப் பார்த்துட்டு வர்றேன்.. ‘ என்றுவிட்டுப் போனான்.
மறுபடியும் ஒருமாதமாக அவன் வரவில்லை. கொஞ்ச நாளில் பேங்க்லிருந்து வருவதாக சொல்லி மூன்று பேர் வந்தனர். கதவில் நோட்டீஸ் ஒட்டி போட்டோ எடுத்துக் கொண்டு போனார்கள். அதில் ஒருவர் சொன்னார், ‘ பெரிம்மா… உங்க வீடுமட்டுமில்லை, உங்க கடையும் ஏலத்துக்கு வரப்போகுது… ‘ ஓரிரு நாளில் மறுபடியும் தபால்காரர் இரண்டு தபால்களை கொண்டு வந்து நீட்டினார். அதைப் படித்துவிட்டு ஏல நோட்டீஸ்மா என்றுவிட்டுப் போனார்.
மேலும் இருபது நாள் கழித்து செல்லப்பன் வந்தான். இப்போது அவனை நம்பாமல் அவனோடு சேர்ந்து மாரியம்மாவும் பேங்க்கிற்கு போனாள். மேனேஜர் சொன்னார், ‘ அம்மா… பெயின்ட் கடைக்காக அம்பது லட்சம் லோனு கொடுத்தோம். அது இப்போ என்பது லச்சமா வந்து நிக்குது. அடுத்த வாரம் உங்க வீடு ஏலத்துக்கு வரப் போகுது. நீங்க வீட்டைக் காலி பண்ணிடனும்… உங்க வீடும் கடையும் சேர்த்து அறுபது லச்சம்தான் பொறுமாம் இஞ்சினீயர் ரிப்போர்ட் சொல்லுது. சீக்கிரம் மீதி இருபது லச்சத்தையும் கட்டப் பாருங்க…‘ என்றார் மேனேஜர். தலையைச் சுற்றியது மாரியம்மாளுக்கு. அதுவரை மகன் சிமென்ட் கம்பெனியைத்தான் பெரிய அளவில் நடத்திக்கொண்டிருக்கிறான் என்று நினைத்திருந்தாள்.
‘ நீ இவனுக்கு இப்படியே செல்லம் கொடுத்து வளரு… ஒரு நாளைக்கு அவன் உன்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தப் போறான்கறத்தைப் பார்…. நடுத்தெருவுல நிக்கும்போதுதான் நான் இப்போ திட்டறது புரியும்… ‘ என்று அவர் சொன்னது அசரீரியாகக் காதில் விழுந்தது மாரியம்மாளுக்கு. மயங்கி சாய்ந்தவளை அப்படியே கைத்தாங்கலாக வீட்டுக்கு கொண்டு வந்தான் செல்லப்பன்.
‘ நீ கவலைப் படாதம்மா… நான் சம்பாதிச்சு புதுவீடு கட்டுறேன்… ‘ என்றான். அவன் சொன்னது எதுவும் அவளது காதுகளில் ஏறியிருக்க வாய்ப்பில்லை. காரணம் ஒருவர் அவளை நாடி பிடித்துப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings