எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ இது ஒண்ணுதான் குறைச்சல்…’ என்றபடி எரிச்சலில் விட்டெறிந்தான் அந்த ஆல்பத்தை. அது சுழன்றுகொண்டு போய் அலமாரிக்கடியில் முட்டி மோதி நின்றது.
பழைய டைரி ஒன்றைத் தேடும்போதுதான் அந்த கல்யாண ஆல்பம் அவனது கையில் பட்டது. அட்டைப் படத்தில் அவனும் கல்பனாவும் ஒய்யாரமாய் போஸ் கொடுத்துக் கொண்டு நின்றிந்தார்கள். அதைப் பார்த்தத்தும்தான் அவனுக்கு அப்படி எரிச்சல் மேம்பட்டு அதை விட்டெறிந்தான்.
அவர்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. வீட்டில் இன்னும் ஒரு குவா குவா சத்தம் கேட்கும் பாக்கியம் வரவில்லை. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் விடுப்பு விட்டுவிடுகிறாள்.
ஆபிஸில் கூட வேலை செய்யும் பெண் ஸ்டாஃப்கள்கூட, ‘ இன்னும் வீட்டில் விசேஷமேதும் இல்லையா ‘ என்று கண்சிமிட்டினார்கள். இவனுக்குத்தான் அவமானமாய் இருந்தது.
அவர்கள் மட்டுமல்ல. சொந்தக்காரர்கள் கூட ஜாடைமாடையாய் கல்பனாவைக் கேட்டு விட்டார்கள். அவள்தான் முந்திக்கொண்டு, ‘ எங்களுக்கென்ன வயசா ஆகிவிட்டது. மெல்லப் பெற்றுக் கொள்கிறோமே ‘ என்று சர்வசாதாரணமக சொல்லி விடுகிறாள்.
யோசிக்க யோசிக்க மண்டை வலித்தது. அது எப்படி உண்டாகாமல் போகும்… எத்தனையோ பேர் உண்டாகி அபார்ஷன் எல்லாம் செய்து கொள்கிறார்களே. ஆபிசில் கூட பூர்ணிமாவுக்கு அபார்ஸனாகி மூன்று நாட்களாய் முகத்தை உம்மென்று தூக்கிவைத்துக் கொண்டிருந்தாளே. மற்ற பெண் ஸ்டாப்கள் எல்லாம் அவளை ஏதோ துக்கம் விசாரிப்பது போல பேசி சமாதானமும் செய்தார்களே.
இவளிடம்தான் குறையேதுமிருக்கிறதோ. அதை வெளியேக் காட்டிக்கொள்ளாமல், ‘இப்போ என்ன அவசரம் ‘ என்று சாக்குப்போக்கு சொல்லி சமாளிக்கிறாளோ.
xxxxxx
அவனது சிந்தனையைக் கலைப்பது போல, ‘ ஏங்க, டீ எடுத்துக்கோங்க…’ என்று கப்பை நீட்டினாள் கல்பனா.
‘ உக்கும்… ‘ என்று வெறுப்பை உமிழ்ந்தவன் ‘ அது ஒன்றுதான் குறைச்சல்‘ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு கப்பைப் பிடுங்கிக் கொண்டான்.
அவளோ, ‘ சார் ஏதோ மூட் அவுட்டாகியிருக்கறமாதிரி தெரியுது… ஆல்ரைட்… டீயை குடிங்க. டென்ஷன் தானாக் குறைஞ்சுடும் ‘ என்றுவிட்டு இன்னொரு கப்பை தானும் எடுத்துக் கொண்டு போய் புழக்கடைப்பக்க கதவு நிலைப்படியில் காலைநீட்டிவிட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள்.
அங்கே துளசி மாடம், பூச்செடிகள், கொய்யாமரம், போர்வெல் அடி பைப்பு, ஒரு உரைகிணறு, துணிதுவைக்க மேடை என்று எல்லாம் இருக்கின்றன. அடிக்கடி இரண்டு பேரும் முன்பெல்லாம் அந்த நிலைப்படியில் இடித்துக்கொண்டும் உரசிக்கொண்டும் உட்கார்ந்தபடிதான் கதை பேசுவார்கள். இப்போதெல்லாம் அப்படி இல்லை.
டீயை உறிஞ்சிக் கொண்டே புழக்கடைப்பக்கம் வந்தவன் படியிறங்கி போய் துணி துவைக்கும் கல்மேல் உட்கார்ந்து கொண்டான்.
அவனுக்கு நேராய் செம்பருத்திச் செடி உயர்ந்து தழதழவென வளர்ந்து நின்றிருந்தது. அவளுக்கு செம்பருத்திப் பூவென்றால் உசிர். கல்யாணத்திற்கு முன்பு தலைமுடி கன்னங்கரேல் என்று இருப்பதற்காக செம்பருத்திப் பூவுடன் மருதாணி போன்றவற்றைப் போட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்ததாய் ஆயிரம் தடவைகள் சொல்லுவாள்.
திரும்பிப் பார்த்தான். அடர்கருப்பாய் விளம்பரப்படங்களில் காட்டுவதைப் போலத்தான் கன்னங்கரேலென்று இருந்தது அவளது முடி. எழுந்து நின்றாளானால் அவளது இடுப்பு வரைத் தொங்கும் ஜடை. ஆரம்பத்தில் அந்த அழகை ரசித்திக்கிறான். இப்போது எதைப் பார்த்தாலும் எரிச்சல்தான். இப்போதும் வந்தது.
‘ ச்சை ‘ என்று முனகிக்கொண்டு சட்டென திரும்பி உட்கார்ந்து கொண்டான்.
ஒருமுறை ஊருக்குப் போயிருந்தபோது அவள்தான் இந்த செம்பருத்திச் செடியை ( சிறிய அளவு ) ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு மண்ணுடன் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். அதை நட்டு தினமும் தண்ணீர் ஊற்றினாள். அது வளர்கிறது வளர்கிறது, அவளது ஜடையைப் போலவே. ஆனால் என்ன பிரயோஜனம்? இன்னும் அது பூக்கவே இல்லை, அவளைப் போலவே! ஊரில் எல்லாச் செடிகளுமேவா இவ்வளவு உயரம் வளர்ந்தும் ஒரு மொட்டு விடாமல் இருக்கும்.
‘ச்சை…’
மொபைல் அடித்தது. அவனது மொபைல்தான். ஆனால் அது அவளுக்கருகில் கிடந்தது. படியில் வந்து உட்காரும்போதே அவளுடைய மொபைலுடன் சேர்த்து அவனது மொபைலையும் அவள் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்று தெரிந்தது.
‘ ஏங்க… அப்பா கூப்பிடறாருங்க ‘ என்றபடி அவனது மொபைலை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவனுக்குத் தெரியும் அது அவளது அப்பாவின் கால்தான் என்று. ஒரு சிலருக்கு மட்டும் தனித்தனி ட்யூன் வைத்திருந்தான்.
‘ ஏங்க… இன்னும் என்ன யோசனை. கால் கட்டாகப் போகுது… ‘ என்று எழுந்து போய் நீட்டினாள். வேண்டா வெறுப்பாய் போனை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டான்.
தீபாவளிக்கு ஊருக்கு வரவேண்டுமாய்… அதைச் சொல்லத்தான் போன். ஒப்புக்குச் சப்பாணியாய் உம் கொட்டிவிட்டு போனை வைத்துவிட்டான்.
அடுத்த நிமிடம் போன் வனிதாவின் மொபைலுக்கு வந்தது. அவளது அப்பாதான் இதிலும் கூப்பிட்டார். அவள் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டாள்.
‘ ஏன்மா… மாப்பிள்ளை ஏதும் பிசியா இருக்காரோ. இன்னிக்கு ஞாயித்துக்கிழமைதானே… சுரத்தில்லாமல் பேசினாரே ‘ என்றார்.
‘ இல்லேப்பா, அவருக்குத் தலைவலி. நான்தான் பாம் தடவி விட்டுட்டு டீ போட்டுக் குடுத்தேன், குடிச்சிட்டிருக்கார். அதான். மத்தபடி ஒண்ணுமில்லை… ‘ என்று இவள் சமாளித்தாள்.
பேசி முடித்துவிட்டு, எழுந்து உள்ளே போனாள். புருஷனைத் தேடினாள். அவன் படுக்கையறையில் குப்புறப் படுத்திருந்தான்.
புன்னகைத்தபடியே போனவள் அவனருகில் படுத்துக் கொண்டு அவனது தலைமுடியை கோதி விட்டபடி, ‘அப்பா பேசிமுடிச்சதும் அம்மாவும் பேசினாங்க… ஜாலியா இருந்ததெல்லாம் போதும், இனிமேலும் தள்ளிப்போடாதே, சட்டுபுட்டுன்னு ஒரு குழந்தையைப் பெத்துக்கற வழியைப் பார்னாங்க. நான் குளிச்சிட்டு வர்றேன். நீங்களும் ரெடியாகுங்க. டாக்டரம்மாவைப் போய் பார்த்துட்டு வரலாம். ‘ என்றாள்.
உடனே திரும்பி ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தான்.
‘ ஆமாம், காப்பர் டீயை எடுத்துடப்போறேன் ‘ என்றாள்.
‘ எனக்கேத் தெரியாமலா… எப்படி… ‘ உள்ளுக்குள் முனகினான்.
அடுத்த மாதமே நீண்டு வளர்ந்திருந்த செம்பருத்தி செடி ஒரு மொட்டுவிட ஆரம்பித்தது.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings