2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஒன்றுக்கு நான்கு தரகர்களிடம் சொல்லி வைத்து, அவ்வப்போது செலவுக்கு நூறு… இருநூறு கொடுத்து வந்ததன் பலன் இன்று தான் கிடைத்தது. ஆம்! நான் எதிர்பார்த்த வாடகை மற்றும் அட்வான்ஸில், என் புது மனைவி எதிர்பார்த்த வசதிகளோடு கூடிய ஒரு புதிய வீட்டினை ஒரு தரகன் காட்டி விட மகிழ்ந்து போனேன்.
என்ன?… வீடு அமைந்திருக்கும் அந்தப் புறநகர் பகுதியில் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் முளைக்க ஆரம்பித்திருந்தன. ஆனாலும் பரவாயில்லை, என்று என்னை நானே தேற்றிக்கொண்டு அடுத்த வாரமே குடியேறினேன்.
ஊரிலிருந்த மனைவியிடம், “பேச்சுலர்ஸ் ரூமிலிருந்து வெளியேறி தனி வீடு பார்த்துக் குடியேறிவிட்டேன்… சீக்கிரமே உன்னை இங்கு அழைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று போனில் சொல்ல, அவள் பதிலுக்கு சரமாரியாய் கொடுத்த “இச்”சில் என் உதடுகள் கிழிந்து தொங்க, உள் நாக்கு கதறியது.
இரவு நேர தனிமை ஆரம்பத்தில் சற்றே பயத்தை கொடுத்த போதும், ஓரிரு நாட்களில் அந்த பயம் காணாமல் போய், மொட்டை மாடியும், இருட்டு வானமும், மேலே இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களும், எனது நண்பர்களாகிப் போயின.
அன்று இரவு சாப்பிட்டு முடித்த பின் சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தேன். அரை வட்ட நிலா மங்கிப்போன பழைய கருப்பு வெள்ளை படமாய் அழுது வடிந்து கொண்டிருந்தது. காற்றில் சற்று அதிகமான குளிர் இருக்க சிகரெட்டை ஆழமாய் இருந்து நிதானமாய் புகை விட்டு சூடான புத்துணர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருந்த என்னை சற்று தூரத்தில் தெரிந்த காட்சி உசுப்ப கூர்ந்து கவனிக்கலானேன்.
இருட்டில் நான்கு பேர் சேர்ந்து எதையோ தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருந்தனர். பின்னர் ஓரிடத்தில் நின்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கையில் இருந்ததை, “தொப்”பென்று கீழே போட்டனர். என் பார்வை அவர்கள் கீழே போட்டதை ஆராய்ந்தது. “என்னவாயிருக்கும்?”. பார்வைக்கு அது இன்னதென்று சரியாக புலப்படாது போக யோசித்தபடியே கீழே இறங்கி வீட்டிற்குள் சென்று எப்போதோ வாங்கி வைத்திருந்த அந்த பைனாகுலரை எடுத்துக் கொண்டு மீண்டும் வந்தேன். பைனாகுலர் வழியாக பார்த்த நான் அதிர்ந்து போனேன்.
அவர்கள் காலடியில் குப்புற கிடந்தது ஒரு மனிதனுடைய உடல். கருப்பு நிற பேண்ட்… நீல கலர் சட்டை… “அட பாடுவிங்களா எவனையோ… எங்கேயோ வெச்சுக் கொலை பண்ணிட்டு, டிஸ்போஸ் பண்ண இங்க தூக்கிட்டு வந்திருக்கானுங்க!”
பயம் கலந்த ஆர்வம் என்னைத் தூண்ட தொடர்ந்து அவர்களின் செய்கைகளை கண்ணிமைக்காமல் பார்க்க ஆரம்பித்தேன். ஒருவன் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து உரசி நெருப்பை உண்டாக்கி, அதை இன்னொருவன் கையில் இருந்த தீப்பந்தத்தில் பற்ற வைக்க, தீ பெரிதானது.
“பாவிக… நெருப்பு வைக்கிறானுங்க!” கொழுந்து விட்டெரியும் தீப்பந்தத்தைக் குப்புறக் கிடக்கும் அந்த சடலத்தின் மீது வைத்தான் அவன். அது பற்றி கொண்டதும் தொடர்ந்து கை… கால்… என உடலின் எல்லா பாகங்களுக்கும் நெருப்பை வைத்து விட்டு அந்த தீப்பந்தத்தைத் தூர எறிந்தான்.
சடலம் மொத்தமா எரிய ஆரம்பித்ததும் அவர்கள் நால்வரும் ஆளுக்கொரு திசையில் ஓடி மறைய, என் நாக்கு வறண்டு, கண்கள் இருண்டு, உடம்பே நடுங்க ஆரம்பித்தது.
“அடக் கடவுளே!… போயும் போயும் இந்த மாதிரி இடத்திலா குடியேறியிருக்கேன்… பகல்ல மனிதன் நடமாட்டமே இல்லை, ராத்திரில இந்த மாதிரி ஆளுங்க நடமாட்டமா இருக்கு… இங்கியா என் புதுப் பொண்டாட்டியைக் கூட்டிட்டு வந்து குடித்தனம் பண்ண போறேன்?…”
இனம் புரியாத ஒரு அச்ச உணர்வு எனக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த, “கூடவே கூடாதுடா சாமி!.. அந்த மாதிரி ஒரு முட்டாள்த் தனத்தை கண்டிப்பா செய்யக் கூடாது!.. நாளைக்கு நான் ஆபீஸ் போனதும் தனியாய் இருக்கிறேன் என் பொண்டாட்டி கிட்ட எவனாவது வந்து எக்குத்தப்பா நடந்து, கடைசியில் அவளை கொன்னு போட்டாலும் கூட கேட்க நாதி கிடையாது இந்த ஏரியாவுல!.. கத்தினாலும் பிரயோஜனமில்லை… கதறினாலும் பிரயோஜனமில்லை!.. எப்படியிருக்கும்?… அக்கம் பக்கத்தில் ஒண்ணு ரெண்டு வீடுக இருந்தால்தானே அவசர ஆத்திரத்துக்கு யாராவது உதவிக்கு வருவாங்க?”
இரவு முழுவதும் யோசனை செய்து தெளிவாக தீர்மானித்தேன், உடனே வீட்டைக் காலி செய்து விடுவதென்று. “வீடு சின்னதாய் இருந்தாலும் பரவாயில்லை!.. வாடகை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை!…ன்னு நல்ல பரபரப்பா இருக்கிற ஏரியாவுலதான் வீடு பார்க்கணும்!..”
மறுநாள் காலை ஆபீசுக்கு அரை நாள் லீவு போட்டு விட்டு, எனக்கு அந்த வீட்டைத் தேடிக் கொடுத்த தரகனை சந்தித்து அவனிடம் மேற்படி விஷயத்தைச் சொல்லாமல், “என் மனைவி இப்போதைக்கு ஊரிலிருந்து வர விரும்பவில்லை… அதனால் நான் மறுபடியும் அந்த பேச்சுலர்ஸ் ரூமுக்கே போறேன்… என்னோட அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்திடுங்க!” கிட்டத்தட்ட கெஞ்சினேன்.
அவன் அந்த வீட்டு ஓனரிடம் செல்போனில் பேசிவிட்டு உதட்டைப் பிதுக்கினான். “என்ன சார்… என்ன சொல்றார்?” கேட்டேன்.
“காலி பண்ணிட்டு போறதுன்னா போகச் சொல்லு… ஆனா அட்வான்ஸெல்லாம் திருப்பித் தர முடியாது”ங்கறார்”
“இப்படிச் சொன்னா எப்படிங்க?… ஒரு வாரம்தானே ஆச்சு?” கோபமானேன்.
“நான் என்ன சார் பண்ண முடியும்?” தரகர் நழுவப் பார்த்தார்.
விடாமல் கெஞ்சினேன். பஞ்சப்பாட்டு பாடி, பரிதாபம் காட்டினேன். ஒரு கட்டத்தில் என் நச்சரிப்பு தாள முடியாமல் மீண்டுமொருமுறை வீட்டு ஓனரிடம் பேசினார். பேசி விட்டு, “பாதி தரச் சம்மதிச்சிட்டார்!… அதுவும் என்னைத் தரச் சொல்றார்… அப்புறமா அவர் எனக்கு தருவாராம்”
எனக்கு வருவது வரட்டும் என்றாகிப் போனதால் அவர் கொடுத்த பாதி அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு, “ஒரு நாள் டைம் குடுங்க நாளைக்கு காலி பண்ணிடறேன்” என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்.
வரும் வழியில் ஆர்வம் உந்தியது. “சடலம் எரிக்கப்பட்ட இடத்தை சென்று பார்த்தால் என்ன?” சென்றேன்.
குவியலாய்க் கிடந்த சாம்பல் காற்றில் பறந்து புழுதி கிளப்ப, “என்னது… ஒரு எலும்புத் துண்டு கூடக் காணோம்!… அதையும் வந்து பொறுக்கிட்டு போயிட்டானுகளா?”.
அப்போது என்னைக் கடந்து சென்ற ஒரு நபர், சட்டென்று நின்று என்னையே ஊடுருவிப் பார்க்க, நான் என் வீட்டைக் காட்டி, “அந்த வீட்டில் தான் குடியிருக்கிறேன்” என்றேன்.
அவன் என் வீட்டைத் திரும்பிப் பார்த்து விட்டு, “அது சரி… இங்க வந்து என்ன தேடுறீங்க?” கேட்டான்.
“அது… வந்து” யோசித்தேன். “இவன் கிட்டச் சொல்லலாமா?… சொல்லித்தான் பார்ப்போமே!”.
சொன்னேன். நேற்றிரவு நான் கண்ட காட்சியை மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாய் இன்று தரகனைச் சந்தித்ததையும், பாதி அட்வான்ஸைத் திருப்பி வாங்கியதையும். நான் சொல்வதை முழுவதுமாய் கேட்டு விட்டு அவன் “ஹா…. ஹா… ஹா…” என்று வாய் விட்டு சிரித்தான்.
“என்னய்யா… நான் எவ்வளவு சீரியஸாய்ச் சொல்லிட்டிருக்கேன்… நீ பாட்டுக்கு சிரிக்கிற?”
“பின்னே?.. சிரிக்காம என்ன பண்ணச் சொல்றீங்க?… நேத்து ராத்திரி இங்க வந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன்”
“என்னது?.. அந்தக் கொலைகார கும்பல்ல நீயும் ஒருத்தனா?” நான் ஒரு அடி பின் வாங்க,
“பயப்படாதீங்க!… நாங்க இங்க கொண்டு வந்து போட்டு எரிச்சது மனித உடல் அல்ல… அதோ அங்க தூரத்தில் தெரியுது பாருங்க ஒரு புது பில்டிங்?… அந்த பில்டிங்ல வச்சிருந்த திருஷ்டி பொம்மை!… அந்த வீட்டோட கிரஹப்பிரவேசம் முடிஞ்சதனால… அந்த பொம்மையை யாரு கண்ணிலும் படாம ராத்திரியோட ராத்திரியா இங்க கொண்டு வந்து எரிச்சோம்!… அதுதான் முறை!… அதைப் போய் பொணம்னு நினைச்சுட்டு…” அவன் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் திணற,
நான் வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்தேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings