எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மதுரை – அனுப்பனடி – இரவு
காலையில் வீட்டைவிட்டு சென்ற மகன் சதீசை காணமல் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனாட்சி. அப்பா இல்லாத பையன்னு செல்லமா வளர்ந்து விட்டான் சதீஷ். அம்மா மீனாட்சியின் ஒரே மகன் சதீஷ். கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறான்.
அம்மா மீனாட்சி வீட்டு வேலை செய்து , மகனை படிக்க வைத்தாள். மகன் மீது அளவு கடந்த பாசம். அது போல தான் , சதீஷுக்கும் அம்மா மீது பாசம். படித்த வரை அவனுக்கு அம்மா மட்டுமே உலகமாக தெரிந்தாள். படிப்பை முடித்து , வெளிஉலகம் சென்ற பிறகு அம்மா மீதான கவனிப்பு குறைய துவங்கியது.
தற்போது அரசியல் கட்சி ஒன்றில் இளைஞர் அணி துணை செயலாளர் பதவியில் உள்ளான் சதீஷ். இன்று காலையில் , அவன் இருக்கும் கட்சி தலைவரின் பிறந்த நாள் என்பதால் காலையிலே வீட்டை விட்டு சென்றவன் , இதுவரை வீடு திரும்பவில்லை.
சதீஷ் வண்டி வரும் சப்தம் , வீட்டின் அருகில் நிறுத்தினான். அம்மா மீனாட்சி அவனை பார்த்ததும் முகம் மலர்ந்தால்.
“வாப்பா , சதீஷ் – என்னப்பா ? இவளோ நேரம் , சாப்டியா “ என்று அவன் மீது அக்கறையில் கேட்டாள் மீனாட்சி.
மகன் சதீஷோ , அம்மாவின் பேச்சை காதில் வாங்காமல் உள்ளே நுழைந்தான். சதீஸின் செல்போன் சிணுங்கியது.
“சொல்லுங்க அண்ணே , ஆமா.. ஆமா.. இன்னைக்கு தலைவர் பிறந்த நாள் விழா சிறப்பா கொண்டாடி முடிச்சாச்சு. எல்லாருக்கு பரிசு, சாப்பாடு எல்லாம் தாராளமா பண்ணியாச்சு. தலைவர் ரொம்ப சந்தோஷபட்டதா, மாவட்டம் சொன்னாரு. நமக்கு அது போதும், இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் அண்ணே, தலைவர் என் பெயர் சொல்லி நன்றி சொல்லிருக்கார் , இத விட வேறு என்ன வேணும் , சாதாரண தொண்டன் பெயரை ஒரு தலைவர் சொல்லிருக்கார். அந்த மாதிரி சந்தோசம் என் வாழ்க்கையில் கிடைக்குமா?“ என்று தொடர்ந்து தலைவர் பற்றியும், கட்சியை பற்றியும் புகழ் பாடி கொண்டிருந்த உரையாடல் ரொம்ப நேரம் நீடித்தது.
அம்மா அவனிடம் பேச வருவதை கண்டு கொள்ளாமல் இருந்தான் சதீஷ். சில நிமிடங்களுக்கு பின் செல் போன் உரையாடல் நின்றது.
“என்னம்மா , போனில் பேசிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க பேசிட்டு இருந்த , நான் ரொம்ப சந்தோசமாக இருந்தேன் , இன்னைக்கு என் தலைவர் பிறந்தநாள் , மறக்க முடியாத நாள்.” என்று கூறினான்.
“இல்லப்பா , சாப்புடுரியான்னு கேட்டேன் “ என்று அம்மா மீனாட்சி கூறினாள்.
“இல்லைம்மா , நீ சாப்பிடு , நான் சாப்டேன் , இன்னைக்கு மனசும் வயிறும் நிறைஞ்சு இருக்கு , ரொம்ப சந்தோசமா இருக்கேன்.” என்று கூறினான் சதீஷ்.
அம்மா மீனாட்சியின் முகம் மாறியதை கண்ட சதீஷ் “என்னம்மா , என்ன சாப்பாடு செஞ்ச? கொஞ்சம் போட்டு கொண்டு வா , உனக்கும் போட்டு கொண்டு வா “ என்று கூறினான்.
உடனே முகம் மலர்ந்தாள் அம்மா மீனாட்சி . தட்டில் சாப்பாடுடன் வந்தாள் மீனாட்சி.
தட்டில் கேசரி மற்றும் பிரியாணியும் இருந்தது. அதனை கண்டதும், “இன்னைக்கு என்ன விசேசம் அம்மா ? கேசரி செஞ்சிருக்க?“ என்றான் சதீஷ்.
“இன்னைக்கு அம்மா பிறந்தநாள் தம்பி, மறந்துட்டியா? இல்ல அம்மா என் வாயால சொல்லனும்னு இருக்கியா? வருசா வருஷம் அம்மா பிறந்த நாளுக்கு சேலை வாங்கித்தருவ, கோவிலுக்கு கூட்டிட்டு போய் அம்மாட்ட ஆசீர்வாதம் வாங்குவ, இன்னைக்கு நைட்டு ஆச்சு, இதுவரை அம்மா பிறந்தநாளுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லல.” என்று அம்மா மீனாட்சி ஏக்கமாக , மகன் சதீஷிடம் கூறினாள்.
சட்டென்று, “அம்மாவின் பிறந்தநாளை மறந்து போய்ட்டோமே? கட்சி தலைவர் பிறந்தநாள் சிறப்பா கொண்டாட தெரிந்த நமக்கு, பெற்ற தாயின் பிறந்த நாளை மறந்தது மிக பெரிய தவறு தானே? இன்றைய நாள் முடிய சில மணிநேரம் தான் இருக்கிறது, அம்மாவிற்கு என்ன பரிசு தர“ என்று சதீஸின் மனதில் ஓடி கொண்டு இருந்தது.
அம்மாவை கட்டி அணைத்து கண் கலங்கினான் , அம்மாவிடம் மன்னிப்பு கேட்டான். மகனின் தவறுகளை மன்னிப்பவள் தானே அம்மா. மன்னித்தாள் மீனாட்சி. அம்மாவின் பிறந்த நாளுக்கு தன் மன்னிப்புடன் கலந்த கண்ணீரை பரிசளித்து கொண்டு இருந்தான் சதீஷ்.
# நம் குடும்பத்தாரின் பிறந்த நாள் – கல்யாண நாள் – முக்கியான நாட்கள் அன்று அவர்களுக்கு முடிந்த வரை நேரில் வாழ்த்து சொல்வோம். முடியாத பட்சத்தில் செல்போன் மூலம் வாழ்த்து தெரிவிப்போம்.
# நாம் தெரிவிக்கும் வாழ்த்து அவர்களை மகிழ்விக்கும் என்ற உண்மையுடன்….
# அரசியல் – சினிமா என்று தலைவர்களை கொண்டாடும் நமது தலைமுறைகள் , அவர்களின் குடும்பத்தையும் சற்று கவனிக்க வேண்டும்.
எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings