in ,

மூடுபனி கோபுரங்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

            இரவு. ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தேன்.  கவனம் புத்தகத்தினுள் செல்ல மறுத்தது. “அந்த வாத்தியார் சொல்வதுதான் சரியோ?… நான்தான் முட்டாள்தனமாய் “இந்தக் கிராமத்துக்கு மாற்றல் வாங்கிட்டு வந்திட்டேனோ?”

                சிவகிரி கிராமத்துப் பள்ளிக்கு தலைமையாசிரியராக மாற்றலாகி வந்த நான் அந்த ஊரைப் பற்றித் தெரிந்து கொள்ள அங்கு நீண்ட காலம் ஆசிரியராகப் பணிபுரியும் கல்யாணசுந்தரத்திடம் விசாரித்தேன்.  அவருடைய விளக்கம்தான் என்னை இடிந்து போகச் செய்திருந்தது.

                 “ஊரா சார் இது?… சரியான முட்டாப்பய மக்க ஊரு சார்… ஆண்டவன் இந்த ஊரு ஜனங்க தலைல மூளைய வைக்க மறந்திட்டான்”

                “என்ன சார் இப்படிச் சொல்லிட்டீங்க…?”

                 “சார்… நான் சொல்றது சத்தியம்… எவனுக்குமே சராசரி அறிவு கூட இல்லை சார்… நீங்க ஒண்ணு கேட்டா… வேற மாதிரி பதிலைச் சொல்லுவானுக… தொடர்ந்து பேசினா உங்களுக்கு தலையே சுத்த ஆரம்பிச்சிடும்…”

                நான் அவரையே ஊடுருவிப் பார்க்க,

                 “இவனுகளுக்கு காட்டிலும் மேட்டிலும் மாடு மாதிரி வேலை செய்யத் தெரியும்… நல்லாத் திங்கத் தெரியும்… பஞ்சாயத்துத் திண்ணைல உக்காந்து வம்பளக்கத் தெரியும்… திருவிழா சமயங்கள்ல குடிச்சிட்டு ஆட்டம் போடத் தெரியும்… அப்பப்ப வெட்டுக்குத்து நடத்தத் தெரியும்… அவ்வளவுதான்!” என்றார் கல்யாணசுந்தரம்.

                 “நீங்க இங்க எத்தனை வருஷமா இருக்கறீங்க?”

                 “பத்து வருஷம்!” அவர் பேச்சில் வெறுப்பு.

                 “நம்ம ஸ்கூல்ல மொத்தம் எத்தனை ஸ்டூடண்ட்ஸ்?”

                 “பதிவேட்டுல ஒரு எழுவத்தஞ்சு… ஆனா வந்து போறது பத்தோ… பதினஞ்சோதான்!… குழந்தைகளை ஸ்கூல்ல சேர்த்தா யூனிபாரமும்… நோட்டு புத்தகங்களும் இலவசமாத் தர்றோம்… அதுக்காக குழந்தைகளை ஸ்கூல்ல சேர்ப்பாங்க… அப்புறம் அதுகளை வயல் வேலைக்கோ… மாடு மேய்க்கவோ அனுப்பிடுவாங்க… சிலதுக கொஞ்ச நாளைக்கு வரும்க… அப்புறம் அதுகளும் போய்டும்க”

                 “நீங்கதான் சார்…  அதுகளுக்கேத்த முறைல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கணும்”

                 “சார்.. இந்த ஊர் ஆட்களுக்கு அறிவு மந்தம்… அதே மாதிரிதான் அதுகளோட குழந்தைகளும்… ஞானசூன்யங்க… எத்தனை தடவ சொல்லிக் கொடுத்தாலும் மண்டைல ஏறாது… மக்குக…!”

                ஊர்க் குழந்தைகளை அவர் கேவலமாய்ப் பேசியது எனக்குள் ஆத்திரத்தையே மூட்டியது.  தொடர்ந்து பேசப் பிடிக்காமல் உடனே அகன்றேன்.

                மறுநாள் காலை வயல்வெளிப் பக்கம் நடக்க ஆரம்பித்தேன்.

                                இஞ்சி படருமலை! ஏலம்சுக்கு காய்க்குமலை!….

                                மஞ்சி படருமலை! மகத்தான சுருளிமலை!….

                                ஆக்கடிக்குந் தேக்குமரம்! அலை மோதும் சொம்பைத் தண்ணி!

                                நீரோட நெல்விளையும்! நீதியுள்ள பாண்டி நாடு!

                பாட்டுச்சத்தம் ஈர்க்க திரும்பினேன்.  நாற்று நடும் பெண்கள் பாடிக் கொண்டே நடவு செய்ய  “படிப்பறிவே இல்லாத இவங்க இவ்வளவு தெளிவாப் பாடறாங்களே?” வயலருகே வந்தேன்.

                 “தம்பி யாரு?” நடவுக்காரியொருத்தி வினவ, “நம்மூரு பள்ளிக்கோடத்துக்கு புதுசா வந்திருக்கற பெரிய வாத்தியாரு…”

                நடவு தொடர்ந்தது.

                             அடிக்கொரு நாத்தை நடவங்கடி… அடி

                                ஆணவம் கெட்ட பெண்டுகளா!!

                                பிடிக்கொரு படி காண வேணுமடி… அடி

                                பிரிச்சுப் போட்டு நடவுங்கடி!!

                                பொழுதும் போச்சுது பெண்டுகளா

                                போகணும் சீக்கிரம் புரிஞ்சுக்கடி

                                புளிய மரத்துக் கிளையிலதான்

                                புள்ள அழுவுது கேளுங்கடி

                என்னால் நம்பவே முடியவில்லை. “எழுதப் படிக்கத் தெரியாத கூலிக்காரப் பொம்பளைக எப்படி நெறைய பாட்டுக்களை மனப்பாடம் செஞ்சு வெச்சிருக்காங்கன்னா… ” அங்கிருந்து நகர்ந்தேன்.

                 “என்ன வாத்தியாரு தம்பி! வண்டி வர்றதைக் கூட கவனிக்காம அப்படியென்ன ரோசனை?” வண்டியை நிறுத்தியவாறே வண்டிக்காரன் கேட்க,   சொன்னேன்.

                 “நம்ம கைவசம் நெறைய வண்டிப்பாட்டுக இருக்கு…”

                 “அப்படியா?…எங்கே ஒண்ணை எடுத்து விடுங்க”

                                 ”பருப்பு பிடிக்கும் வண்டி

       இது பட்டணந்தான் போகும் வண்டி….                            

               பருப்பு வெலை ஏறட்டும்டி!!

                                 பதக்கம் பண்ணிப் போடுறண்டி!!

                                 அரிசி பிடிக்கும் வண்டி

                                 இது அவினாசி போகும் வண்டி

                                 அரிசி வெலை ஏறட்டும்டி!!

                                 அட்டி பண்ணிப் போடுறண்டி!!

                                 கொள்ளு பிடிக்கும் வண்டி

                                 இது கோட்டைக்குப் போகும் வண்டி

                                 கொள்ளு வெலை ஏறட்டும்டி!!

                                 கொலுசு பண்ணிப் போடுறண்டி

                மலைத்தேன்.  “வாரேஞ் சாமி… நேரமாச்சு” சொல்லி விட்டுப் பறந்தான் வண்டிக்காரன்.

                 “வண்டிக்காரனுக்குள் இத்தனை ஞானமா?” வியந்தபடியே நடந்தேன்.

               மதியம் 3.00. படுத்திருந்த என்னை சிறுவர்களின் சத்தம் உசுப்ப எழுந்து தெருவுக்கு வந்தேன். ஏழெட்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

                அவர்களை அருகினில் அழைத்துப் பேசினேன். அவர்களனைவரும் பள்ளிக்கு வராதவர்கள் என்றும், காலை முதல் மாலை வரை மலைச்சரிவினில் மாடு மேய்ப்பதே அவர்களின் உலகம் என்றும் அறிந்தேன்.

                சட்டென்று “நீங்கெல்லாம் ஆடு மேய்க்கும் போது பாட்டுப் பாடுவீங்களா?”

                அவர்கள்  “ஆமாம்” என்று தலையாட்ட,  “அப்ப… நீ ஒரு பாட்டுப் பாடு கேக்கலாம்…” ஒரு சிறுவனிடம் கேட்டேன்.  அவனும் சந்தோஷமாய் ஆரம்பித்தான்.

                                 குளத்துக்கு அந்தப்பக்கம்

                                ஆடு மேய்க்கும் கூளைப் பெண்ணெ

                                 குளத்துலதான் தண்ணி வந்தா 

                                 என்ன செய்வே சொல்லு கண்ணே!….

                                 கொல்லனைத்தான்.கூப்பிடுவென்…

                                குறிஞ்சிக் கப்பல் செய்திடுவான்

                                ஆத்துலதான் தண்ணி வந்தா 

                                என்ன செய்வே சொல்லு கண்ணே

                                 ஆசாரியக் கூப்பிடுவேன் 

                                 அரிஞ்சுக் கப்பல் செய்திடுவான்

                என் கண்களில் நீரே திரண்டு விட்டது.   “இந்த ஊர் ஜனங்களையும்… குழந்தைகளையும் பத்தி அந்தப் பழைய வாத்தியார் சொன்னது அத்தனையும் தவறான கருத்துக்கள்… ஒரு எழுத்துக் கூடப் படிக்கத் தெரியாத இந்தச் சிறுவர்கள் கேள்வி ஞானத்தை மட்டுமே வெச்சுக்கிட்டு பாடல்களை அற்புதமாப் பாடறாங்கன்னா… இவங்களோட ஞாபக சக்தி சாதாரணமானதல்ல… நிச்சயம் இவங்களைப் படிக்க வெச்சா… பெரிய ஆளா வருவானுக” எனக்குள்ளொரு தீர்மானம் உருவானது.

                மறுநாள்  கல்யாணசுந்தரத்தை அழைத்து “பத்து வருஷமா  பசங்களுக்குப் பாடம் எடுக்கறதாச் சொன்னீங்க… அப்ப… தமிழ்ப்பாடமும் எடுத்திருப்பீங்க… எங்கே நாலடியார்ல ஒரு செய்யுள் சொல்லுங்க…பார்க்கலாம்”

                அவர் மண்டையைச் சொறிய, “போகட்டும்… புறநானூற்றுல ஒரு செய்யுள்!.. பெரிய புராணத்துல?… கலிங்கத்துப் பரணில?… என்ன சார் பத்து வருஷமா… அதே பாடத்தை… அதே செய்யுளை… திருப்பித் திருப்பி சொல்லித் தர்றீங்க…  ஒரு செய்யுளாவது மனப்பாடம் ஆகியிருக்கணுமே?”

                  “சார்… புத்தகத்தைப் பார்த்து செய்யுளைப் படிப்போம்… அர்த்தத்தை உரையாடலா சொல்வோம்… அவ்வளவுதான்… செய்யுளையெல்லாம் மனப்பாடம் பண்ணிக்க முடியுமா?” அவர் சமாளிக்க, “பட்டப் படிப்பு படிச்ச உங்களுக்கே பத்து வருஷமா திருப்பித் திருப்பி படிக்கற செய்யுள் மனசுல ஒட்டலை… ஆனா படிப்பு வாசனையே இல்லாத கிராமத்து மக்கள் வெறும் கேள்வி ஞானத்துல எத்தனையோ நாட்டுப் பாடல்களை மனப்பாடம் செஞ்சு வெச்சுக்கிட்டு… துளியும் சறுக்காம… சரளமா பாடறாங்க… அவங்களைப் போய்… “மக்குக… மரமண்டைக… ஞானசூன்யங்க”ன்னு சொல்றீங்க… எங்கியோ இடிக்குதே”

                “அது வந்து… திரும்பத் திரும்ப கேட்கறதினால அதுகளுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும்”

                 “பெரியவங்க மட்டுமல்ல சார்… பள்ளிக் கூடப் பக்கமே ஒதுங்காத மாடு மேய்க்கற சிறுவர்கள் எத்தனை நாட்டுப் பாடல்களை மூளைக்குள்ளார வெச்சிருக்கானுக தெரியமா?”

          பெத்தவங்க பாடியிருப்பாங்க… அதைக் கேட்டு இதுகளும் பாடுதுக… இதிலென்ன அதிசயம்?”

         அன்னிக்கு சொன்னீங்க… “இந்த ஊர்ல பெருசு… சிறுசு… யாருக்குமே மண்டைல மூளையே வெச்சுப் படைக்கலை!… எல்லோரும் ஞான சூன்யங்கள்”ன்னு இப்பச் சொல்லுங்க யாருக்கு மூளை இல்லை?… யாரு ஞான சூன்யம்?”

         அவர் “திரு…திரு”வென விழிக்க, “சார்… யாரையும் தோற்றத்தைப் பார்த்து எளிதில் எடை போட்டுடக் கூடாது!.. எல்லாருக்குள்ளும் ஏதோவொரு திறமை இருக்கும்!… ஞானம் இருக்கும்!… அதைத் தோண்டியெடுக்க முடியாம… மொத்தமா ஞானசூன்யங்கள்ன்னு முடிவெடுத்துடக் கூடாது!… போங்க சார்  போயி நம்பிக்கையோட பாடம் எடுங்க சார்… இங்கிருந்து கூட ஒரு ஐன்ஸ்டின்… ஒரு அப்துல்கலாம் உருவாகலாம்”

        அவர் முனகிக் கொண்டே செல்ல, பள்ளிக்கூடப் பக்கமே வராத அந்த மாடு மேய்க்கும் சிறுவர்களை எப்படியாவது பள்ளிக்கூடத்திற்குள் வரவழைத்து, அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கியே தீருவது!… என்கிற கான்கிரீட் தீர்மானத்தோடு எழுந்தேன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 10) – வைஷ்ணவி

    அண்ணன் என்னடா? தம்பி என்னடா? (சிறுகதை) – சாமுண்டேஸ்வரி பன்னீர்செல்வம்