எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அம்மா, காய் கொண்டு வந்திருக்கேன்.”
அழைப்பு மணியை அழுத்தியதும் வெளியே வந்த சுகந்தி கௌரியைப் பார்த்து புன்முறுவலித்தாள்.”என்ன கௌரி! இந்த தடவை லேட்டாக்கிட்டே!”
“ஆமாம்மா! இரண்டு நாளாக ஒரே காய்ச்சல்! .இன்னிக்கு கூட முடியலைதான். என்ன செய்றது ! வயிறுன்னு ஒண்ணு இருக்கே!”கூடையை கீழே வைத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் அவள்.
கூடையினுள் அணிவகுத்திருந்த பசுமையான காய்கறிகளை நோட்டமிட்டவள் வரிசையாக கத்திரிக்காய் முள்ளங்கி வெண்டை என்று எடுத்து வைத்தாள்.”மிளகாய் ,இஞ்சி இல்லையா? ”
“கொண்டு வந்தேம்மா ! வித்துப்போச்சு. வெங்காயம் வேண்டாமாம்மா?” என்று கேட்டுக்கொண்டே கௌரி காய்களை நிறுத்து வைத்தாள்.
அதற்குள் சூடாக ஒரு டம்ளர் காபியும் மாத்திரையும் எடுத்து வந்து, “கௌரி, எடுத்துக்கோ, பசிக்குதுன்னா சொல்லு , இட்லி கொண்டு வரேன்.”
“அம்மா! காய் விக்குதோ இல்லையோ ! என் முகத்தை பார்த்ததும் நீ காபி கொடுப்பேன்னுதாம்மா இவ்வளவு தூரம் வந்தேன்.”அவள் குரல் தழுதழுத்தது.
“இதென்ன கௌரி! இன்றைக்கு நேற்றா உன்னைப் பழக்கம்! நாலு வருஷமா வந்துட்டு இருக்கிறே! உனக்கு ஒரு காஃபி கொடுத்தா குறைஞ்சுடுவேனா?”
“அதில்லேம்மா ! ஒரு சந்தர்ப்பம் பார்த்து கொடுக்கிறியே ! அதைச் சொன்னேன். காய் எல்லாம் எடை போட்டுட்டேன். மறுபடி போடவா அம்மா? “
‘வேண்டாம்’ என்று மறுதலித்தவள் காய்கறிகளை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். காசு வாங்கிக் கொண்டு கிளம்பும் போது கௌரி கேட்டாள்.
“ஏம்மா! ஒருதரம் கூட நீங்க பேரமே பேசுவதில்லை! எடையும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதே இல்லையே!”
சுகந்தி சிரித்தாள்.
“உனக்கு பெரிய சந்தேகம்தான் போ! நீ பாவம் ! தினமும் உனக்கு என்ன பெரிய லாபம் கிடைத்து விடப் போகிறது! இதில் உன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டு பேரம் பேச எனக்கு பிடிக்கலை! நியாயமான விலைதான் சொல்வாய் என்று ஒரு நம்பிக்கை தான் போயேன்!.”
“அம்மா! உங்களுக்கு இளகின மனசு, இப்படி சொல்றீங்க! ஆனா அந்த கோடி வீட்டு அம்மா அன்றைக்கு என்ன சொன்னாங்க தெரியுமா? பத்து நாளைக்கு முன்னால நல்ல மழையிலே நனைஞ்சு போய் ஒரே கஷ்டமாகி விட்டது. அம்மா ஒரு டம்ளர் காபி இருந்தா கொடேன் அப்படின்னு வாய் தவறி கேட்டுட்டேன். அதுக்கு நான் பட்ட பாடு.”
“ஏன்! என்ன சொன்னார்கள்!” என்று வியப்புடன் கேட்டாள் சுகந்தி.
அவளுக்கும் அந்த கோடி வீட்டு பரிமளாவைத் தெரியும். வங்கியில் பணி புரிகிறாள். அவள் கணவன் கூட ஏதோ ஒரு அரசு அலுவலகத்தில் பணி புரிகிறார். ஒரே பையன் . இரண்டாவது படிக்கிறான். இதெல்லாம் சுகந்திக்கும் அவள் பையன் பாபு மூலமாகத்தான் தெரியும்.
பரிமளாவை ஸ்கூட்டரில் அடிக்கடி பார்த்திருக்கிறாள் என்றாலும் நெருங்கிப் பேசியதில்லை.
“அதேம்மா கேட்கிறே! காசு கொடுத்து தானே காய் வாங்குறேன்! உனக்கு ஏன் நான் காஃபி கொடுக்கணும்! நீ என்ன சும்மாவா காய் கொடுக்கிறேன்னு பொரிஞ்சு தள்ளிட்டாங்கம்மா!”
அடக்க மாட்டாமல் சிரித்தாள் சுகந்தி .
“அப்படின்னா இப்போ நான் கொடுத்த காபிக்கு நீ எக்ஸ்ட்ரா காய் போட்டியா என்ன?”
“அட போம்மா ! நீ வேற தமாஷ் பண்ணிகிட்டு! உன்னோடு அதை ஒப்பிட்டுப் பேசறதே தப்பு “, என்றபடி கூடையைத் தூக்கி வைத்துக்கொண்டு கிளம்பினாள் கௌரி.
கௌரி, அந்த காலனிவாசிகளுக்கு பழக்கப்பட்ட ஒரு காய்க்காரப்பெண்மணி
.காய் என்று இல்லை சில சமயங்களில் பழங்கள் தேங்காய் என்று கூட கொண்டு வருவாள்.
கடை விலைக்கு கொஞ்சம் கூடத்தான் என்றாலும் ஒரு அழுகல் வாடல் இருக்காது.தோட்டத்திலிருந்து பறித்து வந்தது மாதிரி பச்சைப் பசேலென்று இருக்கும்.அது மட்டுமில்லை .ஓரளவுக்கு நியாயமானவளும் கூட.அடாவடித்தனம் வம்பு எதுவும் கிடையாது.
அதனாலேயே அந்தக் காலனியில் அவளை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.
சுகந்தி என்றில்லை, அங்கிருக்கும் மற்றும் சில நடுத்தர குடும்பத்தினரும் அவளுக்கு உதவி செய்வார்கள்.
காய்கறிகளை வாங்கிக் கொள்வதோடு, பழைய துணிகள் , புடவைகள் , புத்தகப்பை பாடப் புத்தகங்கள் அவள் பிள்ளைகளுக்கு என்று கூட கொடுத்து உதவுவார்கள்.
“அம்மா ! சீக்கிரம் வரயா?” கூடையை இறக்கிக் கொண்டே கௌரி குரல் கொடுத்தாள்.
“வரேன் கௌரி! இரு !” என்றபடி ஈரக்கையைத் துடைத்தபடியே வந்தாள் சுகந்தி..
காய்களை நிறுத்துக் கொண்டிருக்கும் போதே பரிமளா வீட்டு வேலைக்காரி அங்கு வந்து நின்றாள்.
“இந்தா கௌரி , கொஞ்சம் அங்கே வந்துட்டுப் போ! அம்மா கூப்பிட்டாங்க.”
“இதென்னடா அதிசயமாய் இருக்கு! எதுக்கு கூப்பிட்டாங்க? ஏதாச்சும் கொடுக்கப் போறாங்களா? “
“அட நீ வேற புரியாதவ! காய் எதுவோ எடை குறையுதாம்.உன்னைக் கண்டபடி திட்டிக் கிட்டு இருக்கு அந்த சாவு கிராக்கி! இதுக்குப் போய் காய் கொடுப்பியா நீ! வந்து என்னன்னு கேட்டுட்டுப் போ! “
சலிப்புடன் சொல்லிவிட்டு நடையைக் கட்டினாள் அவள்.
திகைத்துப் போனாள் கௌரி.எடை குறைவாக யாருக்குமே அவள் காய்கொடுத்தது கிடையாது.கூடத்தான் இருக்கும்.
கஷ்ட ஜீவனம் தான் என்றாலும் அவள் யாரையும் ஏமாற்றிப் பிழைப்பவள் அல்ல..
அவள் நல்ல குணத்தையும் மனதையும் தெரிந்த நிறைய வாடிக்கைக்காரர்கள் உண்டு.அவர்கள்தயவினால் அவள் குழந்தைகளை படிக்க வைக்க முடிகிறது. நன்றியையும் விசுவாசத்தையும் காட்டும் விதமாக காய்களில் கணக்கே பார்க்க மாட்டாள்.அப்படியிருக்கும்போது , இதுதான் முதல் முறை.ஏதேதோ எண்ணமிட்டவளாக அந்த வீட்டை நோக்கி நடந்தாள் அவள்.
“இந்தா !காய்க்காரி, உருளைக்கிழங்கு நானூத்து ஐம்பது கிராம் தான் இருக்கு. இதோ பார்! “என்று அவளிடம் தான் வைத்திருந்த தராசில் நிறுத்துக் காட்டினாள் பரிமளா.
“அது சரிம்மா ! அதுக்குத்தான் உன்னிட்டே சொல்லிட்டு ஐம்பது கிராம் கத்திரிக்காய் அதிகமா போட்டேன். கத்திரியையும் எடை போடு” என்றாள் கௌரி சாவகாசமாக.
பதில் எதுவும் சொல்லாமல் எடை போட்டவள் முகத்தில் அசடு வழிந்தது..
இருந்தாலும் சுதாரித்துக் கொண்டவளாக “அது எப்படி கத்திரிக்காய்க்கும் உருளைக்கும் சமமா போகும்! அது விலை என்ன? இது விலை என்ன? “
வந்த சிரிப்பை கௌரி மட்டுமல்ல அங்கிருந்த எல்லோருமே அடக்கிக் கொண்டார்கள்..
சுற்றி நின்றவர்களை அமர்த்த லாக ஒரு பார்வை பார்த்த பரிமளா , “ஆமாம் , நீங்க எதுக்கு இங்கே கூட்டம் போட்டுக்கிட்டு. இந்த காய் விக்கிறவளுக்கு பரிஞ்சுகிட்டு வந்தீங்களாக்கும்!” என்று நொடித்தவள் படீரென்று கதவை சாத்தி தாழிட்டாள்..
சுற்றியிருந்த அனைவரின் முகத்திலும் திகைப்பு தான் விரவியிருந்தது.
சே ! எத்தனை கேவலமான ஒரு மனம், எத்தனை சம்பாதித்தால் என்ன! சில பேருக்கு மனிதத்தன்மையே மறந்து இல்லை மரத்துத்தான் போய்விடுகிறதே! வெறும் மிஷின்கள்! லாப நஷ்ட கணக்கு பார்க்கும் யந்திரங்கள்.அவரவர் மனதில் ஏதேதோ எண்ணமிட்டவர்களாக கலைந்து போனார்கள்..
சுகந்தியுமே அங்கு நின்று கொண்டுதான் இருந்தாள்.அவளுக்கு இந்த பேச்சு மிக அருவருப்பாக அசிங்கமாக தோன்றியது.எத்தனைதான் இருந்தாலும் கீழ் மட்டத்தில் காய் விற்றுப் பிழைக்கும் ஒருத்தியிடம் அவள் தரத்துக்கும் கீழே இறங்க எப்படி மனசு வருகிறது!
விற்பவர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டியதுதான்.அதற்காக ஓரளவு பழகி சுவாதீனமாக வரும் இந்த கௌரி போன்றவர்களிடம் கூடவா இப்படி நடக்க வேண்டும்! சலிப்பாக இருந்தது அவளுக்கு.
ஆட்டோ டிரைவர் அடித்துப் பேசுகிறானே! அவனை என்ன செய்யமுடியும்! டாக்டரிடம் போனால் எவ்வளவோ செலவாகிறது. அவர்களெல்லாம் என்ன வளைந்தா கொடுக்கிறார்கள்! நினைக்கவே மனது கசப்பாக உணர்ந்தாள் அவள்.
அம்மா ! அம்மா ! என்றபடி ஓடிவந்தான் பாபு..
“என்ன பாபு, ஏன் ஓடி வருகிறாய்! “என்று கேட்ட சுகந்தி அவள் பின்னால் வந்து நின்ற அருணைப்பார்த்தாள்.அவன் கண்கள் கலங்கி சிவந்திருந்தன.
“அம்மா! இவன் அம்மாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி விட்டதாம்.ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிஇருக்காங்களாம்.கௌரி வந்து சொல்லிவிட்டு அருணைப் பார்த்துக்கொள்ள சொன்னாள் அம்மா.”
“அம்மா! அருணுக்கும் காபி டிபன் தருவேதானே!”
மூச்சு விடாமல் பேசியவன் அந்த ஆஸ்பத்திரி விலாசம் அடங்கிய சீட்டை நீட்டினான் பாபு.
சுகந்திக்கு ஒன்றுமே புரியவில்லை.
முதலில் வாடி நின்ற அந்தப் பையனைக் கவனிப்போம் என்று எண்ணமிட்டவளாக உள்ளே அழைத்துச் சென்றாள் அவள்.
சற்று நேரத்தில் அருணின் அப்பா வந்து அவனைக் கூப்பிட வந்தவர் விவரம் சொன்னார்.
அன்று பாங்க்கிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த பரிமளா மீது ஒரு ஸ்கூட்டர் மோதி விட்டதாம்.கூட்டம் கூ டியிருப்பதை பார்த்து தற்செயலாக அங்கே வந்த கௌரி பரிமளாவைப் பார்த்ததும் எனக்குத் தெரிந்தவர்கள்தான் என்று சொல்லி ஆட்டோவில் வைத்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போயிருக்கிறாள். அங்கே ஒரு நர்ஸ் பழக்கமாம். அவளிடம் சொல்லி அவருக்கும் ஃபோன் பண்ணிவிட்டு பரிமளா கைப்பை சாமான்களை எல்லாம் எதிர் வீட்டுக்காரர்கள் இடம் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாள்.
‘அது மட்டுமா! அருணைப் பார்த்துக்கொள்ள சொல்லி பாபு விடம் வேறு சொல்லிவிட்டு போயிருக்கிறாள்”, என்று சொன்னாள் சுகந்தி.
“ஆமாம் ‘,என்றவன் “நான் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கிறேன். நல்ல வேளையாக அதிகமாக ஒன்றும் சேதமில்லை.நல்ல வேளையாக அந்த கௌரி சரியான நேரத்தில் கொண்டு போய் சேர்த்து விட்டாள்!” என்று பெருமூச்சு விட்டான் .
“நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது பெரிய விஷயமில்லை.ஆனால் ஒரு சாதாரண காய்கறி விற்பவள் உதவி செய்தது தான் பெரிசு” என்று சொன்னவள் ஏதோ நினைத்துக் கொண்டவளாக வாயை மூடிக் கொண்டாள்.
ஆனால் அந்த காலனி வாசிகளுக்குத்தான்வாய் நிறைய அவல் கிடைத்த மாதிரி ஆயிற்று.மறு முறை கௌரி வந்த போது அவளுக்கு ஒரே ராஜ உபசாரம் தான்.
“கௌரி நீ இவ்வளவு தூரம் அதுவும் அந்த பொம்பிளைக்கு செய்வேன்னு யாரும் எதிர்பார்க்கலை!.உனக்கு எப்படி மனசு வந்தது” என்று ஒருவர் சொல்ல கௌரியின் முகம் அப்படியே மாறிப் போயிற்று.
“அதென்னம்மா ! அப்படி சொல்லிட்டே! கஷ்டம் எல்லாருக்கும் வரதுதான்.அந்த சமயத்துலே இவங்க நமக்கு என்ன செஞ்சாங்க அப்படின்னு நினைக்க கூடாதும்மா!”
“இருந்தாலும் கௌரி !’என்று இழுத்த அவளை தடுத்துவிட்டுகௌரியே மேலே பேசினாள்.
“இரும்மா! என்ன அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு! மனுஷங்கன்னா இப்படியும் இருப்பாங்க அப்படியும் இருப்பாங்க தானே! அதுக்காக அடிபட்டு கிடக்கிறவங்களை அப்படியே போட்டுவிட்டு போனா அப்புறம் சோறு தண்ணி இறங்குமா வவுத்திலே! அதோடு எனக்கும் இரண்டு பசங்க இருக்காங்கம்மா! அருண் பாவமில்லையா!”
சுகந்திக்கும்மற்றவர்களுக்கும் ஒரே வியப்பு! அது எப்படி இவளால் இவ்வளவு தூரம் தழைந்து போக முடிகிறது! நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் கூட இவள் அளவு இரங்கியிருக்க மாட்டேன்.
மனதுக்குள் எண்ணமிட்டவளாக கௌரியையே பார்த்தாள் அவள்.
” இத பெரிய விஷயமா நீங்க சொல்றதுதான் ஆச்சரியமா இருக்கு! நீங்க எல்லாம் எனக்கு எவ்வளவோ செய்றீங்க ! என் பசங்க படிக்கிறதே உங்களால் தானம்மா ! அந்த நன்றி மனசுலே எப்பவும் இருக்கும்.
சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு நடந்து போகும் அவளையே வியப்புடன் பார்த்தார்கள் அவர்கள்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings