எழுத்தாளர் பாத்திமா ஜெமீனா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அன்று திங்கட்கிழமை, வாரத்தின் முதல்நாள். ஆகையால் அவசரமாக ஆபீஸ்க்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன் என் மூன்று வயது மகன் கவினை பக்கத்து வீட்டு அம்மாவிடம் கொண்டு விட்டேன்.
“பத்திரம் கண்ணு, பாட்டிய தொந்தரவு பண்ணாம இருங்க” என்றப்படி கவினின் கன்னத்தை செல்லமாக கிள்ளினேன். அவன் சிரிக்கிறான்.
“கவின் குட்டிக்கு என்ன வேணும்”
“சாக்லெட்” என்றதும் என் முகம் மாறியது
சாக்லெட் எனும் போதே என் கணவர் கார்த்திக்கின் ஞாபகம் வந்துவிடும். அவர் இறந்த பிறகு நான் ஒருமுறைகூட சாக்லெட் சாப்பிட்டதில்லை.
“அம்மா ஆபீஸ் விட்டு வரும்போது வாங்கிட்டு வரேன்” என்றுவிட்டு பஸ் ஸ்டேஷனை நோக்கி வேகமாய் நடையை கட்டினேன்.
பஸ் வர போய் ஏறிக் கொள்கிறேன். காவட்சந்தியை தாண்டி பஸ் இப்போது பிரதான வீதியில் பயணிக்கிறது. என் கைக்கடிகாரத்தை பார்க்கிறேன். மணி எட்டை காட்டுகிறது. இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் ஆபீஸை அடைந்து விடலாம்.
இன்னுமொரு ஸ்டேஷனில் பஸ் போய் நிற்க சில பயணிகள் ஏறிக்கொண்டார்கள். அதில் ஒரு பெண் குழந்தையும் கையுமாக ஏறியவள் நேரே என் பக்கத்தில் வந்தமர்ந்துக் கொண்டாள்.
திரும்பி அவளை பார்த்தேன். என்னால் நம்பமுடியவில்லை. எத்தனையோ வருடங்களுக்கு பின்பு என் தோழி மீனாவை கண்முன்னே கண்டேன்.
“மீனா” என்றேன் கொஞ்சம் சத்தமாகவே
“பிரியா தானே” என்றவள் குழந்தையை தூக்கி மறுதோளில் போட்டப்படி இடதுகையால் என் கரங்களை இறுக பிடித்துக் கொண்டாள்.
“எவ்வளவு காலம் உன்ன பார்த்து” என்றாள் மீனா .
“ஆமா மீனா… என்ன புதுசா பஸ்ஸில…” எனும் போதே அவன் முகம ஒருவிதமாய் மாறி கவலையின் ரேகைகள் தோன்றியதை அவதானித்தேன்.
“சாரி மீனா… தப்பா ஏதாச்சும் கேட்டுட்டனா…”
“இல்ல பிரியா…. இப்ப கொஞ்ச நாளாகவே பஸ்ஸிலதான் பயணம். குழந்தைக்கு சுகமில்ல மருந்து எடுக்க போய் கொண்டிருக்கன்” என்றுவிட்டு மெதுவாக குழந்தையின் முதுகை வருடினாள்.
மீனாவும் நானும் ஒரே பள்ளியில் ஒன்றாய் படித்தவர்கள். அவள் அப்பா ஊரிலே பெரிய பணக்காரர். மீனா பள்ளிகூடத்திற்கு கூட காரில்தான் வருவாள். அப்படி வசதியாக வாழ்ந்தவள் இன்று அரசாங்க பஸ்ஸில் பயணிப்பது எனக்கு புதினமாக இருந்தது .
“என்ன மீனா… பார்க்க ஒருமாதிரி இருக்க ஏதாவது பிரச்சினையா?” என மெதுவாகக் கேட்டேன்.
மெல்மாய் ஆம் என தலையாட்டினாள். என்ன பிரச்சினை என்று விசாரித்தேன். அவள் தன் நிலைமையை விவரித்தாள். தானும் தன் கணவர் ராமுவும் திருமணமாகி வேற்றூரில் வசித்து வந்ததாக சொன்னாள். மேலும் அவள் இவ்வாறு சொன்னாள்.
ராமு ஒரு அலுமினிய பேக்டரியில் வேலை செய்தார். எங்களுக்கு குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குள்ளே ராமுவுக்கு அடிக்கடி சுகமில்லாமல் வர டாக்டரை விசாரித்து பார்த்தோம். அவர் அலுமினிய பேக்டரியில் வேலை செய்த காரணத்தினால் அலுமினிய துகள்கள் ராமுவின் நுரையீரலை ரொம்ப பாதித்திருந்தது. அவரை காப்பாற்ற எவ்வளவு முயன்ற போதும் பயனில்லை.
இப்போ ராமு இறந்து ஆறு மாதமாகிறது. எங்க நிறைய சொத்துகளை விற்றுதான் சிகிச்சை செலவு செய்தோம். இப்போதைக்கு தன் நகையொன்றை அடகு வைத்துதான் செலவுகளை கவனிப்பதாகவும் சொன்னாள். எனக்கு அவள் நிலைமையை கேட்டதும் கவலையாக இருந்தது. விதவையாகிய நான் இன்றுமொரு விதவைக்கு ஒருசிறந்த வழிக்காட்டலை வழங்க வேண்டுமென நினைத்தேன்.
“கவலைபடாதே மீனா. நானும் இதே போன்ற ஒரு பிரச்சினைக்கு தான் முகம் கொடுத்தேன். ஆனாலும் என் கணவர் கார்த்திக் தூர நோக்குடன் செய்துவிட்டு போன செயல் என்னையும் குழந்தையையும் இப்போ சந்தோஷமா வாழ வைச்சிருக்கு” என்றேன் மீனாவைப் பார்த்து.
“என்ன பிரியா சொல்லுற… எனக்கு ஒன்றும் புரியல” என்றபடி புருவங்களை உயர்த்தி என்னை பார்த்தாள். அப்போதுதான் அவளிடம் என் கதையை சொன்னேன்.
கார்த்திக்கும் நானும் காதலித்து திருமணம் செய்தோம். இதனால் குடும்பத்தவர்கள் ஒதுக்கி வைத்தார்கள். ஆகவே இந்த ஊரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து எங்க வாழ்க்கையை ஆரம்பித்தோம்.
எங்க காதலின் சின்னமாய் ஒரு ஆண் குழந்தையையும் பிறந்தான். எங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் இரட்டிப்பானது. கார்த்திக் ஒரு சாக்லெட் கம்பனியில் மேனேஜராக பணிபுரிந்தார். எல்லா செலவுகளையும் கார்த்திக்கே பார்த்துக் கொண்டார். இதனால் எனக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்கல்ல.
சந்தோஷமா போய் கொண்டிருந்த எங்க வாழ்க்கையில திடீர்ன்னு விதி விளையாடியது. ஏதோ ஒரு பிரச்சினையால் கார்த்திக் வேலை செய்த சாக்லெட் கம்பனியில் தீ பற்றிக் கொண்டது. அந்த விபத்தில் என் கணவர் கார்த்திக்கும் காலமானார். கார்த்திக்கின் மரணச்செய்தியை கேட்டதும் நான் இடியேறு கேட்ட நாகம் போலானேன்.
அவரின் ஈமகிரியைகள் முடிந்து ஒரு வாரத்திலேயே வீட்டுவாடகை கேட்டு வீட்டு சொந்தகாரர் வந்து வாசலில் நின்றார். கையில் எஞ்சியிருந்த கொஞ்சம் பணத்தை கொடுத்தனுப்பினேன். அதை தொடர்ந்து இன்னும் எவ்வளவோ செலவுகள்.
நெருக்கிய நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் கடனுக்கு பணம் கேட்டு கையேந்தினேன். எவரிடமும் பதிளில்லை. எந்தவித வருவாயும் இன்றி எப்படி கடனை திருப்பி தருவீர்கள் என்பதே அவர்களின் கேள்வி. மௌனம் மட்டுமே என் பதிலாய் இருந்தது.
வெட்கத்தை விட்டு குடும்பத்தவர்களிடம் உதவி கேட்டேன். அவர்களும் கைவிரித்து விட்டார்கள். மனமுடைந்து போனேன். தனிமரமாய் நின்ற எனக்கு உதவிட அப்போது யாரும் முன்வரவில்லை.
சொந்தமாக உழைக்க முடிவெடுத்தேன். ஆபீஸ் ஒன்றில் போய் வேலைக் கேட்டேன் ஐம்பதுனாயிரம் பணத்தை நீட்டினால் மட்டுமே வேலையில் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார்கள்.
எனக்கு தகுதியிருந்தும் பணமே வேலைக்கும் தடையாய் இருந்தது. கார்த்க்கின் இழப்பு என்னை பெரிதும் பாதித்தது. சில மாதங்களாக வாடகை பணம் செலுத்தாத காரணத்தினால் வீட்டை காலி பண்ண சொல்லி விட்டார்கள். திடீரென ஒருநாள் என் மகன் எங்கிருந்தோ டயரி ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான், அது கார்த்திக்குடையது.
அதை எடுத்து வாசித்துப் பார்த்தேன். என் கண்களிலிருந்து என்னையறியாமலே கண்ணீர் வழிந்தது. காரணம் கார்த்திக் பிரசித்தி பெற்ற காப்புறு கம்பனியொன்றில் ஆயுள்காப்புறுதி திட்டத்தைப் பெற்றிருந்தார். தான் ஒருவேளை இறந்துப் போய்விட்டால் அந்த கம்பனிக்கு தகவல் கொடுக்கும்படியும் அதன் பலனை பெற்றுக் கொள்ளும்படியும் அதில் எழுதியிருந்தது.
தூரநோக்கு சிந்தனையுடன் எங்கள் வாழ்விற்காக அவர் செய்திருந்த பணப்பாதுகாப்பை நினைத்துப் பூரித்துப் போனேன். அக்காப்புறுதி நிறுவனத்திலிருந்து பெற்ற ஒரு தொகை பணத்தை கொண்டு என் வேலையை நிரந்தரமாக்கிக் கொண்டேன். அத்தோடு எங்களது வாடகை வீடு சொந்த வீடானது. என கதையையை மீனாவிடம் சொல்லி முடித்தேன்.
“உண்மையாகவா பிரியா?” என்றாள் ஆச்சிரியத்தோடு.
“ஆமா மீனா… உண்மையாகத்தான் என் மகனுடைய எதிர்காலத்துக்காகவும் இதே காப்புறுதி நிறுவனத்தில்தான் நானும் முதலீடு செய்து வருகிறேன். நீயும் படித்தவள். அதனால என் செலவில் எங்க ஆபீஸிலே வேலையோன்றை எடுத்துத் தாரன்”
“ரொம்ப தாக்ஸ் பிரியா..” அவள் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது.
“உன் குழந்தையின் எதிர்கால நல்வாழ்வுக்காக நீ என்ன செய்ய வேண்டுமென இப்போது உனக்கு தெரிந்திருக்குமல்லவா? எனவே யோசித்தொரு நல்ல முடிவுக்கு வா” என்றேன் .
நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. பஸ்ஸை விட்டு இறங்கும் போது திரும்பி பார்த்தேன். அவள் தெளிவான முடிவு எடுத்தவள் போல் அவள் கண்ணில் நம்பிக்கை ஒளி வீசுவதைக் கண்டு மகிழ்ச்சி யோடு இறங்கினேன். ஒரு அபலைக்கு நல்வழியொன்றை காட்டிய திருப்தியில் ஆப்ஸை நோக்கி நடக்கிறேன்.
எழுத்தாளர் பாத்திமா ஜெமீனா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings