in , ,

மனிதக்காட்சி சாலை (இறுதி அத்தியாயம் – குறுநாவல்) – முகில் தினகரன்

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்  

அவரது ஃபாக்டரிக்குள் சென்று, பல வித்தியாசங்களைக் கண்டு பிரமித்துப் போயிருந்த அனுபவம் என்னை உசுப்ப, “ஓ.கே…போவோம்” எழுந்தேன்.

என் எதிர்பார்ப்பு சற்றும் வீண் போகவில்லை.  அந்த இல்லத்தில் தங்கியிருக்கும் அனைத்து முதியவர்களும் பளீரென்று மிளிரும் யூனிபார்மில் இருந்தனர்.  அவர்கள் தங்கியிருந்த அறைகள் ஒவ்வொன்றும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் டீலக்ஸ் ஸூட் போல் மிகவும் உயர்தரத்திலிருந்தன.  

உள்விளையாட்டு அரங்கம், வெளிவிளையாட்டு அரங்கம், மினி தியேட்டர், நேர்த்தியான சமையற்கூடம் மற்றும் டைனிங் ஹால். எல்லாவற்றிற்கும் மேலாக, அங்கிருந்த மூத்தோர்கள் எல்லோருமே சிரித்த முகத்துடன், சந்தோஷமாய் உலவிக் கொண்டிருந்தனர்.  உள்ளே சில வகுப்பறைகளும், செமினார் ஹாலும் கூட இருந்தன.

“திவாகர்… என்னால் நம்பவே முடியலைப்பா… நான் கண்ட வரையில் முதியோர் இல்லங்கள் ஒரு பழைய… சரியாக பராமரிக்கப்படாத கட்டிடத்தில்தான் இயங்கும்… பாழடைந்த சமையற்கட்டும், அழுக்கடைந்த டைனிங் ஹாலும்தான் இருக்கும், அதே போல் அறைகளும் மலிவு விலை லாட்ஜ் அறைகள் போலத்தான் இருக்கும்… எல்லாவற்றிற்கும் மேலாக அங்கிருக்கும் முதியோர்கள் சோகம் படிந்த முகத்துடன், கந்தலான ஆடைகளுடன்தான்… திரிவார்கள்… அல்லது அமர்ந்திருப்பார்கள்… ஆனால் இங்கே?… எல்லாமே உயர்தரத்திலேயே இருக்கின்றன… இதையெல்லாம் மெயிண்டெய்ன் செய்யும் அந்த டிரஸ்டியை கண்டிப்பா நான் பாராட்டியே தீரணும்” உணர்ச்சி பொங்கச் சொன்னேன்.

 “சரிப்பா… சரிப்பா ரொம்ப ஃபீல் ஆகாதே… வா போய் மேனேஜிங் டிரஸ்டியைப் பார்ப்போம்”

மீண்டும் டிரஸ்டியின் அறைக்கே வந்தோம். 

அங்கே எங்களுக்கு முதுகைக் காட்டியபடி அமர்ந்து, சுவற்றிலிருந்த ஒரு அட்டவணையைத் தீவிரமாய் ஆராய்ந்து கொண்டிருந்தார் டிரஸ்டி. அவரது சாம்பல் நிற கோட்டும் சூட்டும் அவரை ஒரு நார்த் இண்டியனாக என் மனம் உருவகப்படுத்திக் கொண்டது. ஏனோ அவர் மீது ஒரு மரியாதையான அபிப்ராயத்தையும் ஏற்படுத்தியது.,

 “ஹல்லோ சார்… ஹவ் ஆர் யூ?” திவாகர் சத்தமாய்ச் சொல்ல, நிதானமாய்த் திரும்பினார் டிரஸ்டி.

 நான் என்னையுமறியாமல் “வணக்கம்” என்றேன், இரு கைகளையும் கூப்பி.  சட்டென்று என் மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ்.

 “இவரை… இந்த முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன்…” கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்த போதிலும் என்னால் யூகிக்க முடிந்தது.

 நான் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டு, “என்ன செல்வம் அப்படியே திகைச்சுப் போய் நின்னுட்டீங்க…?” கேட்க,

 “இல்லை… இவரை நான் எங்கோ பார்த்த மாதிரி…”

 “ம்… பார்த்திருக்கீங்க… ரொம்ப நல்லாவே… பல வருஷங்களா பார்த்திருக்கீங்க” பூடகமாய்ச் சொன்னார் திவாகர்.

திவாகர் அவ்வாறு சொன்னதும், அந்த டிரஸ்டியின் முகத்தை மிக உன்னிப்பாகக் கவனித்தேன்.

 “இவர்…?… இவர்?…”

 மூளைக்குள் சிந்தனை விரல்களைக் கொண்டு பிறாண்டினேன். “அடக்கடவுளே…. இவர் என் அப்பா… என் அப்பா” கூவினேன்.

“யெஸ்… யூ ஆர் கரெக்ட்… இவர் உன் அப்பா… சுந்தரம்” சொல்லி விட்டு திவாகர் என்னை முறைப்பாய்ப் பார்க்க,

 “எப்படி?.. எப்படி இவர் இங்கே வந்தார்?”

 “அவரா வரலை… நான் தான் அவரை தெருவிலிருந்து பொறுக்கிட்டு வந்தேன்… ஆம்… உங்களால் வீட்டை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டவர் எங்கெங்கோ சுத்தி… வயிற்றுக்கு சாப்பாடு கிடைக்காம… பசியால மயங்கி ரோட்டோரமாய்க் கிடந்தார்… அந்த தகவல் எனக்குக் கிடைக்க நானே நேர்ல போய் அவரைக் கார்ல தூக்கிட்டு வந்து இங்கே சேர்த்தேன்!… ஏற்கனவே பள்ளிக்கூட ஆசிரியராய் இருந்தவரானதால் அவரிடம் இந்த இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் குடுத்தேன்…… இப்ப அவர் ரொம்ப சந்தோஷமா… ரொம்ப ஆரோக்கியமா இருக்கார்!..”

நான் தலை குனிந்து நிற்க, “சுந்தரம்… உலகப் புகழ்பெற்ற, ஆங்கில எழுத்தாளர், சிட்னி ஷெல்டன், எண்பது வயதைத் தாண்டியும் எழுதிக் கொண்டிருந்தார்… ஜான் கெலன் என்கிற அமெரிக்க விண் ஆராய்ச்சியாளர், தன்னோட எழுபத்தி ஏழாவது வயதில், தன் இரண்டாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்… மன் கவுர் என்கிற பஞ்சாப் மூதாட்டிக்கு வயது நூத்திமூணு…. இவர் தன்னோட தொண்ணூத்தி மூணாவது வயதில்தான், விளையாட்டுத் துறையில் நுழைந்தார். ‘வேர்ல்ட் மாஸ்டர்ஸ் அதலெடிக் சாம்பியன்ஷிப்’ போட்டியில், தங்கப் பதக்கங்களை குவித்துள்ளார். இவருக்கு பயிற்சியாளராக இருந்தது, இவரோட மகன்!.. ஜப்பான், ஹிரோஷிமா பகுதியைச் சேர்ந்த, ஷிகேமி ஹிராடா என்ற முதிய ஆண், தொண்ணூத்திஆறாவது வயதில் பட்டம் பெற்று, உலகிலேயே அதிக வயதில் பட்டம் பெற்றவர் என்ற, ‘கின்னஸ்’ சாதனை படைத்துள்ளார்… இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா… வயதானவங்களை எதுக்கும் ஆகாதவங்க… உதவாதவங்க!ன்னு யாரும் நெனைக்கக் கூடாது… என்பதற்காகத்தான்”

 நான் “அப்பா” என்று அழைத்தபடி அவரை நெருங்கிச் செல்ல, அவர் என்னை ஒரு அற்பப் புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார்.

 “அப்பா… என்னை மன்னிச்சிட்டுங்க அப்பா…”

 அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

 “செல்வம்… ஒழுக்கங்களிலேயே உயர்வான ஒழுக்கம், தாய், தந்தையரை பேணிப் பாதுகாப்பது தான்’ என்கிறது இந்து மதம். ‘வயதானோரை கவனிப்பது, அநேக ஆசிர்வாதங்களைக் கொண்டு வருகிறது’ என்கிறது, கிறிஸ்துவம். ‘அந்திம காலத்தில் அனைத்தையும் இழந்து, பரிதாபமாக நிற்கும் முதியோருக்கு, இளையோரும், அவரது குடும்பத்தினரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்’ என்கிறது இஸ்லாம்!… எல்லா மறைகளும் எடுத்துரைக்கும் அந்த ஒழுக்கம் ஏனோ உனக்கும் உன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் புரியாமலே போனது”.

 “திவாகர்… நான் கையறு நிலையில் இருந்தேன்… என்னால் எதுவுமே செய்ய இயலாத நிலை

 “ஓ.கே…. இப்ப என்ன செய்யப் போறீங்க?… உங்கப்பாவை உங்களோட கூட்டிட்டுப் போய் நல்லபடி வெச்சுக்க முடியுமா உங்களாலே?” திவாகர் கேட்டார்.

யோசித்தேன்.

“என்ன செல்வம் யோசிக்கறே?”

“இல்லை திவாகர்… என்னோட அப்பா காணமல் போனவராகவே இருக்கட்டும்!… இப்ப அவர் இங்கே சந்தோஷமா… மனநிம்மதியோட இருக்கார்!… இவர் இப்படியே வாழட்டும்… மறுபடியும் அவர் எங்க கூட வந்தால்… நான் ஒருவன் மட்டுமே இவரை மரியாதையா நடத்துவேன்… என் மனைவியும்.. மக்களும் ஏற்கனவே எப்படி இருந்தாங்களோ?… அப்படியேதான் இருக்காங்க!… அவங்களோட நடவடிக்கைகள் இவரை மறுபடியும் வீட்டை விட்டுப் போக வெச்சிடும்… அதனால அவர் இதே சந்தோஷத்தோட… நிம்மதியோட இங்கேயே இருக்கட்டும்”

திவாகர் திரும்பி சுந்தரத்தைப் பார்க்க, அவர், “அவங்களே கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன் சார்… அங்க போன எனக்கு மகன்… மருமகள்… பேரன்.. பேத்தி என்கிற நாலே உறவுகள்தான் இருக்கும்… ஆனா இங்கே இருந்தால் எனக்கு நூற்றுக்கணக்கான உறவுகள்… எல்லோரும் என்னை மதிக்கற… என்னை வணங்குகின்ற உறவுகள்… இந்த உறவுகள் மட்டுமே எனக்குப் போதும்…” சொல்லி விட்டுக் கையெடுத்துக் கும்பிட்டார் சுந்தரம்.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனிதக்காட்சி சாலை (அத்தியாயம் 7 – குறுநாவல்) – முகில் தினகரன்

    தோல்வியா? நோ பிராப்ளம் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்