எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மீனாட்சிபுரம்.
அனாதை இல்லம், முதியோர் இல்லம், மருத்துவமனை, தெருவோர பிச்சை எடுக்கும் நபர்கள் என்று அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை என்று தடபுடலாக செலவு செய்து மக்களை மகிழ்வித்து கொண்டு இருந்தான் , செந்தாமரை.
போஸ்டர் , பேனர் என்று செந்தாமரை வணக்கம் வைப்பது போல் படம் , தாய் தந்தையின் நினைவு நாள் , ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் தினம் , என்று விளம்பர போர்டு அங்கங்கே தெரிந்தது. அதனை பார்த்து கொண்டு அப்போது வந்த பஸ்ஸில் இருந்து இறங்கி ஊருக்கு புதிதாக வந்திருந்த சின்னமணி ,
“ என்ன நண்பா , உங்க ஊர்ல இவ்வளோ நல்லது பண்ற நபர் யாருப்பா? என்ன விசேசம்?” என்று இந்த ஊர்கார நண்பர் மாரிமுத்துவிடம் விசாரித்தான்.
“அதாவது , சின்னமணி , செந்தாமரை இந்த ஊர்ல பெரிய தலைக்கட்டு. அவங்க அப்பா அம்மாவுக்கு நினைவு நாளன்று வருசத்திற்கு ஒரு நாள் , இப்படி விளம்பரம் செய்து பேர் வாங்க செய்யும் வேலை தான் இது” என்று மாரிமுத்து கூறினான்.
“என்ன ? மாரிமுத்து சொல்ற, இத்தனை பேருக்கு சாப்பாடு , டிரஸ் என்று தடபுடலாக , செலவு செய்றாரு , அத போய் விளம்பரம் பண்றாருன்னு சொல்ற.?” என்று ஆச்சரியமாக சின்னமணி கேட்டான்.
“வெளில இருந்து பார்க்கிற எல்லாரும் இப்படி தான் நெனைப்பாங்க. அது அப்படி தான் தெரியும். இது உலக நியதி“ என்று சலிப்பாக கூறினான் மாரிமுத்து.
“இதெல்லாம் உண்மை தான , மாரிமுத்து ? அப்பா அம்மா இறந்த பிறகு அவங்க நினைவு நாளுக்கு இப்படி மற்றவர்கள் வயிறு குளிரும்படி செய்வது பெரிய விஷயம் தானே! இப்ப இருக்கிற காலத்தில் யார் இப்படி பண்றாங்க , ரொம்ப குறைவு. உங்க ஊர் தலைக்கட்டு செந்தாமரையை பாராட்டியே ஆகணும் “ என்று சின்னமணி கூறினான்.
“உன் பாராட்டு எல்லாம் அப்புறம் வச்சிக்கோ. வா வீட்டுக்கு போய் சாப்பிட்டு அப்புறம் பேசுவோம் “ என்று தன் நண்பனை வீட்டிற்கு அழைத்து சென்றான் , மாரிமுத்து.
இருந்தாலும் சின்னமணி விடுவதாக இல்லை, “இல்ல , மாரி நாம இங்க அன்னதானத்தில் சாப்பிட்டு போயிருவோம்.” என்றான். மாரிமுத்து முறைத்து பார்த்தான்.
“உனக்கு புரியும் படி சொல்லனும்னா, இருக்கும் போது சோறு போடனும் , இறந்த பிறகு ஊருக்கே சோறு போட்டு என்ன பயன் ?” என்று நாசுக்காய் நகைத்தான் மாரிமுத்து.
“ஓ , செந்தாமரை , அந்த லிஸ்டா , ஓகே, ஓகே அவன பெத்தவங்க உயிருடன் இருக்கும் போது கவனிக்காம , அவங்க இறந்த பிறகு ஊருக்கே சோறு போட்டு விளம்பரம் செய்ற ரகம். இப்போ புரிது. “ என்று புரிந்து கொண்டான் சின்னமணி.
“அவங்க அப்பா – அம்மா கடைசி காலத்தில் , சோத்துக்கு இவன்ட , இவன் பொண்டாட்டிட்ட அவ்ளோ பேச்சு வாங்கி , அந்த சோத்தை சாப்பிடறதுக்குள்ள ரொம்ப கஷ்டபட்ட கதை ஊருக்கே தெரியும். இருந்தாலும் ஊருக்கு முக்கிய தலைக்கட்டு என்பதால் எதுவும் சொல்ல முடியாமல் , நம்ம ஊர்காரங்களும் இருக்காங்க. அதனால இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் கடந்து போயிருவோம்” என்று மாரிமுத்து , தன் நண்பன் சின்னமணியிடம் கூறினான்.
“கண்டிப்பா , இப்படி பட்ட வீண் விளம்பரம் தேவையா , இப்படி தான் நெறைய பேர் நம்ம நாட்டில சுத்திகிட்டு இருக்காங்க. பெத்தவங்கள , கடைசி வர நல்லா பார்த்துகிட்டா , நம்ம குடும்பம் நல்லா வரும். வயசான காலத்தில் அவங்களுக்கு ஒரு ஆதரவு தேவை , அத குடுக்கிறது தான் பிள்ளைகளோட கடமை.” என்று பேசிய படி இருவரும் நகர்ந்து சென்றனர்.
# பெற்றவர்களை வயதான காலத்தில் நல்ல முறையில் கவனிக்க வேண்டும் என்பது பிள்ளைகளின் கடமை மட்டும் அல்ல அது அவர்களின் உரிமை.
#பெற்றவர்களின் சொத்து மட்டும் நமக்கு தேவை , அவர்கள் தேவை இல்லை என்கிற இன்றைய சூழ்நிலை பிள்ளைகள்.
#பெற்றவர்களே நம்முடைய சொத்து என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் , அவர்களை இழந்த பிறகு வருந்துவதினால் எந்த ஒரு பலனும் இல்லை. பெற்றோர்கள் ஒரு போதும் தன் பிள்ளைகளுக்கு துரோகம் நினைக்க மாட்டார்கள்.
எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings