எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பஸ்ஸிலும் அவ்வளவாக கூட்ட நெரிசல் இல்லை, சீதோஷ்ணமும் அவ்வளவு ஹாட்டாக இல்லை, பிறகு ஏன் இந்தக் கண்டக்டர் இப்படி கொதிக்கும் எண்ணெயில் விழுந்த கடுகு மாதிரிப் பொரிந்து தள்ளுறான். நானும் அப்பவே இருந்து கவனிச்சிட்டுத்தான் வர்றேன்… ஒரு பயணி விடாமல் எல்லாரையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தாளிச்சு எடுக்கிறான் படுபாவி!… இவன் என்ன மனுசனா?… இல்லை வெறி நாயா?.
“ஏன்யா கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?… அஞ்சு ரூபாய் டிக்கெட்டுக்கு அம்பது ரூபாயைக் கொடுக்கிறியே… நான் என்ன இங்க சில்லறைச் சுரங்கமா வெச்சிருக்கேன்?… எல்லோருக்கும் எடுத்து வீச?… சாவு கிராக்கி… சில்லறையில்லைன்னா ஏன்யா ஏறித் தொலைச்சே?”.
பாவம் அந்த அப்பாவிப் பயணி வெலவெலத்துப் போய்க் கூட்டத்தினரைப் பார்க்க, நான் அவரை அருகில் அழைத்து, என்னிடம் இருந்த சில்லறையைக் கொடுத்து அவனுடைய அப்போதைய பிரச்சனையைத் தீர்த்து வைத்தேன். அவனை விட்டுவிட்டு அடுத்ததாய் ஒரு கூடைக்காரியை பிடித்துக் கொண்டான் அந்த கண்டக்டர்.
“இந்தாம்மா… இது என்ன பஸ்சா?… இல்ல சரக்கு லாரியா?… நீ பாட்டுக்கு நாலு அஞ்சு கூடையை வரிசையா ஏத்தி வெச்சிருக்கே?… சரி… சரி… இதுக்கெல்லாம் டிக்கெட் எடுத்திடு” என்றான்
“எடுத்துடறேன் சாமி!… எவ்வளவுன்னு சொல்லு சாமி”.
“ம்…ம்…” என்று கூடைகளை மேலோட்டமாய் ஆராய்ந்து விட்டு, “ஒரு நாப்பது ரூபா குடு” என்றான் கண்டக்டர்.
“ஐயோ சாமி… இந்த காய்கறிகளை வித்தா எனக்கு கிடைக்கிற மொத்த லாபமே நூறு ரூபாதான் சாமி அதுல பாதியைக் கேட்டா எப்படி சாமி?”. அவள் கெஞ்சலாய் கேட்க,
அந்த கண்டக்டர் மறு வினாடியே சட்டெனக் குனிந்து, ஒரு கூடையைத் தூக்கி வெளியில் வீசப் போக,
“ஐயோ சாமி…. வேணாம் சாமி..” பதறினாள்.
“அப்ப நாப்பது ரூபாய்க்கு லக்கேஜ் டிக்கெட்டை எடு”.
நீண்ட நேர பேரத்திற்கு பிறகு, கூடைக்காரி முப்பது ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தாள்.
எனக்கு அந்தக் கண்டக்டரைப் பார்க்கப் பார்க்க ஆத்திரமாய் வந்தது. பற்களில் “நற… நற” சத்தம்.
என் பக்கத்தில் அமைதியே உருவாக அமர்ந்திருந்த அந்த இளைஞனின் கவனத்தை என் பக்கம் திருப்பினேன். அவன் என்னை வினோதமாகப் பார்த்தான்.
“பார்த்தியா தம்பி இந்தக் கண்டக்டர் ராஸ்கல் பண்ற அக்கிரமத்தை?… இவனெல்லாம் பப்ளிக் சர்வெண்டா?.. என்னமோ பஸ்ஸே இவனோடது மாதிரியும்.. நம்மையெல்லாம் இலவசமாக ஏத்திட்டு போறது மாதிரியுமல்ல ஆடறான்!… பரதேசி!” அந்த இளைஞன் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் தலையை மட்டும் நிதானமாக மேலும் கீழும் ஆட்டினான்.
“இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் தானா திருந்த மாட்டானுக!… ஜனங்கள் தான் திருத்தணும்!… இப்ப இந்த பஸ்ஸில் நாம ஒரு முப்பது… முப்பத்தியஞ்சு பேர் இருப்போமா?.. எல்லோரும் ஒண்ணா சேர்ந்து… கொஞ்சமும் தயவுதாட்சண்யம் பார்க்காமல் “படார்… படார்”ன்னு அவன் முதுகு… கை… கால்…ன்னு வெச்சு சாத்திடணும்!… அப்பத்தான் இனிமேல் ஜனங்க கிட்ட திமிரா…தெனாவெட்டா நடந்துக்க மாட்டான்!… என்ன தம்பி நான் சொல்றது சரிதானே?”.
புன்னகையுடன் தலையாட்டினான் அவன்.
“இப்பவெல்லாம் கவர்மெண்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கிற பெரிய பெரிய ஆபீஸர்க கூட பொது ஜனங்களை பார்த்து பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க!… ஏன்னா மக்களுக்கு ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்துடுச்சு!… கன்ஸ்யூமர் கோர்ட்… கேஸ்ன்னு இழுத்து விட்டுடறாங்க!.. ஆனால் இந்த மாதிரி ஆளுகளை தான் அடக்க முடிய மாட்டேங்குது!.. என்ன தம்பி நான் சொல்றது சரிதானே?”.
மீண்டும் வெறும் தலையாட்டிலேயே பதில் சொன்ன அந்த இளைஞன் மேல் என் கோபம் தாவியது. “ஏம்பா… நீ என்னமோ உனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்கிற மாதிரி தலையாட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கே?… உன்னை மாதிரி இளைஞர்கள்தான்ப்பா இந்த மாதிரி அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க வேண்டும்!… ஹும்… இந்த நாடு உருப்பட்டார் போல்தான்” தலையில் அடித்துக் கொண்டு சொன்னேன்.
அடுத்த நிறுத்தத்தில் ஒரு பயணி இறங்கும் முன் கண்டக்டர் ரைட் கொடுத்து விட, அந்தப் பயணி, “ஐயோ… ஐயோ!.. நிறுத்துங்க!.. நான் இறங்கணும்” பதறினான்.
சிறிதும் அதைப்பற்றி கவலைப்படாத கண்டக்டர், “யோவ்… இறங்கற இடம் வர்றதுக்கு முன்னாடியே ரெடியா வந்து நிற்கத் தெரியாதா உனக்கு?.. ஸ்டாப்பிங் வந்ததுக்கப்புறம் மெல்ல… ஆடி… அசைஞ்சு எந்திரிச்சு வந்தா… இப்படித்தான் ஆகும்!… இரு.. அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்கிக்க” என்றார்.
“ஐயோ… அங்க இறங்கினா ரொம்ப தூரம் நடக்கணுமே!.. சார்… சார்… கொஞ்சம் வண்டிய ஸ்லோ பண்ணுங்க சார்!… நான் குதிச்சிடறேன்” அவன் பரபரத்தான்.
“எதுக்கு?… குதிச்சு… செத்து தொலைஞ்சு… எங்களை உயிரெடுப்பதற்கா?… பேசாமல் நில்லுய்யா… அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்கிக்கலாம்!”
சொன்னபடி அந்த பயணியை அடுத்த ஸ்டாப்பிங்கில் தான் இறக்கி விட்டான் கண்டக்டர். இதில் வெற்றிச் சிரிப்பு வேற. என்னால் தாங்க முடியவில்லை.
“தம்பி… நான் சொல்றேன் எழுதி வச்சுக்கோ!… ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்கு… இவன் தருமஅடி வாங்கத்தான் போறான்!…”
ஐந்து நிமிட அமைதிப் பிரயாணத்திற்கு பின் பஸ் ஒரு நிறுத்தத்தில் நிற்க, என் பக்கத்தில் இருந்த இளைஞன் இறங்குவதற்காக எழுந்தான்.
அப்போது கண்டக்டர் அவனை நெருங்கி வந்து, “ரவி… பயப்படாம… தைரியமா பதில் சொல்லு!… பதில் தெரியலன்னா… ‘தெரியல’ன்னு வெளிப்படையாச் சொல்லிடு!… தப்பாச் சொல்லி மழுப்பாதே!… என்ன…?”
“சரிப்பா” பவ்யமாய்ச் சொன்னான் அந்த இளைஞன்.
“அப்புறம் இண்டர்வியூ முடிந்ததும் பஸ்ஸுக்காக வெய்ட் பண்ண வேண்டாம் ஆட்டோ புடிச்சுப் போயிடு… சரியா?”.
அவன் சரி என்று தலையாட்டி விட்டு இறங்கிச் சென்றதும் கண்டக்டர் என்னை பார்த்து, “என் மகன் தான்!… கண்டக்டர் வேலைக்காக பிரைவேட் பஸ் கம்பெனிக்கு இண்டர்வியூ போறான்!…”என்று சொல்லி விட்டு நகர, நான் தூரத்தில் செல்லும் அந்த இளைஞனையே பார்த்தான்.
“என்ன ஒரு மடத்தனம் பண்ணிட்டேன்!… விவரம் தெரியாமல் நான் பாட்டுக்கு மகன் கிட்டேயே அப்பனைக் கண்டபடி திட்டிப் பேசிட்டேன்!… ஆனாலும் அதை எப்படி பொறுமையாக கேட்டுட்டு வர முடிந்தது அவனால்?.. லேசாக் கூட முகம் சுளிக்கலையே?… எவ்வளவு பக்குவப்பட்ட மனசாய் இருக்கணும் அவனுக்கு?… எனக்கே கூட இந்த அளவுக்கு பக்குவம் இருக்குமா?ங்கிறது சந்தேகம்தான்” ஆச்சரியத்தில் அமிழ்ந்தேன்.
ஆனாலும் மனசுக்குள் ஒரு சந்தோஷம். என் பேச்சு அந்த இளைஞன் மனதில் சில விஷயங்களைப் புரிய வெச்சிருக்கும்!… அதன் மூலமா… எதிர்காலத்துல… எரிந்து விழாத… பொறுமையின் சிகரமாய் இருக்கக்கூடிய… ஒரு தங்கமான கண்டக்டரை… நான் உருவாக்கியிருக்கிறேன்!..” என்கிற எண்ணம் என் மனசுக்குள் இனிப்பாய் தெரிந்தது.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings