இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பைக்கில் திரும்பும் போது, தன்னுடைய கடைசிக் காலத்தில் சீரழிந்து… சின்னாபின்னப்பட்டு… மனமொடிந்து… கடைசியில் வீட்டை விட்டுப் போன என் தந்தையை எண்ணிக் கண் கலங்கினேன்.
செய்தித்தாள் விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரம், காவல்துறையில் புகார்… என்று என்னால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும் செய்தும் அவரைக் கண்டுபிடிக்காத நிலையில் நான் கலங்கி நின்ற போது, “த பாருங்க எதுக்கு வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்கறீங்க?… உங்கப்பா என்ன குழந்தையா?… போனவருக்கும் வரத் தெரியாதா?” என்றாள் என் மனைவி ஜோதி வெகு இயல்பாக.
அவள் மனதிற்குள் “அப்பாடா தொலைஞ்சது கிழட்டுச் சனியன்” என்று நிம்மதியடைவதை அவளது நடவடிக்கைகள் எனக்கு உணர்த்திய போதும் நான் அவளுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. அப்படிச் செய்தால் அது மாநகராட்சிக் குப்பை லாரியின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் ஊர்ந்து செல்வது போல, என்பது எனக்குத் தெரியும்.
ஆடிட்டர் ஆபீஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த என் பைக்கின் வேகத்தை மட்டுப்படுத்தினேன்.
‘யாரென்றே தெரியாத நூற்றுக் கணக்கான மூத்தோர்களை தன் சொந்த செலவில் பாதுக்காக்கிறான் இந்த திவாகர்… ஆனா நான் என்னைப் பெத்து வளர்த்த அப்பாவை… மனைவி சொல் கேட்டு அவமானப்படுத்தி… நோகடிச்சு… வீட்டை விட்டே போகும்படி செஞ்சிட்டேனே… இந்தப் பாவக் கறையை நான் எங்கே போய்க் கழுவுவேன்?’
சட்டென்று பைக்கை யூ-டர்ன் அடித்து வீட்டை நோக்கிச் செலுத்தினேன்.
“என்னங்க… இவ்வளவு சீக்கிரத்துல லன்ச்சுக்கு வந்திட்டீங்க?… நான் இன்னமும் முழுசா சமைக்கவேயில்லையே?” ஜோதி என்னை எதிர்கொண்டு வரவேற்க, அவளை முறைத்துக் கொண்டே என் அறைக்குச் சென்று, என் தந்தை குறித்து நான் விளம்பரம் கொடுத்திருந்த, காவல்துறையில் கம்ப்ளைண்ட் கொடுத்திருந்த பேப்பர்ஸ்களை உள்ளடங்கிய ஃபைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.
“ஓ… ஃபைலை மறந்திட்டுப் போயிட்டீங்களா?” கேட்டபடியே என் பின்னால் வந்த ஜோதியிடம், “ஃபைலை மறக்கலை ஜோதி… ஒரு தெய்வத்தையே மறந்திட்டேன்” என்றேன்.
“என்னது?… தெய்வத்தை மறந்திட்டீங்களா?.. என்னங்க சொல்றீங்க?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள் ஜோதி.
“வந்து விளக்கமா சொல்றேன்”
“அய்யய்ய… அதுவரைக்கெல்லாம் என்னால் வெய்ட் பண்ண முடியாது” என்ற அந்த அவசரக்குடுக்கை “வெடுக்”கென்று என் கையிலிருந்த ஃபைலைப் பிடுங்கி அவசரமாய்ப் பிரித்துப் பார்த்து விட்டு, “என்னது… மாமா ஃபைலை மறுபடியும் எடுத்திட்டுப் போறீங்க?… அவரு கிடைச்சிட்டாரா?” அவள் கேள்வியிலிருந்தது சந்தோஷமல்ல… தர்மசங்கடம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாமலில்லை.
“அப்படியெதுவும் இல்லை… தேடலை மறுபடியும் ஆரம்பிக்கப் போறேன்” என்றேன்.
“பொசுக்”கென்று சிரித்தவள், “ஏங்க அவரு வீட்டை விட்டுப் போயி… மூணு வருஷமாச்சு… எங்கே இருக்கார்?… எப்படி இருக்கார்னு போலீஸ்காரங்களாலேயே இன்னிக்கு வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை… அப்புறம் எதுக்கு மறுபடியும் இந்த வீண் வேலை” என்று சொன்னவள், சட்டென்று தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “எனக்கென்னமோ… அவர் உசுரோடதான் இருக்கார்ன்னே சந்தேகமாயிருக்கு” என்றாள்.
அவள் சற்றும் எதிர்பார்க்காத விநாடியில் அவள் முகத்தில் ஒரு பேயறையைக் கொடுத்து விட்டு வெளியேறினேன்.
****
போலீஸ் ஸ்டேஷன்.
“சார்… நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க… மூணு வருஷத்துக்கு முன்னாடி நீங்க கம்ப்ளைண்ட் குடுத்தப்ப… நான் இந்த ஸ்டேஷனில் இல்லை… வேறொரு இன்ஸ்பெக்டர்தான் இருந்திருக்கார்!… ரெக்கார்ட்ஸ்களை சோதித்துப் பார்த்ததில்… அன்னிக்கே… எங்க காவல்துறை மேக்ஸிமம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சிகளை செய்திருக்கு… பட்… இதுவரைக்கும் அவர் கிடைக்கலை!… எங்கே இருக்கார்னு கூட கண்டுபிடிக்க முடியலை!… நீங்க மறுபடியும் அதே முயற்சிகளைத் தொடரச் சொல்றீங்க… அதனால மட்டும் அவர் கிடைச்சிடுவார்!னு நீங்க நம்பறீங்களா?” புது இன்ஸ்பெக்டர் தெளிவாகப் பேசினார்.
“இன்ஸ்பெக்டர்… நான் இந்த இடத்துல ஒரு உண்மையை ஒத்துக்கறேன்!… அந்த கால கட்டத்துல நான் அவர் காணாமல் போன விஷயத்தை அவ்வளவு சீரியஸா எடுத்துக்கலை… இன்னும் சொல்லப் போனா… அவர் கிடைச்சாலும் சந்தோஷம்… கிடைக்காவிட்டாலும் சந்தோஷம் என்கிற மன நிலையில்தான் நான் இருந்தேன்” தைரியமாகச் சொன்னேன்
“ஏன் சார்?… உங்க அப்பா மேலே உங்க பாசம் அந்த அளவுக்குத்தானா இருந்திச்சு?” இன்ஸ்பெக்டர் ஒருவித சந்தேகத்தோடே கேட்டார்.
“பாசமெல்லாம் உள்ளூர இருந்திச்சு சார்… ஆனா அதை முழுசா வெளிக்காட்ட முடியாத சூழ்நிலை!… நாட் ஒன்லி தட்… அப்ப இருந்த நிலைல எங்கப்பா திரும்பி வந்து என் மனைவி மக்களோட கொடுமைகளை அனுபவிப்பதை விட அவர் எங்காவது நிம்மதியா இருந்திட்டுப் போகட்டும் என்கிற எண்ணம்தான் சார் என் மனசுல ஓங்கியிருந்திச்சு”
“ஓ… ஐ அண்டர்ஸ்டாண்ட் யுவர் சிச்சுவேஷன்!… சரி இப்ப என்ன திடீர்ன்னு பாசம் வந்திடுச்சு?” இன்ஸ்பெக்டர் விடாமல் துருவினார். போலீஸ்காரர் அல்லவா?.. இன்வெஸ்டிகேஷன் புலியல்லவா?
“இப்ப சமீபத்துல… ரொம்ப வருஷத்துக்குப் பின்னாடி என் நண்பர் ஒருவரைச் சந்திச்சேன் சார்… காலேஜ்ல என் கூடப் படிச்சவர்… அந்தக் கல்லூரிக் காலகட்டத்துல அவனெல்லாம் ரொம்ப ரொம்ப மோசமான ஆளு சார்… அப்பவே தம், தண்ணி, கஞ்சா…. இன்னமும் என்னென்ன கெட்ட பழக்கங்கள் உண்டோ அவை அத்தனையும் அவன்கிட்டே உண்டு… அப்பெல்லாம் நான் என்ன நினைப்பேன் தெரியுமா?… “இவனெல்லாம் ரொம்ப வருஷத்துக்கு உசுரோட இருக்க மாட்டான்… எங்காவது… யார்கிட்டேயாவது அடி வாங்கிச் சாவான்… இல்லேன்னா… ஏதாச்சும் கொடிய வியாதி வந்து அல்பாயுசுல போய்ச் சேர்ந்திடுவான்”ன்னு நினைப்பேன்” நான் சொல்லிக் கொண்டே போக,
“ஓ… வெரி இண்ட்ரஸ்டிங்… சொல்லுங்க …சொல்லுங்க” என்றார் இன்ஸ்பெக்டர் ஆர்வமாய்.
என் கையிலிருந்த ஃபைலைத் திறந்து திவாகர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய போது பல நிறுவனங்கள், பல பெரிய பெரிய அமைப்புக்கள், அவரை வாழ்த்தி வரவேற்பதற்காகப் போட்டிருந்த விளம்பரங்களைக் காட்ட, ஆடிப்போனார் இன்ஸ்பெக்டர். “சார்… இவர் பெரிய வி.ஐ.பி.சார்… முன்னணி தொழிலதிபர்… லைன்ஸ் கிளப் கவர்னர்…”
“ஆமாம் சார்… இவர் என்னோட காலேஜ்மேட்… இவர்தான் என் கண்ணைத் திறந்தவர்…” என்று சொல்லி அவர் நடத்தி வரும் கம்பெனியைப் பற்றியும், முதியோர் இல்லம் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினேன்.
“வாவ்…. உண்மையிலேயே இவர் கிரேட் மேன் தான் சார்” என்றார் இன்ஸ்பெக்டர்.
“யாரென்றே தெரியாத பல முதியவர்களைத் தன் சொந்த தகப்பனா நெனச்சு பாதுகாக்கிறார் இவர்… நான் என்னைப் பெத்த தந்தையை எங்கோ ஓட விட்டுட்டு ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கேன்!… ச்சை… என்னை நெனச்சா எனக்கே கேவலமா இருக்கு சார்” நாணித் தலை குனிந்தேன்.
அப்போது என் கையிலிருந்த மொபைல் ஒலிக்க எடுத்துப் பார்த்தேன். திவாகர்தான் அழைத்திருந்தார்.
மொபைலை இன்ஸ்பெக்டரிடம் காட்டினேன். அவர் கண்களைச் சுருக்கிக் கொண்டு, மொபைலில் தெரிந்த பெயரை வாசித்தார். பின்னர், “ம்.. பேசுங்க்ச்… பேசுங்க” என்றார் சன்னக் குரலில்.
“ம்… சொல்லுங்க திவாகர்” என்றேன்.
“வந்து… நீங்க நாளைக்கு ஃப்ரீயா இருந்தா… மார்னிங் என்னை ஆபீஸில் வந்து சந்திக்க முடியுமா?” திவாகர் கேட்க
“என்ன திவாகர் இப்படிக் கேட்கறீங்க?… கண்டிப்பா வர்றேன்” என்றவன், “வந்து… என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா?” கேட்டேன்.
“நேர்ல வாங்க சொல்றேன்”
“ஓ.கே.” என்றேன்.
“அப்ப நாளைக்கு மீட் பண்ணலாம்” சொல்லி விட்டு இணைப்பிலிருந்து திவாகர் வெளியேறினார்.
”இன்ஸ்பெக்டர் சார்… அவர் என்னை நாளைக்கு அவங்க ஆபீஸுக்கு வரச் சொல்றார்… நீங்க எங்க ஃபாதரைத் தேட ஆரம்பிங்க… நான் நாளைக்கு ஈவினிங்… உங்களுக்கு கால் பண்றேன்” சொல்லி விட்டு ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டேன்.
‘திவாகர் எதுக்கு என்னை வரச் சொல்றார்?… என்னோட ஹெச்.ஆர்.கன்ஸல்டன்ஸிக்கு ஏதாவது வேலை குடுக்கப் போறாரோ என்னவோ?’
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings