தாய் மெஹர் மாங்கு மாங்குனு ஆட்டுக்கால் பாயவுக்கு தேவையான தேங்காய்பாலை எடுக்க அம்மியில் வைத்து நச்நச்சென்று சத்தத்தோடு தேங்காயை தட்டி அரைத்துக் கொண்டிருந்தாள். ஆட்டுக்கால், மசாலா மணத்தோடு கொதித்துக் கொண்டிருந்தது. பரோட்டவுக்கு மாவை நைய பிசைந்து புறை போட்டு வைத்திருந்தாள்.
மதியம் சாப்பிட்ட எச்சில் தட்டைக்கூட எடுத்து கழுவி வைக்காமல் ஹாலில் ஒய்யாரமாக உறங்கி கொண்டிருந்தாள் மகள் பானு.
“அக்கா…. நீ தின்ன தட்ட கூட கழுவி வைக்காம அப்படி என்ன தூக்கம்…” என்றாள் தங்கை லேகா.
“உனக்கென்ன….இது என் அம்மா வீடு நான் ரெஸ்ட் எடுக்க வந்திருக்கேன்.” என்று திமிரிக் கொண்டு எழுந்த பானு சொன்னாள்.
“அதுக்கு இப்படியா….ஒரு புல்லைகூட புடுங்காம” என்றாள் தங்கை லேகா வெறுப்பாய்.
“அம்மா வீடுன்னு வந்தா கொஞ்சம் நிம்மதியாச்சும் இருக்கா.? இங்கேயும் இத செய் அத செய்” என்று புலம்பினாள் பானு.
“பானு… உன்னை யாரு ஓய்வெடுக்க வேண்டாம்னு சொன்னா? நல்லா ஓய்வெடு நல்லா சாப்பிடு ஆனா குழந்தைகளை பார்க்கறது உன்னோட கடமை. நானும் அடுப்பு வேலையா இருக்கேன், சின்னவளோ படிக்கிற புள்ளே, குழந்தைக்கு சோறு ஊட்டி குளிக்க வைக்கிறது கூடவா செய்ய மாட்டே” என்று பொறுமையாக மகளுக்கு அறிவுரை கூறினாள்.
“என் புருஷன் வீட்டுலே என் மாமியார் தான் குளிக்க வைப்பாங்க, சோறு ஊட்டுவாங்க, அதுக பீ மூத்திரம் தொடச்சு போடுவாங்க… இங்க வந்த என்னையே வேலை வாங்குறியே” என்று விட்டேத்தியாய் பேசி முடித்தாள் பானு.
“பார்த்தியாமா இப்ப புரியுதா உன் பொண்ணை பத்தி அவ மாமியாரை ஆயிரம் குத்த சொல்லுவா… இப்பதான் தெரியுது…அங்கே இவதான் அவங்களை வேலை வாங்குறான்னு அவ வாயாலே வந்துடுச்சு.” என்றாள்.
மெஹர்க்கு தலைவலியே வந்துவிடும் போல் இருந்தது. அக்கா தங்கை சண்டையை முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது.
“போதும் யாரும் எதுவும் செய்ய வேண்டாம். நானே செய்யறேன். பானு நீ ஒன்னும் சின்ன புள்ள இல்லே. உனக்கு ரெண்டு குழந்தைங்க பிறந்திருச்சு இன்னும் நீ பொறுப்பு இல்லாம இருந்தா உனக்கு தான் கஷ்டம். உன் மாமியார் முடியாதவங்க அவங்கள வேலை வாங்குறது எல்லாம் தப்பு பானு”. என்றாள் தாய் மெஹர்.
“ஓ சின்னவளுக்கு வக்காலத்து வாங்குறேன்னு நினைச்சேன் இப்போ என்னடானா என் மாமியாருக்கும் வக்காலத்து வாங்கறே. நான் கொஞ்ச நேரம் படுத்து கிடந்தது உனக்கு பொறுக்கலே. அதானே” என்று ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தாள்.
“நான் என்ன சொல்லிட்டேன்னு அழறே! சின்னவளுக்கும் உனக்கும் ஒன்பது வயசு வித்தியாசம். நீ மூத்தவ அந்த பொறுப்போடு இருக்கணும்னு தானே சொல்றேன் நீங்க ரெண்டு பேரும் எனக்கு ரெண்டு கண்ணு”
“அதான் நீ ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்பு வைக்கறேன்னு தெரியுது” என்று அதிலும் ஒரு குத்தத்தை கூறினாள் பானு.
இது முடியும் கதையாக தோன்றவில்லை, அதனால் அவள் இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று எண்ணி அடுக்களைக்குள் சென்று பரோட்டாவை போட தொடங்கினாள்.
பரோட்டாவை சுட்டு முடித்து ஹாட் பேக்கில் போட்டு வைத்தாள். ஆட்டுக்கால் பாயாவை ருசி பார்த்து சப்பு கொட்டிவிட்டு மேலாக மல்லி தழையை தூவி எவர்சில்வர் டிஷ்யில் வைத்து அடுக்களையை சுத்தம் செய்து முடிப்பதற்குள் போதும் என்று ஆகிவிட்டது தாய் மெஹர்க்கு.
பானு இல்லை என்றால் அவளின் வேலை மூன்றில் ஒரு பங்கு தான் இருக்கும். பானு வர போகிறாள் என்ற தகவல் வந்ததுமே மெஹரின் மனதில் எச்சரிக்கை மணி அடித்து விடும். மாவில் இருந்து மிளகுத்தூள் வரைக்கும் எல்லாம் அரைத்து வைத்து விடுவாள். டாக்டர் செக்கப், சுகர் டெஸ்ட் என்று முன்கூட்டியே இவள் வியாதிக்கு மருந்து வாங்கி வைத்து விடுவாள்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மக வந்தா ஹாயா உக்காந்து ரெஸ்ட் எடுப்பே என்று சொல்லும் போது கேட்க நல்லா தான் இருக்கும், ஆனா அப்போதான் இரட்டிப்பு வேலை. இதில் அக்கா தங்கை சண்டை வேற! நடுவுல ஒரு பஞ்சாயத்து என்று மெஹருக்கு நேரமே போதாமல் போய்விடும். இதில் பேத்திகளிடம் விளையாட கூட நேரம் இருக்காது என்று வருந்தி போனாள்.
எத்தனையோ முறை அவளுக்கு அறிவுரை சொல்லியும் கேட்ட பாடு இல்லை. கோபம் தான் மிஞ்சியது. அதனாலயே எதுவுமே சொல்லாமல் வாய் அடைந்து போவாள். தன் குழந்தைக்கு சோறு ஊட்டுவது கூட அவனால் முடியாமல் போகும்.
என்னதான் பாட்டியாக இருந்தாலும் மெஹர் கையால் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைக்கு தாய் தான் சரிப்பட்டு வரும் என்று விட்டு விடுவாள். அப்போதும் பேத்திகளை பராமரிப்பதில்லை என்று குறைப்பட்டு கொள்ளுவாள் பானு.
வேலைகளை முடித்துவிட்டு இரவு அக்காடான்னு உட்கார்ந்து இருந்த வேலையில் மெஹரின் கணவர் பாட்ஷா களைப்பாக உள்ளே நுழைய.
“என்ன வீடு அமைதியா இருக்கு” என்று சொன்னதும் வந்ததே பாரு ஆத்திரம் மெஹர்க்கு.
“என்னது அமைதியா…? இந்த அமைதி… புயலுக்கு பின்வரும் அமைதிங்க… பொறுப்பில்லாத பொண்ணை பெத்துட்டு இதுலே பெருமை வேற”.
“ஏண்டி ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோயில் என்கிற மாதிரி உனக்கு நான் தான் கிடைச்சேனா?”
“பின்னே என்னங்க பொழுதுவிடுஞ்சு பொழுது போனா அக்கா தங்கை சண்டை ஓயமாட்டிகுது.”
“விடுடி… அம்மா வீடுனாலே பொண்ணுங்களுக்கு உரிமை ஜாஸ்தி அதுவும் ஆறு மாசம் கழிச்சு வந்திருக்கா! இந்த சண்டை எல்லாம் கண்டுக்காம இரு அவங்களே சண்டையும் போட்டு சமாதானமும் ஆகிடுவாங்க. அதுவும் இல்லாம புகுந்த வீட்ல மனசு விட்டு அவனால் இப்படி பேச முடியுமா?. சரி சரி குழந்தை வந்து இருக்கு. நாளைக்கு எல்லாம் வெளியில கூட்டிட்டு போயி பெரியவளுக்கு பிறந்தநாள் வருதுல்லே! அவளுக்கு தங்கத்துல ஏதாச்சும் வாங்கி தா.”
பிறந்தநாளுக்கு அரை பவுன்ல பிரேஸ்லெட் கைக்கு அடக்கமா அழகா வாங்கினாள். பேத்திகளுக்கு வெள்ளி கொலுசு என்று வாங்கவும் பானுவுக்கு வாய் எல்லாம் பல்லாக இருந்தது.
“அம்மா ரொம்ப நல்லா இருக்குமா! ஆனா நூல் மாதிரி இருக்கு இன்னும் கொஞ்சம் பெருசா இருந்தா நல்லா இருக்கும்”. என்றாள் பானு.
“சொல்லுவே…. தங்கம் விக்கிற விலைக்கு இதெல்லாம் தேவையா? அக்காவுக்கு தங்கம், குழந்தைகளுக்கு வெள்ளி, எனக்கு ஏதாச்சும் வாங்க தோணுச்சா” என்றால் தங்கை லேகா .
“உனக்கு தான் சுடிதார் வாங்கி தந்தேனே.”
“ஆமா ஐநூறு ரூபாய்க்கு டிரஸ் வாங்கி தந்துட்டு நீ மட்டும் 50 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கிட்டு போற. நல்ல நியாயம் வாய் உள்ள புள்ள பிளைச்சுக்கும் சும்மாவா சொன்னாங்க.”
“நூல் மாதிரி நகை தந்துட்டு இவ்வளவு பேச்சு பேசுறே!” என்றாள் பானு.
“போதும் நிறுத்துங்க! திரும்ப சண்டையை ஆரம்பிச்சுடாதீங்க இனி செலவு செய்ய காசு இல்லே”.
****
தன் மகளை கல்லூரி சேர்க்க அட்மிஷன் போட்டு முன் பணமாக வயிற்றை கட்டி வாய கட்டி சீட்டு பணத்தை வைத்து ஐம்பதாயிரம் கட்டி வைத்தாள். இப்போது மீதி முப்பதாயிரம் கட்ட வேண்டும். அதை கடனா வாங்கி வைத்திருந்த பணத்தில் தான் மகளின் பிறந்த நாளுக்கு தங்கத்தை வாங்கி கொடுத்துவிட்டு இப்ப ஃபீஸ் கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் பாட்ஷா.
“என்னங்க…. இன்னும் ரெண்டு நாள்ல காலேஜ் திறந்துடுவாங்க. அதுக்குள்ளே ஃபீசை கட்டி ஆகணும்.” என்று பேசிக்கொண்டிருக்கும் போது கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தாள்.
“வாங்க மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க”
“நல்லா இருக்கேன் அத்தை. இந்த ஊர்ல, ஆபீஸ் வேலையா வந்தேன் அப்படியே உங்களையும் மாமாவையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்றான் பானுவின் கணவன்.
“அத்தை இந்தாங்க….”
“என்ன இது” என்று பிரித்துப் பார்க்க அதில் பானுவுக்கு பரிசாக கொடுத்த பிரேஸ்லெட் இருந்தது
“லேகாவுக்கு காலேஜ் பீஸ் கட்ட உங்ககிட்ட பணம் இல்லைன்னு தெரிஞ்சது அதான் பானு கொடுத்து விட்டா”.
“இங்கிருந்த வரைக்கும் சின்னவகிட்ட சண்டை போட்டா. ஆனா இப்ப பாருங்களேன்.”
“அத்தை பானுவை பத்தி நீங்க புரிஞ்சுக்கலே. அவ படபடன்னு பேசுவா அடுத்த நிமிஷமே உணர்ந்திடுவா. எங்க அம்மாவுக்கு அவளுக்கும் நிறைய முட்டிக்கும் ரெண்டு பேரும் சண்டைல நான் தல கொடுக்கவே மாட்டேன். ஆனா… எவ்வளவு சண்டை போட்டாலும் அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமை தவற மாட்டா. அம்மாவும் சில நேரத்துல விட்டுக் கொடுத்து போயிடுவாங்க. அத்தை…இந்த நகை சும்மா தான் பிரோவுலே இருக்க போகுது. இப்போதைக்கு ஃபீஸ் கட்ட குடுங்கன்னு உங்க மக தான் கொடுதனுப்பினா”
நகையை மாமியாரிடம் கொடுத்துவிட்டு துரிதமாக கிளம்பினான் அன்வர்.
முதல் நாள் நடந்ததை அசைபோட்டபடி சென்றான்.
“ஏங்க என் பிறந்தநாளுக்கு எங்க அம்மா எனக்கு இந்த தங்க பிரேஸ்லெட் வாங்கி தந்தாங்க பாருங்க” என்று ஆசை பொங்க தன் தாய் வாங்கி தந்த பரிசை காட்டி பெருமை கொண்டால் பானு.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவங்களே கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. நீ வேற தேவையில்லாமல் செலவு வெச்சிட்டு வர. நான் என்ன கையாலாகாதவனா! அப்படித்தானே உங்க குடும்பமே நினைச்சுட்டு இருக்கும். என்னால உனக்கு ஏதும் வாங்கி தர முடியாதா.” என்று கொதித்து போய் கத்தினான் அன்வர்.
“ஐயோ அப்படி இல்லைங்க”
“நான் இருக்கிறத வச்சு சந்தோஷப்பட்டு மானத்தோட வாழ ஆசைப்படுறேன். அதுல நீ மண்ணை போட்டுட்டே. மாமியார் வீட்டிலே புடுங்கி தின்னு வாழ்றேனு ஊர் பேசுற மாதிரி செய்யணும் இல்லே” என்றான்.
இதைக் கேட்டு அரண்டு போய்விட்டாள் பானு. இத்தனை கோபத்தை அவள் பார்த்ததில்லை அவளே அந்த நகையை எடுத்து வந்து கணவனிடம் கொடுத்தாள். அதைத்தான் மாமியாரிடம் ஒப்படைத்தான்.
ஒரு பக்கம் மனைவியை விட்டுக் கொடுக்காமல் நாடகம் ஆடினான் அன்வர். தாய் மெஹர் மகளின் பெருந்தன்மையை நினைத்து பூரித்துப் போனால்.
தங்கை லேகாவோ பானுவை பற்றி எனக்கு தெரியாது! எரியுற வீட்ல புடுங்குற வரைக்கும் லாபம் என்கிற குணம் அவளுக்கு என்று மூன்று கோணங்களாய் அவரவர் சிந்தனை ஓடியது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings