இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுத்தமாய் ஒருமணி நேரம் ஃபாக்டரி முழுவதையும் சுற்றிக் காட்டினான் திவாகர். ஒவ்வொரு மெஷின் அருகிலும் நின்று அதன் செயல்பாடுகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கமாய்ச் சொன்னான்.
அவனுடைய அதீத டெக்னிகல் அறிவும், அபரிமிதமான தொழில் ஆற்றலும் என்னை மேலும் மேலும் பிரமிப்பில் ஆழ்த்தின. அதேபோல் ஃபேக்டரிக்குள் ஆங்காங்கே எழுதி வைக்கப்பட்டிருந்த பணியிடப் பாதுகாப்பு குறித்த வாசகங்களும், தொழிலாளர்கள் உணவருந்துமிடத்திலும், அவர்களுடைய ஓய்வறையிலும் பொறிக்கப்பட்டிருந்த தன்னம்பிக்கைத் தத்துவங்கள் என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தினாலும், ஒரேயொரு விஷயம் மட்டும் என் மனதிற்குள் மிகவும் உறுத்தலாகவே இருந்து கொண்டிருந்தது.
மொத்த ஃபாக்டரியையும் சுற்றிப் பார்த்து, தொழிலாளர்கள் எல்லோரையும் சந்தித்ததில் ஒரு உண்மை என் மனம் புரிந்து கொண்டது. அந்தப் புரிதல் திவாகர் மீது எனக்குள் ஒருவித கெட்ட அபிப்ராயத்தையே ஏற்படுத்தியது.
ஆம்!… திவாகரின் பாக்டரியில் வேலை செய்யும் அத்தனை தொழிலாளர்களும் ஐம்பத்தியெட்டு முதல் அறுபத்தி ஐந்து வயதுடைய மூத்த தலைமுறையினர். பேருக்குக் கூட ஒன்றிரண்டு இளைஞர்கள் இல்லை.
ஒரு “ஹெச்.ஆர்.” கன்ஸல்டன்ஸி நடத்தி வரும் எனக்கு அதன்பின் புலத்தில் ஒளிந்திருக்கும் பேருண்மை எளிதாகவே புரிய வந்தது. வயதானவர்களை, அதிலும் ரிட்டையர்ட் ஆனவர்களைப் பணியில் அமர்த்துவதில் முதலாளிமார்களுக்கு நிறைய லாபங்கள் உண்டு.
இளம் வயது தொழிலாளர்களுக்கு வழங்கும் அளவிற்கு இவர்களுக்கு சம்பளம் தர வேண்டிய அவசியம் இல்லை. அதில் பாதியைக் கொடுத்தால் போதும். அடுத்து, இதர அலவன்ஸுகள், சலுகைகள், சட்டப்படியான நலத்திட்டங்கள் எதையுமே அவர்களுக்கு வழங்க வேண்டியதில்லை.
அவர்களும் தங்கள் இயலாமை, வறுமை, மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணங்களால் வாயைத் திறந்து கேட்க மாட்டார்கள். கேட்டால் அந்த வேலையும் பறி போய் விடுமோ? என்கிற அச்சத்தில் “ஏதோ வர்றது வரட்டும்!… மருந்து மாத்திரைக்காவது ஆகும்!…” என்றெண்ணிக் கொண்டு அரைச்சம்பளத்திற்கும், கால் சம்பளத்திற்கும் கூட வேலை செய்வர்.
ஆக, தன்னுடைய லாப நோக்கத்திற்காக அவர்களது ஏழ்மை நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஃபாக்டரி முழுவதிலும் வயதானவர்களை மட்டுமே பணியிலமர்த்தி, அவர்களது முதுமை வசந்தத்தை முடமாக்கும் இந்த திவாகர் உண்மையில் ஒரு சுயநலவாதி, பண வெறி பிடித்த பிசாசு, மனிதாபிமானத்தின் மகத்துவம் தெரியாத மாபாதகன். என் உள்ளம் உலையாய்க் கொதித்தது.
மீண்டும் திவாகரின் ஏ.சி.அறைக்குள் வந்தமர்ந்தோம். ஏனோ என் முகம் என்னையும் மீறி இறுக்கத்தை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டிருந்தது.
“என்ன செல்வம் முகம் ஒரு மாதிரி ஆயிட்டுது?… ஃபாக்டரிக்குள்ளார போயிட்டு வந்ததில் டயர்ட் ஆயிட்டியா?… வேணும்னா ஜூஸ் கொண்டு வரச் சொல்றேன் குடிக்கறியா?” மிகவும் அக்கறையோடு கேட்டான். அந்த அக்கறைப் பேச்சு கூட போலித்தனமாய்ப்பட்டது எனக்கு.
“ஒண்ணுமில்லை திவாகர்… ஐ யம் ஆல் ரைட்” என்றேன்.
“ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கேன்…. கூடிய சீக்கிரத்தில் வாங்கி விடுவேன்” பெருமையாய்ச் சொன்னான் திவாகர்.
நான் சுரத்தேயில்லாமல், “ஓ… அப்படியா?” என்றேன்.
என் அசுவாரஸிய நிலையைக் கண்டுபிடித்துவிட்ட திவாகர், “செல்வம்… யூ ஆர் நாட் இன் நார்மல் !… என்னாச்சு?… உடம்பு சரியில்லையா?” வற்புறுத்திக் கேட்டான்.
“உடம்புக்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு… மனசுக்குத்தான் சரியில்லை” என்றேன்.
“வாட்?… மனசுக்கு சரியில்லையா?… என்னப்பா சொல்றே?… கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுப்பா” என்றான் திவாகர்.
“ஃபாரீன் கம்பெனி மாதிரி… அற்புதமா ஃபாக்டரியை உருவாக்கியிருக்கே?… விலை உயர்ந்த நவீன எந்திரங்களை இறக்கியிருக்கே… மொத்தத்துல எல்லாத்தையுமே செறிவோட செதுக்கியிருக்கே… ஆனா….”என்று நான் இழுக்க,
“என்ன ஆனா?”
“கேட்டில் நிற்கும் வாட்ச்மேன், ரிசப்ஷன்ல உட்கார்ந்திட்டிருக்கற பெண்மணி, இங்க நமக்கு காஃபி கொண்டு வந்து வெச்ச அட்டெண்டர்… இன்னும் ஃபாக்டரிக்குள் வேலை பார்க்கும் அத்தனை தொழிலாளர்களுமே வயதானவர்கள்… ரிடையர்டு ஆனவர்கள்!… அது ஏன்?… இந்த மாதிரி கிழடுகளைப் போட்டுக்கிட்டா கொஞ்சமாய் சம்பளம் குடுத்தால் போதும்… இதுகதான் “அது வேணும்… இது வேணும்”னு கேட்காதுக!ன்னு இவங்களை அப்பாயிண்ட் பண்ணியிருக்கியா?” முகத்தை அருவருப்பாய் வைத்துக் கொண்டு கேட்டேன்
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings