in ,

மன்னவன் வந்தானடி (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பாருங்களேன் இந்த அம்மாவை, அக்காவை இந்தப் பாடு படுத்தறா. தலைப்பை சரியா போடு, குதிக்காம நட, என்ன எப்ப பாத்தாலும் சிரிப்பு, அடக்க ஒடுக்கமா இரு.

எனக்கு 14 வயசு, எனக்குன்னா புரிஞ்சிக்கணும் இந்த மீனாட்சிக்கு சரியா. என் அக்கா சந்திரா, என்னை விட 5 வயசு பெரியவ. அவளுக்குதான் இத்தனை கட்டுப்பாடு.

மதுரைல வக்கீல் புதுத் தெருவுல வீடு, வீட்டுக்கு வலது பக்கத்துலயே ஸ்கூல், ஆனா நான் படிக்கிறது மீனாட்சி வித்யாலயா. என்ன ஒரு பொருத்தம் பாருங்களேன், எங்க ஊர் தெய்வம் மீனாட்சி, என் பேரு மீனாட்சி, படிக்கறது மீனாட்சி வித்யாலயா, காலேஜ் கூட மீனாட்சி காலேஜ்தான் போவேன்.

முதல்ல அக்காவை பத்தி சொல்றேன். அக்கா கொஞ்சம் கருப்புதான், ஆனா கொள்ளை அழகு. பத்து கிளாசோட படிப்பு நிப்பாட்டியாச்சு. டைப் கிளாஸ் சேந்தா, ஆனா ஒரு நாள் யாரோ ஒரு பையன் சைக்கிள்ல கூடவே வடக்குவெளி வீதி இன்ஸ்ட்யூட் வரை போறதை அப்பா பாத்துட்டு அந்த டைப் கிளாசை நிப்பாட்டிட்டார்.

வெள்ளிக்கிழமை நானும் அக்காவும் சிம்மக்கல் பக்கத்துல இருக்கே, அந்த பழைய சொக்கநாதர் கோவிலுக்கு போவோம். ஒரு நாள் தெரிஞ்சது அக்கா கோவிலுக்கு வரதே அந்த சைக்கிள் பையனுக்காகனு. நல்ல சிவப்பா களையா இருந்தான்.

சில சமயம் சைக்கிளை தள்ளிண்டு கூடவே நடப்பான். அடிக்கடி ஒருவரைப் பாத்து ஒருவர் சிரித்துக் கொள்வார்கள், அவ்வளவுதான்.

இந்த புதன்கிழமை காத்தாலை 8 மணிக்கே அம்மாகிட்ட கோவிலுக்கு போறேன்மானு அக்கா கிளம்பினா. அம்மா, “இன்னிக்கு என்னடி திடீர்னு”

“இல்லை பாமாவோட பொறந்தநா இன்னிக்கு அர்ச்சனை பண்றா அதான் கூப்டா”

“மீனுவை கூட்டிண்டு போ தனியா போகாதே, அப்பா கோச்சிப்பார்.”

“சரிம்மா…. “

“ஏய் மீனு உனக்கு வயித்து வலிதானே பேசாம போய் படு”

நான், “இல்லையேக்கா”

“கொன்னுடுவேன், போய் படுத்துக்கோ பேசாம”

9 மணி, 10 மணி இன்னும் அக்கா திரும்பலை. அம்மா உள்ளுக்கும் வெளியுமா நடக்கறா. அப்பா மில்லுல இருந்து நைட் ஷிப்டு முடிஞ்சு வர நேரம். அக்கா வரலை.

அப்பா வரப்பவே சந்துக் குட்டினு கூப்டுண்டேதான் வந்தார். அம்மா சமையலறைல பதுங்கறா. நான்தான், “அக்கா கோவில்ல இருந்து வரலைப்பா”

“கோவிலா? எதுக்கு இன்னிக்கு காத்தாலை?”

“இல்லை பாமா அக்கா பர்த்டே அதான் அர்ச்சனை பூஜை” இது சொல்றப்பவே வாசல்ல இருந்து அந்த பாமாக்கா “சந்திரா”னு கத்திண்டே உள்ளே நுழையறா.

அப்பா,”என்ன பாமா பர்த்டேயானு” வெளியே வந்தார்.

பாமா,” இல்லையே அங்கிள் அடுத்த மாசம் 8ம் தேதின்னா, சரி சந்திரா இல்லையா”

அப்பா சரிந்து சேர்ல உக்காந்தார். அம்மா, “மோசம் பண்ணிட்டயேடி சந்திரா”னு அலறி புலம்பினாள். பாமா புரியாம வெளில போனா. அவ்வளவுதான் சந்திராக்கா திரும்பவே இல்லை.

விளையாட்டா 3 வருஷம் ஓடிப் போச்சு. அக்கா போனதுல இருந்து அம்மா ரொம்பவே உடைஞ்சு போயிட்டா, எந்த விசேஷம்னா கூட வெளில வரதில்லை வீட்டை விட்டு.

அப்பா ரிடயர்ட் ஆயாச்சு. இப்ப நான் மீனாட்சி காலேஜ். எனக்கும் அந்த வயசுக்கான குறுகுறுப்பு இருக்கதான் செஞ்சது. ஆனா அக்காவால அம்மா படற கஷ்டத்தை நினைச்சா உடனே கட்டுக்குள்ளே வந்துடுவேன்.

நான் ரெண்டாவது வருஷம் டிகிரி படிக்கறப்ப சென்னைல இருந்த என் அத்தை குடும்பம் மதுரை வந்தது. அத்தை நல்லா ஆஜானுபாகுவா இருப்பா, மாமா கொஞ்சம் கச்சல். என்கிட்ட ரொம்ப நல்லா மருமகளே மருமளேனு பழகுவாங்க. என்னை உக்கார வச்சு தலை பின்றது, இது போட்டுக்கோ இது போட்டுக்கோனு அப்படி ஒரு பிரியம்.

அத்தை ஒரு நாள் சாயங்காலம் என்னை உக்கார வச்சு தலை பின்னறப்ப, ”உன் அக்காதான் என் தம்பி மானத்தை சந்தி சிரிக்க வச்சிட்டா, நீ சமத்தா இருக்கே, என்ன இப்ப 18 வயசாறதா உனக்கு”

“ஆமாம் அத்தை, 18 முடிஞ்சிடுத்து போன மாசம்”

“என் பையன் சேகரை பாத்ததில்லையோன்னோ நீ, நல்ல பையன்.ஐ.டி கம்பெனில வேலை பாக்கறேன்.பாக்க கூட நன்னாவே இருப்பான். என்ன நான் சொல்றது புரியறதோ”

“ம், ஆனா நான் வேலைக்கு போகணும்”

“போயேன் யாரு வேண்டாம்னா?, உன் அப்பனை கேக்கறேன். முதல்ல உன்கிட்ட கேக்கணும்னு தோணித்து”

“போங்க அத்தை என்கிட்ட இதெல்லாம் பேசிண்டு”

“இல்லைடா கண்ணா நாளைக்கு நாங்க சென்னை திரும்பறோம், சேகர் கார் எடுத்துண்டு இன்னிக்கு நைட் வரான், பாத்துக்கோ. உனக்கு பிடிச்சா மேல் கொண்டு பேசறேன் என் தம்பிகிட்ட”

“அச்சோ போங்க அத்தை” ஓடியே போயிட்டேன் மாடிக்கு. என் மனசுல இப்ப சின்ன கிளர்ச்சி. அந்த சேகர் எப்படி இருப்பான், இவ்வளவு சொந்தம்ன்றவங்க இத்தனை வருஷமா ஏன் வரலை. காத்திருந்தேன் அந்த சேகர் வருகைக்கு.

சாயந்தரம் 7 மணி வாக்குல, அந்த குட்டி மாருதிக் கார் வாசலில் நின்றது.கார் சத்தம் கேட்டு மாடில இருந்து எட்டிப் பாத்தேன்.

நல்ல உயரமா, சிவப்பா, கம்பீரமான இந்த இளைஞனா சேகர். நான் இவ்வளவு கலர் இல்லையே, பக்கத்துல நின்னா குட்டையா இருப்பேனே, பொருத்தமே இல்லையே என்னை எப்படி பிடிக்கும் இவனுக்கு.

அவசரமா கண்ணாடி முன்னால நின்னு கொஞ்சம் மேக்அப் பண்ணிண்டேன். அத்தை கூப்பிடறா, என் மனசுக்குள்ளே சொல்லத் தெரியாத ஏதோ உணர்வுகள். ஒரு பதட்டத்தோட கீழே போனேன்.

அம்மா முகத்துல கூட இப்ப ஏதோ தெளிவு. அப்பா மகிழ்ச்சியாவே தெரிஞ்சார்.

அத்தை,” சேகர் நீ மீனாவை சமீபத்துல பாத்ததில்லையே, எப்பவோ மூணு நாலு வயசுல பாத்திருப்பே”

அவன், ”ஆமாம் ஆனா ஞாபகம் இருக்கு படு சுட்டி ஆச்சே அப்ப, என் இடுப்புல ஏறிண்டு இறங்காது,”

அத்தை, “ நான் சொன்ன சாமான்லாம் வாங்கிண்டு வந்திருக்கயாடா”

“ஆமாம்மா” பெரிய பையை அவன் அம்மாகிட்ட கொடுத்தான்.

அத்தை, “மீனுக் குட்டி, ஒரு தாம்பாளம் கொண்டா”

தாம்பாளத்தில் பழங்கள், தேங்காய், மஞ்சள், குங்கும்ம், சென்னை சில்க் பட்டு புடவை டப்பா, வேஷ்டி வச்சு என் அம்மா அப்பா கிட்ட கொடுத்தா, “என் பையன் சேகருக்கு, உங்க பொண் மீனுவை கல்யாணம் பண்ணி கொடுப்பேளா”

அம்மா, அப்பா மிக சந்தோஷத்தோட தட்டை வாங்கிக் கொண்டார்கள்.

சேகர் திடீர்னு சத்தமா சொன்னான், ”என்னம்மா என் கல்யாணத்துக்கு என்னை கேக்க மாட்டிங்களா, நீங்க காட்டற பொண்ணை நான் ஏன் கட்டிக்கணும்.”

என் கண்ல புளுக்னு கண்ணீர், அவசரமா திரும்பி மாடிக்கு ஓடினேன். திடீர்னு வீடே நிசப்தம். அஞ்சே நிமிஷம், மாடி மர பெஞ்சில் உக்காந்திருந்த என் பக்கத்தில் ஏதோ அசைவு. சட்னு கண்ணை துடைச்சிண்டு திரும்பினேன். அந்த திருட்டு சேகர் புன்சிரிப்போட பின்னால நின்னான்.

“ஒரு டெஸ்ட் வச்சேன் மீனுக் குட்டிக்கு என்னை பிடிச்சிருக்கானு பாக்க”

உதட்டை சுழிச்சு வக்கணை காட்டிய என் அருகில் வந்து தோள் சேர்த்து அணைத்துக் கொண்டான். அவன் பரந்த மார்பில் என் முகத்தை புதைத்துக் கொண்டேன்.

“மூணு வயசு குழந்தையா இருக்கறப்பவே இடுப்பை காலால இறுக்கி கன்னத்துல முத்தம் கொடுத்த அந்த மீனுக் குட்டியை வேணாம்னு சொல்ல பைத்தியமா என்ன நான்”

“ஐய்யே போறும் ரொம்ப வழிய வேண்டாம்”

“சரி கீழே வா அம்மா டென்ஷன் ஆயிட்டா”

அடுத்த வாரம் எங்கேஜ்மெண்ட் மதுரை மினி மகால்ல, என் எக்ஸாம் முடிஞ்ச உடனே கல்யாணம்.

அடுத்த இரண்டு வருடம் போனது தெரியலை. இப்ப சென்னை அண்ணா நகர் பிளாட்ல இருக்கேன் சேகர், அத்தை, மாமாவோட. அம்மாக்கு இப்ப உடம்பு தேறிண்டு வரது. ரெண்டு மாசத்துல பேரனை பாக்கப் போற சந்தோஷம் அப்பாக்கு. சேகர் என்னை தலைல வச்சு தாங்கறார், என்ன குறை எனக்கு.

பக்கத்து பிளாட் பர்வதம் சொன்னா, “வீட்டு வேலைக்கு ஆள் வச்சுக்கோடி நிறை மாசம், உன் அத்தைக்கு சுகர் முடியறதில்லை”னு.

“சரி”ன்னேன்.

அடுத்த நாள் சாயந்திரம் கலைஞ்ச தலை, கிழிஞ்ச புடவை கக்கத்துல ஒரு குழந்தை, கைல மூணு வயசு பையன் கூட வேலைக்கு வந்து நின்னது சந்திராக்கா.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வட்டியும் முதலும் (குறுநாவல் – இறுதிப்பகுதி) – வைஷ்ணவி

    புத்தகத் திருவிழா (சிறுகதை) – ரேவதி பாலாஜி