இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என் கேள்விக்கு பதில் சொல்லாமல், என் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் திவாகர்.
“ஸாரி திவாகர்… நான் ஒரு மனிதவள மேம்பாட்டு அதிகாரி… என் மனசுல எந்த அளவுக்கு உன்னை உயர்வாய் நெனைச்சிருந்தேனோ… அந்த அளவுக்கு இப்பக் கேவலமா நினைக்கறேன்” கொஞ்சமும் தயங்காமல் சொல்லியே விட்டேன்.
சில நிமிடங்கள் ஒரே இடத்தை நிலைக்குத்திப் பார்த்தபடி அமர்ந்திருந்த திவாகர், திடீரென்று கண்ணாடித் தம்ளரிலிருந்த தண்ணீரை எடுத்துப் பருகினான். பிறகு தன் கைக்குட்டையால் உதடுகளை நாசூக்காகத் துடைத்தபடி பேச ஆரம்பித்தான்.
“செல்வம்… உன்னைப் போலத்தான் பல பேர் நான் “வயதானவர்களை… அதுவும் ரிட்டையர்டு கேஸ்களை வேலைக்கு வைத்திருப்பது என்னோட சுய லாபத்துக்காக”ன்னு நெனைச்சிட்டிருக்காங்க!… ஆனா… உண்மை அதுவல்ல!… இன்றைய சமுதாயத்துல ஒரு ஆண் ரிட்டையர்டு ஆகறதுக்கு முன்னாடி வாழுற வாழ்க்கைக்கும், ரிட்டையர்டு ஆன பிறகு வாழுற வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசமிருக்கு”
நான் மேலும் கீழுமாய்த் தலையாட்டி அவன் பேச்சை ஆமோதிக்க,
“யெஸ் செல்வம்… காலச் சக்கர சுழற்சிக்குள், பாலகன், சிறுவன், வாலிபன், நடுத்தர வயதினன், முதியவன் என, பல வேஷங்களை, பல விதமாக ஒவ்வொருவரும் தரிக்க வேண்டியுள்ளது. இதில், முதுமைப் பருவம் தான் மிகவும் கொடியது செல்வம்… ஆண்டு, அனுபவித்து, ஓய்ந்த காலத்தில், உற்ற துணை யாருமின்றி, மனதில் பட்டதை சொல்ல முடியாமல், நினைத்தபடி செயல்பட முடியாத நிலையில், முதியோருக்கு இயற்கையே, கை, கால்களில் விலங்கு போடும் காலம் இது.
ரிட்டையர்டுக்குப் பிறகு அந்த மனுஷன் தன் குடும்பத்தாரால்… தன் கூட இருப்பவர்களால்… இன்னும் வெளிவட்டாரத்தில் இருக்கும் பலரால்… பல்வேறு விதமான உதாசீனங்களைச் சந்திக்கிறார்கள்!… அவ்வளவு ஏன்?… ரிட்டையர்ட் ஆகறதுக்கு முன்னாடி குரலை உயர்த்திப் பேசறவங்க கூட ரிட்டையர்டுக்குப் பின்னால் சத்தமேயில்லாமல் சன்னக் குரலில் பேச ஆரம்பிச்சிடறாங்க!.. காரணம்?… அவர்கள் ரிட்டையர்டு கேசுகள்… எதுக்கும் ஆகாதவர்கள்… என்கிற ஒரு தவறான… மோசமான… எண்ணம்தான்!.. என்ன செல்வம் நான் சொல்றது சரிதானே?”
பணி ஓய்விற்குப் பிறகு என் தந்தையை நானும்… என் மனைவியும் செய்த உதாசீனங்கள் என் ஞாபகத்தில் வர, “நீ… சொல்றது ரொம்பச் சரி திவாகர்” என்றேன் நான்.
“பல குடும்பங்கள்ல அவங்களை “தெண்டச்சோறு”… அதுஇதுனு பேசி… திட்டி… “தின்னுட்டு சும்மாதானே இருக்கீங்க?… இந்த வேலையைச் செய்ங்க!… அந்த வேலையைச் செய்ங்க”னு கண்ட எடுபிடி வேலைகளையெல்லாம் அவர்களுக்குக் குடுத்து… மனசைக் காயப்படுத்தி… அதன் மூலமாய் அவர்களோட உடல் ஆரோக்கியத்தையே கெடுத்துடறாங்க”
இறுகிப் போன முகத்துடன் அமர்ந்திருந்தேன் நான்.
“பாவம்… எதிர்த்துப் பேச முடியாதவங்களா… எதுவும் செய்ய இயலாதவங்களா… ஊமை அழுகையோட வாழ்ந்திட்டிருக்காங்க பல பெரியவர்கள் இன்னிக்கு!… அதான் பார்த்தேன்… ஏன் ஒரு புரட்சி செய்யக் கூடாது?ன்னு யோசிச்சேன்… செஞ்சேன்” பெருமையாய்ச் சொன்னான் திவாகர்.
“என்ன புரட்சி?” கேட்டேன்.
“அந்த மூத்த தலைமுறை மனிதர்கள் வாழ்க்கையில் அந்தப் பழைய வசந்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் என்ன?ன்னு யோசிச்சேன்… முடிவெடுத்தேன்!… என்னோட கம்பெனில எல்லா வேலைக்கும் ரிட்டையர்டு ஆனவங்களையே அப்பாயிண்ட் பண்ணி… அவங்களுக்கு அதிக சம்பளத்தைக் குடுத்து… வீட்டிலேயும்… சமுதாயத்திலேயும் அவங்களுக்கு சற்றும் மரியாதைக் குறைவு ஏற்படாமல் பண்ணினேன்!… அதன் காரணமாகவும்… தங்களது அனுபவ மற்றும் வயது முதிர்ச்சி காரணமாகவும் அவர்கள் முழு விசுவாசிகளா உழைக்கறாங்க!… நீயே பார்த்தியல்ல… அவங்க எத்தனை உற்சாகமா… எத்தனை சுறுசுறுப்பாய் வேலை செய்யறாங்க!ன்னு?”
அதை ஆமோதிக்கும் விதமாய் தலையை ஆட்டினேன்.
“யோசிச்சுப் பாரு செல்வம்… இவங்க மட்டும் வேலைக்கு வராமல் வீட்டில் இருந்திருந்தா எப்படி இருப்பாங்க?”
“சீக்காளிகளா படுக்கைல கிடப்பாங்க” என்றேன்.
என்னையும் மீறி என் தந்தையின் ஞாபகம் வந்து போனது. என் தாயின் மரணம் வரை வீட்டிற்குள் கிழட்டுச் சிங்கமாய் உலவிக் கொண்டிருந்த அவர் அதற்குப் பின் என்னாலும், என் மனையாலும், அவ்வப்போது என் மகனாலும் நோகடிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் என் மனத்திரையில் படமாய் ஓட, குற்ற உணர்ச்சியில் குறுகினேன்.
“அது மட்டுமில்லை செல்வம்… சிலர் தங்கள் சுயநலத்துக்காக… அவங்களைக் கொண்டு போய் ஏதோவொரு முதியோர் இல்லத்துல தள்ளிடறாங்க!.. சொன்னா நம்பமாட்டே செல்வம்… நம்ம தமிழ்நாட்டுல மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் இருக்கின்றன…. ஆனா அவையெல்லாம் முழுக்க முழுக்க வியாபார நோக்கோட மட்டும்தான் செயல்படுகின்றன. ஆதரவற்றோருக்காக, ஆரம்பத்தில் துவக்கப்பட்ட முதியோர் இல்லங்கள், இன்னிக்கு ஆதரவு இருந்தும், அனாதைகளாக ஆக்கப்பட்டோருக்காக செயல்படுகின்றன.”
திவாகர் சொல்லச் சொல்ல நான் நெளிந்தேன்.
“உண்மையில் அவையெல்லாம் முதியோர் இல்லங்கள் இல்லை… மனிதக்காட்சி சாலைகள். ‘மிருகங்கள்’ வந்து, மனிதர்களைப் பார்த்துச் செல்லும், மனிதக்காட்சி சாலைகள். தங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, அழகு பார்த்த பெற்றோரை, முதியோர் இல்லங்களில் தள்ளி விடும் கல் நெஞ்சம் படைத்தவர்களை, “மிருகங்கள்”ன்னு தானே கூற வேண்டும்!..
குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்து, தங்கள் சுகத்தையும், சுதந்திரத்தையும் இழந்து, தங்களை முழுவதுமாக அர்ப்பணிக்கின்றனர் பெற்றோர். அவர்களின் வயது முதிர்வு காரணமாக, முதியோர் இல்லங்களிலும், ஆதரவற்றோர் இல்லங்களிலும், பெற்ற பிள்ளைகளே தள்ளி விடுவது, ஆறறிவு படைத்த மனிதனின் செயலாக இருக்க முடியாது… என்ன செல்வம் நான் சொல்றது”
அமைதியாய் மேலும் கீழுமாய்த் தலையாட்டினேன்..
“சொல்லு செல்வம்… நீ ஒரு மனிதவள மேலாளராய் இருந்தவன்தான்… நீயே சொல்லு என்னுடைய கோட்பாடு தவறா?… நான் சுயநலவாதியா?” திவாகர் சற்றே வருத்தம் கலந்த குரலில் கேட்டதும்,
“திவாகர்… முதலில் என்னை மன்னிச்சிடு திவாகர்… உன்னோட நல்ல மனசையும்… மனிதாபிமான உள்ளத்தையும் புரிஞ்சுக்காம அவசரப்பட்டு ஏதேதோ பேசிட்டேன்” நெகிழ்ச்சியோடு சொன்னேன்.
“இட்ஸ் ஓ.கே… செல்வம்!… எந்தவொரு மெழுகுவர்த்தியும் இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதால் அணைந்து விடாது!… அதே மாதிரி பிறருக்கு உதவுவதல் எந்தவொரு மனிதனும் கெட்டு விடப் போவதில்லை!… உனக்கு இன்னொரு விஷயத்தையும் சொல்றேன்… இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்துல “கே.பி.எஸ்.ஆதரவற்ற முதியோர் இல்லம்”ன்னு ஒண்ணு இருக்கு உனக்குத் தெரியுமா?” என்று திவாகர் கேட்க,
“விருட்”டெனத் தலையைத் தூக்கி, “ம்ம்..ம்ம்.. தெரியும்.. தெரியும்” என்றேன்.
“அதையும் நாந்தான் நடத்தறேன்”
மிரண்டு போனேன். “அப்படியா திவாகர்?”
“யெஸ்… அது எதுக்காக தெரியுமா? ஓரளவுக்கு உடல் ஆரோக்கியத்தோட, உழைப்பதற்கான தெம்பு இருக்கற முதியோர்களுக்கு இங்கே வேலை கொடுத்து… நல்ல சம்ப்ளமும் கொடுத்து அவங்களுக்கு சமூகத்துல கொஞ்சமும் மரியாதை குறையாமப் பார்த்துக்கறேன். அதே மாதிரி… மூப்பின் காரணமா உழைக்கத் தெம்பு இல்லாத முதியோர்களுக்காக அந்த முதியோர் இல்லத்தைத் துவக்கி அங்கே… ஆதரவற்ற முதியோர்களை இலவசமா பாதுக்காக்கறேன்”
ஒரு சிறிய யோசனைக்குப் பின், “அந்த செலவெல்லாம்?” இழுத்தேன்.
“இந்த கம்பெனில வர்ற லாபம் மொத்தத்தையும் அங்கே செலவிடறேன்… முதியோர்கள் சம்பாதித்துக் கொடுக்கும் லாபங்கள் முதியோர்களுக்கே போய்ச் சேரும்”
என்னையுமறியாமல் என் விழிகளில் நீர் கோர்த்தது. “தான் மட்டும் முன்னேறினால் முயற்சியாளன்!… தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றினால் அவன் வெற்றியாளன்!”… நீ வெற்றியாளன் திவாகர்” என்று என் பதிலைச் சொல்லி விட்டு எழுந்தேன்.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings