in ,

நாங்க தனியாக இல்லை (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“என்னம்மா, தீபாவளிக்கு இன்னும் ரெண்டு மூணு நாள்கூட இல்ல, பலகாரம் எதுவும் பண்ண ஆரம்பிக்கலையா? எப்பவும் இந்நேரத்துக்கு ரெண்டு பலகாரமாவது செஞ்சிருப்பீங்களே”

“இல்ல கமலா, எதுவுமே ஓட மாட்டேங்குது. நானும் என் வீட்டுக்காரரும் மட்டும்தான் இருக்கோம். தீபாவளி கொண்டாடற மூடே வரல. இதுல பலகாரம் எல்லாம் செஞ்சு…. என்னவோ போ கமலா. தீபாவளியன்னிக்கு பேருக்கு ஒரு பாயசம் மட்டும் செய்யப் போறேன்,  அவ்வளவுதான்.”

“என்னம்மா பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்டீங்க?”

“இல்ல கமலா, இவ்வளவு வருஷம் பொண்ணுங்க வீட்ல இருந்தாங்க. அவங்களுக்காக ஆசையா விதவிதமா பலகாரம் செஞ்சுட்டிருந்தேன். இப்போ சின்னவளும் கல்யாணம் முடிச்சுப் போயிட்டா. ரெண்டு பேரும் வெளிநாட்டுல இருக்காங்க. தீபாவளிக்கு இங்கே வர முடியாது. நானும் இவரும் மட்டும் என்ன பலகாரம் செஞ்சு சாப்பிடறது சொல்லு. நான் கல்யாணமாகி இவ்வளவு வருஷத்துல இப்படித் தனியா, வெறுமையா கொண்டாடற தீபாவளி இதுதான்.

எங்க வீட்டுல இருந்தப்போ கலகலன்னு நிறைய பேரா இருந்துட்டோம். கல்யாணம் முடிச்சு வந்த பிறகு, மாமியார் வீட்டுலயும் கூட்டுக் குடும்பம். வீடே திருவிழா மாதிரி இருக்கும். அதுக்கப்புறம் என் பொண்ணுங்க  கொஞ்சம் பெருசான பிறகுதான் நாங்க தனியா இந்த ஊருக்கு வந்தோம். பெரியவளைக் கட்டிக் கொடுத்து நாலு வருஷம் ஆச்சு. அதுக்கப்புறம் சின்னவளாவது இருந்தா. இப்போ ஆறு மாசமா அவளும் இல்லை. தீபாவளிக்கெல்லாம் அவங்களுக்கு லீவ் கிடைக்காது. வரவும் மாட்டாங்க.

முதல் முறையா நானும் அவரும் மட்டும் இருக்கோம். தீபாவளிங்கற எண்ணமே வர மாட்டேங்குது கமலா. புதுசுகூட எடுக்கலைன்னா பாரேன். நம்ம சின்னவ கல்யாணத்தப்போ வச்சுக் கொடுத்த புதுசு எல்லாம் இருக்கு. அதுவே போதும்னு அவரும் சொல்லிட்டாரு. வேற புதுசா ஏதும் எடுக்கத் தோணல. அதையேதான் தைச்சு வச்சிருக்கேன்.”

“நல்லா இருக்குமா நீங்க பேசறது. பொண்ணுங்களைக் கட்டிக் குடுத்தாச்சுன்னா எல்லாம் முடிஞ்சுதா? யாருமே இல்லன்னு நினைச்சுட்டிங்களா? எங்களை எல்லாம் மறந்துட்டீங்களே மா. பத்து வீட்ல வேலை பண்றேன். இம்புட்டு வருஷமா ஒருத்தர் வீட்ல கூட தீபாவளிக்கு முன்னாடி அவங்க வீட்ல செஞ்ச பலகாரத்தை எங்களுக்குக் கொடுத்தது கிடையாது. நீங்க மட்டும்தான் வீட்டுல செஞ்ச பலகாரத்தை தீபாவளிக்கு முதல் நாளே எனக்குக் கொடுப்பீங்க.

இம்புட்டு வருஷமா நான் அதை வச்சுத்தான் சாமி கும்பிட்டுட்டு இருக்கேன். என் மகனும், மகளும் உங்க வீட்டுப் பலகாரத்தை விரும்பி சாப்பிடுவாங்க மா. மரகதம்மா வீட்டுப் பலகாரம்னா ருசியே தனி. அவங்க செஞ்சதை பண்டிகை கொண்டாடறதுக்கு முன்னாடியே நமக்கும் தராங்க இல்ல… அந்த மனசு யாருக்கும் வராதுன்னு என் மகன் வாய் ஓயாம சொல்லிட்டு இருப்பான்.

தீபாவளிக்கு அவன் ஊர்ல இருந்து வரான் மா. போன வாரம் ஃபோன் பண்ணவே சொல்லிட்டான். மரகதம் அம்மா வீட்டுப் பலகாரம் எனக்கு வேணும். நான் ஊர்ல இல்லன்னு நினைச்சுக்கிட்டு நீங்க காலி பண்ணிடாதீங்க. இல்ல அக்கம்பக்கம் கொடுத்துடாதீங்க. அவங்க பலகாரம் சாப்பிடறதுக்காகத் தான் நான் ஊருக்கே வரேன் அப்படின்னு சொல்லிட்டான்.

எங்க வீட்டுல மட்டுமில்ல மா, உங்களுக்கு பூ கொடுக்கறாளே சரசு, அவ எனக்கு உறவு முறைதான். அவங்க வீட்டுலயும் இதேதான். மரகதம் மா வீட்லதான் தீபாவளிக்கு முன்னாடியே நமக்குப் பலகாரம் கொடுத்துடுவாங்க. மத்தவங்க வீட்ல எல்லாம் தீபாவளி கழிஞ்சு மிச்சமானதுதான் தருவாங்க. அதுவும் கடையில வாங்கினது, அக்கம்பக்கம் வீட்ல கொடுத்ததுல அவங்களுக்கு வேண்டாம்னு இருக்கற மிச்சத்தை எல்லாம்தான் குடுப்பாங்க. ஆனா மரகதம்மாதான் வீட்டுல செய்யும் போதே நமக்கும் சேர்த்து செஞ்சு,  இனிப்பு தனியா, காரம் தனியா அழகா பைல போட்டுத் தருவாங்க. அந்த மனசு யாருக்கும் வராது அப்படின்னு நேத்துகூட என்கிட்ட சொல்லிட்டிருந்தா.

நீங்க என்னமா இப்படிப் பொசுக்குன்னு பொண்ணுங்க இல்லாததால எதுவும் பண்ணப் போறதில்லன்னு சொல்லிட்டீங்க. எங்களை எல்லாம் மறந்துட்டீங்களே மா. ஏதாவது ஒண்ணே ஒண்ணு செஞ்சு கொடுங்க. என் மகன்  குமரன் இதுக்காகவேதான் ஊர்ல இருந்து வரான். அது மட்டுமில்லம்மா, உங்க கையால வாங்கி சாமி கும்பிட்டு குடும்பத்துல இருந்த கஷ்டமெல்லாம் போய் கொஞ்சம் கொஞ்சமா குடும்பம் முன்னேறியிருக்கு.

தீபாவளிக்கு ஒரு மாசம் முன்னாடிய பணம் கூடுதலா கொடுத்துடறீங்க. இல்லன்னு சொல்லல. இந்த வருஷமும் கொடுத்துட்டீங்க. நீங்க கொடுத்ததுலதான் புதுத் துணி எல்லாம் எடுத்தேன். ஆனா நீங்க நிறைஞ்ச மனசோட, உங்க கையால பலகாரம் செஞ்சு கொடுத்து, அதை வச்சு சாமி கும்பிட்டா எனக்கு அது நிறைவா இருக்கும் மா. அதுக்காகவாது ஏதாவது ஒண்ணே  ஒண்ணு செஞ்சு உங்க கையால குடுங்கம்மா. மாவு ஏதாவது திரிச்சுட்டு வரணும்னா சொல்லுங்க, நான் திரிச்சுட்டு வரேன். வரட்டுமா மா…”

சொல்லிவிட்டு கமலா கிளம்பி விட்டாள். அவள் சொன்ன பிறகுதான் எனக்கும் அது உறைத்தது. இதையெல்லாம் யோசிக்காமல் விட்டுவிட்டேனே. அவர்களுக்குக் கொடுப்பதற்காகக் கடையிலிருந்து வாங்கி வருவதாகச் சொல்லியிருந்தார் கணவர். ஆனால் நான் வீட்டில் செய்து கொடுப்பதை ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி உணர்வுபூர்வமாக  எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று யோசிக்கவே இல்லை.

கமலா சொல்வதுகூட உண்மைதான். எனக்குத் தெரிந்து அனைவர் வீட்டிலும் வீட்டு வேலை செய்பவர்களுக்கு, பூ விற்பவர்கள், பால் கொண்டு வருபவர்கள், காய்கறி கொண்டு வருபவர்கள் என எல்லாருக்குமே தீபாவளிக்கு மறுநாள்தான் பலகாரம் கொடுப்பார்கள். மீந்தது, அவர்களுக்கு வீட்டில் பிடிக்காதது இப்படியாகத் தருவார்கள்.

இவ்வளவு வருடங்களாக கடையில் வாங்கியதைக்கூட நான் யாருக்கும் கொடுத்ததில்லை. வீட்டில் பலகாரம் செய்யும்போதே வீட்டு வேலை செய்யும் கமலா, பூ கொண்டுவரும் சரசு, பால்காரர் ஏழுமலை, கீரை கொண்டு வரும் சரிதா இப்படி இவர்கள் எல்லாருக்கும் சேர்த்துதான் செய்வேன். ஒவ்வொருவருக்கும் இனிப்பு தனியாக, காரம் தனியாக டப்பாவில் போட்டு அவற்றை ஒரு பையில் போட்டு பெயர் எழுதி வைத்து விடுவேன். தீபாவளிக்கு முதல் நாள் அனைவருக்கும் கொடுத்து விடுவேன்.

அக்கம்பக்கத்தில் கூட இதை விமர்சித்திருக்கிறார்கள்.

“தீபாவளிக்கு நம்ம வீட்ல பண்ற பலகாரம். அதை பண்டிகை முன்னாடியே அவங்களுக்கெல்லாம் கொடுத்தீங்கன்னா எப்படி மரகதம்? நம்ம வீட்ல பண்டிகை கொண்டாடி, எல்லாரும் சாப்பிட்ட பிறகு தானே அவங்களுக்கெல்லாம் கொடுக்கணும்,” என்பார்கள்.

“அவர்களுக்கும் பண்டிகை கொண்டாடும் போதுதானே பலகாரம் தேவைப்படும். நம் வீட்டில் இருப்பவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் தீபாவளிக்கு முதல் நாளே இனிப்புகளைக் கொடுத்து விடுகிறார்கள். தீபாவளி முடிந்த பிறகு கொடுத்தால் அதை நாம் எந்த விதத்தில் எடுத்துக் கொள்வோம்? அதேபோல தானே இவர்களுக்கும்…”

இது போன்ற விளக்கங்களை எல்லாம் நிறையமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் யாரும் லேசில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நான் விளக்கம் சொல்வதையே விட்டுவிட்டேன்.

ஆனால் என் இரு மகள்களும் திருமணம் முடிந்து வெளிநாட்டுக்குப் போய் விட்டார்கள். முதல் முறையாக நானும், என் கணவரும் மட்டும் தனியாக தீபாவளி கொண்டாடுகிறோம். அதனால்  கொண்டாட்டத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை.  பலகாரங்களைச் செய்து நானும் அவரும் மட்டும் எவ்வளவு சாப்பிட முடியும்?

அதனால் யோசித்துக் கொண்டே இருந்தேன். பெண்கள் வீட்டில் இல்லாததும், அவர்களின் பிரிவும் கொஞ்சம் கலக்கத்தையும் கொடுத்திருந்தது. அவரும் அதே மனநிலையில் இருந்ததால் தனியாகப் பலகாரங்களை செய்து சிரமப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் நான் செய்து கொடுக்கும் பலகாரத்தைத்தான் அவர்கள் வீட்டில் வைத்து சாமி கும்பிடுவார்கள் என்று கமலா சொன்னபோது சிலிர்த்துப் போனது எனக்கு.

மடமடவென மளிகை சாமான்கள் பட்டியலைப் போட்டு, என் கணவரிடம் உடனடியாக வாங்கி வரச் சொன்னேன். கமலா பேசியதை அவரும் கேட்டுக் கொண்டேதான் இருந்தார். இரண்டு பேருக்கும் இவ்வளவு நாட்களாக வடிந்து போயிருந்த உற்சாகம், பண்டிகைக்கான களை எல்லாம் தொற்றிக் கொண்டது.

பிறகு என்ன…. வழக்கம்போல் செய்யும் இனிப்பு, கார வகைகளைச் செய்து அனைவருக்கும் கொடுத்தபோது வீட்டில் நாங்கள் மட்டும் தனியாக இருக்கிறோம் என்று வெறுமை காணாமல் போனது.

பண்டிகைகள் வெறும் நாலு சுவற்றுக்குள் இருப்பவர்களுடன் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல. நம்மைச் சுற்றி இருக்கும் அனைவருடனும் நம்மை இணைப்பதற்கான ஒரு பாலம். அதை அப்படிக் கொண்டாடினால்தான் நிறைவாக இருக்கிறது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    கடைசி நொடிகள் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி