ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வீட்டின் காலிங்பெல் ஒலித்தது. மதன் அறையில் இருந்தபடி தன் அம்மா கதவைத் திறக்கிறார்களா என கூர்ந்து கவனித்தான். கதவு திறக்கப்பட்டது.
“இப்ப எந்த ஆன்ட்டியாக இருக்கும்?” என முனகினான்.
மதன் தன் அம்மாவை எல்லா விஷயத்திற்கும் ஒரு ரோல் மாடலாக பார்த்தான். கூர்மையான அறிவும், எதையும் பாசிட்டிவாக பார்க்கும் கண்ணோட்டமும், இனிமையாக பழகும் தன்மையும் என அம்மாவைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் அப்படிப்பட்ட அம்மாவின் மறுபக்கம், 90 நாட்களாக, வொர்க் பிரம் ஹோமில் தான் வெளிச்சத்திற்கு வந்தது. நிறைய தோழிகள். அரட்டை. வம்பு.
நேற்றைய முன்தினம் – 88ம் நாள் காலை 9.35 மணி
பானு ஆன்ட்டி: “ஏண்டி! குழந்தையைப் போட்டு படி படி என என் மருமகள் செய்ற டார்ச்சர் இருக்கே!!”
அம்மா: “நீட் படிப்பு என்றால் சும்மாவா? பேரன் டாக்டர் என்றால் சும்மாவா? நல்லது தானே?
பானு ஆன்ட்டி : “என்னமோ போ? யார் செய்வது சரி, தப்பு என்று எதுவுமே புரியலை” என்றாள்.
நேற்றைய தினம் – 89ம் நாள் காலை 11 மணி
புனிதா ஆன்ட்டி : “ஏதோ பேலியோ டயட், அந்த டயட் இந்த டயட் என்று சாப்பாட்டை குறைப்பது சரியாடி?”
அம்மா : “டாக்டர் சொல்லி செய்தால் தப்பில்லை, இல்லைன்னாகெடுதல்தான்”
இன்று – 90ம்நாள் மதியம் 3.35 மணி
வித்யா ஆன்ட்டி : “நான் போன உடனேயே பேரனுடன் பேசுவதை நிறுத்துவா என் மருமகள்”
அம்மா : “இப்ப எல்லாம் பசங்க ரொம்ப சென்சிட்டிவ்வா இருக்காங்க அக்கா. உங்களுக்கு தெரிய வேண்டும் என்றபோது சொல்வாங்க”.
வித்யா ஆன்ட்டி : “அப்ப அவுங்க செய்தது சரிதானாடி?”
அம்மாவிடம் இதைப் பற்றி இன்று பேசிய தீருவது என மதன் முடிவெடுத்தான்.
“ஏம்மா! உனக்குத் தெரியாத யாரோ நாலு பேரைப் பற்றி உனக்கு என்ன பேச்சு? இந்த வம்பு பேச்செல்லாம் எனக்கு பிடிக்காது என்று கட் செய்ய வேண்டியதுதானே? அதிலும், அவர்கள் செய்தது சரியா, தப்பா என்று என்ன விவாதம்? எனக்கு பிடிக்கவேயில்லை இதெல்லாம், எப்படியோ போ!” என்ற மதன் மடாரென்று கதவைத் சாத்தினான்.
ரிமோட்டைத் தேடி, கோபத்துடன் டிவியை போட்டான்.
மதனுக்கு மிகவும் பிடித்த அந்த பிரபல நிகழ்ச்சி நட்சத்திர டிவியில். ஒரு பெரிய கும்பல், கழுத்தில் தொங்கிய மைக்குடன், சோபாவில் அமர்ந்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தது.
“அவங்க மூணு பேரும் நான் வரும்போது பேசுவதை நிறுத்தி என்னை ஒதுக்கறாங்க சார்” என்று முகம் நிறைய மேக்கப் போட்ட பெண்மணி அழுது முறையிட்டு கொண்டிருந்தாள்.
“எல்லோரையும் கட்டிப் பிடிப்பது, சரியா? தப்பா?” என்று இன்னொரு தாடிக்கார இளைஞன் உறுமிக் கொண்டிருந்தான்.
ஆழ்வார்பேட்டை ஆண்டவர், யார் செய்வது சரி தப்பு என்று அலசிக் கொண்டிருந்தார். இந்த வாரம் ஓட்டுப்போட்டு, யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்? என்ற வாசகம் டிவியில் ஓடிக் கொண்டிருந்தது.
நூறு நாள் அக்கப்போரில் இந்த வாரம் யாரை காப்பாற்றுவது என யோசித்துக் கொண்டே, தன் மொபைல் போனை கையில் எடுத்தான் மதன்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings