in ,

மனிதப் பலா (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

     வழக்கம்போல் இன்றும் என் காலை உறக்கம் பக்கத்து வீட்டு பார்வதியம்மாளின் காட்டுக்கத்தலால் கலைந்தது.

      “ச்சை!… என்ன பொம்பளை இவ?… தினமும் இப்படிக் காலங்காத்தால ஆரம்பிச்சு ராத்திரி வரைக்கும் கத்திக்கிட்டே இருக்காளே… மத்தவங்களுக்கு அது எவ்வளவு தொந்தரவா… எவ்வளவு இம்சையா…. இருக்கும்னு கொஞ்சங் கூட யோசிக்கவே மாட்டாளா?” காபி கொண்டு வந்த என் மனைவி கௌரியிடம் புலம்பினேன்.

      “சரிங்க!… அவதான் என்ன பண்ணுவா?.. அந்தக் காம்பவுண்டுக்குள்ளார மொத்தம் எட்டுக் குடித்தனம் இருக்கு!… ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்!… அவங்க அத்தனை பேரையும் சமாளிக்கணும்னா… வீட்டுக்காரி அப்படிக் கத்தினால் தான் ஆகும்!” கௌரி அவளுக்கு வக்காலத்து வாங்க.

      “அதுக்காக இப்படியா?… கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாம… ஊருக்கே கேட்கிற மாதிரியா கத்துவாங்க?… நான் மட்டும் அவ புருஷனா இருந்திருந்தா அவளை… நடுரோட்டுல நிக்க வச்சு நாலு சாத்து சாத்தி… கத்தற வாயை கருங்கல்லை வெச்சு மொத்தமாக அடைச்சிருப்பேன்!”

      “சரி… சரி… விடுங்க!… காலங் காத்தால அந்த அம்மாவைப் பத்திப் பேசி நீங்க ஏன் வீணா டென்ஷன் ஆகுறீங்க?”

.

     நான் குடித்து குடித்து விட்டு நீட்டிய காபி டம்ளரை வாங்கிக் கொண்டு கௌரி நகர்ந்ததும், மறுபடியும் படுத்து யோசனையில் ஆழ்ந்தேன்.

      “நாலஞ்சு வீடு தள்ளி குடியிருக்கிற எனக்கே இவ்வளவு சிரமமா இருக்குன்னா… அந்த காம்பவுண்டுக்குள்ளார இருக்குறவங்களுக்கு எப்படி இருக்கும்?… பாவப்பட்ட பிறவிகள்… வேற வழி இல்லாம சகிச்சுக்கிட்டு குடி இருக்காங்க.”

     ”ஏலே… எந்த மூதேவிலே இப்படி நடக்கிற வழியில தண்ணிய ஊத்துனது” பார்வதியம்மாளின் அடித் தொண்டைக் கத்தல் இரண்டாவது முறையாக என்னைத் தாக்க,  “போச்சுடா… மறுபடியும் ஆரம்பிச்சுட்டா போலிருக்கு!” எழுந்தேன்.

     தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேல் யாரையோ வசைமாரி பொழிந்து விட்டு அவள் ஓய்ந்த போது நான் குளித்து முடித்து அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

ஸ்கூட்டரில் அந்தப் பார்வதியம்மாளின் வீட்டைக் கடக்கும் போது மெல்ல திரும்பிப் பார்த்தேன். வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு, முன்புறத் திண்ணையில் காலை நீட்டியபடி அமர்ந்திருந்த அவளைப் பார்த்ததும் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டேன். “இந்த சனியன் மூஞ்சில முழிச்சிட்டு போனா… இன்னைய கதி… அதோ கதிதான்”.

     இரவு, வழக்கம் போல் ஒரு கையில் புத்தகத்தை விரித்துக் கொண்டு மறு கையில் தோசையை விண்டு விண்டு வாயில் திணித்துக் கொண்டிருந்தேன்.

      “சாப்பிடும் போது படிக்காதீங்க!”ன்னு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்” என்றபடி வந்து  என் கையில் இருந்த புத்தகத்தை  ‘வெடுக்’கென்று பறித்தால் கௌரி.

      “ஏய்… ஏய்… அதைக் குடுடி” கெஞ்சினேன்.

      “ம்ஹும்…  உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”.

      “என்ன விஷயம்?… சொல்லு.”

      “அந்தப் பார்வதியம்மா காம்பவுண்டுல குடியிருக்கிற ஒரு பொண்ணு இன்னைக்கு இங்க வந்துச்சு”.

     ”என்னவாம்?” சுவாரஸ்யம் இல்லாமல் கேட்டேன்.

      “பாவம்ங்க!… அந்தப் பொண்ணோட கணவனுக்கு ரெண்டு சிறுநீரகமும் பழுதாம்!… ஆபரேஷனுக்கு பணம் தேவைப்படுதாம்!…. சொந்தக்காரங்க,… தெரிஞ்சவங்க…ன்னு ஒரு ஆள் விடாம எல்லார் கிட்டேயும் உதவி கேட்டு அலைஞ்சிட்டிருக்கு!… பல பேர் இரக்கப்பட்டு நிறையவே கொடுத்திருக்காங்களாம்!… சில பேர் தங்களுக்கு தெரிஞ்ச சமூக அமைப்புகளில் நிதி உதவிக்கு பரிந்துரை பண்ணியிருக்காங்களாம்”.

      “சரி!… அது இங்கே எதுக்கு வந்துச்சு?.”

      “என்னங்க இப்படிக் கேட்கறீங்க?.. வேற எதுக்கு வரும்?… பண உதவி கேட்கத்தான்”.

      “க்கும்” என்றபடி கை கழுவ எழுந்தேன்.

      உண்மையில் எனக்குள் அந்த முகம் தெரியாத பெண் மேல் பரிதாபம் தான் ஆனாலும் அவள் அந்தப் பார்வதியம்மாள் காம்பவுண்டுக்குள் குடியிருக்கிறவள் என  நினைக்கும்  போது  உதவி செய்ய  மனசு  ஒப்பமாட்டேன் என்கிறது.

     கை கழுவி விட்டுத் திரும்பிய என்னிடம் கௌரி கேட்டாள், “ஏங்க நாமும் ஏதாவது கொஞ்சம் உதவி செஞ்சா என்ன?.”

      “ஓ… செய்யலாமே!” என்றேன் அலட்சியமாய்.

      “எவ்வளவுங்க கொடுக்கலாம்?”.

      “ஒரு பத்து லட்சம் கொடுத்து விடலாமா?”.

 என் பேச்சில் இருந்த கிண்டலைப் புரிந்து கொண்ட கௌரி என்னைக் கோபமாய் பார்க்க,

      “சரி… ஒரு ஐநூறோ… ஆயிரமோ  கொடு” என்றேன்.

      “என்னங்க நீங்க ஐநூறு… ஆயிரம்… ங்கறீங்க.

             “இதோ பாரு அவ அந்தப் பார்வதியம்மா காம்பவுண்டுக்குள் குடியிருக்கிற ஒரே காரணத்துக்காகவே… அவளுக்கு உதவி செய்ய மனசு வர மாட்டேங்குது!… சரி… நீ சொல்லிட்ட அதனால ரெண்டாயிரம் ரூபாய் மட்டும் அனுமதிக்கிறேன்!” சொல்லிவிட்டு மேலும் அங்கு நின்றால் அந்த தொகையை அவள் அதிகப்படுத்தி விடுவாள் என்கிற பயத்தில் நகர்ந்தேன்.

     மறுநாள் காலை 11 மணியிருக்கும்.

அண்ணாச்சி கடையில் என் மளிகை பட்டியலை கொடுத்து விட்டுக் காத்திருந்தேன். கடையில் வேலை பார்க்கும் சிறுவர்களிடம் வெகு அன்பாகவும், முகத்தில் சிறிதளவும் கோபமோ… வெறுப்போ காட்டாமல் அண்ணாச்சி பேசிய விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

      “தன் கிட்டே வேலை செய்கிற… தன் கையால் சம்பளம் வாங்குகிற… பசங்க கிட்டே கூட இந்த அண்ணாச்சி எவ்வளவு இதமா பேசுறாரு.. அந்தப் பார்வதியம்மாளும் இருக்காளே?… குடித்தனக்காரங்க கொடுக்கிற வாடகையும் வாங்கிட்டு… அவங்களை என்னமா விரட்டறா?…” என்று நினைத்தபடியே யதார்த்தமாய்  திரும்பியவன்  ஸ்தம்பித்துப்  போனேன்.

     என் அருகில் அந்தப் பார்வதியம்மாள் நின்று கொண்டிருந்தாள். கையில் மளிகைப் பட்டியலுடன்.

     நான்  ‘விருட்’டென நகர்ந்து அவளுக்கு வழி விட்டுக் கொஞ்சம் தள்ளி நின்றேன்.

      “அம்மா வாங்க!” என்று வரவேற்ற அண்ணாச்சியிடம் அவள் தன் கையில் இருந்த பட்டியல்களை நீட்ட, வாங்கிக் கொண்டு,  “நீங்க போங்கம்மா… நான் அனுப்பி வைக்கிறேன்” என்றார் அண்ணாச்சி..

பதிலேதும் சொல்லாமல் தலையாட்டிபடி அமைதியாகத் திரும்பி நடந்தாள் அவள்.

      “அவள் குணம் அண்ணாச்சிக்கு தெரியும் போலும் அதான் நைசாக அவளை அனுப்பி விட்டார்” என நினைத்தேன்.

      “இந்தாப்பா இந்த ரெண்டு பட்டியலுக்கும் சாமான்களைப் போட்டு அட்டைப் பெட்டியில் கட்டி,  வழக்கம் போல பார்வதி அம்மா வீட்டில் ஒண்ணும்… வலப்பக்கத்து வீட்டில் ஒண்ணும் கொடுத்திட்டு வந்துடு!” கடைக்காரப் பையனிடம் அன்னாச்சி சொல்ல என் சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்..

      “என்ன அண்ணாச்சி…ரெண்டு பெட்டி… ரெண்டு வீடு?.”

      “அது வந்து சார்… அவங்க காம்பவுண்டுல குடியிருக்கிற நாராயணனைத் தெரியுமா உங்களுக்கு?.

உதட்டைப் பிதுக்கினேன்.

     “ஆறு மாசத்துக்கு முந்தி வரை அந்த நாராயணன் நல்லாவே இருந்தாரு!… திடீர்னு தொழில்ல நட்டம் வந்து சுத்தமா போண்டி ஆயிட்டாரு!… கெட்ட நேரம் பாருங்க… கூடவே அவருக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு!… மனுஷனுக்கு இரண்டு சிறுநீரகமும் கோளாறு!… லட்சக்கணக்கில் செலவாகும்… அந்த ஆளு சம்சாரம்தான் இங்கிட்டும் அங்கிட்டும். அல்லாடிக்கிட்டு இருக்கு… பணத்துக்காக!”

      “சரி… அதுக்கும் இந்த மளிகைப் பட்டியலுக்கும் என்ன சம்பந்தம்?”.

      “இருக்கு சார்!… ஒரு பட்டியல் பார்வதி அம்மா வீட்டுக்கு!… அடுத்தது அந்த நாராயணன் வீட்டுக்கு!… ஆறு மாசமா அவர் வீட்டுக்கு அரிசி… பருப்பு… காய்கறி எல்லாத்தையும் இந்தப் பார்வதியம்மா தான் சொந்த செலவில் வாங்கி போடுறாங்க!… அதுவுமில்லாம ஆபரேஷனுக்கு ஒரு பெரிய தொகையை… ஒரு லட்சத்தையும் தூக்கிக் குடுத்திருக்காங்க!… எல்லாமே ஒரு உதவிதான் சார்!… அந்த அம்மா பார்க்கறதுக்கு ஆள் கொஞ்சம் கரடு முரடு தான்!… ஆனா மனசு தங்கம் சார்!… அதான் அந்த அம்மா வந்தா நான் கூடுதல் மரியாதை தருவேன்!”.

     என்னால் நம்பவே முடியவில்லை.

     மளிகை கடையிலிருந்து திரும்பி வரும் போது பார்வதி அம்மாள் காம்பவுண்டுக்குள் பார்வையை ஓட்டினேன். வழக்கம்போல் அவள் யாரையோ கத்தலாய் திட்டிக் கொண்டிருந்தாள்.

     வெளியே முள்ளாக இருந்தாலும், குணத்தால் இனிப்பாக இருக்கிற இந்த அம்மணி ஒரு மனிதப் பலா என்று சொல்லிக் கொண்டேன் எனக்குள்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மாறியது நெஞ்சம்… மாற்றியவர் யாரோ? (சிறுகதை) – முகில் தினகரன்

    மறக்க முடியுமா மாசிலாமணி? (சிறுகதை) – முகில் தினகரன்