2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“டேய்.. சித்தப்பா, மும்பையிலிருந்து வர்றான். அவனுக்கும் சேர்த்து ஏதாவது நல்ல அயிட்டமாக வாங்கிட்டு வந்துரு” என்றார் அப்பா ராசா, மகன் செல்வனிடம்.
“சரி அப்பா” என்றான் செல்வன்
“என்னங்க. நம்ம வீட்டிலே நம்ம பொண்ணுக்குக் கலியாணம். நம்ம வீட்டுக்கு வர்ற உங்க தம்பிக்கு தண்ணி வாங்கிக் குடுக்கிறதுலே குறியாக இருக்கீங்க. அவனாவது கொஞ்சம் வேல செய்வான். அதையும் கெடுத்திருவிய” என்றாள் மனைவி ரெஜினம்மாள்.
செல்வன் அப்பாவைத் திரும்பிப் பார்க்க “நீ போல. உங்கம்மாவுக்கு வேற வேலையில்லை. அப்புறம் சித்தப்பா ரயிலிலே எறங்கினதும் காரிலே கூட்டிக்கிட்டு நேரா அந்த ஜோசியக்காரன பார்த்துட்டு வா. நான் ஏற்கனவே எந்தம்பிகிட்ட சொல்லியிருக்கேன்.” என்றார் ராசா.
“சரி அப்பா” என்றான் செல்வன்.
உடனே அம்மா, “என்னவோ நாசமாப் போங்க. அண்ணனும் தம்பியும் சேர்ந்தா இந்த வீடே டாஸ்மார்க்காயிடும்.” கத்திவிட்டு சமையல் அறைக்குக் கிளம்பினாள் ரெஜினாள்.
“செல்வன், போற வழியிலே தாத்தா வழி சொந்தம் சாம்சன் வீட்டிலே … ஒரு கல்யாண காடு குடுத்துடுல” என்றார் ராசா.
”சரியாப்பா”….. என்றான் செல்வன்.
********************
சாயங்காலம் மாடியறையில் அண்ணன் ராசாவும் தம்பி வெங்கட்டும் பாட்டில் எல்லாம் மேஜை மேல் வைத்து விட்டு கூட இருந்த செல்வனிடம், “மக்களே நாங்க பாத்துக்கிடுவோம். நீ கிளம்பிப் போ” என்று வெங்கட் சொல்ல
“சரி சித்தப்பா” என்று செல்வன் கிளம்பினான்.
“அண்ணே நாளை கழிச்சி கல்யாணம். நாளைக்குச் சொந்தக்காரங்க எல்லாரும் வந்துருவாவ… நீங்க குடிக்கிறத கொஞ்சம் கொறச்சிட்டா நல்லது” டம்ளரை கீழே வைத்தான் வெங்கட்.
“எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டியாக்கும்” முறைத்தார் ராசா.
“அதுக்கில்லண்ணே…..” என்றான் வெங்கட்
“அந்த முட்டையை இங்கேதள்ளு. சிக்கனை சாப்பிடுல, இப்ப சாப்பிடலனா எப்ப தான் சாப்பிடறது“
“இல்லண்ணே நமக்கு வயசாகுது..”
“அதுக்கு குடிக்கப் பிடாதிங்கிறியா?”
“கொறச்சிக்கலாமில்லியா”
“சரி சரி பார்க்கலாம். அடுத்த பெக் விடுறியா?” என்றார் ராசா.
***************************
வீட்டின் முன்னால் திருமண தோரணங்கள், அலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தது. வெளியே சலசலப்புகேட்டுக் கொண்டிருந்தது.
”டேய் வெங்கட், அங்க என்னண்ணு பாரு”
“சரிண்ணே “ என்று எழுந்த வெங்கட், வெளியே போய் பார்த்து விட்டு வந்து, “ஏணி எடுத்து விட்டு வரலயாம். மரத்துல ஏறி கொடி கட்ட பயத்துகிட்டு நிக்கிறான் வேலைக்காரன்” என்றார் வெங்கட்.
”இதுக்கெல்லாம் பயந்து கிட்டு…” என்றவாறு எழுந்த ராசா, “கொடியக் கொண்டால..” என்று வேலைக்காரனிடமிருந்து வாங்கிக் கொண்டு வேக வேகமாக மரத்தில் ஏறினார்.
பின்னால் வெளியே வந்த வெங்கட் எவ்வளவோ சொல்லித் தடுத்தும், வேகமாக ஏறி அருகிலுள்ள கிளையில் தாவி, கொடியைக் கட்ட ஆரம்பித்தார்.
அந்தக் கிளையின் மரக்கம்பு முறிந்து விழ, மரம் அடிவேரோடு சாய்வது போல மேலேயிருந்து விழுந்தார் ராசா.
கொஞ்ச நேரத்தில் வாழை மரம் நட்டவர்கள், முதல் வீட்டு வேலைக்கு வந்தவர்கள், வெங்கட் குடும்பத்தினர் எல்லோரும் ஓடி வர கீழே விழுந்து இரத்தக் கறையாக இருந்த அவரை அள்ளிக் காரிலே போட்டுக் கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினார்கள்.
மருத்துவர்கள் அவரை உள்ளே கொண்டு போய் சோதித்து மருத்துவ சிகிச்சை செய்து கொண்டிருக்க, “ஏந்தம்பி வெங்கட் இந்த குடியெல்லாம் வேணாமின்னு சொன்னேனே. கேட்டியா?’ என்றாள் ரெஜினாம்மா மூக்கைச் சீந்திக் கொண்டு.
“அண்ணி அழாதீங்க… முதலிலே ஆஸ்பத்திரியிலே அண்ணனுக்கு மருத்துவம் பாத்துட்டு பேசுவோம்” என்று அண்ணியைத் தேற்றி விட்டு மருத்துவமனை வாயிலில் யாரையோ தேடினார்.
************************
செல்வன் மருந்துக் கடைக்கு சென்று மருத்துவர் எழுதிக் கொடுத்தவைகளை வாங்கி வர, அவனுடைய தங்கை குணசீலி “எங்கல்யாணத்துல தண்ணி வேண்டாம்ணு சொன்னப்ப அதுக்கு முந்தி அடிச்சிக்கலாமில்லியாண்ணாங்க. ஆனா அதுக்காக.. இப்படியா?” குணசீலி குலுங்கிக் குலுங்கி அழ திருமணம் நடக்கப் போற மாப்பிள்ளை குடும்பமும் அங்கே வந்து சோகத்தில் சேர்ந்து கொண்டது.
அங்கே பரபரப்பு வர, திடீரென அங்கே நின்று கொண்டிருந்த வெங்கட் மயக்கம் போட்டு விழுந்தார்.
அவரை அடுத்த அறையில் சிகிச்சைக்கு எடுத்துச் சென்ற இன்னொரு மருத்துவர், பரிசோதித்துப் பார்த்து விட்டு “தம்பி கல்லீரல் பாதி காணாமல் போயிடுச்சு. நீங்க தண்ணியடிக்கிறத நிறுத்தினா உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்லது” என்றார்.
“சரி டாக்டர்” என மயக்கம் தெளிந்து எழுந்த வெங்கட் வெளியே வந்த போது அண்ணி ரெஜினம்மாளும் அண்ணன் மகளும் “போயிட்டியளே” என்று ஓங்கி கதறி அழ, என்ன செய்வதென திகைத்து நின்றான் வெங்கட்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings