இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஹல்லோ… செல்வம்… எப்படியிருக்கே?…. வாவ்… பார்த்து எத்தனை வருஷமாச்சு?” கோட்டு சூட்டுடன் படு மிடுக்காயிருந்த திவாகர் சிறிதும் தயக்கமின்றி என்னைக் கட்டிப் பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினான்.
புதுப் பணக்கார மமதையோடு இருப்பான்… செல்வச் செழிப்பு அவனை மாற்றியிருக்கும், என்று எண்ணியிருந்த நான் அவன் செயலில் நெகிழ்ந்து போனேன். எங்களின் அன்னியோன்யத்தைப் பார்த்த ரிசப்ஷன் பெண்ணின் பார்வை என் மீது முன்னை விட அதிக மரியாதையுடன் விழுந்தது.
“வா செல்வம்… என் ரூமுக்குப் போவோம்” என்று சொல்லி என்னைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான் திவாகர்.
“மேனேஜிங் டைரக்டர்” என்ற பித்தளை எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த அந்தக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே, ஏ.சி.யின் இதமான ஜில்லிப்பும், ரூம் ஸ்பிரேயின் மென்மையான நாசி வருடலும் ஒரு சொர்க்க லோகத்தை எனக்கு அறிமுகப்படுத்த, திவாகரின் பெரிய மேஜைக்கு எதிரேயிருந்த குஷன் சேரில் அமர்ந்தேன்.
இன்னும் பிரமிப்பு நீங்காத நிலையில் அமர்ந்திருந்த என்னிடம், “அப்புறம்… சொல்லு செல்வம்… எப்படியிருக்கே?… உன் ஃபேமிலியைப் பற்றிச் சொல்லு செல்வம்!… எத்தனைக் குழந்தைகள்?” கேட்டவாறே இண்டர்காமை எடுத்து, “சவிதா மேடம்… ரெண்டு காஃபி உள்ளே அனுப்புங்க” என்றான் திவாகர்.
“ம்ம்ம்… நான் ஹெச்.ஆர்.கன்சல்டன்ஸி நிறுவனம் நடத்திட்டிருக்கேன்!… ரெண்டு ஆம்பளைப் பசங்க… பெரியவன் “பி.இ”…ஃபர்ஸ்ட் இயர் படிச்சிட்டிருக்கான்!… சின்னவன் பிளஸ்டூ படிச்சிட்டிருக்கான்” என்றேன் நான்.
“மனைவி எம்ப்ளாயிடா?” கேட்டவாறே தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த மொபைல் போனை எடுத்து மேஜை மீது வைத்தான். எனக்குத் தெரிந்து அந்த மொபைல் போனின் விலையே நிச்சயம் ஒரு லட்சத்துக்கும் மேலிருக்கும்.
“இல்லை… இல்லை ஹவுஸ் ஒய்ஃப்!” என்ற நான், “அப்புறம் உனக்கு எத்தனை வாரிசுகள்?” கேட்டேன்.
“ஒரேயொரு பொண்ணு!… அமெரிக்காவுல படிச்சிட்டிருக்கு” என்றான் திவாகர்.
அப்போது அறைக்கதவு நாசூக்காகத் தட்டப்பட, “யெஸ் கம் இன்” என்றா திவாகர்.
ஒரு டிரேயில் காஃபி டம்ளர்களை எடுத்துக் கொண்டு, மிகவும் பவ்யமாய் உள்ளே வந்த அந்தப் பெரியவர், என் எதிரில் ஒரு டம்ளரையும், திவாகரின் எதிரில் ஒரு டம்ளரையும் வைத்து விட்டு, மெல்ல வெளியேறினார்.
அந்தப் பெரியவரையே கூர்ந்து பார்த்தேன் நான். என் தந்தையின் வயதிருக்கும் அந்தப் பெரியவருக்கு. எனக்குள் இனம் புரியாத ஒரு நெருடல் அரிக்கத் துவங்கியது. “இங்கேயும் வயதான பெரியவரா?”
“காஃபியைச் சாப்பிடு செல்வம்… ஏ.சி.குளிருக்கு உடனே ஆறிடும்” என்ற திவாகர், தன்னுடைய டம்ளரை எடுத்துப் பருக ஆரம்பிக்க, நானும் எடுத்துப் பருகினேன். அப்படியொரு அற்புதமான காஃபியை நான் என் வாழ்க்கையில் சாப்பிட்டதேயில்லை.
என் பார்வை அந்த திவாகர் மீதே நிலைக்குத்திப் பதிந்திருந்தது. என் மனக்குதிரை பின்னோக்கி ஓடி கல்லூரிக் காலத்தில் அந்த திவாகர் செய்த சேட்டைகளை எண்ணிப் பார்த்தது. இரண்டு முறை சஸ்பெண்ட் ஆகியிருக்கான். ஒருமுறை அட்டெண்டன்ஸ் போதாமல் எக்ஸாம் எழுத முடியாமல் போனவன்.
“வாட் செல்வம்?… என்னையே கண் கொட்டாம பார்த்திட்டிருக்கே?… என்னாச்சு?” திவாகர் காஃபியைப் பருகி முடித்து டம்ளரைக் கீழே வைத்தவாறே கேட்க,
“ஒண்ணுமில்லை… என்னால் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை… அவ்வளவுதான்” என்றேன் நான் காலி டம்ளரைக் கீழே வைத்தபடியே.
“என்ன பிரமிப்பு?” புன்னகையோடு கேட்டான் திவாகர்.
“இல்லை… அந்தக் காலத்துல நீ செஞ்ச சேட்டைகளையெல்லாம் நினைச்சுப் பார்த்தேன்!… திவாகர் நான் ஒண்ணு சொல்வேன் நீ தப்பா நினைக்கக் கூடாது” பீடிகை போட்டேன்.
“ப்ச்… சும்மா சொல்லுப்பா…”என்றான் திவாகர்.
அப்போது கதவு நாசூக்காகத் தட்டப்பட்டு, அடுத்த இரண்டாவது நொடியில் அந்தப் பெரியவர் உள்ளே வந்து காலி டம்ளர்களை எடுத்துக் கொண்டு போனார்.
இந்த முறையும் அந்தப் பெரியவரைப் பார்த்து என் மனம் இறுக்கமானது.
“சொல்லுப்பா… என்னமோ சொல்ல வந்தே?” திவாகர் நினைவூட்ட,
“கல்லூரிக் காலத்தில் உன்னோட நடவடிக்கைகளைப் பார்த்து… நீயெல்லாம் எதிர்காலத்துல என்ன கதி ஆகப் போறியோ?… எந்த ஊர்ல உதவாக்கரையாத் திரியப் போறியோனு நினைப்பேன்!… பட்… காலம் என் எண்ணத்தை அப்படியே பொய்யாக்கிடுச்சு” என் மனதைத் திறந்து காட்டினேன்.
மெல்ல முறுவலித்த திவாகர், “செல்வம்!… காலத்திற்குப் பேசும் சக்தி கிடையாது!… ஆனால் அந்தக் காலம்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்கின்றது” என்றான்.
அவன் பேச்சை ஆமோதிப்பது போல் மேலும், கீழுமாய்த் தலையாட்டினேன்.
=“வா செல்வம்… என்னோட ஃபேக்டரியைச் சுற்றிக் காட்டறேன்” என்றபடி திவாகர் எழ,
“பரவாயில்லைப்பா!… “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்கிற மாதிரி… அதான் உன்னோட ஆபீஸைப் பார்த்திட்டேனே?… இதுக்கு மேலே ஃபாக்டரியை வேற பார்க்கணுமா?”
“அட… வாப்பா… ரொம்பத்தான் பிகு பண்றியே?” என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான் திவாகர்.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings