எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலையில் எழுந்ததுமே மாறனுக்கு அந்தக் குழப்பம் வந்துவிட்டது.
இன்று முதலாவது மாத சம்பளம் கிடைக்கப் போகிறது. பணத்தைக் கொண்டுவந்து யாரிடம் கொடுப்பது. அம்மாவிடமா இல்லை மதியிடமா… என்று.
மதி அவனுக்கு மாமன் மகள். அத்தை மகன் என்பதால் அவனுக்கு வேலை இல்லாவிட்டாலும் சரி என்று கட்டிக்கொண்டாள் அவள். ஆனாலும், கல்யாணமான அடுத்த மாதமே வேலையும் கிடைத்துவிட்டது, முப்பதினாயிரம் சம்பளத்தில்.
மதி சொன்னாள், ‘மாமா… வேலை இல்லாம வீட்டிலேயே இருந்தீங்களே… இப்போ, நான் வந்த நேரம், வேலை கிடைச்சிடுச்சு, பார்த்தீங்களா… ‘
அவள் சொன்னதை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை.
வேலை கிடைத்திருப்பது ஒரு கரும்பு மில்லில். அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் போக வேண்டும். மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் படித்திருப்பதால் உதவி சூப்பர்வைசர் வேலை கொடுத்திருக்கிறார்கள், முப்பதினாயிரம் சம்பளத்துடன்.
இன்றைக்கு சம்பளம் எடுத்துக் கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்து அசத்த வேண்டும்…
xxxxxx
மதியமே ரிஜிஸ்தரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள், அந்த மாத சம்பளம் பெற்றுக் கொண்டதற்கு சாட்சியாக. கம்பெனியில் எல்லோருக்கும் ஒரே பேங்க்கில் கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து ஏ.டி.எம். கார்டையும் வாங்கிக் கொடுத்து விட்டார்கள். ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்கும் போதே சம்பளப் பட்டியல் பேங்கிற்கு போய்விட்டது என்றும் தெரிவித்தார்கள்.
முதல் சம்பளம் அல்லவா… நெஞ்சு வேகமாய் அடித்துக் கொண்டது. பர்ஸிலிருந்து ஏ.டி.எம். கார்டை ஒருமுறை எடுத்துப் பார்த்துக் கொண்டான். வீட்டுக்குப் போகிற வழியில் ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்துக் கொள்ளவேண்டும்…
திடீரென்று வேலைக்கு சேர்ந்த நாள் நினைவில் வந்து நின்றது.
அம்மாத்தான் ஒருநாள் ஒரு தினசரி பேப்பரில் அந்த கரும்பு மில் கொடுத்திருந்த விளம்பரத்தை யாரோ கொடுத்ததாகச் சொல்லி கொண்டுவந்து அவனிடம் காட்டினாள். உடனே அப்ளிகேஷனைப் போட்டான். பத்து நாளில் நேர்முகத் தேர்வுக்கு கூப்பிட்டார்கள். வேலையும் கிடைத்துவிட்டது.
ஒரு மாதம் ஓடு ஓடென்று ஓடியேவிட்டது. இதோ சம்பளமே வரப் போகிறது.
அம்மா மட்டும் அந்த நேரத்தில் கம்பெனி விளம்பரத்தை கொண்டு வந்து கொடுத்திருக்கா விட்டால், இந்த வேலை எப்படி கிடைத்திருக்கும். எப்போவும் போல வீடு கடைத்தெரு என்று பொழுதை கழித்துக்கொண்டிருந்திருக்க வேண்டியதுதான்.
இப்போது யோசனை மாறியது.
அம்மாவால்தான் வேலையே கிடைத்தது. அம்மா மட்டும் அந்த விளம்பரத்தைக் காட்டாமல் இருந்திருந்தால் வேலையில் சேர்ந்திருப்போமா… சம்பளப் பணத்தை அம்மாவிடமே கொடுத்து விடலாம்.
அப்படி கொடுத்தால், மதி கோபித்துக்கொள்வாளோ… ஏன் கோபித்துக் கொள்ளவேண்டும்… அம்மா இருக்கும் வரை அம்மாதானே எல்லாம். அப்புறம்தானே அவள்.
மொபைலில் மெசேஜ் வந்துவிட்டது, இருபத்தெட்டாயிரத்து சொட்சம் கணக்கில் வரவாகி விட்டதாக. சந்தோஷம் பிடிபடவில்லை. வீட்டிற்கு போகிற வழியில் ஏ.டி.எம். வந்தது. இருபத்தைந்தாயிரம் பணத்தை எடுத்தான். பர்ஸுக்குள் பணத்தை திணித்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
வழியில் பூ வாங்கிக் கொண்டான். ஒரு பேக்கரி வந்தது. அல்வா வாங்கி கொண்டான். அம்மாவுக்கு மிக்சர் பிடிக்கும் என்பதால், கால் கிலோ மிக்சரும் வாங்கிக் கொண்டான்.
பரவசத்துடன் வீட்டை அடைந்தான். புல்லட் சத்தம் கேட்டு வெளியே வந்து கணவனை எதிர் கொண்டாள் மதி. பளிச்சென்று இருந்தாள். சீவி சிங்காரித்து பூவை எதிர்பார்த்து தயாராக காத்திருந்தாள் அந்தப்பூவை..
ஒருகணம் யோசித்தான். பர்சிலிருந்து பணத்தை எடுத்து மதியிடமே கொடுக்கலாமா…
ஒருவேளை மதியிடம் கொடுத்தால் அம்மா கோபித்துக்கொள்வார்களோ… ‘
வளர்த்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பிய இந்த அம்மாள் உன் கண்ணுக்குத் தெரியவில்லையா… நேற்று வந்தவள்தான் உன் கண்ணுக்குத் தெரிந்தளா… என்று அம்மா நினைத்துக் கொள்வாளா…
உள்ளே வந்து டிபன் பாக்ஸையும் ஸ்வீட் பெட்டியையும் மதியிடம் கொடுத்துவிட்டு அம்மாவை கூப்பிட்டான்.
‘அம்மா வந்து சாமிப் படத்துக்கு முன்னாடி நில்லுமா…’ என்றான்.
‘ஏன்டா… திடீர்னு… ஏதாவது விசேஷமா என்ன…’ ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டே வந்து நின்றாள்.
‘மதி… அம்மா கால்ல விழுவோம் வா… ‘ என்றான் மனைவியிடம். அவளும் ஒன்றும் புரியாமல் பார்த்தபடி அவனுடன் சேர்ந்து அத்தை காலில் விழுந்தாள். எழுந்தவன் பர்ஸை திறந்தான்.
மதியும் அம்மாவும் புரியாமல் அவனைப் பார்த்தார்கள்.
எழுந்து கொண்டவன், ‘மதி, அங்கே மேஜை மேல மிக்ஸர் வச்சிருக்கேன், எடுத்துட்டு வா என்றான்…. ‘
‘ ஏண்டாப்பா… மிக்ஸர் கொடுக்கத்தான் கால்ல விழுந்தியா… ‘
‘ கொஞ்சம் இரும்மா… ‘
மதி கொடுத்த மிக்ஸர் பொட்டலத்தை அம்மாவிடம் கொடுத்தான்.
‘ அம்மா இன்னிக்கு சம்பளம் வாகிட்டேம்மா… ’ என்றபடி பாக்கெட்டுக்குள் இருந்து பணத்தை எடுத்து அம்மாவின் கையில் திணித்தான்.
மதியின் முகத்தில் லேசான மாற்றம் நிலவியதை ஓரக்கண்ணா கண்டுகொண்டான். ஆனாலும்…
‘ மதி… இந்தாம்மா…. ‘ அம்மா கூப்பிட்டார்கள்.
இவன் புரியாமல் பார்த்தான். அவளும் புரியாமல் நெருங்கினாள். கணவனையும் பார்த்துக் கொண்டாள்.
‘இந்தா பிடி… இனிமே நீதானே எல்லாம்.. ‘ என்றபடி அந்தப் பணத்தை அப்படியே மருகளின் கைகளில் திணித்தாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அப்போ அப்பா இல்லையா?
பாவம், சில வருடங்களுக்கு முன்பே அவர் காலமாகிவிட்டார்… நன்றி நண்பரே… நன்றி…