in ,

மறக்க முடியுமா மாசிலாமணி? (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

      அந்த இண்டர்வியூ அறையை விட்டு வெளியேறிய மாசிலாமணியை காத்திருந்த கூட்டம் ஆர்வத்துடன் நோக்க, அவன் தலையை இடவலமாக ஆட்டி உதட்டை பிதுக்கினான்.

     அவனின் அந்தச் செயல் அக்கூட்டத்தினர்க்கு ஒரு அற்ப சந்தோஷத்தை தர அவர்கள் முகம் பிரகாசமானது.

     அங்கிருந்து அவசரமாகக் கிளம்பி பேருந்து நிலையத்தை மாசிலாமணி அடையும் போது அவனுக்கான பேருந்து கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தது. ஓடிச் சென்று ஏறி ஜன்னலோர இருக்கையை பிடித்து அமர்ந்து கொண்டான். அடுத்த ஐந்தாவது நிமிடம் பேருந்து கிளம்பி முன்னோக்கி ஓட, அவனது மனப் பேருந்து பின்னோக்கிச் சென்று பழைய நினைவுகளை தொட்டுப் பார்க்க ஆரம்பித்தது.

     ஆறு வருடங்களுக்கு முன் அவன் கே.பி.எஸ். கலைக்கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது கலைச்செல்வி முதலாமாண்டு மாணவியாக நுழைந்தாள்.

     வழக்கமாக ஆண்டுத் துவக்கத்தில் எல்லாக் கல்லூரிகளிலும் நடைபெறும் ராகிங் திருவிழா அங்கும் நடைபெற்றது. புதிதாக வரும் மாணவிகளை தன் வித்தியாசமான… விவகாரமான… ராகிங் மூலம் கலாய்த்து கொண்டிருந்த மாசிலாமணி அதே பாணியை கலைச்செல்வியிடமும் காட்டிய போது தான் அந்த விபரீதம் நடந்தேறியது.

     அவனது முரட்டுத்தனமான தோற்றமும், கரகரப்பான தகரக் குரலும், அவளை ஏகமாய்ப் பயமுறுத்தி விட,  “பொத்”தென்று மயங்கி விழுந்தாள்.  வாயடைத்துப் போனான் மாசிலாமணி.

     சக மாணவிகள் பரபரப்பாகி அவளைச் சட்டென்று தூக்கிச் சென்று, பக்கத்தில் இருந்த வகுப்பறையில் கிடத்தி முகத்தில் நீர் தெளித்தனர்.

     மெல்லக் கண் திறந்து பார்த்தவள் அரை நிமிடத்தில் மீண்டும் மயக்கத்திற்குப் போக,  “இது சரிப்பட்டு வராது… உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு போகணும்” யாரோ ஒரு மாணவி சொல்ல, பிரின்ஸ்பால் நுழைந்தார்.

      “டோண்ட் வொரி… என்னோட கார் இருக்கு” என்றவர் உடனே ஆள்
அனுப்பி டிரைவரை வரவழைத்து கலைச்செல்வியை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, “மிஸ்டர் மாசிலாமணி!… கம் டு மை ரூம்” என்று போகிற போக்கில் மாசிலாமணியை பார்த்துச் சொல்லி விட்டுச் சென்றார்.

     “போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து உன் மேல கேஸ் போட முடியும் தெரியுமா?….”பிரின்ஸிபால் கத்தினார்.

     மாசிலாமணி பதில் பேசாது அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பார்வை கெஞ்சியது. முகம் சோகத்தைக் குத்தகைக்கு எடுத்து அடைகாத்துக் கொண்டிருந்தது.

      “இது முதல் தடவை என்கிற காரணத்தினால்… உன்னை மன்னித்து விடுகிறேன்!… ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திட்டு… “இனிமேல் இந்த மாதிரியெல்லாம் செய்ய மாட்டேன்”ன்னு உறுதி கொடுத்திட்டு… வகுப்புக்குப் போ”.

     தன்னுடைய சோக நடிப்பு எளிதில் எடுபட்டுப் போனதில் மகிழ்ந்து போன மாசிலாமணி,  அவசர அவசரமாக ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி மிகவும் பவ்யமாக அவர் கையில் கொடுத்து விட்டு, உலக மகா யோக்கியனைப் போல் பிரின்ஸிபாலைக் கையெடுத்துக்  கும்பிட்டு  விட்டு வெளியேறினான்.

     ஒரு வாரத்திற்கு பிறகு கல்லூரிக்குத் திரும்பிய கலைச்செல்வி மாசிலாமணியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க  அஞ்சி  அவன் இருக்கும் திசையை அறிந்து கொண்டு அதற்கு எதிர்த்திசையில் செல்ல ஆரம்பித்தாள்.  எதேச்சையாக அவனை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் பருந்தைக் கண்டு விட்ட கோழிக் குஞ்சை போல் பதுங்கி, தள்ளாட்டமாய் நடந்து, பின் வேகமாய் ஓடி மறைவாள். அவளின் அந்தப் பயப்போக்கு மாசிலாமணிக்கு  உற்சாகத்தை ஏற்படுத்த முன்னைக்கும் அதிகமாகச் சீண்ட ஆரம்பித்தான்.

     ஒன்றிரண்டு சமயங்களில் அழச் செய்து ஆனந்தப்படுவான்.

     மூன்றாம் ஆண்டு படிப்பு முடிந்து மாசிலாமணி கல்லூரியை விட்டு வெளியேறும் அந்த நாளுக்காகக் காத்திருந்த கலைச்செல்வி, அவன் மீதான அச்சத்தின் காரணமாக தானுண்டு… தன் படிப்புண்டு என்றே காலத்தை ஓட்டினாள். விளைவாய்… அனைத்துப் பாடங்களிலும் அவளே வகுப்பில் முதல் மாணவி.

     கால நதியின் வேக ஓட்டத்தில் கல்லூரியிலிருந்து சமுதாயத்திற்கு ஒதுங்கிய மாசிலாமணி வேலை வேட்டையில் ஓயாமல் ஈடுபட்டு  தன் வயதையும் இளமையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருந்தான்.

      “மில் ரோடெல்லாம் இறங்குங்க…” கண்டக்டரின் கத்தலில் சுயநினைவுக்கு வந்தான் மாசிலாமணி.

     அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் என்பதால் மீண்டும் சிந்தனைக்குள் புகுந்தான்.

      “இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை!… காலேஜ்ல அந்த கலைச்செல்வியை எப்படியெல்லாம் மிரட்டி.. கிண்டல் பண்ணி… கேலி செஞ்சு… அழ வைத்து ரசித்தேன்!… இன்னைக்கு அதே கலைச்செல்வி என்னை இன்டர்வியூ பண்ற அதிகாரியாய்… வேலைக்கு என்னைத் தேர்வு செய்யும் அதிகாரம் படைத்த அந்த நிறுவனத்தின் கண்டிப்பான நிர்வாக மேலாளராய்.

     அவனுக்கு அவன் மேலேயே சுய பச்சாதாபம் ஏற்பட்டது.  “ஹும்… என்னைக் கண்டு நடுங்கியவள்… என்னைப் பார்த்து மயங்கி விழுந்தவள்…. இன்னிக்கு எனக்கு எதிரில், அதிகார தோரணையில், நான்….?… அவளைக் கண்டு பயந்தவனாய்… நாற்காலியின் நுனி அமர்வில்… ச்சை!… எல்லாம் காலக்கொடுமை…
அவ்வளவுதான்… இந்த வேலையும் கோவிந்தாதான்… அவளாவது என்னைத் தேர்வு செய்து வேலை கொடுக்கிறதாவது!…” அடுத்த படையெடுப்புக்குத் தன்னை தயார் படுத்திக் கொள்ள ஆயத்தமானான்.

     அவன் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாய், அவனைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாய், அடுத்த வாரத்தில் ஒரு நாள் அந்நிறுவனத்தில் இருந்து அவனுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்திறங்கியது.

     “என் மேல் இரக்கப்பட்டு செய்திருப்பாளோ?… ஒருவேளை அந்தக் காலகட்டத்தில் என்னை உள்ளுறக் காதலித்திருப்பாளோ?… அதனால்தான் இன்னும் கல்யாணம் கூட பண்ணிக்காமல் இருக்காளோ?…. எனக்காக காத்திட்டிருக்கிறாளோ?”.

     மூளைக்கும் சிந்தனைக் குளவி தாறுமாறாய்ப் பறந்தது. மனது குழம்பி…  தெளிந்து! மீண்டும் குழம்பி…. மீண்டும் தெளிந்து!… பைத்தியம் போலானான்.

     ஆர்டரில் குறிப்பிடப்பட்டிருந்த நாளன்று பணியில் சேர்ந்தான்.

     “சார்!… உங்களை ஏ.எம். மேடம் கூப்பிடுறாங்க” அட்டெண்டர் சொல்ல எழுந்தான்.

     அச்சம், ஆர்வம், எதிர்பார்ப்பு, எல்லாமும் ஒன்று சேர்ந்து துரத்த, அட்மினிஸ்டிரேடிவ் ஆபீஸர் அறைக் கதவை நாசுக்காகத் தள்ளி,  “மே ஐ கம் இன் மேடம்?”.என்றான்.

     கம்ப்யூட்டர் மானிட்டரிலிருந்து பார்வையைத் திருப்பி, “யெஸ்… கம் இன்” என்று கலைச்செல்வி அழைக்க உள்ளே நுழைந்தான் மாசிலாமணி.

     “வெல்கம் மிஸ்டர்…….” என்று சொல்லி விட்டு, தன் முன் நெற்றியைத் தேய்த்தவள், “வாட்ஸ் யுவர் நேம்?” கேட்டாள்.

     “மாசிலாமணி மேடம்”.

     “யெஸ்…. யெஸ்… மாசிலாமணி!… மிஸ்டர் மாசிலாமணி… நீங்க உங்க செக்சன் இன்சார்ஜ் திவாகரைப் பாருங்க!… உங்களோட வேலைகளைப் பற்றி அவர் சொல்லுவார்!… அப்படியே ஒரு ஜாயினிங் ரிப்போர்ட்டையும் எழுதிக் கொடுத்திடுங்க!… யூ கேன் கோ நவ்!”

     “மேடம்!… உங்களுக்கு என்னை நினைவு இருக்கா?… கே.பி.எஸ் காலேஜ்ல… உங்க சீனியர்!”.சன்னக் குரலில் சொன்னான்.

     “ஸாரி மிஸ்டர்… ஞாபகம் இல்லை!” என்றபடி அவள் அறைக் கதவை நோக்க,
அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவனாய் உடனே வெளியேறினான் மாசிலாமணி.

.
     “நெஜமாகவே என்னைத் தெரியலையா?.. இல்லை நடிக்கறாளா?”

     தன் ஜாயினிங் ரிப்போர்ட்டில் கையெழுத்துப் பெறுவதற்காக கலைச்செல்வியின் அறைக்கு மீண்டும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, ஒருவித தயக்கத்துடனேயே சென்றான்.

உள்ளே,  அவள் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்க, கதவுக்கு வெளியே நின்று கொண்டான்.

     “அதே மாசிலாமணி தான் சித்ரா!… இன்டர்வியூவின் போதே எனக்கு அடையாளம் தெரிஞ்சிடுச்சு!… ஆனாலும் காட்டிக்கலை!… வேண்டுமென்றே தான் அவனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்து அவனை வேலையில் சேர்த்துக் கொண்டேன்!… அவனால நான் காலேஜ்ல ரெண்டு வருஷம் பயந்து பயந்து வாழ்ந்தேன்!… இனிமேல் அவன் காலம் பூராவும்… ரிடையர்டு ஆகிற வரைக்கும் எனக்கு கீழே… என்னைக் கண்டு பயந்து பயந்து தான் வாழப் போறான்!… அப்ப அவன் முறை…. இப்ப என் முறை!.”

     கலைச்செல்வி பேசிக்கொண்டே போக மாசிலாமணி பேயறைந்த முகத்துடன் தன் இருக்கைக்கே திரும்பினான்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனிதப் பலா (சிறுகதை) – முகில் தினகரன்

    தவிக்க ஒரு தாய் (சிறுகதை) – முகில் தினகரன்