2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரியகூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது . ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவள் அதை பார்த்து மலைத்துப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!
இன்னும் வரிசையில் யாரும் வரும் முன், போய் நின்று விட வேண்டும் என எண்ணி, வரிசையில், கடைசியில் போய் நின்றாள். அந்த வரிசையில் நின்ற எல்லோரும், கையில் பழங்களும், பரிசுப்பொருட்களும் வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த தேவி, கொஞ்சம் பணத்தை எடுத்து ஒரு கவரில் போட்டு வைத்துக் கொண்டாள்!
சாமியாருடன் என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டே வரிசையில் மற்றவர்களுடன் நகர்ந்து கொண்டிருந்தாள். ‘இனி என்ன செய்ய முடியும்?’ என்று யோசிக்கும் போது அவளை அறியாமலே கண்ணீர் வழிந்தது. உடனடியாக அணிந்திருந்த குளிர் கண்ணாடியை கழட்டி விட்டு முந்தானையில் கண்களை துடைத்துக் கொண்டாள்.
அடிக்கிற வெயிலில் தாக்கத்தை எதிர் கொண்டிட, திரும்பவும் குளிர் கண்ணாடியை மாட்டிக் கொண்டு திரும்பி பார்த்தாள். அங்கங்கே அந்த குருவின் சீடர்கள் எல்லோரும் வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு, குளிர் பானம் மற்றும் தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்தனர். சில இடங்களில் மக்கள் அமர்வதற்காக இருக்கைகள் ஆங்காங்கே மரத்தடியில் அமைக்கப்பட்டிருந்தன.
பாதையை அழகுபடுத்திட, பாதை ஓரங்களில் அழகான செடிகளின் வண்ண பூக்கள் தென்றலோடு கைகுலுக்கி, அசைந்தாடி, சிரித்து விளையாடிக் கொண்டிருந்தன. தோட்டத்து புற்கள் ஆதவனால் இழந்த பனி மகுடத்தை திரும்ப பெற்றிட இரவின் ஆளுமையை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தது. பனித் துளிகளை விலங்கிட்டு இனி என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தது ஆதவன்.
அவள் உள்ளே நுழைந்த போது அங்கே ஒரே இருளாக இருந்தது. போக போக கண்கள் சூழ் நிலையை உணர ஆரம்பித்தது. அவளுடைய முறை வந்த போது அவள் சாமியாரை தனியாக சந்திக்க விரும்பினாள். அவள் தயக்கமாக நின்றதை பார்த்த சுவாமிகள் உடனே புரிந்து கொண்டார்.அவளுடைய விருப்பத்தை உணர்ந்த சாமிகள், இரு சீடர்களையும் நோக்கி சமிக்னை செய்ய, அவர்கள் விலகிக் கொண்டனர்.
“சொல்லம்மா என்ன விஷயம்? “ என்று கேட்டார் சுவாமிகள்.
“சாமி நான் வந்திருக்கும் காரணம் என்ன வென்று உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?………. தெரிந்தும், தெரியாத மாதிரி கேட்பது தான் எனக்கு புரியவில்லை? ஏன் என்னை சோதிக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
அதற்கு அந்த சாமியார், “நீ, உன் வாயிலிருந்து சொல்லும் போது உன்னுடைய மனப்பாரம் குறைவதோடு, உனக்கு நான் எந்த வழியிலே வழி காட்ட முடியும் என்று சொல்வதற்காக தான் கேட்டேன்” என்றார்.
“உங்களுக்கு தெரியாத விஷயத்தையா நான் சொல்ல போகிறேன். என் மக உங்களுடைய சீடராக இருந்தது உங்களுக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும்”
”யாரு? ஓ ….ஒ!!!!!!!!! அந்த உமாவை சொல்றியா? சரி அவளுக்கென்ன?” ஒரு குறும்புன்னகையுடன் கேட்டார் சுவாமிகள்.
“சாமி!” என்றவள் அமைதியும் மவுனமுமாக நின்றாள். கொஞ்ச நேரம் அங்கே மௌனம் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அவள் கண்களையே அவர் பார்த்துக் கொண்டிருக்க, அவள் தொடர்ந்தாள்.
”நேற்று கூட அவள், தனக்கு வரும் பிறந்த நாளைக்கு முத்துமாலை வேண்டும் என்று அடம்பிடித்ததால் அவளை நகைக்கடைக்கு அழைத்துச் சென்று அந்த விலை உயர்ந்த முத்துமாலையை கூட வாங்கிக் கொடுத்தேன். எத்தனை பொன்நகைகளும் எத்தனை எத்தனையோ அரும்பெரும் கற்கள் கொண்ட மாலைகளையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கே நன்றாக தெரியும். நான் அவளை பாதுகாக்கும் அவளுடைய சித்தி தான். அமெரிக்கவிலே இருக்கும் அக்காவிற்கு என்ன பதில் சொல்ல போகிறேன்? அவள் விரும்பியிருந்தால் தன்னுடைய காதலைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கலாமே. நானே எங்க அக்காவிடம் சொல்லி இந்த கலியாணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பேனே… என்னை விட்டு விட்டு ஏன் ஓடிப் போனாள் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்னைக் கூட நம்பாமல் ஓடிப் போய் விட்டாளே”
தேவி மூக்கை சீந்தினாள்.. முந்தானை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டாள்.
அவள் சொன்னதை கேட்டு கொஞ்ச நேரம் வாய் விட்டு சிரித்த சுவாமிகள், “ஏன் தேவி இவ்வளவு அழகாக பொய் சொல்கிறாய்?” என்று கேட்டார்.
“சாமி நான் பொய் சொல்கிறேனா?” அதிர்ந்தாள் தேவி.
“ஆம் … என்னிடம் உமா எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்” திரும்பவும் சிரித்தார் சுவாமிகள் .
“நீங்கள் தான் இமயமலையில் இருந்தீர்களே. அலைபேசியும் நீங்கள் உபயோகிப்பதில்லை. அப்புறம் உங்களுக்கு எப்படி? ஆமா நான் என்ன செய்தேன் என்று சொல்கிறீர்கள்?” கொஞ்சம் கோபத்தோடு கேட்டாள்.
“தேவி, அவள் அந்த வாலிபனை காதலித்தது உங்களுக்கு நன்றாக தெரியும் தானே?” என்று கேட்டார். கொஞ்ச நேரம் அப்படியே மனங்கொதித்து நின்றாள் .
‘சாமியார் கிட்டே எல்லாத்தியுமே அவசொல்லியிருக்கா’ என்று யோசித்த தேவி, “சரி நான் வேற மாப்பிள்ளை பார்க்கத்தான் செய்தேன், எங்க அக்காவும் அமெரிக்க மாப்பிள்ளை பார்க்கத்தான் செய்தார்கள். ஆனா நீங்க … ஒரு பெரிய துறவி … நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?” அவள் கத்தினாள்.
சப்தம் கேட்டு எல்லா சீடர்களும் ஓடி வர சாமியார் கையசைத்து போக சொன்னார்.
“தேவி நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் செய்தது உங்களுக்கே நல்லது என்று படுகிறதா? விரும்பிய வாழ்க்கை வாழ அவளுக்கு சுதந்திரம் கிடையாதா? அந்த பையனுக்கு என்ன குறை?” என்று கேட்டார் கொஞ்சம் கோபத்தோடு.
“அவன் வாங்குகிற சம்பளத்துல அவன் மாசம் ஒருநல்ல துணி வாங்கி குடுக்க முடியுமா? இவர்கள் எங்கே? அவன் அந்த சின்ன பொடிப் பயல் எங்கே? சாமி நீங்களாவது புத்திமதி சொல்வீர்கள் என்று உங்களை தேடி வந்தால் நீங்களும் அவளோடு சேர்ந்து கொண்டு …அவ சின்ன பொண்ணுசாமி . அவளுக்கு என்ன தெரியும்?”
“தேவி, நீங்கள் உமாவை சின்ன பொண்ணு என்கிறீர்கள். அவளுக்கு டீன் ஏஜ் முடிஞ்சு போச்சு தெரியுமா? அவளால் எப்படி இருக்கணுமுன்னு அவளுக்குத் தெரியும்”
“நான் இப்ப போய் போலீசில் கம்பளைண்ட் குடுத்து உங்க.. உங்க இந்த மடத்தையே…” பொங்கினாள் தேவி
சிரித்துக் கொண்டிருந்த ஸ்வாமிகள்.. “பேதைப் பெண்ணே… அன்புக்கு அடி பணிய முயலுங்கள். வாழ்வில் எல்லாம் மகிழ்சசிகளாகட்டும் ..போய் வா..” புன்முறுவல் பூத்துக் கொண்டே வழி அனுப்பினர்
“சாமி உங்களுக்கு அவ எங்கே இருக்கான்னு நல்லாத் தெரியும். ஒழுங்கா அவளை எங்கூட வர சொல்லுங்க. அவளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறேன் என்னை நம்புங்க” அழ ஆரம்பித்தாள் தேவி.
“இன்னும் உங்க குறும்பு கொங்சம் கூட குறையவில்லை”
“எப்படி அவளை இழுத்துக் கொண்டு போவது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?” சிரித்துக் கொண்டு சொன்னார் துறவி
“அப்படி எல்லாம் இல்லை சாமி” நடித்தாள் தேவி.
“உங்களிடம் தந்த கவரை கொஞ்சம் பிரித்து பாருங்கள் ஸ்வாமி” அவள் மிகவும் பணிவாக கேட்க, சாமி கவரை எடுத்து திறந்து பார்த்தார். அவள் கட கடவென சிரிக்க ஆரம்பித்தாள். சாமி கண்ணால் என்னவென பார்க்க, அவள் சிரிப்பு அதிகமாகியது
“நீ…நீங்கள்…நீ….சாகப் போகிறாய் சாமி … நான் கவருக்குள் வைத்திருக்கும் நச்சுப் பொருள் உன் மூக்கிற்கு எட்டி, நுரை ஈரலுக்குள் நுழைந்து……..” இன்னும் வேக வேகமாக சிரித்தாள் தேவி.
“பேதையே… உன்னை நான் நன்கு அறிவேன் .. கவலைபடாதே நீ கொண்டு வந்த கவரை என் சீடன் எடுத்து போய் விட்டான் இப்போது அது எரிந்து போயிருக்கும் …உன் ஒவ்வொரு எண்ணத்தையும் அறிந்தவன் நான் ” என்றவர் கையை தட்டினார்.
இரண்டு சீடர்களுடன் உமாவும் அந்த வாலிபனும் மாலையும் கழுத்துமாக வந்து “எங்களை ஆசீர்வதியுங்கள் சித்தி” என்று காலில் விழுந்தார்கள்.
இன்னமும் புன்முறுவல் பூத்தவாறு ஸ்வாமிகள் “தேவி அவர்களுக்கு ரெஜிஸ்டர் கல்யாணம் முடிந்து விட்டது, இனி எதாவது வம்பு பண்ணினால் நீ கம்பி எண்ண வேண்டியதிருக்கும். அன்போடிருங்கள்.. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கட்டும் போய் வாருங்கள்..” என்றார் சுவாமிகள்.
என்ன நடந்தெதென்று புரியாமல் திகைத்து போய் நின்றாள் தேவி.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings