2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மாடியில் அமர்ந்து வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்த லஷ்மி அம்மாவை…வீட்டில் வேலை பார்க்கும் சரசு கூப்பிட்டாள்.
“அம்மா உங்க சினேகிதிகள் எல்லாம் லேடிஸ் கிளப்லயிருந்து வந்திருக்காங்க ..உங்கள கேட்டாங்க..”
“இதோ வரேன் சரசு.. வந்தவங்களுக்கு காபி, டிபன் எடுத்து வை” என்றவரே படிகளில் இறங்கினாள் லட்சுமி அம்மா.
கீழே தன் சினேகிதிகளுடன் தன் மூத்த மருமகள் ரேவதி அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். ஹாலுக்கு வந்து எல்லோரையும் வரவேற்றவள்,
” ரேவதி.. வித்யா எங்கே? அவளை கூப்பிடு.. என் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு அறிமுகப்படுத்தனும்” என்றாள்.
ரேவதி உள்ளே போய் வித்யாவை அழைத்து வர, வித்யாவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் சொல்லி அறிமுகப்படுத்தினாள்.
“அத்தை நான் போய் காபி எடுத்துட்டு வர்றேன், என்று ரேவதி நகர…
” ரேவதி.. நீ இரு. வித்யா.. நீ போய் எல்லோருக்கும் காபி எடுத்துட்டு வாம்மா ” என்றாள். வித்யா எல்லோருக்கும் காபி எடுத்துட்டு வந்து கொடுக்க..அவளை பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள் லஷ்மி.
ரேவதி மெதுவாக படியேறினாள். மாடியில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த ஆதவ்’ பாவம் ரேவதி ..அவ மனசு சங்கடப்படுது’ என்று நினைத்துக் கொண்டான்.
மறுநாள் தை வெள்ளி வீட்டு அம்மனுக்கு பூஜை செய்ய பரபரத்துக் கொண்டிருந்தனர் லஷ்மியும், ரேவதியும். சரசு உதவியுடன் வடை, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், எல்லாம் ரெடி பண்ணி விட்டார்கள். அம்மனுக்கு அபிஷேகம் பண்ணி, அலங்கரிக்க, எல்லோரும் பூஜை அறையில் கூடினர். ரேவதி வழக்கம் போல பூஜை பண்ண ரெடியா இருந்தாள்.
” ரேவதி! வித்யா புது மருமகள் ..இந்த வருஷம் அவள் பூஜை பண்ணட்டும்!” என்றாள்.
” ஏம்மா.. எப்போதும் ரேவதிதான பூஜை பண்ணுவா..”
“அதான் சொல்றேன். இன்னைக்கு வித்யா பூஜை பண்ணட்டும். “
இது ஒவ்வொன்றிலும் தொடர ..வித்யாவை தன் முக்கிய சொந்த பந்தங்கள் வீட்டிற்கு எல்லாம் கூட்டிக் கொண்டு போனாள். கோயில்களுக்கும் தன்னுடன் அழைத்துப் போனாள்.
ரேவதி போல் இல்லை வித்யா. தாமரை இலை தண்ணீராகத்தான் எல்லோரிடமும் பழகினாள்.ஆனாலும் ரேவதிக்கு மாமியார் தன்னை ஒதுக்குவது போல் தோன்ற தானே விலகிக் கொள்ள ஆரம்பித்தாள்.
ஆதவ்வுக்கும் கஷ்டமாக இருந்தது .அம்மா ஏன் மாறிட்டாங்க. ” ரேவதி.. ரேவதி..” என்று எப்பொழுதும் கூப்பிட்டுக் கொண்டே இருக்கறவங்க, வித்யா இரண்டாவது மருமகளாக வந்ததும் சுத்தமா இவளை ஒதுக்குறாங்களே ” என்று வருத்தப்பட்டான்.
ரேவதியை மேலும் வருத்தப்படுத்துவது போல நடந்தது அன்றைய நிகழ்வு. வழக்கமாக வீட்டுச் செலவுக்கு ரேவதியிடம் பணம் கொடுத்து விடுவார் லட்சுமி அம்மா. தினமும் வரவு செலவு கணக்கை ஒரு டைரியில் குறித்து வைத்து மாத இறுதியில் செலவு போக, மீதி பணத்தை அத்தை கையில் கொடுப்பாள் ரேவதி. இதுதான் மூன்று ஆண்டுகளாக நடைமுறையாக இருந்தது.
” ரேவதி! இந்த மாசம் வித்யா வரவு செலவுகளை கவனித்துக் கொள்ளட்டும்..வித்யா ரேவதி கிட்ட இருந்து நோட்டை வாங்கிக்கோ..” என்று லட்சுமி கூற, ரேவதி ரொம்பவே நொந்து போனாள்.மன வருத்தத்துடன் நோட்டை கொண்டு வந்து வித்யா கையில் கொடுத்தாள்.
வித்யா , ” இந்த வரவு செலவு கணக்கெல்லாம் சுத்த போர் அக்கா.. நீங்களே பாத்துக்கோங்க..” என்று சலிப்போடு கூற…
” அத்தை உன்ன தான் செய்ய சொல்லி இருக்காங்க. நீயே பாரு வித்யா ” என்றாள் ரேவதி.
ஒருவேளை திருமணம் ஆகி 3 ஆண்டு காலம் குழந்தை இல்லை என்று என்னை ஒதுக்குகிறார்களோ அத்தை? அந்த நினைப்பு ரேவதியின் கண்ணில் கண்ணீரை நிறைத்தது.
அன்று மாலை லட்சுமியை பார்க்க வந்தாள் சுமதி. இருவரும் மாடியில் பேசிக் கொண்டிருக்க, சரசு வீட்டில் இல்லாததால் காபி போட்டுக் கொண்டிருந்தாள் ரேவதி.
” வா சுமதி! நீ வந்ததை கவனிக்கல.. ரேவதி கீழே இல்லையா நீ வந்தத சொல்லியிருந்தா நானே கீழே வந்திருப்பேனே” என்றாள்.
” ரேவதி சொல்றேன்னு சொன்னா.. நான் தான் வேண்டாம் நானே மேலே போய் பார்த்துகிறேன்னு வந்தேன்” என்றாள் சுமதி.
” உட்காரு சுமதி! இந்தா தண்ணி குடி..” என்று பாட்டிலை நீட்டினாள். தண்ணியை வாங்கி குடித்த சுமதி..
” பாவம் அந்த பொண்ணு ரேவதி” என்றாள்
” ஏன் சுமதி? ரேவதிக்கு என்ன குறை இந்த வீட்ல? “
” நேத்திக்கு வரைக்கும் குறையில்ல தான். ஆனால் வித்யா வந்ததும் எல்லாம் தலைகீழா மாறிடுச்சு .இதப் பத்தி உன்கிட்ட கொஞ்ச நாளா பேசணும்னு நினைச்சிட்டிருந்தேன். இன்னைக்குத் தான் சந்தர்ப்பம் கிடைச்சுது ..”
” லட்சுமி… உன் மனசு எனக்கு தெரியும். நீ உன் மருமகள் இருவருக்குள்ளும் எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டே… ஆனால் உன் செயல்களைப் பார்க்கும்போது நீ வித்யாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறயோன்னு தோணுது. ரேவதி 3 வருஷமா செல்லப் பிள்ளையா இந்த வீட்ல வளைய வந்திருக்கா. அடுத்த மருமக வந்ததும் மனசளவில் தடுமாறிப் போயிருப்பா .இப்ப நீ வித்யாவை எல்லாம் செய்யச் சொல்றது.. அவகிட்ட பொறுப்பை கொடுக்கிறது… உனக்கே நியாயமா படுதா சொல்லு..”சுமதி பேசப்பேச அதிர்ந்து போனாள் லஷ்மி ..
” என்ன சுமதி சொல்ற? நான் அந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை. புதுசா வந்த மருமகள் வித்யா.. நம்ம குடும்ப வழக்கம் எல்லாம் முதல்ல சொல்லிக் கொடுத்தால் தான்.. பிறகு அவங்க அவங்க குடும்பத்தை கவனிக்க தான் அவங்களுக்கு சரியா இருக்கும். ரேவதி ரொம்ப பொறுப்பான பொண்ணு.. அமைதியானவ.. அவ எளிதா குடும்ப பொறுப்ப கவனிக்கப் பழகிட்டா…
ஆனா வித்யா அப்படியில்ல கொஞ்சம் படபடப்பான டைப். அவளுக்கு பொறுப்பா இந்த பழக்கங்களை கத்துக் கொடுத்து, எல்லா விஷயங்களையும் பழக்கிக் கொடுத்தாதான் நல்லதுன்னு அவளுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.
ரேவதி செஞ்சி காமிச்சா அவ தான் செய்றாளே நமக்கு என்னன்னு இவ ஒதுங்கி இருப்பா. அதனால தான் நான் ரேவதியை தடுத்து..வித்யாவை செய்ய வைக்கிறேன்.. ரேவதிய ஒதுக்கிட்டு வித்யாக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல சுமதி..”
” லட்சுமி! நீ ரேவதியவே வித்யாவுக்கு சொல்லிக் கொடுக்க சொல்லி இருக்கலாம்ல..”
” சுமதி! ஒர்படிகள் ரெண்டு பேரும் இப்ப ஒத்துமையா இருக்கிறாங்க… ரேவதி ஏதாவது ஒரு வேலை சொன்னா வித்யா அத எப்படி எடுத்துக்குவான்னு தெரியல.. இவளும் நம்மள மாதிரி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தவ தானே? இவ எதுக்கு நம்மள அதிகாரம் பண்றான்னு தோணும்.
ஆனா நீ சொன்ன பிறகு என் தப்ப புரிஞ்சுகிட்டேன். நான் ரேவதியை புண்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். ஒரு நல்ல சினேகிதியா நீ இதை எனக்கு சுட்டி காட்டுன. மனதில் பட்டதை எடுத்துச் சொன்ன ..இனிநான் பக்குவமா நடந்துக்கிறேன் “
” என்னடி எதுக்கு உணர்ச்சி வசப்படுற?”
” இல்ல சுமதி! நான் வித்யாவ நெறிப்படுத்தறேன்னு ரேவதியை கஷ்டப்படுத்திட்டேன். அவ காயப்படுவான்னு நினைச்சுப் பாக்கல…ரேவதி என் பொண்ணு மாதிரி… வித்யா வந்ததால அவ மேல எனக்கு இருக்கிற பாசம் எப்பவும் குறையாது…” என்று தழுதழுத்தாள்.
சுமதிக்கு காபி கொண்டு வந்த ரேவதியின் காதில் அத்தையின் வார்த்தைகள் அனைத்தும் விழுந்தன. அவள் கண்கள் நெகழ்ச்சியில் கலங்கிட, மனதில் மூடுபனியாய் இருந்த குழப்பங்கள் விலக, தன் அத்தையை நினைத்து பெருமிதத்துடன் சந்தோஷமாய் காபி தம்ளருடன் உள்ளே நுழைந்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமையான கதை… அருமையான விளக்கம்..