in ,

மனிதரில் இத்தனை நிறங்களா?!?! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“முடியும்! முடியும்! என்னால் கண்டிப்பாக முடியும்!” தீர்மானமாக சொன்னவளை திகைப்புடன் பார்த்தார் ராகவன்.

‘முடியாதும்மா! ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கல். பாக்டரியை விக்கறதா முடிவு பண்ணிட்டேன். இருக்கிற கம்பெனிகளை நிர்வாகம் பண்ணவே முடியலை. போதாக்குறைக்கு  நஷ்டத்திலே வேற ஓடுது”.

“அதெல்லாம் தான் ஏற்கனவே  எனக்கும் தெரிந்தது தானே!” இடைமறித்தாள் பிரபா. “அதோடு இன்னும் தெரியும். உள்ளூர் பார்ட்டி என்றால் சீக்கிரம் பிக்கப் ஆயிடும்னு ஒருத்தர் வாங்கவும் வந்திருக்கிறார். அதுதானே!”

“அது எப்படி உனக்கு தெரியும்?” ஆச்சரியத்துடன் வினவினார் ராகவன்.

‘அதுமட்டுமா தெரியும்! இன்னும் எத்தனையோ தெரியும்’ மனதுக்குள் நினைத்துக் கொண்டவளாக புன்னகைத்தாள் அவள்.

சோஃபாவில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த அண்ணனின் பக்கவாட்டுத்தோற்றம்  அவள் கண்களில் பட்டது. சற்றே மெலிந்து  கவலைகளும் கோடிட்டிருந்த அந்த முகத்தை பார்த்தாள் அவள்.

“அண்ணா! ப்ளீஸ், எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்களேன். நான் சும்மாத்தானே இருக்கிறேன்” மையிட்ட கண்களில் கெஞ்சுதலை தேக்கி அவள் இறைஞ்சிய போது  அவருக்கு சிரிப்புதான் வந்தது.

“என்ன பெண்ணம்மா நீ! மாப்பிள்ளை ஃபாரினிலிருந்து உனக்கு டிக்கெட் அனுப்பிட்டா உடனே  பறக்க வேண்டியவள் நீ. விசா காரணமாக கொஞ்சம் டைம் எடுக்குது. என்னவோ அண்ணனுக்கு உதவியாக இங்கேயே  இருந்து விடுவது போல பேசுகிறாய்!”

விளையாட்டாக பேசுவது போலவே மறுத்து பேசும் அண்ணனையே கூர்ந்து நோக்கினாள் அவள். நினைவு தெரிந்த நாளிலிருந்து பிரியமும் பாசமுமாக வளர்த்தவர் அவர்.

திருமணமாகி அண்ணி வந்தபோது கூட பிரபா தான் முதல் குழந்தை  என்று சொன்னவர். இன்றைக்கும் அப்படித்தான் நடந்து கொள்கிறார். அண்ணி சுதாவும் அதே மாதிரி தான். பிரகாஷ், ரகு பிறந்த பிறகு கூட அவளுக்குத்தான் முதலிடம்.

பெற்றவர்களுக்கு கை அடித்து கொடுத்த மாதிரி ஜாம்ஜாம் என்று திருமணத்தையும் நடத்தி முடித்து விட்டார். இதோ அடுத்தாற் போல அயல் நாட்டுக்கும் போகப் போகிறாள். இத்தனை செய்த அண்ணனுக்கு அவள்  என்ன திருப்பி செய்தாள்! எம்.பி.ஏ. படிக்க ஆசைப்பட்டு படித்தவள் கொஞ்ச நாள் வேலையும் பார்த்தாள்.

அவள் அறிவும் திறமையும் போகும் இடத்துக்கு மட்டும் தான்  பயன்பட வேண்டுமா! வளர்த்து விட்ட அண்ணன் குடும்பத்துக்கு அவள் காட்டும் நன்றிதான் என்ன? சுழலாக பரவும் எண்ணங்களிலிருந்து விடுபட்டவளாக  அண்ணனை நோக்கினாள் அவள்.

“நீங்கள் என்ன சொன்னாலும் சரி ! நான் கேட்கப் போவதில்லை. கண்டிப்பாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத்தான் போகிறேன். தேவையான ஏற்பாடுகளை செய்து விடுங்கள்” என்றவள் ஒரு கணம் தயங்கி மறுபடியும் தொடர்ந்தாள்.

“நான் யார் என்பதே  அங்கிருப்பவர்களுக்கு தெரியக்கூடாது. யாரோ  உங்களிடம் வேலை கேட்டு வந்தவளை கம்பெனியை பார்க்க அனுப்பியிருக்கிறீர்கள்..ரைட்! “

வேக வேகமாக சொல்லிவிட்டு துள்ளி ஓடிய தங்கையையே வெறித்துப் பார்த்தார் ராகவன்.

நினைவுச்சுழல்களில் அந்த குறிப்பிட்ட ஃபாக்டரியை வாங்கிய தினம் ஞாபகம் வந்தது.

“எத்தனையோ பேர் சுயதொழில் செய்கிறார்கள்! நீ ஏன் எதிலுமே ஈடுபட மாட்டேன் என்கிறாய்? இந்த வேலையே போதுமென்று இருக்கிறாயே!”

அலுவலகத்தில் அவருக்கு மிகவும்  தெரிந்த நண்பர் சுரேஷ்  கேட்ட போது யோசனை வந்தது.  ஏகப்பட்ட பொறுப்புகளை சுமந்து கொண்டு  பணம் நிறைய வேண்டுமே  என்ற தவிப்பில் இருந்தவர்  சுரேஷ் வந்து பேசியதும் யோசிக்க ஆரம்பித்தார்.

இருவரும் சேர்ந்துதான் அந்த பிளாஸ்டிக் ஃபாக்டரிக்கு இடம் பார்த்து  முடிவு செய்தார்கள்.  நகரத்தை ஒட்டிய ஒரு சிற்றூரில் ஏகப்பட்ட  எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. நினைத்தபடியே நல்ல டிமாண்ட் இருந்தது.

சின்னதும் பெரியதுமான  பிளாஸ்டிக் கன்டெய்னர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தபோது அவர்கள் துளியும்   நினைத்துப் பார்க்கவில்லை.அதிர்ஷ்டமும் செல்வமும் கை கோர்த்துக் கொண்டு அவர்களிடம் வரும் என்று.

பாக்கிங் மெடீரியல்ஸ் தயாரிக்க என்று  சென்னையில்  அலுவலகம் ஒன்றை நிறுவிய போது, அவர்கள் இருவருமாக  மாற்றி மாற்றி நிர்வகித்தார்கள்

அன்றைக்குப் போலவே இன்றும்  நல்ல தரத்துடன்தான்  உற்பத்தியாகிறது. விற்பனை தான் எங்கோ முடக்கப்படுகிறது.

சுரேஷும் சில காரணங்களால் பிரிந்து போன பிறகு சுத்தமாக நஷ்டத்தில் தான் இயங்குகிறது.  மானேஜிங் பொறுப்பிலிருப்பவர்  அருகில் ஆரம்பித்துவிட்ட மற்றொரு போட்டிக் கம்பெனியை குறிப்பிடுகிறார். போய்ப்பார்க்கவோ ஆலோசிக்கவோ நேரமில்லாமல் உள்ளூர் பார்ட்டி ஒன்றை கூட்டிக் கொண்டும் வந்து விட்டார்.

உள்ளூர்க்காரர் என்பதால் அவரிடம் மக்களுக்கு ஒரு பிடிப்பு இருக்குமாம். அதை வைத்தே மறுபடியும் வளர்த்து விடுவாராம். அப்படி அவர் சொன்னதே ஒருவிதத்தில் வயிற்றில் பாலை வார்த்த மாதிரி இருந்தது ராகவனுக்கு.

பல பொறுப்புகளுக்கிடையில் அலுவலர்களுக்கு மத்தியில் சிக்கித் தவிப்பவர்களுக்குத் தான் தெரியும் நேரத்தின் அருமை.

தான் முதன் முதலில் ஆரம்பித்த ஒரு நிறுவனம் பெயரிழந்து போவதை விட யாரோ ஒருவரால்  தலைதூக்கிவிடப்பட்டால் நல்லதுதானே என்று  நினைத்தார் அவர்.

ஆனால் இல்லை என்கிறாளே பிரபா. அவளை தனியாக அனுப்பி வைத்துவிட்டு நிம்மதியாக இங்கே எப்படி இருக்க முடியும்!

யோசனைகளில் ஆழ்ந்திருந்தவரை ஆதரவாகத்  தொட்டாள் சுதா.

“எதுக்கு இவ்வளவு தூரம் தயங்குறீங்க! பிரபா புத்திசாலி. தைரியமானவளும் கூட. அவளுக்கு சவாலான வேலை பிடிக்கும். போய்ப் பார்க்கட்டுமே! பரத் வேண்டுமானால் கூடப் போகட்டும். பரத், பிரகாஷ் கூட படித்தவன். உறவும் கூட.  அவனை ஒரு மாதம் இங்கே பார்க்கும் வேலையிலிருந்து விடுவித்து அனுப்புவோம். பிரபாவுமே அதிக நாள் அங்கு இருக்க முடியாதே!”

“ஆமாம்! நீ சொல்வதுதான் சரி.” அவர் முகத்தில் ஒரு தெளிவு வந்தது. இருவரையும் கூப்பிட்டு   விவரங்கள் சொல்லி நிதானமாக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள சொல்லி அனுப்பி வைத்தார்.

உற்சாகமாக வந்த பிரபாவுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது. அலுவலகத்தில் பணி புரிவது வேறு. தானே நிர்வகிப்பது வேறு  என்பதை அவள் அப்போதுதான் உணர்ந்தாள்.

வரிசையாக பல பிரச்சினைகள்.  எதற்கும் சரியான கவனிப்பு இல்லை.  எதை முதலில் தொடுவது சீராக்குவது என்று ஒரு தடுமாற்றம் வந்தது.  பரத் இருந்தது ஒரு விதத்தில் மிகவும் உதவியாக இருந்தது.  அவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய விவாதித்தார்கள். எங்கேயோ தப்பு  நடக்கிறது. வேண்டுமென்றே சில குளறுபடிகளை  ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று  மட்டும் அனுமானிக்க முடிந்தது.

மானேஜிங் டைரக்டர் மிகவும் சாதுவாக காணப்பட்டார்.  பொறுப்புகளை சுமக்க முடியாமல் திணறுவது மாதிரி தென்பட்டார். ஒரே பையன் பெங்களூரில் படிக்கிறானாம்.. மனைவிக்கு வேறு உடல்நலம் சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருக்கிறாளாம். ஏதோ இதயக் கோளாறு  என்றவரை  வியப்புடன் பார்த்தாள் பிரபா.

“சென்னையிலேயே எத்தனையோ பெஸ்ட் ஹாஸ்பிடல்கள்  இருக்கின்றனவே. அங்கே சேர்த்திருக்கலாமே! “

“ஆமாம் மேடம், ஆனால் கம்பெனியை பார்க்க வேண்டுமே! கூடவே இருக்கும் போதே எத்தனையோ தகராறுகள். லேபர் யூனியன் பிரசிடென்ட்  வேண்டுமென்றே  பிரச்சினை  பண்ணுகிறான்.”

‘உள்ளூர் ஆட்களைத்தான் பணிக்கு நியமிக்க வேண்டுமாம்.’

“அப்படித்தானே நியமித்திருக்கிறோம்.”  

“ஆமாம். ஆனாலும் முதலில் வேலை செய்ய வந்தவர்கள்  முதலாளியுடைய நேரடிப் பொறுப்பில் வந்தவர்கள். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இங்கே ‍ வேலை பார்க்கிறார்கள்.”

அவளுக்கு புரிந்தது. ராகவன் முதலில் நியமித்த ஆட்களை வேலையை விட்டு நீக்க முடியாது.  நீக்கினால் அதற்கு காரணம்  சொல்லவேண்டும்.  காம்பன்சேஷன் கொடுக்கவேண்டும்.  சிந்தனை பல விதங்களில் ஓடியது.

“சரி பார்ப்போம், முதலில் எல்லோரையும் பார்த்து பேசி விடுவோம்..ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணி விடுங்கள்.. முதலில் ஒவ்வொருத்தருடைய மனப்போக்கும் எனக்கு தெரிந்தாகணும்.”

“சரி மேடம்” கையெழுத்திட்ட  ஃபைலை வாங்கிக்கொண்டு வெளியேறினார்.

பரத்தும் அவளும் அன்று முழுவதும் பல விஷயங்களை  ஆராய்ந்தார்கள்.  ஆழம் தெரிந்தோ தெரியாமலோ  காலை விட்டாகிவிட்டது.  எப்படியாவது கண்டுபிடித்தே ஆகவேண்டும்.

ஊரில் இருக்கும்போதே அவளுக்கு நம்பகமான தகவல் வந்தது. கம்பெனி உண்மையில் நஷ்டத்தில் ஓடவில்லை. நஷ்டம் போல காட்டிக் கொள்ளப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அவளுக்கு இங்கே  வரவேண்டுமென்று தீவிரமே வந்தது.

கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டாலும் சில நேரம் நிஜங்கள் புரிவது இல்லை. சிக்கலான ஒரு நூல்கண்டின் முனை கண்டுபிடிப்பது  எவ்வளவு கடினமோ அத்தனை கடினம் நிர்வாகத்தில் குளறுபடிகளை கண்டுபிடிப்பது.

முதலில் தேவை பொறுமை, சமயோசிதம்.. அவள் தனக்குத்தானே  சொல்லிக் கொண்டாள்.  எப்படியும் வெற்றி பெற்றே தீருவேன்.

மீட்டிங் ஆரம்பித்ததுமே அவள் கவனித்தாள் .பாதி பேர் சுரத்தாகவே இல்லை. ஏதோ பெயருக்கு வந்தவர்கள் மாதிரி அமர்ந்திருந்தார்கள்.

மானேஜிங் டைரக்டர் வர ஒரு அரைமணி நேரம் தாமதமாகியது. வரும்போதே ‘ஸாரி மேடம், என் ஒய்ஃபுக்கு கொஞ்சம்  ஹெல்த் ப்ராப்ளம் ஆகிவிட்டது. அதுதான்’ என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

எரிச்சலை அடக்கிக் கொண்டு அவள் கேட்டாள்.

 “என்ன ப்ராப்ளம் உங்க ஒய்ஃபுக்கு! ஹாஸ்பிடலில் தானே இருக்கிறார்கள்”

‘அது ,’என்று தயங்கியவர்  மெதுவாக சொன்னார். 

“ஒரு குறிப்பிட்ட மெடிசின் கிடைக்கலை மேடம். நாலுநாள் முன்னாலேயே கொடுத்திருக்கணும். சென்னையிலுமே சில இடங்களில்தான் கிடைக்கும். அதுதான்!’ என்றவர், ‘மீட்டிங் ஆரம்பிக்கலாமா! ‘என்று பவ்யமாக கேட்டார்.

“என்ன சார் இப்படி சொல்கிறீர்கள்! இரண்டு இடத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டியவர் நீங்கள்! மீட்டிங் தேதி முன்னாலேயே தெரியும் தானே!”

பரத் எழுந்து வந்தான்.

“என்ன மருந்து! ரெகுலரா போடறது அப்படின்னா நீங்க ஃபோன் பண்ணியே வாங்கியிருக்கலாமே!”

அவர் திகைத்துப் போனார்.

“சார்! திடீர் திடீர்னு மாத்திரைகள்  மாற்றுவார்கள்.  டாக்டர்கிட்ட என்ன சார் கேட்க முடியும்? “

‘அது சரி, அது சரி’ என்றவன், ‘ஆனால் சிலநடவடிக்கைகள் சரியாக எடுத்திருக்கலாமே! யாராவது கூட இருக்கும்படி ஏற்பாடு பண்ணியிருக்கலாம்  இல்லையா! உடம்பு சரியில்லாதவர்களை  பார்க்க கூட முடியாமல் இங்கே ஓடி வந்திருக்கிறீர்கள். எங்கேயோ தப்பாக தெரிகிறதே’ என்றவன், சட்டென்று ‘உங்க ஒய்ஃப் பெங்களூரில்தானே  இருக்கிறார்கள்! ‘என்று கேட்டான்.’

ஆமாம்’, என்று யோசிக்காமல் பதில் சொன்னவர்  ,’இல்லை சார் !சென்னை ஹாஸ்பிடலில் இருக்கிறார்கள்.’

‘ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்றதாலே அது நிஜம்  ஆகி விடாது யாரோ ஒரு பெண்ணை காட்டி சிகிச்சை பெறுவதாக சொல்றீங்க ! ‘

‘மேலே மேலே பொய் சொல்லாதீங்க!” அவர் தலைகுனிந்தார்.

‘பிரபா! நாம் சந்தேகப்பட்டது சரியாகப் போச்சு. இவர்தான் எல்லாத்துக்கும் காரணம் .ராகவன் சார் இவர் சொல்வதை அப்படியே நம்பியிருக்கிறார். அனுதாப போர்வையை போர்த்திக் கொண்டு தனக்கு வேண்டிய வேலைகளை செய்திருக்கிறார்.’

அவர் முதலில் மறுத்தார். சமாளித்துக் பார்த்தார். அங்கிருந்த பலரும் அவரை திகைப்புடன் பார்த்தார்கள். 

‘முக்கியமான சமயங்களில்  எல்லாம் இவர் இருக்க மாட்டார். இப்படித்தான் ஏதாவது சொல்லி விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். நாங்க என்ன பண்ணமுடியும்! நிறைய ஆர்டர் தேங்கிப் போச்சு. சிலது கான்சலும் ஆகிவிடும்’.

நிர்வாகி ஒருவர் சொல்ல நிறைய பேர் அதை ஆமோதித்தனர். வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்.

“உண்மைதான்! நீங்க சொல்றது எல்லாம் ! நான்தான்  இவ்வளவும் பண்ணினேன்’.

“எதனால் இப்படி பண்ணினீங்க!”

அவர் சொல்ல ஆரம்பித்தார்.

“ஆன்லைன் சூதாட்டத்தில் நிறைய தொலைத்து விட்டேன்.  என்ன செய்வது அப்படின்னு யோசிச்சுக்கிட்டு  இருக்கிறப்ப அந்த புது  ஆள் உள்ளே வந்தார். எனக்கு கடன் இருப்பதை தெரிந்து கொண்டு என்னை வளைத்து விட்டார்.  ஒரு மாசத்துக்குள்ளே   பாக்டரியை கை மாத்தி விட சொன்னார். அதுக்கு தேவையான வேலைகளை செய்யத்தான் நஷ்டம் மாதிரி காட்ட வேண்டியதாயிற்று. ராகவன் சாருக்கு இளகின மனசு. என்ன சொன்னாலும் நம்புவார். அதை வைத்து!”

‘போதும்!’ என்று கை காட்டினாள் பிரபா. ‘ஒரு கம்பெனி ஆரம்பிக்க எவ்வளவு கஷ்டப்படறோம்! மனசாட்சியே இல்லாமல் கை மாத்தி விட பார்த்திருக்கீங்க!  

உங்க தப்புக்கு இங்கிருக்கிற எல்லாரையும் பலியாக்கியிருக்கீங்க.  கண் மூடித்தனமாக உங்களை நம்பின முதலாளியை ஏமாற்ற பார்த்திருக்கீங்க!’

“கூல் பிரபா!ஆன்லைன் சூதாட்டம் இதுக்கு மேலேயும் சதி பண்ணச் சொல்லும். நல்லவேளை ! நம்மால் சரியான நேரத்தில் கண்டுபிடிக்க முடிந்தது.. ராகவன் சாரை வரவழைப்போம், இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருக்கே!”

“ஆமாம் ! முதலில் இவரை ஆட்டி வைக்கும் அந்த நபரையும் கூட்டி வரச்சொல்லுவோம் இரண்டு பேரையும் காவல் துறை கவனித்துக் கொள்ளும்”.

ஒரு பெரியபிரச்சினையை தீர்த்து விட்ட சந்தோஷத்தை அண்ணனிடம் பகிர்ந்துகொள்ள செல்லில் தொடர்பு கொண்டாள் பிரபா. இனி அவள் மகிழ்ச்சியுடன்  வெளிநாடு செல்லலாம்  அல்லவா! 

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நினைவுகளே தோரணங்கள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 49) – ரேவதி பாலாஜி