in

நாய்ச்சங்கிலி (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

நாய்ச்சங்கிலி (சிறுகதை)

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

விவசாயம் மாத்திரம் கை விடாமல் இருந்திருந்தால், திருப்பூருக்கு வந்து அடிமை வேலை செய்யாமல் ஊரில் சுதந்திரமாக ராஜா மாதிரி இருந்திருப்பான் சிவகுமார்.  எல்லாம் தலை விதி.  யார் நினைத்தார்கள், எப்போதும் பச்சைப் பசேல் என்றிருக்கும் அவர்களின் பன்னிரண்டு ஏக்கர் தோட்டமும், காடும், ஒரத்துப்பாளையம் அணை கட்டி இரண்டு வருடத்துக்குள் பாலைவனம் போல் ஆகுமென்று?  

இதே பூமியில் விளைந்ததை வைத்துத்தான் அவனின் பெற்றோர், அவனின் அக்காவுக்கு சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்கள்.  இதன் விளைச்சல்தான் அம்மாவின் கழுத்தில் ஏழு சவரனில் நகையாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவனுக்கும் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வியைக் கொடுத்தது.  தீபாவளி, பொங்கல், ஆடி போன்ற விசேச நாட்களில் அக்காவுக்கும், மாமாவுக்கும் சீர் செய்து, புத்தாடைகள் எடுத்துக் கொடுக்கவும் உதவியது இந்த விளைச்சல்தான். 

திருப்பூரின் சாயக் கழிவினால் கொஞ்சம் கொஞ்சமாக மாசு பட்டுக் கொண்டிருந்த நொய்யல் நீர், ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டவுடன், அணையைச் சுற்றியுள்ள பகுதியின் நிலத்தடி நீரையும் விச‌மாக்கி அப்பகுதியைச் சேர்ந்த விளைநிலங்களையும் பாலைவனமாக்கியது. கரும்பு போன்ற சுவை மிகுந்த நீரைக் கிணற்றிலிருந்து நேரடியாக எடுத்துக் குடித்துக் கொண்டிருந்த சிவகுமார் குடும்பத்தினரும், அந்த கிராமத்து மக்களும், அடுத்துள்ள குறு நகரமாகிய‌ தென்னிலை சென்று கேன் தண்ணீர் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கும் நிலை வந்தது. 

குளிக்கவும், மற்ற உபயோகத்திற்கும் கிணற்று நீரைப் பயன்படுத்தியதன் விளவு உடம்பில் வெடிப்புப் புண்கள் தோன்ற ஆரம்பித்த இந்த நிலைமையில்தான், குடும்ப நலன் கருதியும், பொருளாதாரத்தை சமாளிக்கவும் பெற்றோர்களால் சிவகுமார் திருப்பூருக்கு அனுப்பப்பட்டான்.

அவர்கள் ஊரிலிருந்து,  சிறுவயதிலேயே திருப்பூர் சென்று, கடுமையாக உழைத்து, இன்று பல பனியன் கம்பெனிகளுக்கு அதிபராக இருக்கும் அவன் அப்பாவின் பால்ய நண்பர் சண்முகத்தின் கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்ந்து விட்டான் சிவகுமார்.  முதலாளி சண்முகம் மற்ற முதலாளிகளைப் போல கடுமையானவராக இல்லாமல் நல்ல மனிதனாராக இருந்தது சிவகுமாருக்கு பிடித்திருந்தது. 

நண்பரின் மகன் என்பதால், அவனை கம்பெனியின் எல்லா செக்சனிலும் வேலை செய்ய விட்டு, ஒரு வருடத்துக்குள் அனைத்து வேலைகளையும் கற்றுக் கொள்ள வைத்துவிட்டார்.  சிவகுமாரும் தன் புத்திசாலித்தனத்தாலும், கடின உழைப்பாலும், சண்முகத்தின் நம்பிக்கை வட்டத்துக்குள் வந்துவிட்டான்.            

உறவு முறையில் சிவகுமாரின் அப்பாவும், சண்முகமும் மாமன் மச்சினன் முறை ஆதலால், சண்முகம் எப்பொழுதும் சிவகுமாரை ‘டேய் மாப்ள’ என்றுதான் கூப்பிடுவார்.  வேலையில் சேர்ந்து இரண்டு வருடத்திற்குள், கம்பெனியின் முக்கிய ஆட்களில் ஒருவனாகி விட்டான் சிவகுமார்.  பேங்க்கிற்கு செல்வது, சம்பளப் பணம் பட்டுவாடா செய்வது போன்ற முக்கிய கம்பெனி வேலை அல்லாது, சண்முகத்தின் மனைவி செல்விக்கும் செல்லப் பிள்ளையாகிவிட்டான் சிவகுமார். 

செல்வி, சிவகுமாரின் அம்மா வகையில் சொந்தம் வேறு ஆகிவிட்டதால், உரிமையுடன் சண்முகத்தின் வீட்டிற்குள் எங்கும் செல்லும் சலுகை பெற்றிருந்தான் அவன்.  இத்தனை சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தாலும், தன் எல்லை எது என்பதை உணர்ந்து, கம்பெனியிலும், வீட்டிலும் ஒரு சம்பளக்காரன் போலவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டான் சிவகுமார்.

ஒருமுறை திருவிழாவிற்கு ஊருக்குச் சென்றிருந்தபோது, சிவகுமாரின் அப்பாவிடம் சண்முகம் கேட்டார், ‘என்ன மச்சான், பையனுக்கு வயசாவுது, கல்யாணம் பண்ணலயா?’

சிவகுமாரின் அப்பாவும் சொல்லிவிட்டார், ‘நாந்தான் பையனை எப்பவோ உங்கிட்ட ஒப்படச்சிட்டன்.  நீயே ஏதாவது ஒரு பொண்ணப் பாத்து ஏற்பாடு பண்ணு.  எங்களை கல்யாணத்திற்கு கூப்பிட்டா போதும் மச்சான்.’

நண்பர்களின் கலகல சிரிப்பு அந்த வீட்டின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை டிபனுக்கே சிவகுமாரை வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தார் சண்முகம்.  டிபனை முடித்துக்கொண்டு, சண்முகமும், செல்வியும் அவனைக் காரை எடுக்கச் சொல்லிக் கிளம்பினர்.  மங்களம் தாண்டி, ஒரு கிராமத்துக்கு வழி சொல்லி, காரை விடச் சொன்னார் சண்முகம். 

கிராமத்தை அடைந்ததும், ஒரு வீட்டின் முன் சண்முகமும், செல்வியும் இறங்கி, அவனையும் இறங்கச் சொன்னார்கள்.  அவர்களை எதிர்பார்த்து இருந்தது போல அந்த வீட்டு மனிதர்கள் வாசல் வரை வந்து வரவேற்றனர்.  வரவேற்பு அவனுக்கும் சேர்த்து இருந்ததால், கொஞ்சம் திக்கென்றது சிவகுமாருக்கு.  அவன் பயப்பட்டது போலவே ஒரு கெச்சலான பெண் வெட்கப்பட்டுக் கொண்டே காப்பி கொண்டு வந்து கொடுத்தாள்.

செல்வி சிவகுமாரைப் பார்த்துச் சொன்னாள், ‘இதுதான் பெண்.. பார்த்துக்கோ’.

பெண் பார்க்கும் படலம் முடிந்த பின், சண்முகம் சிவகுமாரை தனியாகக் கூட்டிப் போய் கேட்டார், ‘என்னடா மாப்ள, பொண்ணு புடிச்சிருக்கா?’

‘மாமா, இந்த பொண் வேண்டாங்க … போற வழியில விவரம் சொல்றேன் ‘ என்றான் சிவகுமார்.

போகும் வழியில் கேட்டார் சண்முகம், ‘ஏண்டா, பொண்ணு கருப்பா இருக்குதுண்ணு வேண்டான்னு சொன்னயா?’

‘இல்லைங்க மாமா..  எனக்கு வேற ஒரு பொண்ணு புடிச்சிருக்கு’ கொஞ்சம் வெட்கத்துடன் சொன்னான் சிவகுமார்.

‘பார்ரா.. திருப்பூருக்கு வந்தா என்ன கத்துக்கறீங்களோ இல்லையோ, லவ் பண்ணக் கத்துக்கறீங்க.. சரி, பொண்ணு யாரு?’ என்றார் சண்முகம்.

‘நம்ம கம்பெனில ஸ்டிச்சிங் செக்சன்ல வேலை செய்ற பிரியாங்கற பொண்ணுங்க மாமா.  ஊர்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லி நீங்கதான் எங்க கல்யாணத்தை நடத்திக் கொடுக்கனும் ‘ என்றான் சிவகுமார் பரிதாபமாக.

அவன் விருப்பப்படி, பிரியாவின் பெற்றோரிடமும், சிவகுமாரின் பெற்றோரிடமும் பேசி, திருமணத்தை நடத்தி, திருப்பூரில் வீடு பார்த்து குடியும் வைத்து விட்டார் சண்முகம்.

திடீரென்று கம்பெனியில் வேலை செய்யும் பத்துப் பேருக்கு தன் செலவில் விலையுயர்ந்த செல் போன் வாங்கிக் கொடுத்து விட்டார் சண்முகம்.  அந்தப் பத்துப் பேரில் சிவகுமாரும் ஒருவன்.  முன்பெல்லாம், எப்போதாவது ஒரு முறை கூப்பிட்டுக் கொண்டிருந்த சண்முகம், செல்போன் வாங்கிக் கொடுத்தவுடன் அடிக்கடி சிவகுமாரைக் கூப்பிடத் தொடங்கினார். 

போதாத‌தற்கு, செல்வியும் அடிக்கடி கூப்பிட்டு காரை எடுக்கச் சொல்லி காய்கறி வாங்கவும், சென்னை சில்க் போகவும் தொடங்கிவிட்டாள்.  புது மனைவியுடன் ஆசையாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, சண்முகத்திடம் இருந்து கால் வரும்.  போன் காலை உடன் எடுத்துப் பேசாவிட்டால், சண்முகத்துக்கு பெரிய கோபம் வந்துவிடும். 

திருமணத்திற்குப் பின், பிரியா வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே இருப்பதால் பொழுது போகாமல் அடிக்கடி போனில் கூப்பிடுவாள்.  பிரியமாய் புது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது முதலாளி சண்முகம் கூப்பிடுவார். 

அது மாத்திரம் அல்லாமல், கம்பெனியில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் சிவகுமாரின் நம்பரைக் கொடுத்து, தான் கிடைக்காத சமயத்தில் அவனைக் கூப்பிடச் சொல்லிவிட்டதால் சிவகுமாரின் போன் எப்போதும் விடாமல் அலறிக் கொண்டே இருக்கும்.

அன்று சனிக்கிழமை.  வேலை அதிகம் இருக்கும் நாள்.  காலையில் ஒன்பது மணிக்கு  கம்பெனிக்கு வந்து வழக்கமான வேலைகளை முடித்துக் கொண்டு பேங்க் கிளம்பினான் சிவகுமார்.  கம்பெனி இருப்பது பிச்சம்பாளையம் புது பஸ்டேண்ட் அருகில்.  முதலாளி சண்முகத்தின் பேங்க்அக்கெளண்ட் இருப்பதோ ரயில்வே ஸ்டேசனுக்குப் பக்கத்தில். 

பிச்சம்பாளையத்தில் உள்ள பேங்கிற்கு அகெளண்டை மாற்றிக் கொள்ள பல முறை கேட்டும் அனுமதிக்கவே இல்லை சண்முகம்.  காரணம், அவர் திருப்பூர் வந்து கம்பெனி வைத்ததில் இருந்து அந்த பேங்க்கில்தான் வரவு செலவாம்.  அந்த ராசியில்தான் அவர் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளாராம். ராசி பார்ப்பதில், திருப்பூர்காரர்களுக்கு இணை யாருமில்லை. எட்டாம் எண்ணைப் பார்த்தால் பதறித்துடித்து விடுவார்கள். வண்டிகளுக்கு ராசி நம்பர் வாங்குவதற்கு லட்சம் லட்சமாக செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். 

வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது சண்முகம் கூப்பிட்டார், ‘மாப்ள, பேங்க் போய்ட்டியா?’ என்றார். 

இல்லை என்றவுடன், பேங்க் போனவுடன் கூப்பிடச் சொன்னார்.  பேங்கிற்குப் போய் அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் கூப்பிட்டார்.

‘மாப்ள, இன்னைக்கு ஒரு நாப்பது எல் போடணும்.  சனிக்கிழமை வேற.. எத்தனை மணிக்கு கொண்டு வரலாம்னு கேட்டுட்டு வா’.

பேங்க் விட்டு வெளியில் வந்து வண்டியை எடுக்கும்போதுதான் பார்த்தான்.  பிரியாவின் மிஸ்டு கால் இருந்தது.

‘சும்மாதான் கூப்பிட்டேன்.. டீ சாப்டீங்ளா?’ என்றாள்.

இந்தக் கேள்வி ஒப்புக்குத்தான்.  அவன்  குரலைக் கேட்பதற்காக இப்படிக் கூப்பிடுவாள்.

‘இல்ல இனிமேல்தான் டீ குடிக்கணும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெரிதாகக் கொட்டாவி விட்டாள் பிரியா.

‘என்ன?  தூக்கம் வருதா?   படுத்துத் தூங்கு.  என்ன வேலை?’  என்று கிண்டலிடத்தான் சிவகுமார். கடும் வேலைக்கிடையில் கிடைக்கும் ஆசுவாசம் புது மனைவியிடம் பேசுவது.

‘ஆமா.. ராத்திரியெல்லாம் தூங்க விடாம தொந்தரவு..பேச்சப் பாரு?’ என்றாள். 

இது போன்ற சிருங்காரப் பேச்சுக்கள் கிளர்ச்சியை உண்டாக்கி வீட்டை நோக்கி ஓட வைத்து விடும். பேசிக் கொண்டிருக்கும்போதே கால் வெயிட்டிங்கில் சண்முகத்தின் கால் வந்து விட்டது.  பிரியாவிடம் சொல்லிவிட்டு சண்முகத்திடம் பேசினான்.

‘மாப்ள, பேங்க் வேலையை முடிச்சிட்டு அப்படியே மங்களம் ரோடு போய் சங்கர் கம்பெனியில் நம்ம ஆர்டர்தான் ஓடிட்டிருக்கான்னு பாத்துட்டு வந்துரு’.

அந்த நாள் முழுவதும் சண்முகத்தின் ஆர்டர் போனில் வழிந்து கொண்டே இருந்ததில், மறுபடியும் பிரியாவிடம் பேசும் வாய்ப்புக் கிடைக்கவே இல்லை.

இரவில் இருவரும் உணவை முடித்துக் கொண்டு, படுக்கையறைக்கு வந்தனர்.  புடவை சரசரக்க, சூடியிருந்த மல்லிகையின் மணம் கமழ புன்முறுவலுடன் வந்தவள், ‘ஐயாவிடம் இப்போவாவது பேசலாமா?  இல்ல பிசியா?’ என்றாள் நக்கலாக.

வியர்வைத் துளிகள் மின்னிக் கொண்டிருந்த அவளின் உதடுகளை அவன் நெருங்கியபோது செல்போன் ஒலித்தது. சண்முகத்தின் பெயர் செல்போனில் மின்னியது.

‘நாய்ச்சங்கிலி’ என்றான் சிவகுமார் அலுப்புடன்.

‘எது நாய்ச்சங்கிலி?’ என்றாள் பிரியா.

செல்போனைக் சுட்டிக்காட்டிச் சொன்னான் சிவகுமார், ‘இதுதான்  நாய்ச்சங்கிலி… நான் நாய்…..என் முதலாளி  இந்தச் சங்கிலியில்தான் என்னைக் கட்டி வெச்சுருக்காரு’  என்று சிவகுமார் பரிதாபமாகவும், கோபமாகவும் சொன்னதைக் கேட்டவுடன் சிரிப்புத் தாங்க முடியாமல் சத்தமாகச் சிரித்து விட்டாள் பிரியா.

அவளின் சிரிப்பைப் பார்த்து அவனுக்கும் சிரிப்பு வந்து சிரித்தான்.  இருவரின் சிரிப்பும் அந்த அறையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது. இதையெல்லாம் லட்சியம் செய்யாமல் ‘நாய்ச்சங்கிலி’ தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மாணவி சௌந்தர்ய லக்ஷ்மி வரைந்த ஓவியம்

    இந்த எண் உபயோகத்தில் இல்லை (சிறுகதை) – ✍ ரமணி