in ,

நான் குளிக்க போறேன் (நாவல் – அத்தியாயம் 1) – கெளதம். R

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலையில் யாருமே இல்லை. மட்ட மதியத்தில், அந்த சுட்டெரிக்கும் வெயிலில், சூரியனுடன் மல்லுக்கட்ட யாருக்கும் தைரியம் வரவில்லை.

அனாமத்தா கிடந்த சாலையில் ஒரே ஒரு பெண் நடந்து கொண்டு இருந்தாள். அவள் முகம் எல்லாம் வியர்த்து கொட்டியது. தான் அணிந்திருந்த நைட்டியை பார்த்தாள். வியர்வையால் முழுதும் நனைந்து இருந்தது. தாகம் எடுக்கத் தொடங்கியது. நடந்து கொண்டே இருந்தாள். எதிரில் ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தது. அதன் உள்ளே சென்றாள்.

சூப்பர் மார்க்கெட் என்றால் AC போட்டு நல்லா குளுகுளுவென இருக்கும் என்று எதிர்பார்த்து சென்றவளுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். உள்ளே ஒரே அனலாக இருந்தது. சரி, வந்ததுக்கு ஒரு ஜூஸ் குடித்து விட்டுப் போகலாம் என்று நினைத்து ஃபிரிட்ஜை திறந்து குளிர்பானத்தை எடுத்தாள்.

“துளி கூட ஜில்லுனு இல்லாத இந்த ஜூஸுக்கு இந்த ஃபிரிட்ஜ் ஒன்னு தான் கேடு!” என்று சொல்லிக் கொண்டு அந்த கடை காசாளரிடம் சென்று கேட்டாள்.

“ஏங்க, என்னங்க ஜூஸ் இது? ஜில்லுனே இல்ல!”

“கடைல காலையில இருந்து கரண்ட் இல்ல கா! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க”

“உங்க கடைக்கு எதிரில இருக்குற மளிகை கடைலயே ஜுஸ் ஜில்லுனு இருக்கும்”

“அட பரவால்ல, குடி கா!’ என்று சொல்லி அந்த ஜூசை பிடுங்கி அவள் வாயில் ஊற்றினான்.

பச்சைத் தண்ணீரைச் சூடு பண்ணின பிறகு ஆற வைத்ததது போன்று இருந்தது அந்த ஜூஸ். கோவமாக கடையை விட்டு வெளியேறினாள். சூரியன் பளிச்சென்று தோன்றி கண்களை மறைத்தது. அவள் கண்களைத் திறக்க முயற்சி செய்து கொண்டே முன்னோக்கி நடந்தாள்.

சட்டென்று காலில் ஏதோ தட்டிவிடக் கீழே விழுந்தாள். விழுந்தவளுக்கு ஓர் ஆச்சரியம். அவள் மணலில் கிடந்தாள். ஒரே குழப்பமாக இருந்தது. மணலை தன் கையில் எடுத்துப் பார்த்தாள். மணல் தான். வெகுநாட்களாக வெயிலில் காய்ந்து கொண்டு இருக்கும் சூடான மணல். நிமிர்ந்து நேராகப் பார்த்தாள். அவள் கண்களுக்கு எட்டிய தூரம் வரை மணல் தான்.

எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள். எங்கும் மணல், லேசான மணல். தான் ஒரு பாலைவனத்தில் மாட்டிக் கொண்டோமா? என்று எண்ணி முன்னோக்கி நடந்தாள். வியர்த்து ஒழுகியது. அப்போதுதான் தன் உடையை கவனித்தாள். நல்ல குளிர் பிரதேசத்தில் அணியக்கூடிய ஸ்வெட்டரை அணிந்திருந்தாள். அது அவளுக்கு மேலும் எரிச்சலாக இருந்தது.

“எப்படி என் நைட்டி திடீரென ஸ்வெட்டராக மாறும்?” என்று யோசித்துக் கொண்டு நடந்தாள். அவளால் முடியவில்லை. தன் உடம்பில் ஒரு துளி தண்ணீர் கூட இல்லை என்று உணர்ந்தாள்.

இதற்கு மேல் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. நிற்க முடியாமல் அவள் கால்கள் நடுங்கியது. அவள் கண்கள் சொருகியது. தொப்பென்று அந்த மணலில் விழுந்தாள். விழுந்த வேகத்தில் மணலுக்குள் இழுக்கப்பட்டாள்.

மெதுவாக கண் விழித்தாள். தன் முகத்தைத் தொட்டுப் பார்த்தாள். வியர்வையால் முகம் நனைந்து இருக்க, தன் போர்வையை எடுத்து தூக்கி ஏறிந்தாள். தன் படுக்கையில் தான் படுத்து இருந்தாள். இவ்வளவு நேரம் தான் கண்டது கனவு என்று உணர்ந்தாள். Fan ஓடவில்லை. அருகில் சிரிக்கும் சத்தம் கேட்டது. அவள் தம்பி கோகுல் அருகில் நின்று சிரித்துக் கொண்டு இருந்தான்.

“டேய் பிரபு! வர்ஷினி எழுந்துட்டாடா!” என்று தன் தம்பியை கூப்பிட்டு சிரித்தான்.

அவளின் இன்னொரு தம்பி பிரபு  ஓடிவந்து, “எழுந்துட்டியா?” என்று சொல்லி கையில் ஒரு பாத்திரத்துடன் நின்றான்.

“டேய் குட்டி பிசாசுகளா! நான் தூங்கிட்டு இருக்கும்போது என்னடா பன்னீங்க?” என்று வர்ஷினி கேட்டாள்.

“அக்கா! நீ ரொம்ப நேரமா தூங்கிட்டு இருந்த. உன்ன எழுப்பத்தான் fan off பன்னினோம். நீ எழுந்துக்கல. அப்பறம் bedsheet எடுத்து உன் மேல போட்டோம். அப்பவும் நீ எழுந்துக்கல, அப்பறம் வாட்டர் பாட்டில்ல இருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து உன் வாயில ஊத்துனோம். அப்பவும் நீ எழுந்துக்கல” என்று கோகுல் சொன்னான்.

“ஆமா கா! அப்பறம் கோகுல் தான் இன்னும் கொஞ்சம் நிறைய தண்ணீ கொண்டு வாடானு சொல்லி என்ன அனுப்பினான். நான் வர்ரதுக்குள்ள நீ எழுந்துட்ட” என்று பிரபு சொன்னான்.

“அடப்பாவிகளா! நான் இன்னும் கொஞ்ச நேரம் எழுந்துக்காம இருந்தா, இவ செத்துட்டானு சொல்லி புதச்சிருவீங்க போலயே!” என்றுக கோவமாக சொன்னாள். அவர்கள் இருவரும் சிரித்தனர்.

“சரி அவ்ளோ அவசரமா எதுக்குடா எழுப்பினீங்க?”

“எதுக்குடா எழுப்பினோம்?” என்று பிரபு திரும்பி கோகுலை கேட்டான். வர்ஷினி அவனை முறைத்தாள்.

“அக்கா! எதுக்கு எழுப்பினோம்னு எனக்குத் தெரியாது. கோகுல் தான் செய்ய சொன்னான்” என்றான் பிரபு.

“டேய் கோகுல். சொல்றா? எதுக்கு எழுப்புன?”

“நான் எழுப்ப சொன்னேனா? இல்லையே!”

“அப்பறம்?”

“உனக்கு ரொம்ப நேரமா ஃபோன் அடிச்சிட்டு இருந்துச்சு. லட்சுமி அத்த தான் பண்ணி இருந்தாங்க. நான் எடுத்து பேசினேன். நல்லா இருக்கீங்கலானு கேட்டாங்க. நல்ல இருக்கேன்னு சொன்னேன். சாப்பிட்டீங்ககளானு கேட்டாங்க. இல்ல அத்த சாப்பிடலனு சொன்னேன். உங்க அக்கா என்ன பண்றா உங்களுக்கு சோறு போடாமனு கேட்டாங்க. அவ தூங்கிட்டு இருக்கா, இன்னும் எழுந்துக்கலனு சொன்னேன். அப்பறம் அவங்க தான் உன்ன எழுப்பி விட சொன்னாங்க” என்று கோகுல் சொல்லி நிறுத்தினான்.

வர்ஷினி தலையில் கை வைத்தாள். “போயும் போயும் லட்சுமி அத்தகிட்டயாடா நான் தூங்கிட்டு இருக்கேன்னு சொன்னீங்க? அந்த அத்த ஊரு பூரா வத்தி வைக்குமே!” என்று சொல்லி படுக்கையில் இருந்து எழுந்தாள்.

“இப்போ உங்களுக்கு breakfast செஞ்சு தரனும், அதுக்கு நீ இவ்வளோ பெரிய dialogueஅ மனப்பாடம் பண்ணி சொல்லிட்டு இருக்க?” என்று கேட்டாள்.

“ஆமா” என்று சொல்லி கோகுலும், பிரபுவும் சென்று டிவி முன் அமர்ந்தார்கள்.

வர்ஷினி கிட்சனிற்குள்  நுழைந்து அடுப்பை பற்ற வைத்தாள். இருவருக்கும் தோசையை சுட்டுக் குடுத்து விட்டு மீண்டும் சென்று உறங்கலாம் என்று நினைத்து தோசை சுட ஆரம்பித்தாள். அந்த எரியும் அடுப்பு அவளை மேலும் கடுப்பேற்றியது. ஒவ்வொரு தோசையாக சுட்டு அவர்கள் தட்டில் போட்டாள். மீண்டும் கிட்சனிற்குள் வரும்போது ஏதோ ஒரு துர்நாற்றம் வீசியது.

“என்ன நாற்றம் இது? எங்கு இருந்து வருகிறது?” என்று யோசித்து ஜன்னலை திறந்து வைத்தாள். அப்போதும் அந்த நாற்றம் போகவில்லை, அந்த எரியும் அடுப்புடன் சேர்ந்து இதுவும் இப்போது அவளை கடுப்பாக்கியது.

தன் கனவில் கண்டது போல் அவளுக்கு வியர்த்து கொட்டியது. தன் வியர்வையை நைட்டியில் லேசாக எடுத்துத் துடைத்தாள். அப்போது தான் அவளுக்கு ஒன்று புலப்பட்டது. இவ்வளவு நேரம் எங்கு இருந்தோ வந்த துர்நாற்றம் எங்கு இருந்தோ வரவில்லை. தன் நைட்டியில் இருந்து தான் வருகிறது என்று புரிந்து கொண்டாள்.

இந்த விர்வை தான் இதற்குக் காரணம் என்று எண்ணி, இந்த தோசையை சுட்டு முடித்தபின் தூங்குவதற்கு மாறாக முதலில் போய் குளிக்கலாம் என்ற யோசனைக்கு வந்தாள். வேக வேகமாக தோசையை சுட்டு அடுக்கினாள். அப்போது பிரபு அந்தப் பக்கமாக ஒரு துண்டை எடுத்துக் கொண்டு bathroom கதவைத் திறந்தான்.

“டேய் பிரபு! என்ன பன்ற?”

“குளிக்க போறேன் கா!”

“வேணாம் வேணாம். அக்கா குளிச்சிட்டு வந்தர்ரேன், அப்பறமா நீ குளி”

“ம்ம்… சரி கா, நான் வேனா ஹீட்டர் போட்டு விடவா?”

“டேய் டேய்! என்ன புதைக்கலாம்னு முடிவே பண்ணிட்டியா?”

“ஏன் கா? நீ தான எப்போவும் என்ன ஹீட்டர் போட சொல்லுவ”

“டேய், அப்போ winter season. இப்போ வெயில் மண்டைய பொலக்குற season. இப்போ நம்ப ஹீட்டர் போட்டுக் குளிச்சா வெந்துப் போவோம்டா! அஞ்சான்க் கிளாஸ் பசங்கனு நிருபிச்சிட்டே இருக்கீங்க”

“சரி கா. நீ குளிச்சிட்டு சொல்லு. நான் குளிக்கனும்”

“ம்ம்..” என்று சொல்லி தன் வேலையைப் பார்த்தாள்.

“வர்ஷினி அக்கா! இந்த டிவில Netflix வரமாட்டேங்குதுக்கா” என்று கோகுல் சொன்னான்.

“காசு கட்டுனாதான்டா வரும்.”

“அப்போ காசு கட்டு”

“இதெல்லாம் அனாவசியம், இதுக்கெல்லாம் என்னால காசு செலவு செய்ய முடியாது.”

“அப்போ நான் எப்படி படம் பாக்குறது?”

“Telegram ல download பண்ணி பாரு”

“அது எப்படிப் பன்றது? எனக்குப் பண்ண தெரியாதே!”

“அப்போ கம்முனு இரு… அக்கா ஒருநாள் director ஆகி படம் release பன்றேன், அத பாரு”

“Telegram ல யா?”

“No no! அதெல்லாம் download பண்ணி பார்க்க கூடாது. நம்ம theatre ஏ போலாம்.”

“அதுவரைக்கும் நான் என்ன பன்றது?”

“கொஞ்சம் நேரம் பேசாம இரு! அக்கா வேலை பாத்துட்டு இருக்கேன்ல? சும்மா நொய்யு நொய்யுனு!”.

கோகுல் அமைதி ஆனான்.

தன் வேலையை முடித்த பின் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக bathroom சென்றாள். ஒரு பக்கெட்டை எடுத்து பைப்பை திறந்து விட்டாள். அது மெதுவாக நிறைந்து கொண்டு இருந்தது. அப்போது தான், அவள் இன்னும் பல் துலக்கவில்லை என்ற ஞாபகம் வந்தது. உடனே தன் பேஸ்டையும் பிரஷையும் எடுத்து பல் துலக்க ஆரம்பித்தாள்.

தண்ணீரின் வேகம் சற்று மந்தமாக இருப்பதை கவனித்தாள். பல் துலக்கி கொண்டே, அருகில் இருந்த ஒரு ஜக்கை எடுத்தாள். அதில் தண்ணணீரைப் பிடித்துப் பிடித்து பக்கெட்டுக்குள் நிரப்பினாள். அப்போதும் அது வேகமாக நிரம்பவில்லை. அவள் பல் துலக்கி முடித்து விட்டு தன் பிரஷை தண்ணீரில் கழுவி, வாய் கொப்பளித்தாள். அந்த பக்கெட் நிரம்பியது. மேலும் ஒரு ஆச்சிரியம். சரியாக அந்த பக்கெட் நிரம்பியவுடன் பைப்பில் இருந்து வருகின்ற தண்ணீர் நின்றது.

அவள் பைப்பை மூடவே இல்லை. இருந்தாலும் சரியாக பக்கெட் நிரம்பியவுடன் தண்ணீர் வருவது நின்று போனது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பைப்பை மூடினாள். மீண்டும் திறந்துப் பார்த்தாள். அப்போதும் தண்ணீர் வரவில்லை. அந்த பைப்பை கடைசி வரை திருப்பி விட்டு பார்த்தாள். ஒரு சொட்டு தண்ணீர் வந்து நின்றது. வர்ஷினி ஆத்திரம் அடைந்தாள்.

“இந்த பைப்புக்கு என்னக் கேடுனு தெரியலையே! இன்னைக்குனு பார்த்து தண்ணீ வந்துத் தொலைய மாட்டேங்குது! மோட்டார் போடலனு நினைக்கிறேன். அந்த house ஓனர் மோட்டார் போடாம என்ன பண்ணுது? போய் சொல்லிட்டு வரேன்!” என்று சொல்லி பாத்ரூமிலிருந்து வெளியே கிளம்பினாள்.

அந்த apartment-ல் இவள் வசிப்பது இரண்டாம் மாடி (2nd floor). அந்த owner வசிப்பது முதல் மாடி (1st floor). படியில் இறங்கிச் சென்று ஓனர் வீட்டுக் கதவைத் தட்டினாள். சற்று நேரம் காத்துக் கொண்டு இருந்தாள். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை.

மீண்டும் வேகமாக கதவைத் தட்டினாள். அப்போதும் எந்த மாற்றமும் இல்லை. Calling Bell என்ற வசதி உள்ளது என்று அவளுக்கு ஞாபகம் வந்ததும் அதைப் போட்டு அழுத்தினாள். பத்துமுறை அப்படி செய்தும் எந்த பதிலும் இல்லை.

“என்ன ஆச்சு இந்த பொம்பளைக்கு? இவ்வளோ நேரமா தூங்கிட்டு இருக்கும்? அப்படி தூங்கிட்டு இருந்தாலும் இந்நேரம் calling Bell சத்தம் கேட்டு எழுந்து இருக்கனும். ஏன் எழுந்துக்கல? அந்த ஆளு சீக்கிரம் எழுந்து விடுவாரே! அவரையும் காணோம்? என்ன ஆச்சுனு தெரியலையே?” என்று புலம்பிக்கொண்டும், யோசித்துக்கொண்டும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்தாள்.

அப்போது அந்த படியில் மேலே ஏறி வந்தார் கிருஷ்ணன், அவரும் முதல் மாடியில் தான் வசிக்கிறார். ஓனரின் பக்கத்து வீட்டுக்காரர்.கடைக்குச் சென்று ஏதோ வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வருகிறார். அப்போது ஓனர் வீட்டு முன் நின்றுக் கொண்டு இருந்த வர்ஷினியை கவனித்தார்.

“பூட்டுன வீடு முன்னாடி நின்னுட்டு என்னமா பண்ற?” என்றுக் கேட்டார்.

வர்ஷினி அப்போது தான் வீடு பூட்டபட்டுள்ளது என்பதை கவனித்தாள். இவ்வளவு நேரம் தான் வீணாக இங்கு நின்றுக் கொண்டு இருக்கிறோம் என்று நினைத்துக் கோவம் அடைந்தாள். அவளுக்கு மேலும் வேர்த்துக் கொட்டியது. அதை துடைத்து விட்டு,

“வீடு பூட்டி இருக்குனு இப்போ தான் uncle பாக்குறேன்.” என்றாள். கிருஷ்ணன் சிரித்து

விட்டு தன் வீட்டை நோக்கி நடந்தார். உடனே வர்ஷினி, “Uncle! ஓனர் அக்கா எங்க? வீட்ட பூட்டிடு எங்க போனாங்க? நேத்து நைட்டு கூட இருந்தாங்கலே?”

“அவங்க குடும்பத்தோட ஊருக்குப் போயிட்டாங்க மா. கோடை விடுமுறையைக் கொண்டாட குத்தாலத்துக்கு போயிருக்காங்க.” என்று சொல்லிச் சிரித்தார்.

வர்ஷினியும் சிரிப்பு வராமல் சிரித்து விட்டு, “எங்க வீட்டுல தண்ணி வரல uncle. மோட்டார் போடச் சொல்லி தான் அவங்கள கூப்பிட வந்தேன். இப்போ அவங்களும் ஊருக்கு போயிட்டாங்க. ம்ச்…” என்று சொன்னாள்.

“மோட்டார் போடணுமா? அந்த மோட்டார் ரூம் சாவி என்கிட்ட தான்மா குடுத்துட்டு போய் இருக்காங்க. இரு, நான் போய் எடுத்துத் தரேன்” என்று சொல்லி கிருஷ்ணன் தன் வீட்டுக் கதவைத் தட்டினார். அவர் மனைவி வந்து கதவைத் திறந்தார்.

“வாங்க! கறி வாங்கிட்டு வர்ரதுக்கு உங்களுக்கு இவ்வளோ நேரமா?” என்று அவர் மனைவி கேட்டார்.”

“ஏ மாலினி! இந்த பாப்பா மோட்டார் சாவி கேக்குறா பாரு. அவளுக்கு அத எடுத்துக் குடு. அவங்க வீட்டுல தண்ணி வரலையாம்”

“அப்படியா? அந்த சாவி உங்ககிட்ட தான குடுத்தாங்க. நீங்க எங்க வெச்சிங்களோ. நீங்க போய் எடுத்துக் குடுங்க”

“சரி தள்ளு. நான் போய் பாக்குறேன்”

“நீ உள்ள வாமா வர்ஷினி, ஏன் வெளியவே நிக்கிற?”

“இல்லைங் aunty, பரவால்ல” என்று வர்ஷினி சொல்லி நின்றுக் கொண்டு இருந்தாள். மாலினியும் அவளிடம் கொஞ்சம் நேரம் பேச்சு கொடுத்தார்

“ஏன் மா தண்ணி வரலையா?”

“ஆமாங் aunty. Bathroomல தண்ணீ வரல”

“எங்க வீட்டுல வந்துச்சே காலைல கூட… எப்போதுல இருந்து வரல?”

“இப்போதான், கொஞ்சம் நேரம் முன்னாடி கூட வந்துச்சு, அப்பறம் திடீர்னு நின்றுச்சு”

“ம்ம்… சமையல்லாம் ஆயிடுச்சா?”

“இல்லைங் aunty. தம்பிகளுக்கு தோசைய சுட்டு குடுத்து இருக்கேன். மாவு காலி ஆயிருச்சு, இனிமே தான் போய் சமைக்கணும்”

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது கிருஷ்ணன் சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.

“இந்தா மா சாவி, மோட்டார் போட்டுட்டு கொண்டு வந்து குடுத்துரு”

“சரிங் uncle. Thanks!”

“சரி மா”

வர்ஷினி குடு,குடுவென ஓடி கீழே போனாள். சாவியை கொண்டு மோட்டார் ரூமை திறந்தாள். அங்கு இருந்த ஒரு லிவரை இழுக்க முயற்சி செய்தாள். அது இழுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும் அவள் எப்படியோ இதை இழுக்க வேண்டும் என்று முடிவு செய்து ‘தம்’ கட்டி இழுத்தாள். அவள் முயற்சி வீண்போகாமல் ஒரு அடி நகர்ந்தது.

இப்போது அவள் தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தி, முழு பலத்தையும் உபயோகித்து இழுத்தாள். மேலும் ஒரு சில அடிகள் நகர்ந்தது. அதற்குள் அவள் சோர்ந்து விட்டாள். அவள் முழுபலத்தையும் பயன்படுத்தியதில் சோர்ந்து உட்கார்ந்தாள். பயங்கரமாக மூச்சு வாங்கினாள். அவள் உடலெல்லாம் வேர்த்துக் கொட்டியது. அவள் நைட்டி மேலும் ஈரமாகி விட்டது. அவளுக்கு கசகச வென இருந்தது.

எப்படியாவது இந்த மோட்டரை போட்டு விட்டு முதல் வேலையாக குளிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். அவள் கைகளை பார்த்தாள். தன் முழுபலத்தையும் பயன்படுத்தி அதை இழுத்ததில் அவள் உள்ளங்கைகள் சிவந்து போயின.

அந்த மோட்டர்ரூம் இருட்டாக இருந்ததால் அவளுக்கு மேலும் வேர்த்து ஒழுகியது. வெளியே யாரோ நடக்கும் உருவம் தென்பட்டது. வெளியே எட்டிப் பார்த்தாள். அவள் தம்பிகள் இருவரும் கையில் bat மற்றும் ball எடுத்துக் கொண்டு வெளியே சென்று கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்தாள்,

“டேய், கோகுல்! எங்கடா போறீங்க?”

“அக்கா, நீ இங்க தான் இருக்கியா? உன்ன வீட்டில தேடிட்டு இருந்தோம்”

“அத விடு, எங்க கிளம்பிட்டீங்க?”

“விளையாட போறோம் கா”

“வெயில் கொளுத்தி எடுக்குது, என்னடா விளையாட்டு வேண்டி கிடக்கு?” அப்போது தான் அவர்கள் அணிந்திருந்த உடையை கவனித்தாள்.

“டேய்! என்னடா வேற T-shirt போட்டு இருக்கீங்க? குளிக்காம துணி மாத்த கூடாதுனு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன்”

“அக்கா, நாங்க குளிச்சிட்டு தான் மாத்துனோம்”

“பொய் சொல்லாத! தண்ணீ வரவே இல்லை. அதுக்கு தான் நான் மோட்டர் போட வந்து இருக்கேன்.”

“இல்லையே? பாத்ரூம்ல, ஒரு பக்கட் நிறைய தண்ணீ இருந்துச்சு, அதுல தான் குளிச்சிட்டு வரோம்”

வர்ஷினிக்கு அப்போது தான், அவள் ஒரு பக்கெட் தண்ணீ நிரப்பி விட்டு வந்தோம் என்று ஞாபகம் வந்தது. அவர்கள் இருவரும் சென்றார்கள்.

“டேய் நில்லுங்க டா”

“ஏன் கா சும்மா சும்மா கூப்பிட்டுட்டு இருக்க? Summer leaveல கூட விளையாட விட மாட்டியா?”

 “ஒரு ஹெல்ப் டா please. இங்க வாங்க டா”.

இருவரும் வந்தார்கள்.அவர்களுக்கு அந்த லிவறை காண்பித்தாள்.

“இத நம்ப இழுக்கணும். ஒரு ஆள் இழுத்தா கஷ்டம். நம்ப மூணு பேரு சேர்ந்து இழுப்போம். ஓகே வா?”

 “ம்ம் ஓகே.” என்று இருவரும் சொன்னார்கள்.

மூவரும் சேர்ந்து அந்த லிவரை இழுத்தனர். அது கொஞ்சம் கொஞ்சமாக அசைந்தது.

அப்போது ஒன்றை கவனித்த வர்ஷினி, “டேய் கோகுல்! நீ என்னடா ஒரு கைல இழுக்க try பண்ற? அந்த கைல இருக்க bat-அ கீழ போட்டுட்டு ரெண்டு கைல இழுடா. அத யாரும் எடுத்துட்டு போக மாட்டாங்க” என்று சொன்னாள்.

கோகுல் அவ்வாறே செய்தான். ஆனால் எந்த பயனும் இல்லை. அந்த லிவரை முழுமையாக யாராலும் இழுக்க முடியவில்லை. தம்பிகள் இருவரும் சோர்ந்து உட்கார்ந்தனர்.

“அய்யோ அக்கா! எங்களால முடியல, இது ரொம்ப டைட்டா இருக்கு” என்று சொல்லி மூச்சு வாங்கினர். வர்ஷினியும் சோர்ந்து உட்கார்ந்தாள். அவளுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

“இத இழுக்க முடியாம நான் குளிக்காம போகனுமா? நான் குளிக்கிறதுக்கு இது ஒரு தடையா?… பாக்குறேன். நீயா, நானானு பாக்குறேன்” என்று மனதில் கூறிக்கொண்டு மீண்டும் எழுந்து இழுக்க முயற்சி செய்தாள்.

“டேய் வாங்க டா. வந்துப் புடிங்க” என்று அழைத்தாள்.

“அய்யோ அக்கா! நாங்க வரல. எங்கள விட்டுறு. நீயாச்சு, இதுவாச்சு” என்று சொல்லி அவர்கள் அந்த ரூமை விட்டு ஓடி வெளியே சென்றனர்.

வர்ஷினி உதவிக்கு ஆள் இல்லாமல் தள்ளாடினாள். அவள் ஆத்திரம் மேலும் அதிகமானது. அந்த இருட்டு அறையும், கொழுத்தும் வெயிலும் அவளை கொன்று எடுத்தது. அப்போது வெளியே சென்ற கோகுல் ஓடி வந்து,

“அக்கா, பேசாம நம்ப கீழ்வீட்டு ஜோஸ் அண்ணன் கிட்ட ஹெல்ப் கேளு” என்று சொன்னான்.

வர்ஷினிக்கு இது ஒரு நல்ல யோசனையாக இருந்தது.

“சரி டா. போய் அந்த அண்ணனை கூட்டிட்டு வா போ”

“நான் விளையாட போறேன் கா. நீ போய் கூப்பிட்டுக்கோ. Bye” என்று சொல்லி அவன் ஓடிவிட்டான்.

கீழ் வீட்டு ஜோசை கூப்பிட்டு உதவி கேட்பது நல்ல யோசனையாக இருந்தாலும், அவனிடம் சென்று உதவி கேட்க வர்ஷினிக்கு சற்று தயக்கமாக இருந்தது. அவனிடம் இவள் அவ்வளவாக பேசியது இல்லை. ஆனால் இருவரும் 4 வருடங்கள் ஒரே apartment-ல் தான் வசிக்கிறார்கள். இத்தனை நாட்கள் சும்மா கூட விசாரிக்காமல், திடீரென்று உதவி கேட்க அவள் சற்று தயங்கினாள்.

“பேசாம கிருஷ்ணன் uncle கிட்ட போய் உதவி கேட்போமா? ஆனா அவரு வயசானவர். அவரால கீழ இறங்கி வந்து இத இழுக்கிறது கஷ்டம்” என்று தனக்குள் யோசித்துக் கொண்டே இருந்தாள்.

இருந்தாலும், குளிக்க வேண்டும் என்று முடிவு செய்ததால் எப்படியாவது ஜோசிடமே சென்று உதவி கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அவன் வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்தினாள்.

இரண்டு நிமிடங்களாக எந்த பதிலும் வரவில்லை. யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை. இந்த வீடு பூட்டி இருக்கிறதா? என்றுப் பார்த்தாள். இல்லை. வெளியில் பூட்ட படாமல் தான் இருந்தது. அவள் வியர்வையை துடைத்து விட்டு, மீண்டும் பலமுறை காலிங்பெல் அழுத்தினாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 2) – கவிஞர் இரஜகை நிலவன்

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 12) – முகில் தினகரன்