in

மறுமலர்ச்சி  (சிறுகதை) – ✍ மலர் மைந்தன், கல்பாக்கம்

மறுமலர்ச்சி  (சிறுகதை)

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சொந்த ஊரில் செல்வதோடு பெருமையாக வாழ்ந்தவன் பிறகு செல்வதை இழந்து ஏழையாகி, அதே ஊரில் வாழ்ந்தால் அளவற்ற துயரத்தைக்  கொடுக்கும்.

இப்படித்தான், விவசாயம் பொய்த்துப்போய் இருந்த பணத்தை செலவழித்து, நிலத்தை அடமானம் வைத்து மீட்கமுடியாமல், ஊரை விட்டு மனைவி வள்ளி, ஒரே மகன் செல்வக்குமார் ஆகியோருடன், நகரத்திற்கு தன் முப்பது வயதில் நகர்ந்தார் சின்னசாமி.

கிடைத்த வேலையை செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு மகனை நன்றாக படிக்க வைத்தார். தந்தையின் உழைப்பை பார்த்த செல்வக்குமாரும் நன்றாக படித்து அரசு அதிகாரியாகி விட்டார்.

தகுந்த வயதில் குணவதியான பெண் அமைந்து செல்வக்குமாருக்கு திருமணம் முடிந்து அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

அளவான வருமானத்தில் சிக்கனமான செலவுகளில், படிப்படியாக முன்னேறி நகரத்திலேயே தனிவீடு வாங்கி குடி பெயர்ந்தனர். சின்னசாமி வீட்டை சுற்றி செடிகளை நட்டு பராமரித்து வந்தார். அந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது அவர் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியும், கூடவே சில கண்ணீர் துளிகளும் உதிரும்.

காலங்கள் உருண்டோட பேரன் ‘மித்ரன்’ பிறந்து விட்டான். தோட்டத்தை பராமரிப்பதும் பேரனுடன் விளையாடுவதிலும் நேரம் போனது.

மித்ரன் பள்ளிக்கு செல்ல தொடங்கியதும் நேரத்தை கடத்துவது கடினமாக இருந்தது. செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, சாப்பிடுவது, தூங்குவது, மாலையில்  நடைப்பயிற்சி… பேரனுடன் விளையாட்டு… இரவு உணவு…. தூக்கம்… இயந்திரத்தனமான வாழ்க்கையில் வசதிகள் இருந்தும், எதோ ஒன்று இல்லாத ஏக்கம் அவர் கண்களில் தெரிந்தது.

தந்தையின் மனமறித்த தமையனாய், ஒருநாள் செல்வக்குமார் குடும்பத்தினருடன் வெளியில் சென்றுவரலாமென காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.

ஏ.சி.யின் குளுமை தாங்காமல் சால்வையை போர்த்திய சின்னசாமி சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார் .

“அப்பா எந்திரிங்க…. கீழே இறங்குங்க….”

காரை விட்டு இறங்கிய சின்னசாமிக்கு அதிர்ச்சி. அவர் நின்று கொண்டிருந்த இடம் 30 வருடங்களுக்கு முன் விட்டுப் போன ஊரின் நடுகற்கள் முன்பாக மகனை பார்க்க.

“அப்பா… உங்க எண்ணம் என்னன்னு எனக்கு தெரியாதா? நீங்க இழந்த சொத்தை திரும்ப வாங்கிட்டேன்…”

“தாத்தா இந்த கல்லு எல்லாம் என்ன?” என்று மித்திரன் கேட்க

உற்சாகமான சின்னசாமி, “இது அந்த காலத்தில வாழ்ந்த நம் முன்னர்கள், அவர்களின் வீரத்திற்கும் அடையாளமாக கல்லில் சிலை செய்து வைத்து வழிபடுவார்கள். அவை ‘வீரக் கற்கள்’ என்பார்கள். வீரர்கள் மறைந்தாலும் அவர்கள் புகழ் நிலைத்திருக்கும். நாங்க எல்லாம் அந்த காலத்தில் இங்கதான் பொங்கல் வைத்து திருவிழா கொண்டாடுவோம்” என்றார்.

இதற்கிடையே, 30 வருடங்கள் கழித்து சின்னசாமி வந்துள்ளதாக செய்திகள் பரவ, அவர் வயது பெரியவர்கள் சேர்ந்து விட்டனர்.

எந்த ஊரில் அடகுவைத்த நிலத்தை மீட்க முடியாமல் போனதோ, அதே ஊரில் இந்த வருடம் சின்னசாமியின் தலைமையில்தான் பொங்கல் விழா என்று ஊரார் முடிவு செய்தனர் .

“நம்பிக்கை என்னும் ஆணிவேர் மட்டும் நலமாக இருந்தால் பட்டமரமும் துளிர்க்கும்… விட்டுப்போன உறவுகளும் திரும்பிடும்”

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

3D Kolam (Rangoli) – ரங்கோலி கோலம் – கமலா நாகராஜன்

தீ ……..பிகா ! (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன், சென்னை